ராயபுரம் லாலா லேண்ட் வெளியாகி ஓராண்டு ஆகிவிட்டது!

  சௌந்தரியா   | Last Modified : 27 Oct, 2018 11:10 am

one-year-of-mayaadha-maan

தொடர்ந்து ரத்தமும் கொலையுமாக படங்கள் வந்து கொண்டு இருந்த காலத்தில் இதே நாளில் சென்ற ஆண்டு செம அழகாக ஓடி வந்தது இந்த மான். மேயாத மான்... வெளியாகி இன்றோடு ஓராண்டு ஆகிவிட்டது. 

எப்போதும் சண்டை, ஏரியா பிரச்னை, ரத்தம், அடிதடி என வட சென்னை என்றால் இப்படி தான் இருக்கும் என்ற பிம்பத்தை தமிழ் சினிமா கொடுத்துவிட்டது. தொடர்ந்து கொடுத்துக் கொண்டே இருக்கிறது. மேயாத மானும் அதே ராயபுரத்தில் நடக்கும் கதை. ஆனால் அதிகமாக காட்டாப்படாத அந்த ஏரியாவின் ஜாலி கதை. 

தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரை பார்த்திடாத கதை என்றெல்லாம் இல்லை... ஆனால் இந்த படத்தில் பல ஸ்பெஷல்கள் இருக்கின்றன. 

இரண்டு காதல்கள், இரண்டும் ஒரு தலை காதல்கள்... கடைசியில் என்ன ஆனது என்ற வழக்கமான கதையை வித்தியாசமான ட்ரீட்மெண்ட்டோடு செம என்ட்ரி கொடுத்தார் ரத்னகுமார். அனைவரது வாழ்விலும் ஒரு இதயம் முரளி இருப்பார். அல்லது நீங்களே கூட இதயம் முரளியாக வாழ்ந்து கொண்டு இருப்பீர்கள். உங்கள் வாழ்க்கையில் சில தருணங்களை சந்திக்கும் போது என்னவெல்லாம் செய்வீர்களோ அதனை அப்படியே பிரதிபலித்திருப்பார் வைபவ். வடசென்னை பசங்க எவ்வளவு அழகு என்பதை கூட வைபவ் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

இளைஞர்களை சீரியல் பார்க்க வைத்த பெருமைக்கு சொந்தகாரரான பிரியா பவானி சங்கருக்கு அறிமுக படம். முதல் படத்தில் ஹீரோயினுக்கு விசில் அடிக்கும் ரசிகர்களை பெற்றிருந்தார் பிரியா. இவருடன் இதே படத்தில் அறிமுகமான இந்துஜா... படம் வெளியாகி நீண்ட நாட்களுக்கு தன்னை பற்றியே பலரையும் பேசவைத்தார். அவருக்கு ஜோடியாக வந்த  வெங்கட் பிரசன்னாவும் இந்துஜாவுக்குமான காதல் காட்சிகள் லீட் ஜோடியை தள்ளி முன்னின்று ரசிக்க வைத்தன. 

அட... இருங்கடா இன்னும் இந்த ஜோக்குக்கே சிரிக்கல அதுக்குள்ள இன்னொன்னா என்ற ரேஞ்சில் படம் முழுக்க அடுத்தடுத்து வந்து கொண்டே இருந்த ஒன்லைனர்கள். மருத்துவமனையில் நடக்கும் அந்த சிங்கிள் ஷாட் காட்சி. அதில் வரும் விக்டரா? வசனம்  என ரத்னங்களை கொடுத்திருப்பார் இயக்குநர். அத்தனை அழகான காட்சிகள், மிகைப்படுத்தாத காதல் என ஹிட் பேக்கேஜை சிறப்பாக கையாளும் படங்கள் எப்போதாவது தான் தமிழ் சினிமாவுக்கு கிட்டும். 

சிவா மனசுல சக்தி படம் சில க்ளீஷேக்களை தட்டி தூக்கிப்போட்டது. ஒப்பிடுவதற்கு ஒன்றும் இல்லை என்றாலும் மேயாத மானும் காமெடி கலந்த காதல் கதைகளின் க்ளீஷேக்களை மாற்றியிருக்கிறது. 

முக்கியமாக விநோத்- சுடர்விழியின் காதல் கதை. சிறுவயதில் எதற்கென்றே தெரியாமல் அண்ணா என ஒரு ஆணை அழைக்க தொடங்கிவிட்டு, பின்னாளில் அதே ஆண் மீது காதல் வந்தால் என்ன செய்ய வேண்டும். இதை கேட்கும் போது கல்ச்சர் காவலர்கள் கோபப்பட கூடும். அனைத்தையும் தாண்டி எதார்த்தம் என்று ஒன்றிருக்கிறதே. அதை அழகாக படத்தில் காட்டி இருப்பார் ரத்ன குமார். சுடரிடம் விநோத் காதலை சொல்லும் காட்சியைப் பற்றி  கவிதை புத்தகமே எழுதலாம். குறிப்பாக ரத்தின கட்டி பாடலை இந்த காட்சிகளில் பயன்படுத்தி இருக்கும் விதமும்... வாவ்!

இப்படம் வெளியாவதற்கு முன்பே அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியிருந்தது. அதற்கு காரணம் பாடல்கள். பிளேலிஸ்டில் நிரந்தர இடம் பிடிக்கும் பாடல்கள் எப்படி இருக்க வேண்டுமோ அதற்கு ஏற்றார் போல அளவெடுத்து உருவாக்கியிருப்பார்கள் சந்தோஷும் பிரதீப்பும். 

பார்த்து விட்டு நீண்ட நாட்களுக்கு அதன் பாதிப்பிலேயே சுற்றித்திரிய வைக்கும் படங்களை தான் கொண்டாட வேண்டும் என்ற மனநிலையில் இருப்பவர்களை கொஞ்சம் லைட்டாக்கி மகிழ வைக்க கலர் கலர் காட்சிகள்... ஓவரேட் செய்யப்படாத எமோஷன்களோடு மேயாத மான்கன் நிறைய வரவேண்டும். அடுத்த படம் எப்போ ரத்ன குமார்? #OneyearofMeyaadhaMaan

newstm.in

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.