மூன்றாவது நாயகர்கள் - பகுதி 2 | உச்சத்தை எட்டத் தவறிய ரஞ்சன்!

  பால கணேசன்   | Last Modified : 03 Sep, 2018 11:41 am

third-rank-heroes-of-tamil-cinema-journey-of-actor-ranjan

சினிமாவுக்கு வந்து மிகப்பெரிய வெற்றி பெற்ற சிலரின் கதைகளை நாம் முன்பு பார்த்தபொழுது எல்லாருக்கும் சொல்லிவைத்தார் போல் இளமை அவ்வளவு எளிதாக இருந்திருக்கவில்லை. ஏழு வயதில் மாதம் ஐந்து ரூபாய் சம்பளத்திற்கு நாடகக் கம்பெனியில் சேர்ந்து அதன்பின்னர் நடிப்பு, பாட்டு, சண்டை எல்லாம் கற்றுக்கொண்டு ஒருவழியாக சினிமாவில் சிறு சிறு வாய்ப்புகள் கிடைத்து முன்னேறியவர்கள் அவர்கள். சோற்றுக்கே வழியில்லாதபோது படிப்புக்கு எங்கே போவது? எல்லாம் உலக அனுபவத்தில் கற்றுக்கொண்டதுதான். 

இந்த இடத்தில்தான் ராமநாராயண வெங்கட ரமண ஷர்மா என்கிற ரஞ்சன் வேறுபடுகிறார். மெட்ராஸ் யுனிவர்சிட்டியில் இலக்கியத்தில் முதுகலை பட்டம் பெற்றவர் இவர். கல்லூரியில் இவர் நாடகங்கள் நடித்துக்கொண்டிருந்த பொழுது இவரது நடிப்பை பார்த்து வியந்த ஜெமினி ஸ்டூடியோஸில் பணிபுரிந்துகொண்டிருந்த வேப்பத்தூர் கிட்டு பரிந்துரையின் பேரில் தியாகராஜ பாகவதர் நடித்த 'அசோக் குமார்' படத்தில் கவுதம புத்தராக நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.

இந்த கவுதம புத்தர் வேடம் மிகச் சிறியதுதான். இன்னும் சொல்லப்போனால் இவருக்கு படத்தில் வசனமே கிடையாது. 1941-ல் வெளிவந்த இந்தப் படத்தில் எம்ஜிஆரும் ஒரு சிறு வேடத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், இதன் பின் எம்ஜிஆர் கிட்டத்தட்ட ஆறு வருடங்கள் கழித்துதான் கதாநாயகனாக அறிமுகமானார். ரஞ்சனுக்கோ அதே 1941-ல் 'ரிஷ்யசிருங்கர்' படத்தில் நாயகனாக வாய்ப்பு கிடைத்தது. என்னதான் டைட்டில் கதாபாத்திரம் ரஞ்சனுக்கு இதில் கிடைத்தாலும் கூட, சிறுவயது ரிஷ்யசிருங்கராக நடித்த பாலச்சந்தர் என்கிற சிறுவனுக்குதான் நிறைய பேர் கிடைத்தது.

இந்த பாலச்சந்தர் வேறு யாருமல்ல. 'அந்தநாள்', 'பொம்மை' போன்ற தமிழ் க்ளாஸிக்குகளை பின்னாளில் இயக்கிய வீணை எஸ்.பாலச்சந்தர்-தான். இந்தப் படங்களில் ரஞ்சனின் பெயர் ஆர்.ரமணி பி.ஏ என்றுதான் டைட்டில் கார்டில் போடப்படும். பின்னர் நியூ டோன் ஸ்டூடியோசை சேர்ந்த ஒளிப்பதிவாளர் ஜித்தேன் பானர்ஜிதான் ரஞ்சனின் முகம் பெங்காலி ஆண்களின் முகத்தை போன்று தோற்றமளிப்பதாக கருதி ரஞ்சன் என்கிற பெங்காலி பெயரை சூட்டினார். 

பின்னர் 1942-ல் 'பக்த நாரதர்' படத்தில் தோன்றினார். படம் சொல்லிக்கொள்ளும்படி ஓடவில்லை. ஆனால், 1943-ல் வெளிவந்த 'மங்கம்மா சபதம்' எல்லாவற்றையும் மாற்றியது. ரஞ்சன் தந்தை - மகனாக இரட்டை வேடத்தில் தோன்றிய இந்தப் படம் ஜெமினி ஸ்டூடியோஸிற்கு கிடைத்த முதல் பெரிய வெற்றிப் படம். சொல்லப்போனால் இந்தப் படத்தின் பிரமாண்டமான தயாரிப்புதான் அடுத்தடுத்து வெளிவந்த ஜெமினி படங்களுக்கு அடிப்படையாக விளங்கியது. கதாநாயகியாக நடித்த வசுந்தராவும், நாயகனாக நடித்த ரஞ்சனும் இப்படத்தின் மூலம் மிகப்பெரும் புகழை பெற்றனர். ரஞ்சனுக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் உருவானது. கிட்டத்தட்ட இந்தக் காலகட்டம் நட்சத்திரங்கள் நிரம்பிய ஒரு தருணம். ஒருபக்கம் 'ஹரிதாஸ்' மூலம் பாகவதர் முன் நிற்க, 'ஜெகதலப்ரதாபன்' போன்ற படங்கள் மூலம் சின்னப்பாவும் எதிர் நிற்க, எம்.கே.ராதா, டீ.ஆர்.மஹாலிங்கம் என ஒரு கடும்போட்டி நிலவிக் கொண்டு இருந்தது. இந்தப் போட்டிக்கு நடுவே ரஞ்சனும் குதித்தார்.

