மூன்றாவது நாயகர்கள் - பகுதி 1 | எம்.கே.ராதா - டி.ஆர்.மகாலிங்கம்

  பால கணேசன்   | Last Modified : 27 Aug, 2018 03:05 pm

unsung-heroes-of-tamil-cinema-mk-radha-and-tr-mahalingam

தமிழ் சினிமாக்களின் இரு துருவங்கள் பற்றி நாம் படித்துக்கொண்டிருக்கும்போதே அந்தந்த காலக்கட்டத்தில் நடித்துக்கொண்டிருந்த மூன்றாம் இடத்தை பெறக்கூடிய நட்சத்திரத்தை பற்றி நீங்கள் ஏன் எழுதக்கூடாது என்கிற கேள்வியை எனக்கு முன்னால் சில நண்பர்கள் வைத்தார்கள். நிலவில் முதன்முதலில் கால் வைத்தவரின் பெயரை நினைவில் வைத்திருக்கும் நாம் இரண்டாவதாக கால் வைத்தவரின் பெயரை இதுவரை அறிய முற்பட்டதேயில்லை. அந்தக் கதைதான் இங்கும். ஆயினும் அதில் சிலர் பெயர் இன்றும் தமிழ்த் திரையுலகில் நிலைத்து நிற்கிறது. அதிலும் சிலரின் வரலாறு எல்லாம் உச்ச நட்சத்திரங்களின் வரலாற்றை விடவும் சுவாரஸ்யமானதாக இருப்பதை அவர்களை பற்றி படிக்கையில் அறிந்துகொண்டேன். 

பல நேரங்களில் உச்ச நட்சத்திரங்களின் படங்கள் தோல்வியுற்றபோதும் இந்த இரண்டாம் நிலை ஹீரோக்கள் வெற்றி தந்து திரையுலகை வாழவைத்த சம்பவங்கள் எல்லாம் காலம்தோறும் நடந்துகொண்டே இருந்திருக்கிறது. முதலில் தியாகராஜ பாகவதர் - பி.யூ சின்னப்பா காலத்தில் இருந்து தொடங்குவோம்.

எம்.கே.ராதா அறிமுகம்

எம்ஜிஆர் ஒரு சிறு வேடத்தில் அறிமுகமான 'சதிலீலாவதி' படத்தில்தான் முதன்முதலில் கதாநாயகனாக எம்.கே.ராதா அறிமுகமானார். இதைத்தொடர்ந்து 'அனாதைப்பெண்' என்கிற ஜூபிடர் நிறுவனத்தாரின் படத்தில் மீண்டும் கதாநாயகனாக நடித்தார். இந்தப் படம் அந்த காலக்கட்டத்தில் மிகப்பெரிய வெற்றியையும், எம்.கே.ராதாவுக்கு நிறைய ரசிகர்களையும் பெற்றுத்தந்தது. வெளிநாட்டில் இருந்து திரும்பும் வாலிபராக வரும்போது எம்.கே.ராதா அணிந்து வரும் உடையும் தொப்பியும் ஒரு மிகப் பெரிய ஸ்டைல் சிம்பலாக அப்போது விளங்கியது. இளைஞர்கள் மத்தியில் அந்த நளினம் மிகவும் பிரபலமாகி பலரும் அதேபோன்ற ஆடை மற்றும் தொப்பியை வாங்கி அணிந்தனர். 

இந்தப் படத்தின் இன்னொரு விசேஷம் என்னவென்றால், இதில் வில்லனாக நடித்தவர் பி.யூ.சின்னப்பா. ஆக, அடுத்து தியாகராஜ பாகவதருக்கு நிகராக சூப்பர் ஸ்டார் அந்தஸ்து பெறப்போகிற ஒருவர் சிறுவேடத்தில் வில்லனாக நடித்த படத்தின் ஒரு கதாநாயகன் காலப்போக்கில் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டார். நன்றாக கவனித்துப் பார்த்தால் இனி வரும் வாரங்களில் நாம் பார்க்கப்போகும் பலரோடு இந்தச் சம்பவம் ஒத்துப்போகும். மீண்டும் மீண்டும் சரித்திரம் ஒரே கதையை எழுதிக்கொண்டே இருப்பதும், அது நம் கண்முன்னேயே இருப்பதும், அதை நாம் கவனிக்காமல் போவதும் நடந்துகொண்டே இருக்கிறது.

