இந்தியாவில் 'தடை'யால் தவித்த திரைப்படங்கள் - பகுதி 2

  பால கணேசன்   | Last Modified : 11 Jul, 2018 01:47 pm

முந்தைய கட்டுரையில் நாம் பார்த்த தடை செய்யப்பட்ட படங்கள் பெரும்பாலும் அரசியல் காரணத்திற்காகவே தடை செய்யப்பட்டிருந்தன. இந்தப் பகுதியில் அரசியல் காரணம் மட்டுமில்லாது, வேறு பல காரணங்களுக்காக தடை செய்யப்பட்ட படங்களை பற்றி பார்ப்போம்.

ஃபயர் (தீ): இயக்குநர் தீபா மேத்தாவிற்கு ஒரு கனவு இருந்தது. நிலம், நீர், நெருப்பு ஆகிய மூன்று தலைப்புகளில் மூன்று படங்கள் பெண்களுக்கான பிரச்னைகளை முன்னிலைப்படுத்தி எடுக்கவேண்டும் என்பதுதான் அது. அந்த வகையில் அவர் எடுத்த முதல்படம் ஃபயர். ஷபானா ஆஸ்மி மற்றும் நந்திதா தாஸ் நடித்த இந்தப் படம் ஆங்கிலம், இந்தி ஆகிய இரு மொழிகளில் எடுக்கப்பட்டது. படம் வெளியாகும் வரை எந்த பிரச்னையும் இருக்கவில்லை. வெளியான மூன்று வாரங்கள் கழித்து படம் ஓடிக்கொண்டிருக்கும் தியேட்டர்களில் முன்னால் சிவசேனா கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட ஆரம்பித்தனர். அதற்குக் காரணம் படத்தில் இரண்டு பெண்கள் ஒன்றாக லெஸ்பியன் கொள்ளும் காட்சிகள் இருந்ததுதான். அதுமட்டுமல்லாது இந்தப் படத்தை பற்றி சிவசேனா கட்சித் தலைவர் பால் தாக்கரே மிகக் கடுமையான விமர்சனத்தை முன்வைத்ததும் காரணம்.

இந்த படம் தொடர்பான பால் தாக்கரே கூறுகையில், "லெஸ்பியன் என்பது மோசமான எய்ட்ஸ் போன்றது. அதுவுமில்லாமல் இந்தப் படத்தின் இரண்டு பெண் கதாபாத்திரங்களின் பெயர் ஒன்று சீதா மற்றொன்று ராதா. இரண்டுமே நம் பெண் தெய்வங்கள். அவர்களை இழிவுபடுத்துவது போன்று காட்சிகள் இருக்கின்றன. வேண்டுமானால் அவர்கள் பெயர்களை முஸ்லிம் பெயர்களாக மாற்றினால் நாங்கள் படம் வெளியாக அனுமதி தருவோம்" என்றெல்லாம் பேசினார். மீண்டும் படத்தை தணிக்கை செய்ய தணிக்கைத்துறை முன்வந்தது. இந்த முறை போராட்டம் மிகவும் வலுப்பட, தீபா மேத்தா தன் சார்பில் பல அமைப்புகளோடு சேர்ந்து தடைக்கு எதிராக குரல் கொடுக்க, ஒருவழியாக இரண்டு மாதங்கள் கழித்து படம் மீண்டும் வெளியானது.

பாஞ்ச் (ஐந்து): இந்தியின் புகழ்பெற்ற இயக்குனர் அனுராக் காஷ்யப்பின் முதல் படம் இந்த பாஞ்ச். புனேயில் நடந்த ஜோஷி-அப்யங்கர் தொடர் கொலைகளை மையமாக வைத்து அவர் எடுத்த படமே இது. அதாவது ஐந்து கல்லூரி இளைஞர்கள் எந்த நோக்கமும் இல்லாமல் ஒன்பது கொலைகளை செய்தார்கள். அதன் தழுவப்பட்ட வடிவமே இந்தப் படம். படத்தை பார்த்த தணிக்கைத் துறையினர் படத்தில் போதைமருந்து உபயோகிப்பும், கெட்டவார்த்தைகளும் அதிகளவில் இருப்பதால் படத்தை வெளியிட அனுமதிக்க முடியாது என்று சொல்லிவிட்டனர்.

