'எப்படியெல்லாம் வாழக்கூடாதோ, அப்படியெல்லாம் வாழ்ந்தவன் நான்' - கண்ணதாசன் நினைவு தின சிறப்புப் பகிர்வு!

  முத்துமாரி   | Last Modified : 17 Oct, 2018 01:08 pm

kannadasan-37th-death-anniversary

வழக்கமாக பழைய பாடல்கள் என்றாலே காலத்தால் அழியாத பாடல்கள் என்று தான் கூறுவர். அதிலும் கண்ணதாசன் பாடல்கள் என்றாலே தனிச்சிறப்பு. தத்துவப்பாடல்கள், காதல் பாடல்கள், தன்னம்பிக்கை பாடல்கள் என அனைத்து வகையான பாடல்கள் எழுதுவதிலும் வல்லவர்.  

சிவகங்கை மாவட்டம், காரைக்குடிக்கு அருகில் உள்ள சிறுகூடல்பட்டி என்ற கிராமத்தில் பிறந்தவர் கண்ணதாசன். இயற்பெயர் முத்தையா. அப்பா பெயர் சாத்தப்ப செட்டியார். அம்மா பெயர் விசாலாட்சி. உடன் பிறந்தவர்கள், ஆறு சகோதரிகள், மூன்று சகோதரர்கள்.

கண்ணதாசன் எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். சிறு வயதிலேயே எழுத்தின் மீது தீராத ஆர்வம் கொண்டவராக இருந்தார். புத்தகங்கள் வாசிப்பது அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று. சிறு சிறு புத்தகங்கள் வாசிக்கத் தொடங்கிய அவர், பத்திரிகைகளில் கதை எழுத வேண்டும் என்பது அவரது கனவாக இருந்தது. தனது 16 வயதில் வீட்டுக்குத் தெரியாமல் சென்னைக்கு கிளம்பி வந்தார். சந்திரசேகரன் என்று புனைப் பெயர் சூடிக்கொண்டு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புத் தேடினார். ஆனால் வழக்கம்போல் முதலில் சென்னை அவருக்கு பல கொடுமையான அனுபவங்களைத் தந்தது. இறுதியாக அவரது முயற்சியின் பலனாக தனியார் நிறுவனத்தில் உதவியாளர் பணி கிடைத்தது. இதற்கிடையே கதைகள் எழுதுவதையும் தொடர்ந்தார். 

கிரகலட்சுமி என்ற பத்திரிகையில் ”நிலவொளியிலே” என்பது பத்திரிகையில் வெளியான அவரது முதல் கதை. தொடர்ந்து பல்வேறு கதைகள் எழுதினார். புதுக்கோட்டையில் இருந்து வெளிவந்த திருமகள் என்ற பத்திரிகையில், "பிழை திருத்துனர்" வேலை கேட்டுச் சென்றார். அப்போது நேர்க்காணலில் பத்திரிகை உரிமையாளர், அவரிடம்   'உங்கள் பெயரென்ன?' என்று கேட்டார். அந்த நேரத்தில் எழுத்தாளர்கள் புனைப்பெயர் வைத்து எழுதுவது ஃபேஷன். அதிலும் ”தாசன்” என்று முடியும் பெயரை வைத்திருப்பவர்களுக்கு தனி மரியாதை தான். சில நொடிகள் யோசித்த அவர் ”கண்ணதாசன்” என்று பதில் சொன்னார். அந்தத் தருணத்தில் தான் முத்தையா, கண்ணதாசனாக மாறினார்.

கண்ணதாசனின் திறமையைத் தொடர்ந்து கவனித்த பத்திரிகை உரிமையாளர் அவரை அழைத்து பத்திரிக்கையின் முதல் பக்க கட்டுரையை எழுத சொன்னார். இந்திய ராணுவம் குறித்து அவர் எழுதிய கட்டுரை அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. உடனடியாக அந்த பத்திரிகையின் ஆசிரியராக பணியமர்த்தப்பட்டார். அப்போது அவருக்கு வயது 17. 

தொடர்ந்து திரை ஒலி, சண்டமாருதம், தென்றல், தென்றல் திரை உள்ளிட்ட பல பத்திரிகைகளில் பணியாற்றினார். கண்ணதாசன் என்ற பத்திரிகையை அவரே ஏற்படுத்தி நடத்தினார். அனைத்து பத்திரிகைகளிலும் அவரது கவிதைகள், கதைகள், கட்டுரைகள், நாடகங்கள் வெளிவந்தன. சிறந்த பத்திரிகையாளர், சிறந்த இலக்கியவாதி என பெயர் பெற்றார். 

அதன்பின்னரே அவருக்கு சினிமாவில் பாடல்கள் எழுதும் வாய்ப்பு கிடைத்து, பாடல்கள் வடிப்பதில் வித்தகராக திகழ்ந்தார். 'கள்வனின் காதலி' படத்தில் ”கலங்காதிரு மனமே... உன் கனவெல்லாம் நினைவாகும் ஒரு தினமே” என்ற பாடல் தான் கண்ணதாசனின் முதல் பாடல். சுமார் 30 ஆண்டுகள் திரையுலகில் கொடிகட்டி பறந்தார். பாடல்கள் எழுதுவது மட்டுமல்லாமல் கதை, தயாரிப்பு, வசனம் என அனைத்திலும் முத்திரை பதித்தார். அவரது பாடல்கள் மூளை முடுக்கெல்லாம் ஒலித்தன. ஏற்றத்தாழ்வு இல்லாமல் சமூக அக்கறையுடன் அனைவரையும் கவரும் விதத்தில் அவர் பாடல் அமைந்தது. இதனால் அனைத்து தரப்பு மக்களிடமும் அவரது பாடல் நல்ல வரவேற்பைப் பெற்றது. 

சுமார் 5000க்கும் மேற்பட்ட பாடல்கள், 4000க்கும் மேற்பட்ட கவிதைகள், 20க்கும் மேற்பட்ட நாவல்கள் என சிறந்த படைப்புகளைத் தந்துள்ளார்.  அரசியலிலும் தீவிர ஆர்வம் காட்டினார். தி.மு.கவில் தொடங்கிய அவருடைய அரசியல் காங்கிரசில் முடிவுற்றது. ஒருமுறை தேர்தலில் நின்று தோற்றார். 

”எப்படியெல்லாம் வாழக்கூடாதோ, அப்படியெல்லாம் வாழ்ந்தவன் நான். அதனால் இப்படித்தான் வாழ வேண்டும் என்று அறிவுரை சொல்லும் தகுதி எனக்கு இருக்கிறது..” என்று கூறியவர் கண்ணதாசன். 

மூன்றாம் பிறை படத்தில், அனைவரது மனதையும் கொள்ளை கொண்ட 'கண்ணே கலைமானே..' பாடல் அவரது கடைசிப்பாடல். அந்த தாலாட்டுப்பாடலுடன் கவியுலகில் அவரது பயணம் முடிவுற்றது. 1981ம் ஆண்டு அக்டோபர் 17ம் தேதி இந்த உலகை விட்டுச் சென்றார். இன்று அவரது 37வது நினைவு நாள்... அவர் இந்த உலகை விட்டு மறந்தாலும், இக்கால இளைஞர்களும் அவரது பாடல்களை ரசிக்கிறார்கள் என்பதன் மூலம் அவர் எப்போதும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார், எதிர்காலத்திலும் வாழ்ந்துகொண்டு தான் இருப்பார். 

newstm.in

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.