தமிழில் இருந்து இந்தி ரீமேக்கில் ஜெயித்த படங்கள்!

  பால கணேசன்   | Last Modified : 11 Jul, 2018 01:47 pm

புகழ்பெற்ற இந்திப் படங்கள் பலவும் தமிழில் ரீமேக் செய்து வெளிவந்திருக்கின்றன. மிகப் பெரிய வெற்றியையும் அடைந்திருக்கின்றன. அமிதாப் பச்சனின் 'ஆங்க்ரி யங் மேன்' கதாபாத்திரம் நிறைந்த படங்கள் தமிழில் ரஜினிகாந்த்தை வைத்து ரீமேக் செய்யப்பட்டு மிகப்பெரிய வெற்றியை அடைந்தன. அதேபோல், தமிழின் புகழ்பெற்ற பல படங்களும் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டிருக்கின்றன. அதில் பெரும்பாலான படங்கள் நமது இயக்குனர்களே இந்தியிலும் இயக்கி இருந்தது குறிப்பிடத்தக்க விஷயம். அப்படிப்பட்ட சில படைப்புகளையும், அதன் பின்னணியையும் பார்ப்போம்.

தில் ஏக் மந்திர் - (நெஞ்சில் ஓர் ஆலயம்): 1962-ல் தமிழில் ஸ்ரீதர் இயக்கி வெளிவந்த இந்தப் படம் ஒரு மாபெரும் வெற்றியை சந்தித்தது. படத்தின் மிகப்பெரிய சிறப்பம்சம் முழுக்க முழுக்க ஒரே ஒரு மருத்துவமனை அரங்கிற்குள்ளேயே நிகழ்வதுதான். சாகாவரம் பெற்ற காதல் கதைகளில் ஒன்றான இந்தப் படம் இந்தி மட்டுமல்லாதது தெலுங்கு, கன்னடம், மலையாளம் என எல்லா மொழியிலும் ரீமேக் செய்யப்பட்டு மிகப் பெரிய வெற்றியை பெற்றது. இந்தியில் 1963-ல் வெளியான இந்தப் படத்தையும் ஸ்ரீதரே இயக்கினார். தமிழில் எப்படி இதன் பாடல்கள் எல்லாம் பிரபலமடைந்ததோ அதே அளவு இந்திப் பதிப்பு பாடல்களும் மிகப் பிரபலம் அடைந்தன. தமிழில் இருந்து ஒரு இயக்குநர் சென்று இந்தியில் கோலோச்ச முடியும் என்பதற்கான அத்தாட்சியாக இந்தப் படத்தை சொல்லலாம். இதற்கு முன்பும் பலர் இந்தியில் இயக்கியிருந்தாலும் இந்தப் படத்தின் வெற்றி மிக மிக முக்கியமானது என்று சொன்னால் அது மிகையில்லை. இதற்கு முன்பே ஸ்ரீதர் 'நஸ்ரானா' (தமிழில் 'கல்யாண பரிசு') போன்ற படங்களை இயக்கியிருந்தாலும் இந்தப் படம் ஒரு க்ளாஸிக்காக இன்றளவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஓ சாத் தீன் - (அந்த ஏழு நாட்கள்): தமிழில் வந்த பாக்யராஜ் படங்களில் மிகவும் முக்கியமான படமான 'அந்த ஏழு நாட்கள்' இந்தியில் 'ஓ சாத் தீன்' என்கிற பெயரில் படமாக்கப்பட்டது. அணில் கபூர் ஹீரோவாக அறிமுகமான இந்தப் படம் இந்தியிலும் மிகப் பெரிய வெற்றி பெற்றது. பாடல்கள் எல்லாமே ஹிட்டானது. மேலும் பாக்யராஜின் படங்கள் அனைத்தும் தொடர்ந்து இந்தியில் ரீமேக் செய்ய இதுவும் ஒரு காரணமாக அமைந்தது. பாக்யராஜின் 'எங்க சின்ன ராசா', 'பேட்டா' என்கிற பெயரிலும், 'சுந்தர காண்டம்' படம் 'அந்தாஸ்' என்கிற பெயரிலும், ராசுக்குட்டி படம் 'ராஜா பாபு' என்கிற பெயரிலும் ரீமேக் செய்யப்பட்டடது. இந்த ஓ சாத் தீன் படமே மீண்டும் சஞ்சய் லீலா பன்சாலி, சல்மான் கான் - அஜய் தேவ்கான் - ஐஸ்வர்யா ராய் ஆகியோரை வைத்து 'ஹம் தில் தே சுக்கே சனம்' என்கிற பெயரில் மிக பிரம்மாண்டமாக மறு உருவாக்கம் செய்யப்பட்டது. இந்தப் படமும் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