இதைவிட முக்கியமான காரணம், படம் பெருமளவு இருட்டில் நகர்வதாகவும், இது பார்வையாளர்களுக்கு ஒருவித சஞ்சலத்தை உருவாகும் எனவும் தணிக்கைத் துறையினர் கருதினர். இதன் காரணமாக படம் வெளியாகவேயில்லை. பின்னர் 2001-ல் தடை நீக்கப்பட்டு தணிக்கைத்துறை அனுமதி வழங்கியது. ஆனால் அப்போது தயாரிப்பாளருக்கு சில பிரச்சினைகள் இருந்ததால் படம் திரையரங்குகளில் இறுதிவரை வெளிவரவே இல்லை. 2003-ல் முதன்முறையாக ஹாம்பர்க் திரைவிழாவில் திரையிடப்பட்டது.

பிளாக் ஃப்ரைடே (கருப்பு வெள்ளி): 1993-மும்பையில் நடந்த வெடிகுண்டு சம்பவத்தை மையமாக வைத்து ஹுசைன் ஜைதி எழுதிய புத்தகத்தின் அடிப்படையில் அனுராக் காஷ்யாப் இயக்கிய படமே பிளாக் ஃப்ரைடே. இந்தப் படம் எடுக்கப்பட்டபோது மும்பை குண்டு வெடிப்பு வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்தது. படம் பார்த்த தணிக்கைத் துறையினர் படத்தில் இருந்த உண்மையை கண்டும், இந்தப் படம் வெளிவந்தால் அது நீதிமன்ற தீர்ப்பில் பிரதிபலிக்க வாய்ப்புள்ளது என்று கருதியும் படத்திற்கு தடை விதித்தது. பின்னர் பட விவகாரம் நீதிமன்றத்துக்கு செல்ல நீதிமன்றமும் படத்திற்கு தடை விதித்தது. இந்தப் படம் எடுக்க அனுராக் மிகவும் சிரமப்பட்டார். இந்தப் படத்தின் எல்லா காட்சிகளும் உண்மையான இடங்களில் படமாக்கப்பட்டது.

செல்போன் பயன்பாடு இல்லாத 1993-களில் நடக்கும் கதை ஆகையால், அதற்காக மிகவும் மெனக்கெட வேண்டியிருந்தது. அதேபோல் கேண்டிட் கேமரா பாணியிலேயே பல காட்சிகள் எடுக்கப்பட்டது. மறைவான இடங்களில் கேமரா வைத்து அங்கிருந்து மக்களை படம்பிடித்து அதற்கு நடுவில் படத்தின் கதாபாத்திரங்கள் உலாவுவதாக காட்ட வேண்டியிருந்தது. இந்தப் படத்தில் வரும் 12 நிமிட துரத்தல் காட்சி ஒன்றை மையமாக வைத்தே ஆஸ்கர் விருது பெற்ற ஸ்லம்டாக் மில்லினியர் படத்தில் அப்படி ஒரு காட்சி வைத்ததாக இயக்குனர் டானி பாயில் தெரிவித்திருந்தார். ஆனால், இந்தப் படப்பிடிப்பு கஷ்டத்தை எல்லாம் விட அதிகமாக படம் வெளிவர கஷ்டப்பட வேண்டியிருந்தது. இறுதியாக மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் தீர்ப்பு வந்த பின்னர் படம் வெளியாக அனுமதி கிடைத்தது. ஆனால் அதற்கு முன்பாகவே வெளிநாடுகளில் படம் வெளியாகி இருந்தது.

வாட்டர் (தண்ணீர்): ஃபயர் படத்தைத் தொடர்ந்து எர்த் என்னும் பெயரில் படமெடுத்து பிரச்சினை இல்லாமல் வெளியிட்ட தீபா மேத்தா பின்னர் வாட்டர் படத்தை ஆரம்பித்தார். இந்தப் படத்தில் 1940-களில் வாரணாசியில் வசித்த விதவைப் பெண்கள் எதிர்கொள்ளும் கொடுமைகளையும், சடங்குகளையும் சாடி காட்சிகள் இருக்குமாறு திரைக்கதை அமைத்திருந்தார். முதலில் படப்பிடிப்பு வாரணாசியில் நடக்க எல்லா ஏற்பாடுகளும் செய்திருந்தனர். ஆனால் படப்பிடிப்பு ஆரம்பித்த அன்று சுமார் 2000 பேர் கொண்ட ஒரு போராட்ட குழு வந்து இங்கே படப்பிடிப்பு நடத்தக் கூடாது என்றும், இந்தப் படத்தில் பெண்களை இழிவுபடுத்தும் விதமான காட்சிகள் இருப்பதாகவும் சொல்லி, படப்பிடிப்பிற்காக போடப்பட்டிருந்த அரங்கத்தையும், படப்பிடிப்பு கருவிகளையும் அடித்து நொறுக்கி கங்கையில் வீசினர். இதைத்தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தினால் உத்தரப் பிரதேச அரசு இந்தப் படத்தின் படப்பிடிப்பை வாரணாசியில் நடத்துவதற்கு கொடுத்த அனுமதியை திரும்பப் பெற்றது.

