• சபரிமலையை கலவர பூமியாக மாற்ற அனுமதிக்க முடியாது: தேவசம் போர்டு
  • அமிர்தசரஸ் ரயில் விபத்து; இன்று ஒருநாள் துக்கம் அனுசரிப்பு
  • சபரிமலை: போராட்டத்தில் ஈடுபட்ட 200 பேர் மீது வழக்குப்பதிவு!
  • நடிகை த்ரிஷாவின் ட்விட்டர் பக்கம் முடக்கம்
  • சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

மூன்றாவது நாயகர்கள் - பகுதி 4 | ஜெய்சங்கர் எனும் மூடிமறைக்கப்பட்ட அற்புதம்!

  பால கணேசன்   | Last Modified : 17 Sep, 2018 06:50 pm

third-rank-heroes-of-tamil-cinema-a-wonderful-actor-jai-shankar

"மக்கள் கலைஞர்" என்கிற பட்டமெல்லாம் சினிமாவில் வாங்குவது லேசுப்பட்ட காரியம் இல்லை. அதற்கு ஓர் ஈர்ப்பை மக்களிடம் உருவாக்க வேண்டும். அதை ஜெய்சங்கர் செய்தார். சுப்பிரமணியம் சங்கர் என்கிற இயற்பெயரை கொண்ட இவர் சட்டப்படிப்பை பாதியில் விட்டுவிட்டு நடிக்கவந்தார். முதலில் சோ ராமசாமியின் விவேகா ஃபைன் ஆர்ட்ஸில் இணைந்து நாடகங்களில் நடிக்க ஆரம்பித்த இவருக்கு சரியான வேஷங்கள் கொடுக்கப்படாததால் பின்னர் கல்கி ஃபைன் ஆர்ட்ஸில் சேர்ந்து 'அமரதாரா' போன்ற நாடகங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். 

நாம் இதுவரை பார்த்த நடிகர்களில் (இரு துருவங்களை சேர்த்து) எடுத்ததுமே கதாநாயகனாக உள்ளே வந்து, தொடர்ந்து பல படங்கள் எந்தச் சிக்கலும் இல்லாமல் நடித்த ஒரே நடிகர் இவர்தான். அந்த வகையில் ஒருமுறை தொடங்கிய இவரின் பயணம் தொடர்ந்து ஐந்தாவது கியரிலேயே பயணித்ததை நாம் கவனிக்கவேண்டும். 

'இரவும் பகலும்' என்றொரு படத்தை தயாரிக்க சிட்டாடல் நிறுவனத்தார் முடிவு செய்தனர். படம் குறைந்த செலவில் தயாரிக்க முடிவு செய்யப்பட்டதால் நாயகன், நாயகி இருவருமே புதுமுகமாக இருக்கவேண்டும் என்று முடிவுசெய்து ஜெய்சங்கரை நாயகனாக நியமித்தார்கள். தேங்காய் சீனிவாசனும் கூட வேறு ஒரு கதாபாத்திரத்திற்காக தேர்வு செய்யப்பட்டு பின்னர் கழட்டிவிடப்பட்டார். ஒருவேளை தேங்காய் சீனிவாசன் இதில் நடித்திருந்தால் அவருக்கு இதுதான் முதல்படமாக இருந்திருக்கும். ஜெய்சங்கரின் தாயாராக பண்டரி பாய் நடித்த இந்தப் படம் ஆச்சரியப்படும் விதமாக நல்ல வெற்றியை பெற்றது. அதற்கு முதல் காரணம் நல்ல திரைக்கதைதான். என்னதான் ஓர் ஆங்கில நாவலை தழுவி திரைக்கதை எழுதப்பட்டிருந்தாலும் கூட, அதை சரியான முறையில் தமிழுக்கு ஏற்றவாறு மாற்றியதில் இயக்குனர் ஜோசப் தலியத்தின் திறமையை உணரலாம். 'உள்ளத்தின் கதவுகள் கண்களடா' போன்ற அருமையான பாடல்களும் படத்தின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்தது.

