பாலிவுட்டுக்கு பல நிறங்கள் கொடுத்த 'அனுரக் கஷ்யப்'!

  Newstm Desk   | Last Modified : 10 Sep, 2018 05:14 pm

anurag-kashyap-the-guy-who-gave-bollywood-a-different-face

ஆண்டுக்கு ஆயிரம் படங்கள் ரிலீசாகும் இந்திய சினிமாவில், தனக்கென ஒரு தனி இடம் பிடிப்பது ஒவ்வொரு இயக்குநரின் கனவு. ஆனால், அதில் ஒரு சிலர் மட்டுமே, சினிமாவையே மாற்றம் செய்யும் திறன் கொண்டவர்களாக அமைவார்கள். அப்படிப்பட்டவர்களுள் ஒருவர் தான் அனுரக் கஷ்யப். எழுத்தாளர், இயக்குநர், தயாரிப்பாளர், எடிட்டர், நடிகர் என பன்முகம் கொண்ட இந்த சினிமா ஜாம்பவனின் பிறந்த நாள் இன்று. அவர் கடந்து வந்த பாதையை காணலாம்.

1993ல் உத்தர பிரதேசத்தின் கோரக்பூரில் பிறந்த கஷ்யப், நல்ல வளமான குடும்பத்தை சேர்ந்தவர் தான். அப்பா, மின்சாரத் துறையில் தலைமை பொறியாளர். நல்ல பள்ளி படிப்பை முடித்து, டெல்லி பல்கலைக்கழகத்தில் விலங்கியல் பயின்றார். தனது 21வது வயதில், சினிமாவில் ஏற்பட்ட ஆர்வத்தால், வீட்டை விட்டு மும்பைக்கு ஓடி வந்தார். கையில் இருந்த காசு தீர்ந்தவுடன், ரோட்டிலும், பீச்சிலும் பார்க்கிலும் படுத்து தூங்கும் நிலை ஏற்பட்டது. அதன்பின், ஒரு நாடக கம்பெனியில் சேர்ந்தார். அதுவும் பிக் அப் ஆகவில்லை. 1995ம் ஆண்டு, இயக்குநர் ஸ்ரீ ராம் ராகவனுடன் கஷ்யப்புக்கு அறிமுகம் கிடைத்தது. அவருடன் சேர்ந்து ஆட்டோ ஷங்கரின் கதையை மையப்படுத்தி, 'ஆட்டோ நாராயண்' என்ற தொலைகாட்சி நிகழ்ச்சியையும், ஒரு திரைப்படத்தின் கதையையும் எழுதினார் கஷ்யப். இரண்டுமே கைவிடப்பட்டன. 

1998ம் ஆண்டு நடிகர் மனோஜ் பாஜ்பாயின் மூலம், இயக்குநர் ராம் கோபால் வர்மாவின் அறிமுகம் கஷ்யப்புக்கு கிடைத்தது. அப்போது சத்யா திரைப்படத்தை எழுதும் வாய்ப்பு வழங்கப்பட்டது. கஷ்யப்பும், சவ்ரப் ஷுக்லாவும் சேர்ந்து சத்யா திரைப்படத்தை எழுதினர். படம் மாபெரும் ஹிட்டானது. இந்திய வரலாற்றிலேயே சிறந்த படங்களுள் ஒன்றாக சத்யா பார்க்கப்பட்டது. அதன்பின், மணி ரத்னத்தின் ஆயுத எழுத்து படத்தின் இந்தி பதிப்பு உட்பட பல படங்களுக்கு திரைக்கதை எழுதினார். 'பாஞ்' என்ற படத்தின் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்தார். ஆனால் கொலை, போதைப்பொருள் பழக்கம், ஆபாசம் என படத்தில் சித்தரிக்கப்பட்ட பல விஷயங்களால் சென்சார் போர்டில் தடைபட்டது. 

