சோகத்திற்கு ஆறுதலாகவும், காயத்திற்கு மருந்தாகவும் இருந்த சொர்ணலதா குரல் - நினைவு நாள் சிறப்புப் பகிர்வு

  Shalini   | Last Modified : 12 Sep, 2018 02:26 pm

swarnalatha-death-anniversary

தெளிவான உச்சரிப்பு, மனதை லேசாக்கும் இனிமையான குரல், பஞ்சு மிட்டாய் கரைந்து தொண்டைக் குழியில் இறங்குவது போல, அவரின் பாடல்கள் மெல்ல நமக்குள் ஊடுருவி நம்மை ஆக்கிரமிக்கும். எண்பதுகளின் இறுதியில் தொடங்கி இரண்டாயிரத்தின் இறுதி வரை தனது பாடல்களால் நம்மைக் கட்டிப் போட்டவர். வெகு விரைவில் நம்மை தவிக்க விட்டுச் சென்று, இசை வறட்சியை ஏற்படுத்தியவர். ஆம் அவர் தான் பாடகி சொர்ணலதா! இன்று அவரின் எட்டாவது நினைவு தினம். 

தமிழ் சினிமா வெகு விரைவில் தவற விட்ட, முத்துகளில் இவர் மிக முக்கியமானவர். சத்ரியன் படத்தில் வரும் 'மாலையில் யாரோ' என்ற பாடலை ரசிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. மெலடி மற்றும் சோகப் பாடல்கள் தான் அவர் குரலுக்கு கச்சிதமாக இருக்கும் என்பது பலரின் எண்ணம். ஆனால் அவர் பல ஃபாஸ்ட் மியூஸிக் ஹிட் பாடல்களையும் கொடுத்திருக்கிறார். இதுவரை அவரது மெலடிப் பாடல்களை மட்டுமே ரசித்துக் கொண்டிருந்தவர்கள், இனி இதையும் கேட்டுப் பாருங்கள். 

கேப்டன் பிரபாகரன் - ஆட்டமா தேரோட்டமா

சிந்து பைரவி ராகத்தில் அமைந்த இந்தப் பாடல் 90-களில் அத்தனை பிரபலம். திருமண வீடுகளில் மைக் செட்டில் இது ஒலிக்காத நாட்களே இல்லை. மெலடி மற்றும் சோகப் பாடல்களுக்கு நடுவே, அதிவேக இசைக்கு, குரல் கொடுத்த அவரின் முதல் முயற்சி இது. கங்கை அமரனின் வரிகளுக்கு இசையமைத்திருப்பார் இளையராஜா. 

தளபதி - ராக்கம்மா கையத்தட்டு 

எஸ்.பி.பி-யுடன் சொர்ணலதா இணைந்துப் பாடியிருக்கும் இந்தப் பாடலுக்கு ரஜினி நடனம் ஆடுவதால் தனி கவனம் பெற்றது. இப்போது கூட டி.வி-யில் போடும்போதெல்லாம் பழைய நினைவுகளை மீட்டெடுக்கிறது. மென்மையான குரலால் இப்படியான பாடல்களையும் பாட முடியும் என நிரூபித்த சொர்ணலாதா நீண்ட ஆயுளுடன் இருந்திருக்க வேண்டும். வாலி எழுதிய இந்தப் பாடலுக்கு இளையராஜா இசை. 

மன்னன் - ராஜாதி ராஜா உன் தந்திரங்கள் 

குஷ்புவுடன் ரஜினி ஆடும் இந்தப் பாடல். இதுவும் எஸ்.பி.பி - சொர்ணலதா கூட்டணி தான். பல்லவியை ஒரு வித கர்வத்துடன் பாடியிருப்பார் சொர்ணலதா. இதுவும் வாலி - இளையராஜா காம்போவில் உருவானது தான். 

ஜென்டில்மேன் - உசிலம்பட்டி பெண்குட்டி

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இவர் பாடிய முதல் பாடல் இது. 1993-ல் இந்தப் படம் வெளியானது. அதற்கடுத்த வருடம் ரஹ்மான் இசையமைத்த கருத்தம்மா படம் வெளியானது. அதில் சொர்ணலதா பாடிய 'போறாளே பொன்னுத்தாயி' என்ற பாடல் அவருக்கு தேசிய விருதைப் பெற்றுத் தந்தது. 

பம்பாய் - குச்சி குச்சி ராக்கம்மா 

இதுவும் ஏ.ஆர்.ரஹ்மான் பாடல் தான். ஹரிஹரனுடன் இணைந்து இந்தப் பாடலைப் பாடியிருப்பார் சொர்ணலதா. தவிர இந்தப் படத்தில் வரும் 'ஹம்மா ஹம்மா' என்ற பாடலிலும் இவரது குரல் இடம் பெற்றிருக்கும். 

காதலனில் முக்காபலா, இந்தியனில் மாயா மச்சிந்த்ரா, உல்லாசத்தில் முத்தே முத்தம்மா, அழகியில் குருவி கொடைஞ்ச கொய்யாப்பழம், வில்லன் படத்தில் அடிச்சா நெத்தி அடி என மெலடியைத் தவிர்த்து பல பாடல்களைப் பாடியுள்ளார். பலரின் சோகத்திற்கு ஆறுதலாகவும், காயத்திற்கு மருந்தாகவும் இவரது குரல் எப்போதும் ஒலிக்கும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை. இருந்தாலும் வி மிஸ் யூ சொர்ணலதா!

newstm.in

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.