சரியான அடையாளம்

எம்ஜிஆர் - சிவாஜி - ஜெமினி கோலோச்சிக் கொண்டிருந்த காலகட்டத்தில் ஒரு புது இளைஞன் நாயகனாக நடித்த படம் நன்றாக ஓடுவது யாரும் எதிர்பார்க்காத ஒன்று. ஆனால் சினிமா எப்போதும் இப்படித்தான். அடையாளம் காட்டவேண்டிய நேரத்தில் மிகச் சரியாக அதை செய்யும். அதுதான் ஜெய்சங்கர் வாழ்க்கையில் நிகழ்ந்தது. காரணம் என்னவென்றால் அவர் ஆரம்பத்தில் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கேட்டபோது அவருடைய கண்கள் மிகவும் சிறியதாக இருப்பாதாகவும், அதனால் கதாநாயகன் வேடத்திற்கு இவர் பொருத்தமாட்டார் என்றும் கூறி நிராகரித்தனர். 'இரவும் பகலும்' படத்தின் வெற்றி அதை அடியோடு மாற்றியது. அறிமுகமான அதே 1965-ல் இவரது இரண்டாவது வெற்றிப்படமும் வந்தது. அதுதான் 'குழந்தையும் தெய்வமும்'.

டிஸ்னியின் 'தி பேரண்ட டிராப்' கதையை தழுவிய இந்தப் படம் தமிழில் வெளிவந்த குழந்தைகள் முக்கிய பாத்திரத்தில் நடித்த  படங்களில் மிக முக்கியமானது. அந்த வருடத்திற்கான சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருதையும் வென்ற இந்தப் படம் பெருவெற்றி அடைந்தது. படத்தில் இடம்பெற்ற 'அன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்' என்கிற பாடல் இன்றளவும் சிறந்த மெலடி பாடல்களில் ஒன்றாக திகழ்வதை காணலாம். இப்படத்தின் வெற்றிக்கு குட்டி பத்மினிதான் முக்கிய காரணம் என்றாலும் கூட ஜெய்சங்கர் ராசியான ஹீரோவாக எல்லாராலும் பார்க்கப்பட்டார். இந்த சென்டிமென்ட் அவருக்கு நல்லமுறையில் உதவியது. இதைத்தொடர்ந்து இவர் ஜெயலலிதாவுடன் சேர்ந்து நடித்த 'நீ' படமும் பெரிய வெற்றியை பெற, அதே 1966-ல் இதே ஜோடி இணைய 'யார் நீ' என்றொரு படமும் வெளியாகி சக்கைபோடு போட்டது. இந்தியில் இருந்து ரீமேக் செய்யப்பட்ட இந்தப் படம் ஜெயலலிதா, ஜெய்சங்கர் ஆகிய இருவருக்குமே மிக முக்கியமான படம். 

தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட்

சஸ்பென்ஸ் வகையை சேர்ந்த இந்த 'யார் நீ' வருவதற்கு முன்பே 'இரு வல்லவர்கள்' என்கிற த்ரில்லர் படத்தை ஜெய்சங்கர் கொடுத்திருந்தார். இன்றளவும் தேனினும் இனிய பாடல்களை கொண்ட இந்தப் படம் வெற்றி பெற்றதில் ஆச்சரியமேயில்லை. ஆனால் 1966-ஆம் வருடத்தின் இறுதியில்தான் ஜெய்சங்கரின் மிகப்பெரிய வெற்றிப்படமான 'வல்லவன் ஒருவன்' வெளிவந்தது. ஜெய்சங்கருக்கு 1966-ஆம் வருடமே ஓர் அற்புதமான வருடம் என்றால், அந்த மகுடத்தில் பாதிக்கப்பட்ட மாணிக்கக் கல் 'வல்லவன் ஒருவன்'. சி.ஐ.டி சங்கர் என்கிற கதாபாத்திரத்தில் ஜெய்சங்கர் தோன்றி "தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட்" என்கிற பட்டப்பெயரை இதன்மூலம் பெற்றார்.

