முரளி நினைவு நாள் சிறப்புப் பகிர்வு!

  Shalini   | Last Modified : 08 Sep, 2018 06:12 am

death-anniversary-of-murali

நல்ல நிறமோ, மிடுக்கானத் தோற்றமோ இல்லை ஆனால், தமிழ் ரசிகர்களின் மனதில் தனது நடிப்பால் பெரிய இடத்தைப் பிடித்திருந்தார், அவர் தான் நடிகர் முரளி. பார்ப்பதற்கு பக்கத்து வீட்டு பையன் போல இருக்கும் முரளி இப்போது இருக்கும் தனுஷுக்கும், விஜய் சேதுபதிக்கும் சீனியர். இன்று அவருடைய 8-வது நினைவு தினம். 

அமைதியான முகம், ஆனால் அதில் எப்போதும் ஒரு மென்சோகம் இழையோடிக் கொண்டிருக்கும். 'இதயம்' போல் வசனங்களைக் குறைத்து, பாவனைகளை அதிகப் படுத்தியும், 'புது வசந்தம்' போல நார்மலாகவும், 'சுந்தரா ட்ராவல்ஸ்' போல முழுக்க முழுக்க காமெடியில் தெறிக்க விட்டும் நடிக்கும் கலை அவருக்கு எளிதில் வந்தது. 

காதல் படங்களுக்கு டிரெண்ட் செட்டர் படமாக இவர் நடித்த 'இதயத்திற்கு' எப்போதும் ரசிகர்கள் இதயத்தில் நீங்கா இடமுண்டு. தாழ்வு மனப்பான்மைக் கொண்ட ஒருவனுக்குக் காதல் வந்தால் அவன் எப்படியான மன உளைச்சல்களுக்கும், பிரச்னைகளுக்கும் ஆளாவான் என்பதை முரளியைத் தவிர வேறு யாராலும் அத்தனை நேர்த்தியாக திரையில் காட்டியிருக்க முடியாது. 

நம்மில் ஒருவர் போன்ற தோற்றத்துடன் அவர் இருந்ததும், அப்போதைய இளைஞர்கள் தங்கள் காதலை முரளியின் காதலுடன் ஒப்பிட்டுப் பார்த்தார்கள். 

"இருவரும் பரஸ்பரம் காதலை சொல்லிக் கொண்ட, காதல்களுக்கு மத்தியில் 'இதயம்' போல் சொல்லப் படாத காதல்களும் கொண்டாடப்பட வேண்டியவைகளே" என படத்தைப் பார்த்த ரசிகர்களும் அறிந்துக் கொண்டனர். காரணம் காதல் உணரப்பட வேண்டியது! என்ற மிகப் பெரிய சைக்காலஜியை அந்தப் படம் நமக்கு உணர்த்தியிருக்கும். 

பாடல்களிலும் அதிக கவனம் ஈர்த்த முரளியின் சில பாடல்களைப் பற்றிப் பார்ப்போம். 

பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா

முரளி என்றதுமே மேடையில் மைக்கைப் பிடித்துக் கொண்டு 'பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா' எனப் பாடுவது தான் நமக்கு முதலில் நினைவுக்கு வருகிறது. வாலியின் வரிகளுக்கு யேசுதாஸ் குரல் கொடுத்திருப்பார். ஹை பிச்சும் இல்லாமல், லோவாகவும் இல்லாமல், முழு பாடலையும் ஒரே லெவலில் கம்போஸ் செய்திருப்பர் இசைஞானி. பாடலுக்கு தன் காலால் தாளம் போடும் நாயகி ஹீரா... ச்சோ க்யூட். 

இதயமே இதயமே 

இதுவும் இதயம் பட பாடல் தான். தோளில் டாக்டர் கோட், அதில் ஸ்டெத் என கொட்டும் மழையில் ஹீராவின் வீட்டுக்கு முன் நின்றுக் கொண்டு முரளி பாடும் மற்றுமொரு பாடல். 

ஒரு ஜீவன் அழைத்தது 

கீதாஞ்சலி படத்தில் இடம் பெற்றிருக்கும் இந்தப் பாடல் எத்தனை முறைக் கேட்டாலும் திகட்டாத ஒன்று. இளையராஜா இசையில் அவரும் சித்ராவும் இந்தப் பாடலைப் பாடியிருப்பார்கள். சித்ராவின் இளமை கொஞ்சும் குரல் பாடலுக்கு அத்தனை பொருத்தமாக இருக்கும். உற்று கவனித்தால், ஒருவித மென்சோகம் பாடலில் இருப்பதை புரிந்துக் கொள்ளலாம்.

துள்ளி எழுந்தது 

அதே கீதாஞ்சலி படத்தில் தான் இந்தப் பாடலும் இடம் பெற்றிருக்கும். காரிருள் பனியில் குளிர் காய்ந்தப்படி, கிடார் வாசித்துக் கொண்டு முரளி பாடுவார். இளையராஜாவின் குரலில் ஒலிக்கும் இந்தப் பாடல் மனதுக்கு எப்போதும் ஒருவித அமைதியைத் தரும். அதிக டென்ஷனில் இருக்கும் போது, ஹெட் ஃபோனில் மிதமான ஒலியில் கேட்டுப் பாருங்கள். 

பூ மாலையே 

பகல் நிலவு படத்தில் இடம் பெற்றிருக்கும் இந்தப் பாடலை இளையராஜாவும், ஜானகியும் பாடியிருப்பார்கள். ஒவ்வொரு வரியையும் ஒருவர் பாடி முடிக்கும் போது இன்னொருவர் மென்மையாக வேறு வரியைப் பாடுவார்கள். நம்முடைய ப்ளே லிஸ்டில் இந்தப் பாடலுக்கு எப்போதுமே ஓர் இடமுண்டு. 

இப்படி இன்னும் பல பாடல்களை சொல்லிக் கொண்டே போகலாம். இதனைப் படிக்கும் நீங்கள், உங்களுக்குப் பிடித்த முரளியின் பாடல்களை கமெண்டில் குறிப்பிடுங்கள்!

newstm.in

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.