ஆக்ரி ராஸ்தா - (ஒரு கைதியின் டைரி): தமிழில் பாரதிராஜா இயக்கி கமல்ஹாசன் நடித்து மிகப் பெரிய வெற்றியடைந்த ஒரு கைதியின் டைரி திரைப்படத்தை தமிழில் கதை, வசனம் எழுதிய பாக்யராஜ் இந்தியில் இயக்கினார். அமிதாப் பச்சன் திரையுலக வாழ்க்கையில் மிக முக்கிய பங்கு வகிக்கும் இந்தப் படத்தில் அதுவரை திரையில் அவர் செய்ய தயங்கிய பல விஷயங்களை செய்தார். உதாரணமாக, ஒரு காட்சியில் தொடர்ந்து ஐந்து நிமிடங்கள் முழுக்க முழுக்க ஆங்கிலத்திலேயே வசனம் பேச வேண்டும் என காட்சியை விளக்கினார் இயக்குனர் பாக்யராஜ். ஆனால் அமிதாப் பச்சன் பேச முடியாது என மறுத்துவிட்டார். ஏனெனில் இதே போன்று ஆங்கிலத்தில் பேச வேண்டிய பல காட்சிகளை ஜாவேத் - சலீம் போன்ற ஜாம்பவான்கள் அமிதாப் பச்சனிடம் சொல்லி, அது சரிவராது என அவர் மறுத்திருக்கிறார். ஆனால் இந்தக் காட்சி மிகப்பெரிய வெற்றியடையும் என்பதில் உறுதியாய் இருந்த பாக்யராஜ் "நீங்கள் இந்த காட்சியில் நடியுங்கள். சரியாக வரவில்லையென்றால் அல்லது உங்களுக்கு திருப்தி இல்லையென்றால் இந்தக் காட்சியை நான் நீக்கிவிட்டு, நானே சொந்த செலவில் வேறு காட்சி எடுத்து சேர்த்துவிடுகிறேன்" என உறுதி கூற, ஒருவழியாக சம்மதித்த அமிதாப் நடித்து கொடுத்தார். படம் வெளியானபோது அந்தக் காட்சிக்கு கிடைத்த கைத்தட்டல் வேறெந்த காட்சிக்கும் கிடைக்கவில்லை. ஜாவேத் அக்தரே இதைக் கேள்விப்பட்டு வியந்து பாராட்டியதாக சொல்வார்கள்.

