மூன்றாவது நாயகர்கள் - பகுதி 6 | தனி வழியில் விக்ரமும் சூர்யாவும்!

  பால கணேசன்   | Last Modified : 08 Oct, 2018 01:57 pm

third-rank-heroes-of-tamil-cinema-vikram-and-surya

நடிகர்கள் விஜய் - அஜித் காலகட்டம் மிகவும் பிரமாண்டமானது. உலகமயமாக்கலின் பிற்பாடு நடந்த பல மாற்றங்களில் தமிழ் சினிமாவும் சிக்கிக்கொண்டது. குறிப்பாக மல்டிப்ளக்ஸ் திரையரங்குகள் மொத்த சினிமாவின் முகத்தையே மாற்றியது. எல்லா படங்களின் ஆயுளும் வெறும் மூன்றே நாட்கள்தான் என்கிற விஷயம் இங்கே புரிந்துகொள்ளப்படவே நீண்ட நாட்கள் ஆகின. இதற்கிடையில்தான் சில மூன்றாம் நாயகர்கள் இங்கே உருவானார்கள். சொல்லப்போனால் முதல் இட நாயகர்கள் கூட வெற்றிபெற முடியாத சூழ்நிலையில் மொத்த தமிழ் திரையுலகையும் காப்பாற்ற வந்த ஆபத்பாந்தவன்களாக அவர்கள் திகழ்ந்தார்கள். அதைப்பற்றி விரிவாக பார்ப்போம்.

விஜயின் படங்கள் தோல்வியடைய தொடங்கிய காலகட்டத்தில், அஜித்தின் படங்கள் மிகப் பெரிய வெற்றியை பெற ஆரம்பித்த காலகட்டத்தில், அதாவது 1999-ல் 'சேது' வெளியானது. கிட்டத்தட்ட 10 வருட நீண்ட போராட்டத்திற்கு பிறகு விக்ரம் வெற்றிபெற்ற படம். ஒரேநேரத்தில் மொத்த தமிழ் திரையுலகமும் விக்ரமை திரும்பிப் பார்க்க, ஒரு நாயகன் உதயமானார். ஆனால், உடனே பெரிய இடத்திற்கு அவர் போய்விடவில்லை. விஜய்யின் 'பத்ரி', 'ஷாஜஹான்', 'தமிழன்', 'பகவதி', 'வசீகரா', 'புதிய கீதை' போன்ற படங்களும், அஜித்தின் 'பூவெல்லாம் உன் வாசம்', 'ரெட்', 'ராஜா', 'ஆஞ்சநேயா', 'ஜனா', 'ஜி' போன்ற படங்களும் வெளிவந்து தோல்வியை தந்துகொண்டிருந்த தருணத்தில் விக்ரம் உயரத் தொடங்கினார்.

'எதிரும் புதிரும்' என்கிற முதல் படம் எடுத்த தரணியின் இயக்கத்தில் விக்ரம் நடித்து வெளிவந்த 'தில்' பெரிய வெற்றியை பெற, ஆக்‌ஷன் படங்களிலும் தன்னால் ஜொலிக்க முடியும் என்று விக்ரம் நிரூபித்தார். அடுத்த படமே 'காசி' வெளிவந்தது. இதன் மூலம் விக்ரம் தனது பாதை எந்த திசையை நோக்கி நகர்கிறது என்பதை தெளிவாக புரியவைத்தார். மிகவும் இருண்ட கதைக்களத்தை கொண்ட 'காசி'யும் வெற்றி பெற, தொடர்ந்து வந்த 'ஜெமினி' பட்டிதொட்டியெல்லாம் விக்ரமின் பெயரை உச்சரிக்கவைத்தது. 'ஓ போடு' பாடலின் வெற்றியும், வில்லனாக நடித்த கலாபவன் மணியின் உடல்மொழியும் படத்தை அந்த வருடத்தின் மிகப்பெரிய ஹிட் படமாக மாற்றியது.

