சர்ச்சை சர்கார்

  பாரதி பித்தன்   | Last Modified : 10 Nov, 2018 03:10 pm

sarkar-problem

முன்னாள் முதல்வர் அண்ணாதுரை தணிக்கை செய்யாமல் 2 படங்களை திரையிட அனுமதி தாருங்கள்; நான் திராவிட நாட்டை அடைந்து காட்டுகிறேன் என்றார். அந்த அளவிற்கு திரைப்படங்கள் சக்தி வாய்ந்தவை. அதிலும் தமிழகத்தில் கூடுதல் சக்தி உண்டு.

அண்ணாதுரை கருத்துக் கூறிய நாட்களில் பாமர ரசிகர்களே அதிகம். எம்ஜிஆரை துரத்திக் கொண்டு  வருவதை பார்த்த ரசிகன் எம்ஜி ஆரை காப்பாற்ற திரை நோக்கி தன் கையில்  ஆட்டிற்கு தழை ஒடிக்க வைத்திருந்த அரிவாளை துாக்கி வீசி திரையை கிழித்த சம்பவம் தமிழகத்தில் தான் நடந்தது. பாசமலர் திரைப்படத்தை பார்த்து கண்ணீர் விட்டு கதறிய பெண்கள் ஏராளாம்.
இது போன்ற பின்னணியில் தான் எம்ஜிஆர் ஆட்சியை பிடிக்க முடிந்தது. அவர் கூட திமுகவில் மிகப் பெரிய களம் அமைத்து கொண்டுதான் வெளியே வந்து ஆட்சியை பிடித்தார். அதனால் எம்ஜிஆர் சினிமாவில் நடத்ததால் தான் ஆட்சியை பிடித்தார் என்று கூற முடியாது.

இவரின் வெற்றி தான் பல நடிகர்களை அரசியலை நோக்கி கவர்ந்து இழுக்கிறது. அவர்களில் வெற்றி பெற்றவர் விஜயகாந்த். அதிமுக,திமுக கட்சிகள் வலுவுற்ற நிலையில் கட்சி தொடங்கி 2006ம் ஆண்டு தமிழக சட்டசபைத் தேர்தலில் தனித்து போட்டியிட்டு தான் மட்டும் வெற்றி பெற்றார் விஜயகாந்த். அவரின் தேமுதிக 20 சதவீதம் ஓட்டுக்களை 3 தொகுதியிலும், 10 சதவீத ஓட்டுக்களை மாநிலம் முழுவதும் அள்ளியது. இதன் காரணமாகவே திமுக அப்போது ஆட்சியை பிடிக்க முடிந்தது. எம்ஜிஆர் வாழ்ந்த காலத்தில் இருந்தே திமுக எதிர்ப்பு ஓட்டுக்கள் தமிழகத்தில் கனிசமாக உண்டு. அதைக் கொண்டுதான் அதிமுக நிலையான வெற்றி பெற்றது. ஆனால் 2006ம் ஆண்டு மக்கள் அதிமுகவிற்கு எதிரான மனநிலையில் இருந்தனர். அதே நேரத்தில் திமுகவிற்கும் அவர்கள் ஓட்டுப் போட தயாராக இல்லாத நிலையில் தான் தேமுதிக ஓட்டுக்களை அள்ள முடிந்தது. அதற்கு மக்கள் எண்ணத்தில் என்ன இருந்ததோ அதையே விஜயகாந்த் வெளிப்படையாக பிரச்சாரம் செய்தது தான் காரணம்.

தற்போதைய சூழ்நிலையில் ஜெயலலிதாவும் இல்லை, கருணாநிதியும் இல்லை இதனால் அடுத்த சட்டசபைத் தேர்தலில் போட்டியிட போகும் பெரும்பாலான தலைவர்கள் முதல்முறையாக ஆட்சியை பிடிக்க முயல்பவர்கள். திமுக தலைவர் ஸ்டாலின் கூட துணை முதல்வராகத்தான் பதவி வகித்துள்ளாரே தவிர்த்து முதல்வர் பதவி அவருக்கு வரும் தேர்தலில் வெற்றி பெற்றால் முதல் முறைதான்.