1939-ல் வெளிவந்த 'மாயா மச்சீந்திரா' படத்தைப் பற்றி பார்ப்போம். பிரபல தயாரிப்பாளர் வி.சாந்தாராம் 1932-ல் முதன்முதலில் இந்த படத்தை இந்தி மற்றும் மராத்தியில் எடுத்தார். மொத்தம் உள்ள 84 மஹா சித்தர்களில் ஒருவரான மச்சீந்திரநாத்தின் கதையே இந்த 'மாயா மச்சீந்திரா'. தமிழில் அந்த மச்சீந்திரநாத் வேடத்தில் எம்.கே.ராதா நாயகனாக நடிக்க படம் வெளியானது. இந்தப் படத்தின் சிறப்பம்சமே இதில் இடம்பெற்ற மாய தந்திர காட்சிகள்தான். அன்றைய காலகட்டத்தில் இருந்த தொழில்நுட்பத்தை மட்டும் வைத்துக்கொண்டு இந்தத் தந்திரக் காட்சிகள் மிகவும் சிறப்பான முறையில் திரையில் காட்டப்பட்டது. அதனால் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. 'மாயா மச்சீந்திரா' வந்த நேரத்தில்தான் பாகவதரின் 'திருநீலகண்டர்' வெளிவந்து மிகப்பெரிய வெற்றியை பெற்றிருந்தது. பி.யூ சின்னப்பாவிற்கு அவர் நாயகனாக நடித்த 'மாத்ருபூமி' வெளியாகி இருந்தது. 

வெற்றியும் வீழ்ச்சியும்

1940-ல் 'சதிமுரளி' என்கிற சமூகப் படம் வெளியானது. சாதி வேற்றுமையை சாடும் கதையமைப்பை கொண்ட இந்தப் படத்தில் சிறுவயது எம்.கே.ராதாவாக நடித்தவர் டி.ஆர்.மகாலிங்கம். இந்தப் பெயரை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். காரணம் கூடிய விரைவில் இவரை பற்றி நாம் படிக்க போகிறோம். மேலும் என்.எஸ்.கிருஷ்ணன் இல்லாமல் மதுரம் தனியாக நடித்த வெகுசில படங்களில் இதுவும் ஒன்று. இது ஒரு தோல்விப் படம் என்றாலும் கூட எம்.கே.ராதா வாழ்வில் முக்கியமான படம். அடுத்து நாம் பார்க்கப்போகும் 'வனமோகினி' படம்தான் எம்.கே.ராதாவுக்கு வீழ்ச்சியை கொடுக்க தொடங்கிய படம் என்று நான் சொல்வேன். சொல்லப்போனால் அந்நேரத்தில் வெளிவந்து வெற்றிப்பெற்ற படங்களில் முக்கியமானது இந்த 'வனமோகினி' படம். ஆனாலும் ராதாவுக்கு தனிப்பட்ட முறையில் வீழ்ச்சி ஏன் ஏற்பட்டது என்றால், அதற்கு காரணங்கள் இரண்டு. ஒன்று படத்தின் நாயகியான தவமணி. இன்னொன்று படத்தில் நடித்த யானை.