2003-ல் மீண்டும் தரணியோடு சேர்ந்து விக்ரம் நடித்த 'தூள்' அதுவரை இருந்த பல சாதனைகளை தகர்த்தது. இதில் குறிப்பிட்டு சொல்லவேண்டிய விஷயம் என்னவெனில், ஆடியோ கேசட்டுகள் அழியத்தொடங்கி எம்.பி.3 சிடிக்கள் பெரும் பாய்ச்சலை நிகழ்த்த தொடங்கிய காலம் அது. ஒரே சிடியில் ஓராயிரம் பாடல்கள் எல்லாம் பதியலாம். ஒரிஜினல் கேசட் மற்றும் சிடிக்கள் விற்பனை அதலபாதாளத்திற்கு சென்றுகொண்டிருந்த காலகட்டத்தில் 'தூள்' படத்தின் ஆடியோ விற்பனை அதை வெளியிட்ட நிறுவனத்தார் பிளாட்டினம் விருதை வழங்கும் அளவிற்கு அதிகமாக இருந்தது. ஆடியோவே இப்படி என்றால் படம் எந்தளவிற்கு லாபத்தை சம்பாதித்து கொடுத்திருக்கும் என்பதை நான் சொல்ல தேவையில்லை. முதலில் விஜய்க்கு சொல்லப்பட்ட இந்தக் கதையில் இறுதியில் விக்ரமே நடிக்கவேண்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

இதில் 2003-ல் வெளிவந்த 'சாமி' படம்தான் விக்ரமின் மசாலாப் படங்களின் உச்சம் என்று நான் சொல்வேன். அதே 2003-ல் தான் விஜய்-க்கு 'புதிய கீதை' வெளிவந்து மிகப்பெரிய தோல்வியை தழுவியிருந்தது. அஜித்திற்கு 'ஆஞ்சநேயா'. இரண்டு பெரிய நடிகர்களின் படங்கள் வரிசையாக வெளியாகி நொண்டியடித்துக் கொண்டிருந்தபொழுது, விக்ரமின் 'சாமி' தாறுமாறாக ஓடி முன்னிலையில் அவரை நிறுத்தியது. 'சாமி' பட வெற்றிவிழாவில் பேசிய ரஜினி, "சூப்பர் ஸ்டார் பட்டம் என்பது என் ஒருவனுக்கு மட்டும் சொந்தமில்லை. தயாரிப்பாளர்களை நன்றாக வாழவைக்கும், ரசிகர்களை அதிகப்படியாக திருப்திப்படுத்தும் யாரும் சூப்பர் ஸ்டார்-தான்.." என்று கூறும் அளவிற்கு 'சாமி'யின் வெற்றி இருந்தது. பின்னர் விக்ரமின் ஃபார்முலாப்படி அடுத்தபடமாக 'பிதாமகன்' வந்தது. நன்றாக கவனித்தால் 'பிதாமகன்' வெளியான அதே நாளில்தான் விஜயின் இரண்டாம் இன்னிங்ஸ் தொடக்கத்திற்கு காரணமான 'திருமலை'யும் வெளிவந்தது. இரண்டுமே வெற்றிபெற்றன.

பின்னர் வந்த விக்ரம் படங்களில் அன்னியனும், தெய்வத்திருமகளும் மட்டுமே ஓரளவு நன்றாக ஓடியது. மற்ற படங்கள் எல்லாம் உருவாக்கத்தில் மிக சுமாராக இருந்ததால் விக்ரம் கொடுத்த பெரும் உழைப்பு எல்லாமே விழலுக்கு இறைத்த நீராக மாறியது. குறிப்பாக 'ஐ' போன்ற படங்கள் கடும் உடல் உழைப்பையும், மன உறுதியையும் வேண்டுபவை. ஷங்கர் என்கிற மிகப் பெரிய மசாலா இயக்குனரின் படமும் கூட. ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு படமும் ஓடவில்லை. விமர்சன ரீதியாகவும் மிக மோசமான எதிர்வினையையே சம்பாதித்தது. 'சாமி' போன்ற படங்கள் வெளிவந்த பொழுதில் விக்ரம் மட்டுமே தனியொருவராக பல வெற்றிகள் தந்து தமிழ் சினிமாவை வாழவைத்துக்கொண்டிருந்தார். ஏனெனில் அப்போது வந்த ரஜினியின் 'பாபா' படமும் கூட தோல்வியையே தழுவியது. தமிழ் சினிமாவின் ஒரு துருவமாக மாற நல்ல வாய்ப்பிருந்த விக்ரம் அதை, தான் தேர்ந்தெடுத்த மோசமான படங்களின் மூலம் தவறவிட்டார் என்பதே கசக்கும் உண்மை. 