இதில் மற்ற எந்த நடிகருக்கும் இல்லாத சிறப்பம்சம் ரஞ்சனுக்கு நிறைய உண்டு. முறைப்படி நடனம் கற்றவர் ரஞ்சன். சொல்லப்போனால் நடிப்பை விட நடனத்தின் மீது மிகுந்த நாட்டம் கொண்டவர் அவர். 'நாட்டியாஞ்சலி' என்கிற பெயரில் ஒரு நடனம் பற்றிய புத்தகம் ஒன்றின் ஆசிரியராகவும் இவர் விளங்கினார். இங்கே பலருக்கும் தெரியாத ஒரு விஷயம், விமானம் ஓட்ட தெரிந்த முதல் தமிழ் நடிகர் இவர்தான். சென்னையில் இருந்த ஃபிளையிங் க்ளப்-பில் உறுப்பினராகவும் இவர் இருந்தார். அதேபோல் அம்பெய்வதில் தேர்ந்த திறமை பெற்றவர். துப்பாக்கி சுடுவதிலும் வல்லவர். சினிமாவுக்காக குதிரை ஓட்ட கற்றுக்கொள்ள தொடங்கி, அதிலும் பாண்டித்யம் பெற்ற அபார திறமைசாலி. அவரது ஒரே பிரச்னை பிராமணர் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால், அவரது பேச்சு வழக்கில் இருந்து அந்தப் பிராமண வாசத்தை ஒதுக்க பெரும்பாடுபட்டார். 

ஜெமினி ஸ்டூடியோ எஸ்.எஸ்.வாசனின் 'சந்திரலேகா' இல்லாமல் இந்த 1940-களின் படங்களோ, நடிகர்களோ முடிவடைவதே இல்லை. அதற்கு ரஞ்சனும் விதிவிலக்கில்லை. ஏற்கெனவே எம்.கே.ராதா பற்றிய வரலாற்றில் 'சந்திரலேகா'வை தரிசித்தோம். இதோ மீண்டும். 'சந்திரலேகா'வில் நாயகனாக ஒருபக்கம் எம்கே.ராதா இருக்க, மறுபக்கம் வில்லனாக ரஞ்சன் இருந்தார். மிகவும் மென்மையான குரலை உடைய ரஞ்சனை இந்தப் படத்தில் கொடூரமான வில்லனாக நடிக்கவைக்க முதலில் வாசன் தயங்கினார். ஆனால் துணிந்து அந்த பாத்திரத்தை செய்த ரஞ்சன் இன்றளவும் மிகச் சிறப்பான ஒரு வில்லன் நடிப்பை உடைய படங்களில் ஒன்றாக 'சந்திரலேகா'வை பேசவைத்து கொண்டிருக்கிறார். என்னதான் 'சந்திரலேகா' மிகப் பெரிய வெற்றியை பெற்றாலும் அதன் மூலம் புகழடைந்தது என்னவோ நாயகி டி.ஆர்.ராஜகுமாரியும், ரஞ்சனும்தான். ஆனால் இந்த அதீத புகழே ரஞ்சனுக்கு தீமையில் முடிந்ததுதான் இங்கே வருத்தப்படவேண்டிய விஷயம்.

என்ன தீமை என்றால் 'சந்திரலேகா' இந்தியிலும் மிகப் பெரிய வெற்றியை ஈட்டியது. இதன் காரணமாக அவருக்கு இந்திப் படங்களில் நடிக்கும் வாய்ப்பு தொடர்ந்து குவிய ஆரம்பித்தது. அதில் சில படங்கள் சுமாரான வெற்றியையும் பெற ரஞ்சன் படங்கள் தொடர்ச்சியாக இந்தியில் வெளிவர ஆரம்பித்தது. ஆனால் மீண்டும் அவர் தமிழுக்கு திரும்பி வருகையில் எம்ஜிஆரும், சிவாஜியும் இங்கே முன்னணிக்கு வர தயாராகி இருந்தார்கள். சமூகப் படங்களின் காலமும் தொடங்கியிருந்தது. 1970 வரை சிறு சிறு வேடங்களில் தமிழ், இந்தி மொழிகளில் ரஞ்சன் நடித்திருந்தாலும் கூட குறிப்பிடத்தக்க வெற்றியையோ அல்லது புகழையோ அவர் பெறவில்லை. அப்படி பெற வாய்ப்பிருந்த தருணத்தில் அவர் தமிழ் படங்களில் கவனம் செலுத்தாமல் போனதால் அடுத்த 'சூப்பர் ஸ்டார்' பட்டத்திற்கான போட்டியில் இடம்பெறாமலேயே போனார். 