ஒரு படம் பெருவெற்றி பெறும்போது அந்தப் படத்தின் மூலமாக யாருக்கு அதிக புகழ் மக்களுக்கு கிடைக்கிறது என்பது எப்போதுமே முக்கியமானது. அந்த வகையில் 'வனமோகினி' படம் இலங்கையை சேர்ந்த தவமணி தேவிக்கு பெரும்புகழை ஈட்டித் தந்தது. அதற்கு முக்கியக் காரணம் அதுவரை தமிழ் சினிமாவில் யாரும் அணியாத மிக மெல்லிசான உடை அணிந்து படத்தில் அவர் தோன்றினார். அந்த காட்சியை காண்பதற்கென்றே திரையரங்கில் ரசிகர் கூட்டம் தினமும் அலைமோதியது. அதேபோல் படத்தில் நடித்த சந்துரு என்கிற பெயர் கொண்ட யானை நமது 'ஆட்டுக்கார அலமேலு' ஆடுக்கெல்லாம் முன்னோர் போல. அந்த யானை வரும் காட்சிகளும், அது செய்யும் சேஷ்டைகளும் மக்களை கூட்டம் கூட்டமாக திரையரங்கிற்கு வரவைத்தது. இதன் காரணமாக ராம.நாராயணன் படங்களில் வரும் நிழல்கள் ரவி கதாபாத்திரம் போல ஆனார் எம்.கே.ராதா. பின்னர் வந்த 'தேசி அபரஞ்சி' படத்திலும் இதே கதைதான் நிகழ்ந்தது எம்.கே.ராதாவுக்கு. ஆனால் சமூக நலம் சார்ந்த, அதை நோக்கி தீவிர கேள்விகள் எழுப்பக் கூடிய கதையம்சம் கொண்ட படங்களில் எம்.கே.ராதா தொடர்ந்து நடித்துக்கொண்டே இருந்தார். இந்தப் படம் வெளிவந்த 1944-ல்தான் பாகவதர் லட்சுமிகாந்தன் கொலைவழக்கில் சிறைக்கு சென்றார். இன்னொருபக்கம் வருடத்திற்கு இரண்டு மூன்று படங்கள் நடித்து பி.யு. சின்னப்பா மிகப்பெரிய கதாநாயகனாக உயரந்துகொண்டிருந்தார். 

1948-ஆம் வருடம் பாகவதர் சிறையிலிருந்து திரும்பிவந்து நடித்த முதல் படமான 'ராஜமுக்தி' வெளியாகி தோல்வியை தழுவியது. பி.யூ.சின்னப்பாவிற்கோ இந்த வருடத்தில் இந்தப் படமும் வெளியாகவில்லை. இந்த நிலையில் எம்கே.ராதாவிற்கு வெளியான படம்தான் 'சந்திரலேகா'. 'சந்திரலேகா' படம் ஒரு சரித்திரம். சொல்லப்போனால் 'சந்திரலேகா' படம் எடுத்த கதையையும், அது பின்னர் வெற்றி பெற்ற கதையையுமே நான்கு பாகங்கள் கொண்ட ஒரு தனித்தொடராக எழுதலாம். அவ்வளவு விஷயங்கள் இருக்கிறது பேச. ஜெமினி ஸ்டுடியோஸ் எஸ்.எஸ்.வாசனின் மைல்கல்லாக மட்டுமில்லாது தென்னிந்தியா சினிமாவின் மைல்கல்லாகவும் இன்றளவும் விளங்கும் படம் இது. டி.ஆர்.ராஜகுமாரி என்கிற அழகுப்பதுமையும், அந்த இறுதிக்காட்சியில் வரும் ட்ரம்ஸ் நடன அமைப்பும் இன்றளவும் மறக்க இயலா சித்திரங்கள். தென்னிந்தியாவில் எடுக்கப்பட்ட ஒரு படம் வட இந்தியாவில் இப்படி ஒரு மாபெரும் வெற்றிபெறும் என்று யாரும் நினைத்தே பார்த்திராத காலகட்டத்தில் அதை செய்துகாட்டிய காவியம் இது. 

அன்றைய நேரத்தில் அதுவரை வந்த எல்லா படங்களையும் விட அதிக பொருட்ச்செலவில் எடுக்கப்பட்ட, கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் தயாரிப்பில் இருந்த 'சந்திரலேகா' படத்தில் நடித்த அனைவரின் திரைவாழ்க்கையிலுமே மிக முக்கியமான ஒன்றுதான். அப்போதெல்லாம் சராசரியாக ஒரு தமிழ்ப்படம் பத்து நகரங்களில் வெளியாகும். ஆனால் இந்தப் படம் ஒரே நேரத்தில் 120 நகரங்களில் தென்னிந்தியா முழுக்க வெளியானது என்றால் இதன் பெருமையை நீங்கள் உணர்ந்துகொள்ளலாம். 

