வெங்கட் பிரபு சார்... உங்களிடம் இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம் #10yearsofsaroja

  சௌந்தரியா   | Last Modified : 09 Sep, 2018 11:07 am

saroja-movie-released-10-years-before-on-this-day

அந்த 4 சாதாரண மனிதர்களின் ஓர் இரவு அசாதாரண ஒன்றாக மாறி இன்றுடன் 10 ஆண்டுகள் ஆகிவிட்டன! 

எப்போதும் சீரியஸ் படங்களை மட்டுமே கொண்டாட வேண்டும் என்ற மனநிலையில், நம்மை சீரியஸ் மோட்டில் இருந்து வெளியே கொண்டு வரும் படங்களை கொண்டாட மறந்து விடுகிறோம். அப்படி கொண்டாடப்பட வேண்டிய படம் 'சரோஜா'.

சென்னை 28 என்னும் டிரெண்ட் செட்டர் படத்தைக் கொடுத்த இயக்குநர் என்ற பெரும் எதிர்ப்பார்ப்புகளுக்கு இடையே, தனது திறமையை மீண்டும் ஒருமுறை இந்த படத்தின் மூலம் நிரூபித்துக் கொண்டார் இயக்குநர் வெங்கட் பிரபு. சரோஜாவும் ஒரு விதத்தில் டிரெண்ட் செட்டர் படமாக தான் அமைந்தது. கடத்தல், கொலை, ரத்தம் என கொலைவெறி கதைக்களத்தில் செம ஜாலியான திரைகதையோடு 'சரோஜா'வுக்கு பிறகு பல படங்கள் வந்தன. 

ஏதோ ஒரு கெட்ட கனவை, மறுநாள் காலையில் மற்றவர்களிடம் செம த்ரில்லர் கதையாய் கூறும் போது, நண்பர்கள் விழுந்து விழுந்து சிரிப்பார்களே... அது போன்ற அனுபவம் தான் சரோஜா. ஒரே ஒரு கிரிக்கெட் மேட்ச் பார்க்க ஆசைப்பட்டு ஹைதராபாத்துக்கு சென்ற அந்த 4 நார்மல் மனிதர்களின் வாழ்க்கை எப்படி அப்நார்மல் ஆனது என்னும் ஒன்லைனரோடு தனது டீமின் துணையுடன் வெங்கட் பிரபு கொடுத்த இந்த படம் 2008ம் ஆண்டின் பிளாக்பஸ்டர் படங்களுள் ஒன்றாகவும் அமைந்தது. 

சிலரை சிலரால் மட்டுமே சரியாக பயன்படுத்திக் கொள்ள முடியும். அப்படி பிரேம்ஜி, மிர்ச்சி சிவா போன்றவர்களை மிக சரியாக பயன்படுத்திக் கொண்டவர் வெங்கட் பிரபு. இந்த படத்தில் இவர்கள் இருவரும் செய்த ஒவ்வொன்றும் ரகளையாக இருக்கும். 

ஒவ்வொரு முறை பெண்களை பார்க்கும் போதும் வெள்ளாடை தேவதைகள் தன்னைச் சுற்ற, அதற்கு சிரிக்கும் பிரேம்ஜியின் "எவ்வளவோ பண்ணிட்டோம் இத பண்ண மாட்டோமா?" வசனம் இன்றும் டிரெண்டிங்கில் இருக்கிறது. 

அகில உலக சூப்பர் ஸ்டார் பட்டத்தை பெறுவதற்கு முன்பே இந்த படத்தில் சின்னத்திரை சூப்பர் ஸ்டாராக நடித்திருப்பார் சிவா. தன்னிடம் கதையை சொல்லும் சீரியல் இயக்குநரிடம், "என்னை நம்பி நிறைய கமிட்மென்ட்ஸ் இருக்கு சார். எல்லா சீரியல்லயும் என் போட்டோ போட்டு மாலை போட்டா, நல்லாவா இருக்கும்?"என சிவா கேட்பது, நான் பெரிய நடிகர்ங்க என்று அடிக்கடி மற்றவர்களுக்கு ஞாபகப்படுத்துவது என கொஞ்சம் சிவாவாகவே நடித்திருப்பார் மிர்ச்சி சிவா!. 