இந்த இடத்தில் அப்படியே ஜெமினி கணேசனுக்கு தாவி விடுவது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன். காரணம், அக்காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் நுழைந்த நன்கு படித்த இளைஞர்களில் இவரும் ஒருவர். கிட்டத்தட்ட ரஞ்சனை போன்றுதான். மருத்துவத்திற்கு படிப்பதை லட்சியமாக கொண்டு, அதற்காக அலமேலு என்கிற பெண்ணை திருமணம் செய்த ஜெமினி கணேசன், பின்னர் எதிர்பாராமல் நடந்த சில சம்பவங்கள் காரணமாக வேதியியல் ஆசிரியராக பணியாற்ற வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு, பின்னர் ஜெமினி ஸ்டூடியோவில் படத்தில் நடிப்பவர்களை தேர்ந்தெடுக்கும் கேஸ்டிங் மேனேஜராக பணியாற்ற தொடங்கி, அங்கிருந்து அப்படியே படங்களில் நடிக்க துவங்கியவர். 

இந்தியா சுதந்திரம் அடைந்த ஒரு மாதத்திற்கு பிறகு வெளியான 'மிஸ் மாலினி' என்கிற படத்தில் ஜெமினி கணேசன் ஒரே ஒரு காட்சியில் தோன்றி, "சார்.. கலெக்‌ஷன் ரெகார்ட் பிரேக்.." என்கிற ஒரே ஒரு வசனத்தை பேசி அறிமுகமானார். 'மிஸ் மாலினி' படம் தோல்வியை தழுவியது என்றாலும் கூட ஜாவர் சீதாராமன், ஜெமினி கணேசன் போன்ற அறிமுகங்கள் இந்தப் படத்தின் மூலம் நிகழ்ந்தது. இதைத் தொடர்ந்து 'சக்ரதாரி' என்கிற படத்தில் கிருஷ்ணர் வேடத்தில் நடித்தார். படம் வெற்றிபெற்றாலும் கூட இவரை யாரும் கவனிக்கவில்லை. ஜெமினி ஸ்டூடியோவில் தயாரிப்பு நிர்வாகியாக இருந்த ராம்நோத் என்பவர்தான் முதன்முதலில் 'மிஸ் மாலினி'யில் ஜெமினியை நடிக்கவைத்தார். பின்னர் அவரேதான் ஜெமினியை ஊரறிந்த நடிகராக மாற்றினார். அதற்கு உதவி செய்த படம் 'தாய் உள்ளம்'.

'தாய் உள்ளம்' படத்தின் நாயகன் ஆர்.எஸ்.மனோகர். மனோகர் ஒரு மிகச் சிறந்த மேடை நாடக நடிகர். அவருக்கு எதிராக வில்லன் வேடத்தில் ஜெமினி கணேசன் இந்தப் படத்தில் நடித்தார். நன்றாக கவனித்தால் ரஞ்சனுக்கும், ஜெமினிக்குமான இன்னொரு ஒற்றுமையும் புலப்படும். இருவரும் அதிக பிரபலமானது வில்லன் வேடம் ஏற்ற பாத்திரத்தின் மூலமாகத்தான். இதற்கு அடுத்த வருடம், அதாவது 1953-ல் ஜெமினி முதன்முதலில் கதாநாயகனாக நடித்த 'மனம்போல் மாங்கல்யம்' வெளியானது. ஆர்.கணேஷ் என்று டைட்டில் கார்டில் வெளியானது பெயர். அதற்கு அடுத்த பெயராக படத்தின் கதாநாயகி சாவித்திரியின் பெயர் ஒளிர்ந்தது. ஆம்... இருவரும் இணைந்து நடித்த முதல் படம் இதுதான். ராம் நோத் தயாரித்த இந்தப் படத்தை புல்லையா இயக்கியிருந்தார். மிகப்பெரிய வெற்றியை பெற்ற இந்த நகைச்சுவை படம் ஒரு புதிய கதவை தமிழ் சினிமாவில் திறந்தது. 

வில்லனை அடித்து துவம்சம் செய்யாமல், பக்கம் பக்கமாக வசனங்கள் பேசாமல், எந்த நாடகமும் நடித்த பின்புலமும் இல்லாமல், வளர்த்துவிட திராவிட கட்சிகளின் ஆதரவும் இல்லாமல் ஒரு மிகப்பெரிய நாயகனாக ராமசாமி கணேசன் என்கிற ஜெமினி கணேசன் விஸ்வரூபம் எடுத்த வரலாறை அடுத்த பகுதியில் பார்க்கலாம்.

*** ஒவ்வொருவராய் அலசுவோம் ***

- பால கணேசன், கட்டுரையாளர், தொடர்புக்கு vinolishan@gmail.com

முந்தைய அத்தியாயம்: மூன்றாவது நாயகர்கள் - பகுதி 1 | எம்.கே.ராதா - டி.ஆர்.மகாலிங்கம்

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.