வெற்றியிலும் சோகம்

இப்படி படங்கள் வெற்றிபெற்றாலும் கூட பாகவதர் போலவோ, சின்னப்பா போலவோ ஒரு தனிப்பெரும் ரசிகர் கூட்டம் உருவாகாமல் தவித்தார் ராதா. அதற்கு முக்கியகாரணம் அவர் கதாநாயகனாக நடித்தாலும் கூட படத்தில் நன்றாக நடித்தவர் என்கிற பெயரை வேறொருவர் தட்டி சென்றுவிடுவார். அந்நேரத்தில் எம்.கே.ராதாவுக்கு உதவிசெய்வது போல வெளிவந்த படம்தான் 'அபூர்வ சகோதரர்கள்'. இரட்டை வேடத்தில் எம்கே.ராதா நடித்த இந்தப் படம் 'சந்திரலேகா' படத்தின் அதிகாரப்பூர்வமற்ற இரண்டாம் பாகம் என்றே அழைக்கப்பட்டது. ஒரே நேரத்தில் இந்தி, தெலுங்கு, தமிழ் ஆகிய மூன்று மொழிகளில் எடுக்கப்பட்ட இந்தப் படம் மூன்றிலுமே குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்றது. எம்.கே.ராதாவின் நடிப்பும், தோற்றமும் விமர்சகர்களால் அதிகம் பாராட்டவும்பட்டது. 

இந்தக் கட்டுரை எழுத துவங்கும்போதே ஜெமினி நிறுவனத்தாரின் 'மூன்று பிள்ளைகள்' படம் பற்றி குறிப்பிட்டே ஆகவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். இது ஒரு மிக பயங்கரமான தோல்விப் படம். ஏன் பயங்கரமான தோல்விப் படம் என்று கூறுகிறேன் என்றால் படம் தோல்வியடைந்த விதத்தை பார்த்த தயாரிப்பாளர் வாசன் படத்தின் எல்லா படப்பெட்டியையும் திரும்ப வாங்கி அதை மொத்தமாக தீவைத்து எரித்துவிட்டார். இப்போது இந்தப் படத்தின் காப்பி எங்கேயுமே கிடையாது. எனில் படம் எவ்வளவு பெரிய தோல்வி என்பதை நீங்களே கற்பனை செய்து பார்த்துக்கொள்ளுங்கள். ஆனால் விஷயம் அதுவல்ல. தமிழின் மிகவும் புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் சந்திரபாபு இந்தப் படத்தில் ஒரே ஒரு காட்சியில் மட்டும் தோன்றுவார். நடிகையர் திலகம் சாவித்ரியின் முதல் படம் இதுதான். ஜெமினி ஸ்டூடியோவில் கணக்காளராக வேலை பார்த்துக்கொண்டிருந்த கணேசன் ஒரு முக்கிய பாத்திரத்தில் இந்தப் படத்தில் தோன்றினார். இப்படி தோல்வியடைந்த ஒரு படத்தில் இடம்பெற்ற இவர்கள் எல்லாம் பின்னாளில் சரித்திரம் படைத்தார்கள். ஆனால் ஏற்கெனவே கடந்த படங்களில் சாதனை படைத்திருந்த எம்.கே ராதாவிற்கோ இந்தத் தோல்வி மிகவும் வேதனையையே தந்தது. 

இதைத்தொடர்ந்து அதாவது பாகவதர், சின்னப்பா காலத்திற்கு பிறகு எம்.கே.ராதா நடித்த படங்களில் முக்கியமானது என்றால் அது ஜெமினி ஸ்டூடியோவில் 'அவ்வையார்'தான். தமிழின் மிகப் பிரமாண்டமான படைப்புகளில் ஒன்றான இந்தப் படம் கே.பி.சுந்தராம்பாள் திரைவாழ்வில் முக்கியமான படமாகும். இதைத்தொடர்ந்து எம்ஜிஆர் - சிவாஜி கணேசன் காலம் ஆரம்பித்ததால் குணச்சித்திர வேடங்களில் நடிக்க தொடங்கினார் எம்.கே.ராதா. குறிப்பாக சிவாஜியின் 'அம்பிகாபதி', 'உத்தமபுத்திரன்' போன்ற படங்களில் தலைகாட்டினார். 