இந்த இடத்தில் நாம் கவனிக்க வேண்டிய ஒன்று என்னவென்றால் எம்.ஜி.ஆர் தொடர்ந்து பல படங்களில் மக்களை காக்கும் மகராசனாய் நடித்துக்கொண்டிருந்தார். அதில் போலீஸ் கதைகளும் உண்டு. போலீஸ் கதை இல்லாமலேயே அவர் மாறுவேடத்தில் பல படங்களில் துப்பறியும் வேதங்கள் செய்திருக்கிறார். 1968-ல் 'ரகசிய போலீஸ் 115' என்கிற படத்திலும் கூட ரகசிய போலீசாக நடித்தார். இவையெல்லாமே ஆங்கிலத்தில் வெளிவந்த ஜேம்ஸ்பாண்ட் படங்களின் தாக்கத்தில் எடுக்கப்பட்டது என்பதை நாமும் அறிவோம். ஆனால் எம்ஜிஆருக்கு கிடைக்காத இந்தப் பட்டம், அதாவது தனிப்பட்ட முறையிலான பட்டம் ஜெய்சங்கருக்கு கொடுக்கப்பட்டது ஆச்சரியப்படக்கூடிய விஷயம்தான். ஆனால் இந்தப் பட்டமே அவரது மற்ற படங்களை மக்களால் மறக்க செய்வதற்கு ஏதுவாக அமைந்ததுதான் இதில் துக்கமான செய்தி. காரணம் என்னவென்றால், இவர் இந்த மாதிரியான வேடங்களில் நடிப்பதற்குதான் சரிப்படுவார் என்று மக்களை முன்யோசனைக்கு தள்ளும்படியான ஒரு சூழ்நிலையை இந்த பட்டங்கள் கொடுத்துவிடுகின்றன.

நகைச்சுவைக்கு முக்கியத்துவம்

ஏனெனில் இதைத்தொடர்ந்து வந்த 'சபாஷ் தம்பி' திரைப்படம் சாதாரண பிரஜை ஒருவன் எதிர்பாராமல் ஒரு கொலைக் குற்றத்தில் மாட்டிக்கொள்ள, அவன் எப்படி அதை அவனாகவே துப்பறிந்து சரி செய்கிறான் என்கிற விதமாக கதை இருக்கும். இது ஜெய்சங்கரே எதிர்பாராமல் அவருக்கான அந்த சி.ஐ.டி இமேஜை மேலும் உயர்த்தியது. இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால் இந்தப் படத்தில் வரும் நாகேஷ் கதாபாத்திரத்தின் பெயர் ஜேம்ஸ்பாண்ட். ஆனால் இந்த இமேஜை எல்லாம் ஜெய்சங்கர் கணக்கில் எடுத்துக்கொள்ளவே இல்லை. அவர் வழக்கம்போல பலதரப்பட்ட கதாபாத்திரங்களில் நடிக்கவே செய்தார். குறிப்பாக அவரது படங்களில் காமெடி கொஞ்சம் அதிகமாக இருக்குமாறும் பார்த்துக்கொண்டதை அவரது படங்களின் வரிசையை பார்க்கும்போது உணரமுடிகிறது.

குறிப்பாக 'பட்டணத்தில் பூதம்' போன்ற படத்தை எடுத்துக்கொள்வோம். கதை 'அலாவுதீனும் அற்புத விளக்கும்' என்கிற அரேபிய நாடோடிக்கதையின் தாக்கத்தில் உருவான நவீன கால அலாவுதீன் கதைதான். அதற்குள் அட்டகாசமான நகைச்சுவையையும், காதலையும் புகுத்தி வெற்றிகண்டனர். அந்தவகையில் ஜெய்சங்கருக்கு நாகேஷ் பல படங்களில் பக்கத்துணையாக இருந்திருக்கிறார். ஜெய்சங்கர் படங்கள் தொடர்ந்து வெற்றிபெற்றதுக்கு இன்னொரு பெரிய காரணம் என்னவென்றால், அவரது படங்களின் பாடல்கள் எல்லாம் எப்படியும் ஹிட்டாகி விடும். அந்த வகையில் ஜெய்சங்கர் அதிர்ஷ்டக்காரரும் கூட. இசையமைப்பாளர் கோவர்தனும், வேதாவும் ஜெய்சங்கரின் வெற்றிக்கு துணை நின்றனர்.