விக்ரமின் வளர்ச்சி உச்சத்தில் இருந்தபொழுது சூர்யா என்கிற நடிகரின் 'காக்க காக்க' வெளிவந்தது. விக்ரமை போல் அல்லாது தனது முதல் படத்திலேயே ஓரளவு நல்ல பெயரை பெற்றவராக சூர்யா திகழ்ந்தார். 'நேருக்கு நேர்' படத்தில் நன்றாக நடித்திருந்ததாக பெயர் பெற்ற சூர்யா அதன்பின்னர் அந்த வெற்றியை தக்கவைக்காமல் போனார். குறிப்பாக மென்சோக காட்சிகளில் அவரது சகிக்கமுடியாத அளவிற்கு இருந்ததாக தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்தன. அவர் நடித்த படங்களும் எந்த வெற்றியையும் பெறவில்லை. பின்னர் இந்நிலைமையை மாற்ற விரும்பிய சூர்யா 'சேது' என்கிற மிகப்பெரிய வெற்றியை கொடுத்த இயக்குனர் பாலாவிடம் தன்னை ஒப்படைத்தார். இது அவருக்கு நல்ல பலனை தந்தது. 'நந்தா' எதிர்பார்த்த அளவு மிகப் பெரிய வெற்றியை அடையவில்லை என்றாலும் கூட சூர்யாவிற்குள் இருந்த நடிப்புத் திறமையை அது வெளிக்கொணர்ந்தது. அதன்பின்னர் அவர் நடித்த 'மவுனம் பேசியதே' படமும் அதை பறைசாற்ற, பின்னர் 'காக்க காக்க' வெளிவந்தது. 

சினிமாவில் ஒரு பிரேக் பாயின்ட் கிடைப்பது அவ்வளவு எளிதான விஷயமல்ல. அப்படி கிடைத்ததை தக்க வைப்பது அதைவிட பெரிய விஷயம். விக்ரம் செய்ய தவறிய இந்த விஷயத்தை சூர்யா செய்தார். பிதாமகனில் காமெடி கலந்து இவர் செய்த கதாபாத்திரம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் அடுத்த படமே அவர் 'பேரழகன்' செய்தார். பின்னர் 2005-ல் வெளிவந்த 'கஜினி' மிகப் பெரிய வெற்றியை பெற சூர்யா உச்சத்தை எட்டினார். நன்கு கவனித்தால் சூர்யா ஆரம்பகட்டத்தில் வெற்றி கொடுக்க ஆரம்பிக்கையில் விக்ரமின் பாதையைத்தான் பின்பற்றினார். விக்ரம் நல்ல பெயரை பெற காரணமாக இருந்த விஷயம் என்னவென்றால் அது விஜய், அஜித் இருவரும் மாஸ் ஹீரோ கதைகளில் மட்டுமே நடித்தனர். அதுதான் தங்கள் பாதையென்று முடிவு செய்து முன்னேறினர். முக்கியமான இரண்டு ஹீரோக்களும் இப்படி இருந்ததால் கதைக்கான நாயகனாக நடிப்பதில் இருந்த இடைவெளியை விக்ரம் முதலில் நிரப்பினார். அதையே தன் பாணியில் சூர்யாவும் செய்தார். அதேநேரத்தில் மாஸ் ஹீரோ கதாபாத்திரம் ஓரளவு நல்ல கதையம்சம் உள்ள வகையில் அமைந்தால் அதையும் தவறவிடவில்லை. இந்த இடத்தில விக்ரம் 'சாமி'க்கு பின்னர் சறுக்கினார். சூர்யா அதை லாவகமாக கையாண்டார்.