இந்த சூழ்நிலையில் தங்களின் புகழை மட்டுமே முதலீடாகக் கொண்டு தமிழக அரசியலில் ரஜினி, கமல் போன்றவர்கள் களம் இறங்குகின்றனர். திரை உலகில் இவர்கள் இடத்தை பிடிக்க முயலும் விஜய் போன்றவர்கள் எம்ஜிஆர் பாணியில் அரசியல் பேசும் கதைகளை தேர்வு செய்து களம் இறங்குகின்றனர்.

ஆனால் அந்த கதையின் பிறப்பே கேள்விக் குறியாகாகிவிடும் போதுதான் இவர்களின் நேர்மை குறித்து கேள்வி எழுகிறது.

தீனாபடத்தில் அறிமுகமாகிய ஏ.ஆர் முருகராஜ் அந்த படத்தில் இருந்தே கதை திருட்டு பற்றிய புகாருடனே வளர்ந்து வருகிறார். அவர் இது வரை இயக்கிய ரமணா, கஜினி,துப்பாக்கி,கத்தி படங்கள் யார் யாரிடம் இருந்து திருடப்பட்டது என்று துணை இயக்குனர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது.

இந்த கரையுடனே சர்க்கார் மக்கள் நலக் கருத்துக்களை பேசுகிறது. ஏ.ஆர். முருகராஜின் கத்தி கதை திருட்டு பற்றிய சர்ச்சை இன்னும் கோர்ட், போராட்டம் என்று தொடரும் நிலையில், சர்க்கார் விவகாரம் உடனே முடிவுக்கு வந்ததற்கு காரணம் அதை சன் பிச்சர்ஸ் தயாரித்தது தான்.லைகா நிறுவனம் கதை திருட்டு பற்றிய சர்ச்சையை கோர்ட்டுக்கு வெளியே முடிக்க முன்வராத நிலையில் சன் பிச்சர்ஸ் அந்த நிலைப்பாட்டை மேற்கொண்டது திருட்டு உண்மைதானோ என்று தோன்றுகிறது. இவர்களின் இந்த நடவடிக்கை திரைத் துறையில் இன்னொரு விதமான மீடு இயக்கத்தை தொடங்கி உள்ளது.

இந்த சர்ச்சை எப்படி இருந்தாலும், இவர்கள் படத்தில் கூறிய விஷயங்களிலாவது நேர்மையாக இல்லை .

விலையில்லா பொருட்கள் வாங்குவது கேவலம் என்று எடுத்துக்காட்டும் இவர்களுக்கு தமிழகத்தின் நிலையே தெரியவில்லை. கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு பாலியல் தொழிலாளி ஒருவர் மெயின்கார்டு கேட்டில் உள்ள லாட்ஜில் தன் வாடிக்கையாளரை திருப்தி படுத்தி விட்டு அவர் கொடுத்த பணத்தில் அருகில் உள்ள சுமதி பப்ளிகேஷன் கடையில் தன் பிள்ளைக்கு கட்டுரை நோட்டு வாங்கி செல்கிறார். இது போன்ற பெண்களிடம் கேட்டால் தான் விலையில்லா பொருட்களின்  அவசியத்தை அறிந்து கொள்ள முடியும்.

தனியார் பள்ளியில் மாணவர்களை சேர்ந்து விட்ட பெற்றோர் படும் பாட்டை உணர்ந்து கொண்டவர்களால் தான் தமிழக கல்வித்துறை வழங்கும் விலையில்லா பொருட்களின் அவசியத்தை அறிந்து கொள்ள முடியும்.

இது போலதான் கலைஞர் தொடங்கிய கண்ணொலி வழங்கும் திட்டம் முதல் கடைசியாக வந்த மிக்சி, கிரைண்டர் வழங்கும் திட்டம் வரை தன் பங்கிற்கு முக்கியத்துவம் கொண்டதாகத்தான் இருந்தது.

