இந்தியாவில் தடையால் தவித்த திரைப்படங்கள்!

  பால கணேசன்   | Last Modified : 11 Jul, 2018 02:06 pm

திரைப்படங்கள் முழுக்க முழுக்க பொழுதுபோக்குக்கான ஒரு விஷயமாக இந்தியாவில் இருந்ததே கிடையாது. சமூக மாற்றத்தை விரும்பும் வகையிலான படங்கள் அல்லது சமூகத்தில் புனிதப்படுத்தப்பட்டிருக்கும் ஒரு விஷயத்தை கேலி செய்யும் படங்கள், எதை சமூகம் அசிங்கம் எனவும், இயல்புக்கு மாறானது எனவும் ஒதுக்கி வைத்திருக்கிறதோ அதை உயர்த்திப் பேசும் படங்கள் என அவ்வப்போது சில படங்கள் வெளியாவதும், அவை மேற்கூறப்பட்ட ஏதேனும் ஒரு காரணத்துக்காக தடை செய்யப்படுவதும், சில குறிப்பிட்ட அமைப்புகள் அந்தப் படத்துக்கு எதிராக போராடி படத்தை திரையிடவிடாமல் செய்வதும் பலமுறை நாம் பார்த்த விஷயங்கள். அப்படி தடைசெய்யப்பட்ட படங்களை பற்றி ஒரு சிறு பார்வை.

நீல் ஆகாஷர் நீச்சே (Neel Akasher Neechey - நீலவானத்திற்கு அடியில்): என்கிற வங்க மொழிப்படம்தான் இந்தியா சுதந்திரம் அடைந்ததற்கு பிறகு 1959-ல் தடை செய்யப்பட்ட முதல் படம். இந்தியாவின் புகழ்பெற்ற இயக்குநர்களில் ஒருவரான மிருனாள் சென் இயக்கிய இந்தப் படத்தில் சுதந்திரம் அடைவதற்கு சிறிது நாட்களுக்கு முன்னதான கல்கத்தாவின் நிலையும், அந்த நேரத்தில் இந்தியக் குடியிருமை பெற போராடும் ஒரு சீன நாட்டு தினக்கூலி இளைஞனின் பாடும் சொல்லப்பட்டிருந்தது. அன்றைய அரசை கடுமையாக சாடி எடுக்கப்பட்டதால் இந்தப்படம் தடை செய்யப்பட்டது. இரண்டு மாதங்களுக்கு பின்னர் தடை நீக்கப்பெற்றது.

கரம் ஹவா (Garam Hawa - சூடான காற்று): இந்திய சினிமாவின் மிக முக்கியமான படங்களில் ஒன்றாக திகழும், இந்தியா சார்பில் ஆஸ்கருக்கு அனுப்பப்பட்ட, ஒரு தேசிய விருதும், மூன்று ஃபிலிம்பேர் விருதும் வென்ற, கேன்ஸ் திரைவிழாவில் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட இந்தப்படம் நமது தணிக்கைத்துறையின் அனுமதி கிடைக்காமல் எட்டு மாதங்கள் வெளியாகாமல் 1973-ல் தடைசெய்யப்பட்டிருந்தது. காரணம் இந்தப் படம் இந்திய - பாகிஸ்தான் பிரிவினையின்போது பாகிஸ்தான் செல்வதா, இல்லை இந்தியாவிலேயே தங்கிவிடுவதா என்கிற மனக் குழப்பத்தில் இருக்கும் ஒரு பணக்கார முஸ்லிம் குடும்பத்தைப் பற்றிய கதை. மிக அருமையான முறையில் மெல்லிய உணர்வுகளைத் தூண்டும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்ட இந்தப் படத்தை புதிய அலை சினிமா என்று அப்போது வருணித்தார்கள். ஆனால் படத்தின் இந்த காவியத்தன்மையே படத்தின் தடைக்கும் காரணமாக அமைந்தது.

கிஸ்ஸா குர்ஸி கா (Kissa Kursi Ka - நாற்காலியின் கதை): 1977-ல் தடைசெய்யப்பட்ட இந்தத் திரைப்படத்தின் பின்னணி மிக சுவாரஸ்யமானது. அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த அம்ரித் நஹாதா இயக்கிய இந்தப் படத்தில் முழுக்க முழுக்க இந்திரா காந்தியையும், அவரது மகன் சஞ்சய் காந்தியையும் கிண்டல் செய்திருந்தார்கள். இதனால ஆத்திரமுற்ற சஞ்சய் காந்தி படத்தின் எல்லா பிலிம் சுருளையும் கைப்பற்றி எரித்தார். அப்போது எமெர்ஜன்சி நடைமுறையில் இருந்தது. தணிக்கைக்கு இந்தப் படம் 1975-ல் அனுப்பப்பட்டது. படத்தில் இருந்த காட்சிகளை பார்த்துவிட்டு மிரண்டு போன தணிக்கைத் துறையினர் இதை அப்போது ஆட்சியில் இருந்த இந்திராவிடம் சொல்ல, பட வெளியீடு நிறுத்திவைக்கப்பட்டது. பின்னர் 1979-ல் வெளியானது. படச்சுருளை எரித்த வழக்கில் சஞ்சய் காந்திக்கு ஒரு மாத சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.