நீண்ட போராட்டத்திற்கு பிறகு, 2007ம் ஆண்டு பிளாக் ப்ரைடே என்ற படத்தின் மூலம் மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுத்தார். 1993ம் ஆண்டு மும்பையில் நடந்த குண்டுவெடிப்புகளை மையப்படுத்தி கதை அமைக்கப்பட்டது. படம் கமர்ஷியலாக ஹிட்டாகவில்லை என்றாலும், அனைத்து தரப்பில் இருந்தும் பாராட்டுகளை பெற்றது. தொடர்ந்து அவர் எடுத்த நோ ஸ்மோக்கிங் திரைப்படம் பிளாப்பானது.  2009ம் ஆண்டு 'தேவ் டி' என்ற பெயரில் தேவதாசின் கதையை இந்த காலத்தில் நடப்பது போல எடுத்திருந்தார். இந்த படமும் நல்ல வரவேற்பை பெற்றது. 2007ம் ஆண்டு, ரிட்டர்ன் ஆப் அனுமான் என்ற அனிமேஷன் படத்தையும் எடுத்திருந்தார். 

2011ம் ஆண்டு 'கேர்ள் இன்  யெல்லோ பூட்ஸ்', 2012ம் ஆண்டு 'கேங்ஸ் ஆப் வாஸேபூர்' என இரண்டு படங்களும் சூப்பர் ஹிட்டாக, புகழின் உச்சிக்கு சென்றார். ஆடல், பாடல் என இருக்கும் பாலிவுட் படங்களின் முகத்தையே மாற்றியவர் கஷ்யப் என்று சொல்லலாம். நேர்த்தியான கதைக்களம், சமூக பிரச்னைகள், யதார்த்தமான நடிப்பு, டயலாக் என தனக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்தினார்.

தமிழ் சினிமாவின் மிக பெரிய ரசிகர் கஷ்யப் என்பது கூடுதல் செய்தி. பருத்தி வீரன், சுப்ரமணியபுரம் போன்ற திரைப்படங்களை பார்த்து அதன் அடிப்படையிலே தனது ஊரில் உள்ள ரவுடி கும்பல்களை பற்றி கேங்ஸ் ஆப் வாஸேபூர் படம் எழுதியதாக கஷ்யப் கூறியுள்ளார். அந்த படம் துவங்கும் போதும், பாலா, அமீர், சசிகுமார் ஆகியோருக்கு நன்றி என கூறியிருந்தது பலரால் பாராட்டப்பட்டது.

2013ம் ஆண்டு, கேன்ஸ் விருதுகளில் கஷ்யப்புக்கு நைட் 'ஆஃப் ஆடர் ஆஃப் ஆர்ட்ஸ் ஆண்ட் லெட்டர்ஸ்' என்ற விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. தேசிய விருது பெறாவிட்டாலும் சிறந்த திரைக்கதைக்கான ஃபிலிம்ஃபேர் விருதும், ஸ்டார் ஸ்க்ரீன் விருதும் பெற்றுள்ளார். 2008ம் ஆண்டு 8 ஆஸ்கர் விருதுகளை பெற்ற ஹாலிவுட் படம் ஸ்லம்டாக் மில்லியனரின் இயக்குநர் டேனி பாயில், கஷ்யப்பின் 'பிளாக் ப்ரைடே' மற்றும் 'சத்யா' படங்களில் ஈர்க்கப்பட்டு தான், ஸ்லம்டாக் படத்தை எடுத்ததாக தெரிவித்துள்ளார்.

பல படங்களில் சின்ன சின்ன ரோல்களில் நடித்த இவர், சோனாக்ஷி சின்கா நடிப்பில் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கிய மௌனகுரு படத்தின் இந்தி ரிமேக் 'அகிரா'வில் வில்லனாக அறிமுகமானார். அதன்பின், சமீபத்தில் வெளியான 'இமைக்கா நொடிகள்' படத்திலும் சைக்கோ கொலைகாரனாக நடித்து தமிழ் சினிமாவில் வெயிட்டான என்ட்ரி கொடுத்துள்ளார்.

பன்முகங்கள் கொண்டு தொடர்ந்து வித்தியாசமான முயற்சிகள் எடுத்து வரும் இந்த கலைஞனுக்கு நியூஸ்டிஎம்-மின் பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

newstm.in

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.