செக்கச்சிவந்த வானம்: காட் ஃபாதரா... பொன்னியின் செல்வனா?

  சிவசங்கரி கோமதி நாயகம்   | Last Modified : 24 Sep, 2018 03:11 pm

chekka-chivantha-vaanam-preview

"எப்போ?
நாளைக்கு!

எங்கே?
தேவி.

ஹிட்டா? ஃபளாப்பா?
பார்ப்போம்."

இப்படி ரத்தினச் சுருக்கமாக பேசி மக்கள் மௌன ராக மோடிற்குள் சென்றுவிட்டார்கள் என்றாலே போதும், வெளிவரப்போவது யார் படம் என்று எளிதாக யூகித்து விடலாம். 

ஆம், இயக்குநர் மணிரத்னம் இயக்கி விழாயக்கிழமை (செப்.27) வெளிவர இருக்கும் 'செக்கச்சிவந்த வானம்' படத்திற்கு செல்ல ஆயத்தமாகும் இளைஞர்களின் உரையாடல்கள் மேலே குறிப்பிட்டபடிதான் இருக்குமோ என்ற ஒரு சின்ன கற்பனை.

நடிகர்களுக்காக அல்லாமல் இயக்குநர்களுக்காகவே பார்க்க வேண்டும் என்று வகைப்படுத்தும் போது நினைவுக்கு வரும் வெகுசில இயக்குநர்களில் முதலில் காட்சியளிப்பவர் மணிரத்னம்.

"மிஸ்டர் சந்திரமௌலி, மிஸ்டர் சந்திரமௌலி" என்று கூப்பிட்டு கார்த்திக் ரசிகர்களைத் திரும்பிப் பார்க்க வைத்தாலும் ஒரு ஃபிளாஷ்பேக் சீக்குவென்ஸை படத்தின் ஹைலைட் பகுதியாக காட்ட முடியும் என்று சினிமா ஆர்வலர்களைத் திரும்பிப் பார்க்க வைத்தவர் இயக்குநர் மணிரத்னம். 

தனது வெற்றிப் பயணத்தை மென்மையான மௌன ராகமாக தொடங்கினார் மணிரத்னம். ஆனால் அடுத்து கமல்ஹாசனை வைத்து முபை அண்டர்வேர்ல்ட் டான் பற்றிய அதிரடியான ஆக்‌ஷன் படமான நாயகன் படத்தை இயக்கினார். "நீங்க நல்லவரா? இல்ல கெட்டவரா?" என்று இறுதிக் காட்சியில் வரும் வசனம் இன்னமும் சில மனிதர்களை நாம் சந்திக்கும் போது கேட்கத் தோன்றும் அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்திய மணியின் முத்தாய்ப்பான வசனங்களுள் ஒன்று.
 
"எழுந்திரு அஞ்சலி, எழுந்திரு! எழுந்திரு அஞ்சலி எழுந்திரு!" என்று கிளைமாக்ஸ் காட்சியை அமைத்து ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பற்றிய விழிப்புணர்வை மக்கள் மத்தியில் முதன்முதலாக 90-களிலேயே ஏற்படுத்தி இப்படியும் ஒரு உலகம் இயங்கிக்கொண்டிருக்கிறது என்று அவர்கள் உலகத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தவர் இயக்குனர் மணிரத்னம்.

சின்ன சின்ன ஆசை என்று தொடங்கி நாட்டில் நடந்து கொண்டிருந்த பெரிய பிரச்னையான காஷ்மீர் தீவிரவாதத்தை அழகான கிராமத்துப் பெண் காதல் கதையோடு இணைத்து ரோஜா படத்தில் சொன்னார். இந்த படத்தில் இவருடன் முதன்முதலில் இணைந்து தன் இசைப் பயணத்தைத் தொடங்கினார் ஏ.ஆர்.ரஹ்மான். அதற்குப் பிறகு அமைந்த இவர்கள் கூட்டணி வெற்றி கூட்டணியாக இன்றுவரை திகழ்கிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை கலைய வைத்து படத்தின் கதாபாத்திரமாகவே காட்டிய இயக்குநர்கள் வெகு சிலரே. அந்தவகையில் தளபதி படத்தில் நட்பின் பெருமையை சித்தரிக்கும் கேரக்டரில் சூர்யாவாக ரஜினியை அணுவணுவாக செதுக்கிய பெருமை இவரையே சாரும். தமிழகத்தின்  முக்கிய அரசியல் தலைவர்கள் எம்.ஜி.ஆர் - கருணாநிதியின் நட்பையும் இருவர் என்ற படத்தின் மூலம் அழகாக சித்தரித்திருப்பார்.