டி.ஆர்.மகாலிங்கம் அறிமுகம்

1945-ல் 'ஸ்ரீ வள்ளி' என்றொரு படம் வெளியானது. ஏவிஎம் தயாரித்த இந்தப் படத்தின் நாயகனாக டி.ஆர்.மகாலிங்கம் என்பவர் நடித்தார். 14 வயதிலேயே மேடை நாடகங்களில் நடிக துவங்கிய மஹாலிங்கத்தின் மிகப்பெரிய பலம் அவரது குரல். மைக் இல்லாத காலக்கட்டத்தில் மேடை நாடகத்தில் நடிக்கையில் எந்தளவுக்கு கத்தி பாடவேண்டும் என்பதை நீங்கள் உணர்ந்தே இருப்பீர்கள். அதற்கான சிறப்பு பயிற்சிகள் பெற்றவர்களில் ஒருவர் இவர். சிறு சிறு வேடங்கள் சினிமாவில் கிடைத்து வந்தாலும் இவர் நாயகனாக நடித்து மிகப்பெரிய வெற்றிகண்ட படம் இந்த 'ஸ்ரீவள்ளி'தான். "காயாத கானகத்தே.. நின்றுலாவும் நற்காரிகையே.. மேயாத மான்.." பாடல் இன்றைய தலைமுறைக்கும் ரீமிக்ஸ் வடிவில் அறிமுகமாகி உள்ளது. இதை திரையில் பாடி மொத்த கூட்டத்தையும் மயங்க செய்தவர் மஹாலிங்கம். அந்தவகையில் இவர் ஒரே நாளில் மிகப்பெரிய ஸ்டாராக மாறுவதற்கான எல்லா ஏற்பாடும் இந்தப் படம் மூலம் நிகழ்ந்தது என்று சொன்னால் அது மிகையில்லை. இதைத்தொடர்ந்து ஏவிஎம் ஸ்டூடியோ காரைக்குடியில் இருந்து கோடம்பாக்கத்திற்கு நகர்ந்த பின்னர் ஏவிஎம் புரொடக்‌ஷன் சார்பில் தயாரிக்கப்பட்ட முதல்படமான 'நாம் இருவர்' படத்திலும் டி.ஆர்.மகாலிங்கமே கதாநாயகனாக நடித்தார். இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் வெளிவந்து மிகப்பெரிய வெற்றிபெற்ற முதல் படம் இதுவே என்கிற பெருமை இதற்கு உண்டு.

தமிழின் முதல் கிறிஸ்துவ பாடம் இடம்பெற்ற திரைப்படம் என்கிற பெருமை 'ஞான சவுந்தரி' படத்திற்கு உண்டு. ஜிக்கி மற்றும் பெரிய நாயகி பாடிய "அருள் தாரும் தேவமாதாவே" என்கிற பாடல் டி.ஆர்.மகாலிங்கம் நடித்த இந்தப் படத்தில் இடம்பெற்றது. இதே 1948-ல் டி.ஆர்.மகாலிங்கம் மீண்டும் ஏவிஎம் தயாரிப்பில் நடித்த 'வேதாள உலகம்' மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த வகையில் ஜூபிடர் நிறுவனத்திற்கு ஒரு பி.யூ சின்னப்பா, ஜெமினி நிறுவனத்திற்கு ஒரு எம்.கே.ராதா போல ஏவிஎம்முக்கு டி.ஆர்.மகாலிங்கம் ஆஸ்தான நாயகனாக அந்தக் காலகட்டத்தில் இருந்தனர். நன்றாக பாடக்கூடிய திறமை கொண்ட மஹாலிங்கம் 'வேதாள உலகம்' படத்தின் 21 பாடல்களில் 8 பாடல்களையும் பாடினார். அதில் 'செந்தமிழ் நாடென்னும் போதினிலே' பாடல் இன்றளவும் காயாத கானகத்தே அளவிற்கு புகழோடு விளங்குகிறது. பின்னர் 1939-ல் பாகவதர் அறிமுகமான 'பவளக்கொடி' படத்தை அதேபெயரில் பத்து வருடம் கழித்து ரீமேக் செய்தபொழுது அதில் கதாநாயகனாக மஹாலிங்கம் நடித்தார். ஆனால் படம் தோல்வியை தழுவியது.