"குயிலாக நான் இருந்தென்ன குரலாக நீ வரவேண்டும்" பாடல் இடம்பெற்ற 'செல்வமகள்' திரைப்படம் பட்டி தொட்டியெல்லாம் ஓடி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அந்தக் காலகட்டத்தில் கதை இலாகா என்கிற விஷயம் தயாரிப்பு தரப்பு சார்பில் இயங்கும். அதன் காரணமாக வலுவான கதைகள், முடிச்சுகள், திருப்பங்கள் கொண்ட படங்கள் தொடர்ந்து வந்துகொண்டே இருந்தன. அப்படி ஒருபடம்தான் இந்த 'செல்வமகள்'. குறிப்பாக இடைவேளைக்கு பிறகான காட்சிகளில் எல்லாம் பாத்து நிமிடத்திற்கு ஒரு திருப்பம் உண்டு. இப்படி ஒரு சீரியசான படம் ஒன்றில் வெற்றி கொடுத்தவுடன், அடுத்த படமாக ரொமான்டிக் காமெடி வகையை சேர்ந்த 'காதலித்தால் போதுமா' வெளியாகி அதுவும் வெற்றிபெற்றது. அதேபோல் ஜெய்சங்கரின் பெரும்பாலான படங்களில் அவருக்கு வில்லனாக ஆர்.எஸ்.மனோகர் நடித்ததும் குறிப்பிடத்தக்கது. எப்படி எம்ஜிஆருக்கு நம்பியாரோ அதேபோல் ஜெய்சங்கருக்கு மனோகரை சொல்லலாம்.

சோ ராமசாமியின் திரைக்கதை வசனத்தில் வெளிவந்த 'நீலகிரி எக்ஸ்பிரஸ்' படத்தில் சிஐடி சங்கர் கதாபாத்திரம் மீண்டும் வந்தது. ஜெய்சங்கருக்கு இன்னொரு பெரிய வெற்றியை தந்த இந்தப் படம் அந்த நேரத்தில் இந்தியாவின் எல்லா சினிமா தொழிற்சாலையிலும் படமாக எடுக்கப்பட்டு வெற்றிபெற்றது. பின்னர் 1970-ல் 'சி.ஐ.டி. சங்கர்' என்கிற பெயரிலேயே மீண்டும் ஒரு படம் ஜெய்சங்கர் நடிப்பில் வெளியானது. இதற்கு நடுவில் 'முத்துச்சிப்பி', 'ஜீவனாம்சம்', 'பூவா தலையா' என ஹிட் படங்களை ஜெய்சங்கர் கொடுத்திருந்தார். ஆனாலும் கூட 'பூவா தலையா' என்கிற காமெடிப்படமும், 'சிஐடி சங்கர்' என்கிற ஆக்‌ஷன் படமுமே இன்றும் பலருக்கும் ஜெய்சங்கர் படங்களில் குறிப்பிடத்தக்கதாக இருக்கிறது. பாலச்சந்தர் இயக்கிய 'பூவா தலையா' படத்தில் ஜெமினியும், நாகேஷும் உண்டு. குறிப்பாக நாகேஷின் நடிப்பு இந்த படத்தில் அபாரமாக இருக்கும். இதே படத்தைதான் 'கந்தா கடம்பா கதிர்வேலா' என்று ராம.நாராயணன் ரீமேக் செய்தார். அதிலும் கூட வடிவேலு கதாபாத்திரம் நன்றாக இருக்கும். 