இதற்கு எதிரான கருத்துக்கள் கொண்டது தான் சர்க்கார் படம் என்றால், அது உழைத்து வாழ வேண்டும், அடுத்தவர் உழைப்பில் வாழ்ந்திடாதே என்று வலியுறுத்த வந்த திட்டம் என்றால், நீதிமன்றத்தில் திரைப்படத்தை திரையிட வழக்கு தொடர்ந்து இருக்க வேண்டும். அதை விடுத்து அதிமுகவினர் மிரட்டலுக்கு பயந்து 5 நொடிக்கு ஓடக் கூடிய திரை துளியை அகற்றியதும், சில இடங்களில் ஒலிக் குறைப்பு செய்ததும், நீங்கள் எவ்வளவு கொள்கை பிடிப்பு உள்ளவர்கள் என்பதைக் காட்டுகிறது. இது உண்மையானாலும்; உங்களுக்கு தேவையானது நடந்து விட்டது. சர்ச்சைக்குரிய காட்சியை எடுக்க வேண்டியது. அதை எதிர்த்து சிலரை வைத்து தாங்களே திரியை பற்றவைத்து   பின்னர் அது வெடித்து சிதறியதும், சமாதானமாகப் போக வேண்டியது. கடலில் வெடிவைத்து மீன்கள் பிடிப்பதற்கு இணையானது தான் இந்த நடவடிக்கை.

ஆனால் இவர்களின் கண்ணாமூட்சி விளையாடை நம்பி விஜய் ரசிகர்கள் தங்கள் வீட்டில் இருந்த விலையில்லா மிக்ஸி, கிரைண்டர்களை துாக்கி எறிந்துவிட்டார்கள். இவர்களுக்கு பாடம் புகட்டிய விஜய், முருகராஜ் ஆகியோர் அந்த காட்சிகளை நீங்கி தங்களின் கருத்து தவறு என்று நிரூபித்து விட்டார்கள். அப்படி என்றால் ரசிகர்கள் துாக்கி போட்ட இலவசத்தை மீண்டும் வீட்டிற்கே கொண்டு வந்து இருக்க வேண்டும். அவ்வாறு செய்யப்போகிறாரார்களா, அல்லது தங்கள் பங்கிற்கு நடிகர் விஜயிடம் நஷ்டஈடு கேட்கப் போகிறார்களா? என்பது இன்னும் சில நாட்களில் தெரியும்.

அதிமுகவின் போராட்டத்தை எதிர்த்து சர்க்கார் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு சொந்தமான எப்எம் ரேடியோவில் நேயர்கள் கருத்துகளை தொகுத்து வழங்கினார். அதில் கூட சர்க்கார் ஆதரவு கருத்தை முழுமையாக கூறமுடிந்தது. விலையில்லா பொருட்கள் பற்றிய கருத்துக்கள் பாதியிலேயே முடக்கப்பட்டது. இவ்வளவு ஜனநாயகம் போன்றும் இவர்கள் தான் நமக்கு பாடம் கற்பிக்கிறார்கள்.

முதல் நாள் இத்தனை கோடி வசூல் என்று பெருமைபட்டுக் கொள்பவர்கள், நாங்கள் இவ்வளவு வரி கட்டி உள்ளோம் என்று விளம்பரப்படுத்தினால் தமிழர்களுக்கு தாங்கள் நேர்மையானவர்கள் என்பதை உணர்த்தும் அதே நேரத்தில் மற்றவர்களை வரி செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தும். ஆனால் அவர்கள் அப்படி செய்ய மாட்டார்கள். காரணம் வரி கட்டினால்தானே.

பொதுவாக வர்த்தகத்தை பெருக்குவதற்காக சர்ச்சைகளை கிளப்பிய சர்க்கார் அதில் வெற்றி பெற்றது என்பதில் எவ்விதமான சர்ச்சையும் இல்லை. இது போன்ற வியாபாரிகளை நம்பாமல் இருப்பது தான் தமிழக மக்களின் புத்திசாலித்தனம். அவர்கள் புத்திசாலிகள் என்று நம்புவோம்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.