அழகான காதலை நயமாக சொல்வதில் மணி சாருக்கு நிகர் அவரே. காதலை மையப்படுத்தி அவர் எடுத்த படமான அலைபாயுதேவில் மாதவனையும் ஓகே கண்மணி படத்தில் துல்கர் சல்மானையும் அறிமுகம் செய்து இளம்பெண்கள் கூட்டத்தை இவர்கள் பின்னால் அலைய வைத்த பெருமை இந்த இயக்குநரையே சாரும்.

குழந்தை நட்சத்திரங்களிடம் வலுவான கதாபாத்திரங்களைக் கொடுத்து அவர்களின் நடிப்பை திறம்பட வெளி கொணர்வதில் கைதேர்ந்தவர் இயக்குனர் மணிரத்னம். தாய்-மகள் பாசப் பரிதவிப்பை ஈழத் தமிழர்களின் வாழ்க்கை வாயிலாக நம் கன்னத்தில் கண்ணீர் முத்தமிட சித்தரித்திருப்பார். அந்த படத்தில் இவரின் இயக்கத்துக்கு தங்களின் நடிப்பால் துணை  நின்றவர்கள் சிம்ரன், நந்திதா தாஸ் மற்றும் கீர்த்தனா. 

வில்லனை ஹீரோவாக்கிக் காட்டும் தைரியம் எத்தனை இயக்குனர்களுக்கு இருக்கும் என்று தெரியவில்லை. ஆனால் மணிரத்னம்  ராமாயணம் காவியத்தில் வரும் ராவணன் கதாபாத்திரத்தை இக்கால சூழலுக்கு ஏற்ப மாற்றி ராவணனை முன்னிறுத்திக் காட்டியிருப்பார்.

இதற்குப் பிறகு வெளிவந்த மணிரத்னத்தின் படங்கள் பெரிதாக வெற்றி அடையவில்லை என்றாலும் தமிழ் ரசிகர்களிடையே அவரின் படங்கள் எப்போதும் ஒருவித எதிர்பார்ப்பை ஏற்படுத்தத் தவறியதில்லை. சிறந்த இசையமைப்பாளர், சிறந்த கேமராமேன், சிறந்த பாடலாசிரியர் என்று பெரிய ஜாம்பவான்கள் ஒருசேர இவர் படங்களில் இணைந்து வந்தாலும், ஒவ்வொருவரும் அவர்களின் தனித்துவத்தை இவர் படங்களில் பிரதிபலிக்க வாய்ப்பை ஏற்படுத்தித் தருவதால் இவர் மற்ற இயக்குநர்களிலிருந்து தனித்து நின்று  வெற்றிபெறுகிறார்.

அரவிந்த் சுவாமி, பிரகாஷ்ராஜ், சிம்பு, ஜோதிகா விஜய் சேதுபதி என்று பெரிய நடிகர் பட்டாளத்தைக் கொண்டு மணிரத்னம் இயக்கும் 'செக்கச்சிவந்த வானம்' படம், வெள்ளித்திரையில் வியாழக்கிழமை வெளிவர இருக்கிறது. 

இந்தப் படத்தின் இரண்டு ட்ரெய்லர்கள் கடந்த சில நாட்களாக கோலிவுட் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி, ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு பக்கம் 'காட் ஃபாதர்' வகையறாவின் உள்ளூர் வடிவம் என்றும், இன்னொரு பக்கம் 'பொன்னியின் செல்வன்' நாவலின் மார்டன் வெர்ஷன் என்றும் பேச்சு நிலவுகிறது.

பாலிவுட்டுக்கு பழசு என்றாலும் கோலிவுட்டுக்கு மல்டி ஹீரோ சப்ஜெக்ட் என்பது சற்றே புதுசு. இந்த முயற்சியில் வெற்றி பெறுவாரா மணிரத்னம்? படம் வெற்றியோ! தோல்வியோ! ஆனால் மணிரத்னம் தன் சிக்னேச்சர் காட்சிகளில் மிளிர்வார் என்பதற்கு ட்ரெய்லரில் அரவிந்தஸ்வாமி "உனக்கு யாரவது பழைய ஃப்ரன்ட் இருக்காங்களா? நம்பாதே!" என்று பேசும் வசனம் ஒன்று சாட்சி.

செக்கச்சிவந்த வானத்தில் மணிரத்னம் துருவ நட்சத்திரமாக மின்னுகிறாரா அல்லது வெறும் அஸ்தமிக்கும் சூரியனாக தான் காட்சியளிக்கிறாரா என்பதை சில தினங்களில் பார்ப்போம்.

newstm.in

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.