பாலச்சந்தருக்கு ஒரு பழக்கம் உண்டு. நல்ல பெயர் கொண்ட நடிகர்களை தனது படத்தில் கொஞ்சமேனும் வில்லன் வாசம் அடிக்கும் பாத்திரத்தில் நடிக்கவைத்து விடுவார். ஜெமினிக்கு 'நான் அவன் இல்லை' படம் போல, ஜெய்சங்கருக்கு 'நூற்றுக்கு நூறு'. ஒரு கல்லூரி பேராசிரியர் மீது அவரது மூன்று மாணவிகள் பாலியல் பலாத்கார புகார் தருவதும், அதை அப்பேராசிரியரின் வருங்கால மனைவி பொய் என்று நிரூபிப்பதும்தான் கதை. ஜெய்சங்கருக்கு மிகப்பெரிய வெற்றியை தந்த படம் இது. இதன் பின்னர் சில சுமாரான வெற்றிப்படங்கள் மட்டுமே தந்தாலும் கூட ஜெய்சங்கருக்கு தொடர்ந்து படங்கள் வந்துகொண்டுதான் இருந்தன. பின்னர் ரஜினி - கமல் காலகட்டம் தொடங்கியது.  

புது அலையில் தொலைந்த வாய்ப்புகள்

இந்த ரஜினி - கமல் காலகட்டம் தொடங்கிய பின்னர் அதுவரை இருந்த எம்ஜிஆர் - சிவாஜி காலகட்டத்து நடிகர்கள் மெல்ல மெல்ல வாய்ப்பிழந்து போக தொடங்கினர். அதற்கு பாரதிராஜா, மகேந்திரன் போன்ற இயக்குனர்களின் வருகையும், அவர்களின் மூலம் அறிமுகமான நடிகர்களின் வெற்றியும் கூட மிகப்பெரிய காரணம். ஒரு புது அலை சினிமாவை இவர்கள் முன்னெடுத்தனர். அசலான முகங்களை திரையில் கொண்டுவர இவர்கள் எடுத்த முயற்சியின் காரணமாக பல பழைய நாயகர்கள் வாய்ப்பின்றி தவித்தனர். அதில் சிலர் குணச்சித்திர வேடங்களை தேடிச் செல்ல ஆரம்பித்தனர். இந்த நேரத்தில் ஜெய்சங்கருக்கு இதே மாதிரியான குணச்சித்திர வேடங்கள் நிறைய வந்தும் அவர் அந்த வாய்ப்புகளை எல்லாம் மறுத்தார். அப்போதுதான் ஏவிஎம் தயாரிப்பில் முதன்முறையாக ரஜினி நடிக்க 'முரட்டுக்காளை' எடுப்பதாக திட்டமிடப்பட்டது.

முதலில் இப்படத்தில் வில்லனாக நடிக்க அணுகப்பட்டவர் யார் தெரியுமா? நமது கேப்டன் விஜயகாந்த். ரஜினி, விஜயகாந்தின் விருப்பமான நடிகர் என்பதால் அவருக்கு வில்லனாக நடிக்க முடியாது என்று மறுத்துவிட்டார். பின்னர் இந்த வாய்ப்பு ஜெய்சங்கரிடம் போனது. குணச்சித்திர வேடத்தில் கூட நடிக்க தயாராக இல்லாத ஜெய்சங்கர் எப்படி வில்லனாக நடிக்க ஒப்புக்கொள்வார்? கண்டிப்பாக முடியாது என அவர் மறுத்தார். ஆனால் அவரது நண்பர்களின் தொடர்ந்த வற்புறுத்தலின் பேரில் இறுதியாக நடிக்க ஒப்புக்கொண்டார். இதை ரஜினி கேள்விப்பட்டதும் ஏவிஎம் நிறுவனத்தார்க்கு அவர் வைத்த முதல் வேண்டுகோள் என்னவெனில், எக்காரணம் கொண்டும் படத்தின் விளம்பரத்தில் ஜெய்சங்கரை இருட்டடிப்பு செய்துவிடக் கூடாது. மேலும் தனக்கு என்னவிதமான முக்கியத்துவம் தரப்படுகிறதோ அதே அளவு முக்கியத்துவம் ஜெய்சங்கருக்கு தரப்படவேண்டும் என்றும் ஏவிஎம்மிடம் கேட்டுக்கொண்டார். அதை ஏவிஎம் நிறுவனத்தார் மனதார ஏற்றுக்கொண்டனர்.