'ஆறு', 'வேல்', 'அயன்', 'ஆதவன்', 'சிங்கம்' (மூன்று பாகங்கள்) என மசாலா கதைகளில் நடித்து மூன்றாமிடத்திற்கு தகுதியான ஆளாக தன்னை வளர்த்துக்கொண்டார். இடையில் வந்த 'சில்லுன்னு ஒரு காதல்', 'வாரணம் ஆயிரம்' போன்ற படங்களில் தன் நடிப்பு திறமையையும் வெளிக்காட்ட தவறவில்லை இவர். சினிமாவே வாழ்க்கை என்று வாழ்ந்து, அதில் முட்டி மோதி ஜெயித்தவர் விக்ரம், நல்ல நடிகரான சிவகுமாரின் புதல்வனாக இருந்தும் நடிப்பதில் ஆர்வமே இல்லாத சரவணன் என்கிற சூர்யா பின்னர் படிப்படியாக நடிப்பு, நடனம் எல்லாம் கற்றுக்கொண்டு ஜொலித்தவர். இவர்கள் இருவரையும் இந்த 'மூன்றாவது நாயகர்கள்' பட்டியலில் சேர்த்ததன் முதற்காரணம் இவர்கள் முன்னேறி வந்த காலகட்டமும், இவர்கள் வெற்றி பெற்ற காலகட்டத்தில் அந்த வெற்றி ஏற்படுத்திய தாக்கமும்தான். 

நான்கு முக்கிய நடிகர்கள் படங்களும் தோல்வியை தழுவிக்கொண்டிருந்த காலகட்டத்தில் வென்றவர்கள் இவர்கள். பின்னர் அந்த நால்வரும் வெற்றி ஏணியை பிடித்த பின்னரும் தங்கள் இடத்தை ஓரளவேனும் தக்கவைத்தவர்களும் இவர்களே. விக்ரம் படங்கள் தோல்வியுற்றாலும் கூட அவர் மீதியிருக்கும் நம்பிக்கை இம்மியளவும் குறையவில்லை என்பதே நிதர்சனம். இதோ இப்போது வெளியான 'சாமி'யின் இரண்டாம் பாகம் சரியாக போகவில்லை என்றாலும் கூட அதை 'துருவ நட்சத்திரம்' காப்பாற்றிவிடும் என்கிற நம்பிக்கை ரசிகனுக்கு உள்ளது.

இன்னொரு ஒற்றுமை என்னவென்றால் இருவருமே இயக்குனர் பாலாவால் செதுக்கப்பட்டவர்கள். 'மாஸ் ஹீரோ' என்கிற பிம்பத்திற்கு பின்னால் ஒளிந்துகொள்ளாமல் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள, உடலை வருத்தி, உருவம் மாற்றி நடிப்பதில் இருவரும் ஆர்வம் காட்டினர். இதன் காரணமாகவே இவர்கள் இருவராலும் தொடர்ந்து படங்கள் கொடுக்க முடிந்தது. நான் முதல் வரியிலேயே சொன்னதுபோல் ஒரு படத்தின் ஆயுள் மூன்றே நாட்கள்தான் என்பதால் அதற்குள் மக்களை கவர்ந்திழுக்கும் வித்தையை காட்டிவிடவேண்டும். இல்லையென்றால் தோல்வியை தவிர்க்க இயலாது. மக்களோடு சற்று இணைந்தே இருக்கவேண்டிய கட்டாயத்திலும் இப்போது நடிகர்கள் இருப்பதால் தேர்ந்தெடுக்கப்பட்ட 'மாஸ் ஹீரோ' கதையிலும் நடிக்கவேண்டும். அது தோல்வியடைந்தால் "எதுக்கு இந்த வேண்டாத வேலை?" என்று ரசிகர்கள் விமர்சிப்பதையும் தாங்கிக்கொள்ள வேண்டும். ஏனெனில் எல்லாரையும், எல்லா நேரத்திலும் மாஸ் ஹீரோவாக ரசிகன் ஏற்றுக்கொள்வதில்லை. இதை உணர்ந்தவர்கள் மட்டுமே இங்கே நிலைக்க முடியும்.

அடுத்த பாகத்தில் ஒரு மொத்த அலசலோடு இதை முடித்துக்கொள்ளலாமா?

- பால கணேசன், கட்டுரையாளர், தொடர்புக்கு vinolishan@gmail.com

முந்தைய அத்தியாயம்: மூன்றாவது நாயகர்கள் - பகுதி 5 | அசல் அதிரடி நாயகன் விஜயகாந்த்!

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.