குற்றப்பத்திரிகை: தமிழில் சுதந்திரத்திற்கு முன்னர் கல்கியின் தியாக பூமி சுதந்திர வேட்கையை தூண்டுவதாக காரணம் காட்டி ஆங்கிலேயர்களால் தடை செய்யப்பட்டது. பின்னர் சில மாதங்கள் கழித்து படம் மீண்டும் வெளியானது. சுதந்திரத்திற்கு பின்னர் 1987-ல் 'ஒரே ஒரு கிராமத்திலே' என்கிற படம் தடைசெய்யப்பட்டு, நீதிமன்றத்தால் பிறகு அனுமதி அளிக்கப்பட்டு வெளியானது. ராஜீவ் காந்தி கொலை வழக்கை மையமாக வைத்து 1993-ல் எடுக்கப்பட்ட ஆர்.கே.செல்வமணி இயக்கிய இந்த 'குற்றப்பத்திரிக்கை' படம் தணிக்கைத் துறையால் தடைசெய்யப்பட்டது. மேலும் படக்குழுவினர் மீது சி.பி.ஐ விசாரணையும் நடத்தப்பட்டது.

காரணம் ராஜீவ் காந்தி கொலை நடந்ததும் குற்றவாளிகள் அனைவரும் ஒரு தண்ணீர் லாரியில் தப்பிப்போனதாக படத்தில் ஒரு காட்சி இருந்தது. உண்மையிலேயே கொலை நடந்ததும் அவர்கள் தண்ணீர் லாரியில் தப்பிப்போன விவரம் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக வைக்கப்பட்டு அதன்மீது விசாரணை நடந்து கொண்டிருந்தது. ஆனால் அதே காட்சியை படத்திலும் பார்த்த சிபிஐ அதிகாரிகள் அதன்பொருட்டு விசாரணையை தீவிரமாக்கினர். ராஜீவ் கொலையாளிகளுக்கும், படக்குழுவினருக்கு ஏதேனும் தொடர்பு இருக்குமோ என்கிற கோணத்தில் எல்லாம் விசாரணை நடத்தப்பட்டது. ஆனால் அதெல்லாம் கற்பனையாக தான் யோசித்தவை என்று இயக்குநர் எவ்வளவோ மன்றாடியும் அதிகாரிகள் செவிமடுக்கவில்லை. பின்னர் 15 வருடங்கள் கழித்து நிறைய காட்சிகள் கத்தரிக்கப்பட்டு படம் வெளியானது.

சிக்கிம் - டாகுமென்ட்டரி (Sikkim): உலகப்புகழ் பெற்ற இயக்குனர் சத்யஜித் ரே எடுத்த இந்த ஆவணப்படம் இந்திய அரசால் தடைவிதிக்கப்பட்டது. காரணம் இந்தப் படம் எடுக்கப்பட்ட வருடமான 1971 காலகட்டத்தில் சிக்கிம் மாநிலம் இந்தியாவுக்கு சொந்தமா அல்லது சீனாவுக்கு சொந்தமா என்கிற மிகப்பெரிய பிரச்சினை நடந்துகொண்டிருந்தது. அந்த நேரத்தில் எடுக்கப்பட்ட இப்படத்தில் சிக்கிம் மாநிலத்தின் இறையாண்மைக்கு எதிரான காட்சிகள் இருப்பதாக சொல்லி 1975-ல் இந்த ஆவணப்படம் தடை செய்யப்பட்டது. அந்த நேரத்தில் சிக்கிம் இந்தியாவோடு இணைந்திருந்தது. இந்தப் படத்தின் படசுருள்கள் சிக்கிம் மாநிலத்தின் கலை மற்றும் கலாச்சார துறையின் வசம் ஒப்படைக்கப்பட்டது.

பின்னர் 2010-ஆம் ஆண்டு இப்படத்தின் மேலிருக்கும் தடை நீக்கப்பட்டு கொல்கத்தா பிலிம் பெஸ்டிவலில் முதன்முறையாக திரையிடப்பட்டு பரவலான பாராட்டுகளை பெற்றது. உண்மையில் சத்யஜித் ரே நிறைய ஆவணப்படங்கள் எடுக்க ஆர்வம் கொண்டிருந்தார். எல்லாமே இந்தியாவின் வெவ்வேறு மாநிலங்களில் இருக்கும் கலாச்சாரம், நடனம் போன்றவற்றை அடிப்படையாக வைத்து எடுப்ப்பதாக இருந்தது. ஆனால் இந்த முதல் முயற்சியாக சிக்கிம் ஆவணப்படம் சிக்கலுக்குள்ளானதால் அவர் அந்த முயற்சியை கைவிட்டார். - பாலகணேசன், கட்டுரையாளர், தொடர்புக்கு vinolishan@gmail.com

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.