தேரே நாம் - (சேது): இயக்குநர் பாலாவின் முதல் படமான சேது முதலில் வாங்குவதற்கு ஆளில்லாமல் கேட்பாரின்றி கிடந்த படம். விநியோகஸ்தர்களுக்காக மட்டுமே கிட்டத்தட்ட 100 முறை இந்தப் படம் திரையிடப்பட்டதாக சொல்வார்கள். அதன்பின்னர் மிகக் குறைவான திரையரங்குகளில் வெளியாகி, விமர்சனங்கள் பெற ஆரம்பித்ததும் மிகப் பெரிய ஹிட்டாகி, பாலாவுக்கு தேசிய விருதும் கிடைத்தது. இந்தியில் அப்போது சல்மான் கான் நடித்த எந்தப் படமும் சரியாக போகாத நிலையில், ஐஸ்வர்யா ராயுடனான அவரது காதலும் முறிந்த நிலையில் 'சேது' படத்தை 'தேரே நாம் - Unfortunately A True Love Story' என்கிற பெயரில் எடுத்தார்கள். புகழ்பெற்ற காமெடி நடிகர் சதிஷ் கவுஷிக் இயக்கிய இந்தப் படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது. படத்தின் எல்லா பாடல்களும் ஹிட்டானது. பூமிகா ஹீரோயினாக நடித்திருந்தார். இந்தக் கதையை சல்மான்கான், ஐஸ்வர்யாராய் மீது வைத்திருந்த காதலின் அளவை வெளிப்படுத்தும் விதமாக இருப்பதாக விளம்பரம் செய்தார்கள்.

கஜினி: தமிழில் சூர்யா நடிக்க, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றிபெற்ற படம். படத்தை பார்த்த அமீர்கான் உடனே தான் அதில் நடிக்க இந்தியில் ரீமேக் செய்ய உரிமைகளை வாங்கினார். இந்தியிலும் ஏஆர்.முருகதாஸே இயக்கிய இந்தப் படம் மிகப் பெரிய வெற்றியை பெற்றது. படத்தின் சிறப்பம்சம் தமிழ் கஜினியில் இருந்த இறுதி இருபது நிமிடங்கள் மொத்தமாக மாற்றி அமைக்கப்பட்டன. எப்படியெனில், தமிழ் கஜினியில் இரண்டு வில்லன்கள் இருப்பார்கள். அதில் இரண்டாவது வில்லன் ஆரம்பிப்பதற்கு இருபது நிமிடங்கள் முன்புதான் வருவார். அவர் முதல் வில்லனின் இரட்டையர். பின்னர் இறுதியில் இரண்டு வில்லனையும் அடித்து துவம்சம் செய்து சூர்யா ஜெயிப்பார். இதையே இந்தியில் ஒரே ஒரு வில்லனை மட்டும் வைத்துக்கொண்டு அதேநேரத்தில் 15 நிமிடத்தில் எல்லாம் மறந்துவிடும் அந்த நோயையும் சரியாக இணைத்து தமிழை விட மிகச் சிறந்த இறுதிக்காட்சியை இந்தியில் இணைத்திருப்பார்கள். இதனால் படம் இன்னமும் விறுவிறுப்பாக காட்சியளிக்கும். அதேபோல் இந்தப் படத்தில் அமீர்கான் கதாபாத்திரத்தின் தலைமுடி ஸ்டைல் இந்தியில் மிகவும் பிரபலமடைந்தது.

சாச்சி 420 - (அவ்வை ஷண்முகி): தமிழில் மிகப்பெரிய வெற்றி பெற்றாலும் இந்தியில் சுமாரான வெற்றியே பெற்ற இந்த 'சாச்சி 420' படம் அவ்வை ஷண்முகி படத்தின் ரீமேக் ஆகும். இந்தப் படத்தை இங்கே குறிப்பிட காரணம் கமல்ஹாசன் முதன்முறையாக அதிகாரபூர்வமாக இயக்கிய படம் இதுதான். தமிழில் மீனா நடித்த பாத்திரத்தில் இந்தியில் தபுவும், ஜெமினி கணேசன் பாத்திரத்தில் அம்ரிஷ் பூரியும், டெல்லி கணேஷ் பாத்திரத்தில் ஓம் பூரியும் நடித்தார்கள். நாசர் மட்டும் தமிழில் செய்த அதே பாத்திரத்தை செய்தார். - பால கணேசன், கட்டுரையாளர், தொடர்புக்கு vinolishan@gmail.com

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close