பின்னர் 'லைலா மஜ்னு', 'மாயாவதி', 'இன்பவல்லி', 'மோஹன சுந்தரம்' போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்தாலும் குறிப்பிடத்தக்க வெற்றியை இந்தப் படங்கள் பெறவில்லை. ஆயினும் இவரது குரலில் வெளிவந்த தேனினும் இனிய கானங்கள் தொடர்ந்து மக்களின் காதுகளில் ரீங்காரித்துக்கொண்டே இருந்தன. இந்நிலையில் 1958-ல் கண்ணதாசனின் முதல் தயாரிப்பான 'மாலையிட்ட மங்கை' படத்தில் நாயகனாக இவர் நடித்தார். என்றும் மங்கா புகழ் கொண்ட "செந்தமிழ் தேன்மொழியாள்.." பாடல் இடம்பெற்றது இந்தப் படத்தில்தான். அதை பாடி மயக்கியது டி.ஆர்.மகாலிங்கம் தான்.

வசமாகாத முதன்மையிடம்

இதன்பின்னர் வழக்கம்போல பட வாய்ப்புகள் குறைந்து குணச்சித்திர வேடத்தில் நடிக்க ஆரம்பித்தார். இவர் நாயகனாக நடித்து மிகப்பெரிய வெற்றி பெற்ற ஸ்ரீவள்ளி படம் மீண்டும் 1961-ல் சிவாஜி நடிக்க தயாரிக்கப்பட்டது. முருகனாக நடித்திருந்த மஹாலிங்கம் அவர்கள் இந்தப் படத்தில் நாரதராக தோன்றினார். காலம்தான் என்னென்ன மாயங்களை செய்கிறது! சொந்தக்குரலில் பாடி அசத்தும் அசாத்திய திறமையும், தமிழ் சினிமாவின் க்ளாஸிக்குகள் என்று கொண்டாடப்படும் படங்களில் நடித்து வெற்றி பெற்றும் கூட டி.ஆர்.மகாலிங்கம் ஒரு சூப்பர் ஸ்டாராக உயரமுடியவில்லை. இன்றும் பலரும் ரசித்துக் கேட்கும் பல பாடல்களை பாடியிருந்தாலும் கூட இன்றைய தலைமுறையில் பலருக்கும் இப்படி ஒருவர் இருந்தார் என்கிற செய்தியே புதிது. ஏனெனில் தியாகராஜ பாகவதரின் பாடல்கள் அளவிற்கு புகழ்பெறும் கானங்களை தந்திருந்தாலும் கூட அந்த இடத்தை பிடிக்கவே முடியவில்லை இவரால்.

எம்.கே.ராதாவிற்கும் இதே நிலைமைதான். சின்னப்பாவிற்கு முன்பே தனது திரையுலக பயணத்தை தொடங்கியிருந்தாலும் கூட இவர் மூன்றாவது இடத்திற்குதான் தள்ளப்பட்டார். பாகவதர் மற்றும் சின்னப்பாவின் திரையுலக வாழ்க்கை மிக சீக்கிரம் முடிந்தாலும் கூட உடனே அவர்களின் இடத்தை சுவீகரிக்க அடுத்த தலைமுறை நட்சத்திரங்கள் உருவாகி இருந்தார்கள். இதனால் வெறும் குணச்சித்திர வேடத்தில் நடித்து தங்கள் இருப்பை உறுதி செய்யவேண்டிய கட்டாயத்தில் இருந்தார்கள். 22 வருடங்கள் எம்.கே.ராதாவும், 40 வருடங்கள் மஹாலிங்கமும் தமிழ் சினிமாவில் இருந்தபோதும் கூட பாகவதர் - சின்னப்பா என்கிற சரித்திரத்தை உருவாக்கமுடியவில்லை. இதன் தொடர்ச்சியாய் இன்னும் பலர் வந்தனர். 

*** ஒவ்வொருவராய் அலசுவோம் ***

- பால கணேசன், கட்டுரையாளர், தொடர்புக்கு vinolishan@gmail.com

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.