இரண்டாவது இன்னிங்ஸ்

உண்மையில் ஜெய்சங்கரின் இந்த முடிவு அவருக்கு மிகப்பெரிய நன்மையையே கொடுத்தது. அவரது இரண்டாவது இன்னிங்ஸ் ஆரம்பித்தது இப்படித்தான். அந்த வகையில் இன்றைய பல நடிகர்களுக்கு இவரது இந்த முடிவு ஓர் உதாரணமாக இருந்து முன்னெடுத்து செல்கிறது. 'முரட்டுக்காளை' படத்தின் மிகப் பெரிய வெற்றியும், அதில் அவருக்கு இருந்த முக்கியத்துவமும் தொடர்ந்து பல வாய்ப்புகளை கொண்டு வந்தது. 'சவால்', 'கர்ஜனை', 'தனிக்காட்டு ராஜா', 'பாயும்புலி', 'துடிக்கும் கரங்கள்', 'தாய் வீடு', 'சட்டம்', 'அடுத்த வாரிசு', 'அபூர்வ சகோதரர்கள்', 'தங்கமகன்', 'படிக்காதவன்', 'ஊமை விழிகள்' என அவர் நடித்த படங்களின் பட்டியல் மிகப்பெரியது. சொல்லப்போனால் ரஜினிக்கு மிக ராசியான வில்லன் என்கிற பெயர் ஜெய்சங்கருக்கு கிடைத்தது. இருவருக்குமிடையிலான அந்த கெமிஸ்ட்ரியும் அட்டகாசமாக திரையில் வெளிப்பட்டது. இதே கட்டுரையில் மேற்கண்ட பத்தியில் ஜெய்சங்கருக்கு நல்ல வில்லனாக மனோகர் இருந்தார் என்று பார்த்தோம். இப்போது அதே ஜெய்சங்கர் ரஜினிக்கு நல்ல வில்லனாக இருந்தார் என்று பார்க்கிறோம். 

மூடிமறைக்கப்பட்ட அற்புதம்

உண்மையில் ஜெய்சங்கர் ஒரு மூடிமறைக்கப்பட்ட அற்புதம். இதை அவர் நடித்த படங்களின் பட்டியலை பார்த்தாலே தெரியும். எம்ஜிஆர் சிவாஜி இருந்ததால் ஒரு ட்ரெண்ட் செட்டராக அவரால் இருக்கமுடியவில்லை. கமல் - ரஜினி காலகட்டத்தில் அவரால் நாயகனாக தொடரமுடியவில்லை. ஆனால், அந்தந்த நேரத்தில் என்ன செய்துகொண்டிருந்தாரோ, அதை எந்தவித குறைகளும் இன்றி தெளிவாக செய்துகொண்டிருந்தார். அவரால் நட்டமடைந்த தயாரிப்பாளர்கள் யாருமே இல்லை. அப்படி ஒரு மினிமம் கேரண்டி நடிகராக அவர் இருந்தார். எப்படி அவர் திரையுலகில் இத்தனை நாட்கள் நாயகனாக நடித்தும் பரவலாக வெளியில் தெரியாமல் இருந்தாரோ அதேபோல்தான் அவர் செய்த உதவிகளும் வெளியில் தெரிந்ததே இல்லை.