ஒரு கிரிக்கெட் மேட்சை வீட்ல பார்த்தா கூட அடிக்கடி ஸ்லோ மோஷன்ல ஸூம் பண்ணி காட்டுவான், உங்க கூட வந்து... என்று புலம்பும் ஸ்.பி.பி.சரண் தெலுங்கு பவாவாக மனைவிடம் திட்டுவாங்கிக் கொண்டு வாழ்ந்தே இருப்பார். 

கிரிக்கெட் மேட்ச் பார்க்க பிளான், ஒரே காரில் 4 நண்பர்கள் பயணம், டிஃராபிக்கில் பார்க்கும் அழகான பெண் என செம ஜாலியாக செல்லும் படம் ஓரு ஆக்சிடெண்டில் தடம் மாறி சீரியஸ் கட்டத்தை அடையும்... பிறகென்ன மீண்டும் ஜாலி டிராக்கையே அடையும். இந்த நால்வருக்கும் சம்பந்தமே இல்லாத ஒரு பெண்ணை காப்பாற்ற செம ஹீரோயிசத்தோடு சங்கர் மகாதேவன் குரல் ஒலிக்க கிளம்பும் காட்சி, இந்த படத்திற்கு பிறகு இன்ஸ்டண்ட் ஹிட் சீனாக மாறிப்போனது. 

இந்த படத்தில் இசை யுவனின் அக்மார்க் ஹிட் ரகம். சீக்கி சீக்கி பாடலோடு சீக்கி சீக்கி ரக இசையும் கொடுத்து அசத்தி இருப்பார் யுவன். அதிலும், பாடகி தான்வி பாடிய This is my life பாடல் கேட்கும் போதே மண்டைக்குள் ஏறும். மாப்பிள்ளைக்கு நிச்சயதார்த்தம் பாடலில் சின்னத்திரை நட்சத்திரங்கள் ஒவ்வொருவராக வந்து ஆடும் போது, டிடி-ஐ தேடியதெல்லாம் ஸ்வீட் மெமரீஸ் தானே!.

இசையை போல படத்தின் ஒளிப்பதிவு அத்தனை ஸ்டைலிஷாக இருக்கும். டல்லடிக்கும் கலரில் நகரும் இரவு காட்சிகளில், குண்டு பல்பு போல பிரகாசமாக ஜொலிப்பார் ஒளிப்பதிவாளர் சக்தி சரவணன்.

கடத்தல் கும்பலிடம் மாட்டிக்கொண்ட சிவா தலையில் காலி பாட்டிலால் தட்டிக்கொண்டே, 'உன்னை எங்கியோ பார்த்திருக்கேன்டா!' என்று அடியாள் யோசிப்பது, மனைவியை நினைத்து உருகி கொண்டு இருப்பவரிடம் யாரு சார் அந்த பொண்ணு என்று பிரேம்ஜி கேரக்டர் மிஸ் ஆகாமல் நடிப்பது என வழக்கமான த்ரில்லர் படங்களில் இருந்து சரோஜாவை தனித்துக்காட்டி வெற்றிப்படமாகவும் மாற்றியது ஜாலியான டிரீட்மெண்ட். அடிக்கடி இது போன்ற படங்கள் வெளியாவது ரசிகர்களுக்கும், வெங்கட் பிரபுவுக்கும் நல்லது!

மேலும் வெங்கட் பிரபு என்னும் ஐடியா பாக்சில் இன்னும் நிறைய ஜாலி ஐடியாக்கள் நிறைந்திருக்கிறது என்று நம்புகிறோம். அதனால் தான் சார்... உங்களிடம் இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம்.

#10yearsofSaroja

Newstm.in

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.