மேற்கண்ட ஒரு பத்தியில் தயாரிப்பாளர்களுக்கு இவரால் நஷ்டம் வந்ததே இல்லை என்று எழுதியிருந்தேன். அது உண்மைதான். ஆனால் நிறைய தயாரிப்பாளர்களால் இவருக்கு பலமுறை நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது என்பது கசப்பான உண்மை. பல படங்களுக்கு தயாரிப்பாளர்கள் இவருக்கு கொடுத்த காசோலை செல்லுபடியானதே இல்லை. ஆனால் ஒருமுறை கூட இதை ஒரு பிரச்சினையாக ஜெய்சங்கர் உண்டாக்கியதே இல்லை. மீண்டும் அதே தயாரிப்பாளர் வந்து படம் நடிக்க கேட்டாலும் கூட மறுக்காமல் அதை செய்துகொடுப்பார். அதேபோல் ஏதேனும் விழாவுக்கு வருகிறேன் என்று சில பெரிய நடிகர்கள் வாக்கு கொடுத்துவிட்டு இறுதி நேரத்தில் "சாரி.. வரமுடியல.." என்று சொன்னால், அவர்களுக்கு ஆபத்பாந்தவனாக கைகொடுக்கு ஒரே ஆள் ஜெய்சங்கர்தான். உடனே அவர் அந்நிகழ்ச்சியில் கலந்துகொள்வார். அப்படி அவரை நம்பியவர்களை ஒருக்காலும் ஏமாற்றியதே இல்லை. பட்டுப்புடவையை வேஷ்டியாக கட்டும் வினோத பழக்கம் ஒன்று ஜெய்சங்கருக்கு இருந்ததாக சொல்வார்கள். அதேபோல் உதவி என்று வந்து நின்ற யாரையும் வெறுங்கையோடு அவர் அனுப்பிவைத்ததே இல்லை என்கிற பெயரும் இவருக்கு உண்டு. இவையாவும் அவர் உயிரோடு இருந்தபொழுது வெளிப்படையாக யாரும் சொன்னதேயில்லை. எந்தப் பத்திரிக்கையிலும் செய்தியாக வந்ததும் இல்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக யாரேனும் பேசும்போது வெளிவந்த செய்திகள் மட்டுந்தான் இவை.

மரியாதைக்கு உரியவர்!

எம்ஜிஆரின் ராமாவரம் தோட்டத்திற்கு யார் சென்றாலும் வெறுங்கையோடு திரும்பமாட்டார்கள் என்று கிட்டத்தட்ட எல்லாருக்குமே தெரியும். இது திட்டமிட்டே மக்களிடம் பல செய்திகளாக பரப்பப்பட்டது என்றும் கூட சொல்லலாம். ஆனால் ஜெய்சங்கர் இந்த விளம்பரங்களையோ அல்லது விளம்பரப்படுத்துவதிலேயோ எப்போதும் கவனம் செலுத்தியதே இல்லை. இன்னும் கூறப்போனால் அவர் இறந்த பிறகுதான் பலரும் அவர் செய்த உதவிகளை வெளியில் சொன்னார்கள். அதேபோல் இவர் இறந்தபின்னர் ஒவ்வொரு மாதத்திற்கும் அவரது நினைவு நாளை கணக்கிட்டு போஸ்டர் அடித்து மதுரையில் ஒட்டிக்கொண்டிருந்தார்கள் சிலர். இது அவர் மீது இன்றும் மரியாதை வைத்திருக்கும் பலர் இருக்கிறார்கள் என்பதற்கு சாட்சி. காரணம், மற்ற நடிகர்களை போல இவருக்கு வெளிப்படையாக பெரிய ரசிகர் மன்றங்கள் எல்லாம் இருக்கவில்லை. அதையும் மீறி அவர் இறந்தபின்னர் இதை சிலர் செய்கிறார்கள் என்றால் அவர் கண்டிப்பாக எதையோ சாதித்துவிட்டுதான் இறந்திருக்கிறார். அதில் சந்தேகமே வேண்டாம். இப்போது ஜெய்சங்கரின் புதல்வரும் தன் தந்தையின் பாதையில் சில நல்ல காரியங்கள் செய்து வருவதை கேள்விப்படுகையில் மகிழ்ச்சியே ஏற்படுகிறது.

இனி வரும் அடுத்தடுத்த பகுதிகள் ஜெட் வேகத்தில் பறக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. அதற்கு அந்தந்த நடிகர்களும் உதவ தயாராக இருக்கிறார்கள். பொறுத்திருங்கள்.

*** ஒவ்வொருவராய் அலசுவோம் ***

- பால கணேசன், கட்டுரையாளர், தொடர்புக்கு vinolishan@gmail.com

முந்தைய அத்தியாயம்: மூன்றாவது நாயகர்கள் - பகுதி 3 | ஈகோ அண்டாத ஜெமினி கணேசன்

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close