இதனால் இந்தப் படத்தை தீபா அவர்கள் இலங்கையில் வைத்து எடுத்து முடித்தார். இந்தப் படத்தின் திரைக்கதையை அனுராக் காஷ்யாப் எழுதி இருந்தார். இந்தப் பதிவில் மேற்குறிப்பிட்ட இரண்டு படங்களின் இயக்குனர் அனுராக் காஷ்யாப். முதலில் சொன்ன ஃபயர் படத்தின் இயக்குனர் தீபா மேத்தா. இவர்கள் இருவரும் தனித்தனியாக படம் எடுத்தாலே பிரச்சினைக்கு குறைவிருக்காது. இதில் இருவரும் இணைந்து பணியாற்றினால்? படப்பிடிப்பே நடக்கமுடியாத அளவுக்கு பஞ்சாயத்துகள். நியாயம்தானே!! பின்னர் 2005-ல் கனடாவில் அதிகாரப்பூர்வமாக இந்தப் படம் திரையிடப்பட்டது. மேலும் கனடா நாட்டு சார்பாக சிறந்த வெளிநாட்டு படத்திற்கான பட்டியலில் ஆஸ்கர் விருதுக்கும் சென்றது.

பண்டிட் க்வின் (கொள்ளைக்கூட்ட ராணி): இன்றைய தலைமுறைக்கு இந்தப் படங்கள் தடை செய்யப்படும் விஷயம் என்ன மாதிரியான பாதிப்புகளை அல்லது விவாதத்தை ஏற்படுத்துகிறது என்பது எனக்கு தெரியவில்லை. ஏனெனில் நிர்வாணக் காட்சிகள் எல்லாம் இப்போது தங்கள் மொபைல் போனிலேயே பார்த்துவிடுகிறார்கள். அதேபோல் படத்திலிருந்து கத்தரிக்கப்பட்ட காட்சிகளை யூடியூப் போன்ற தளங்களில் பார்த்தும் விடுகிறார்கள். ஆனால் 1990-களில் ஒரு படம் நிர்வாணக் காட்சிகளுக்காக தடைசெய்யப்பட்டது என்கிற ஒரு வாசகமே போதும் படம் மிகப்பெரிய வெற்றிபெற. அப்படி ஒரு சம்பவம்தான் இந்த பண்டிட் க்வீன் படத்துக்கு நிகழ்ந்தது.

சம்பல் பள்ளத்தாக்கில் இருந்த புகழ்பெற்ற கொள்ளைக்காரரான பூலான் தேவியின் வாழ்க்கை வரலாறே இந்தப் படம். அவர் எதனால் கொள்ளைக்காரராக மாறினார் என்பதுதான் பிரச்சினைக்கு காரணம். படத்தில் பூலான் தேவியை ஒரு கொள்ளைக்கூட்ட தலைவனும் அவனது கூட்டாளிகளும் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்யும் காட்சி படத்தில் இருந்தது. இந்தப் படம் பார்த்த பூலான் தேவி படத்தில் உண்மைக்கு புறம்பான விஷயங்கள் நிறைய இருப்பதாகவும், அதனால் தடை செய்யவேண்டும் என்றும், அப்படி தடை செய்யவில்லை என்றால் தான் இந்தப் படம் ஓடும் திரையரங்கின் முன்னால் நின்றுகொண்டு என்னை நானே பலிகொடுத்துக் கொள்வேன் என்றும் பேட்டியளித்தார். அருந்ததி ராய் போன்ற மிகப்பெரிய எழுத்தாளர்கள் பூலான் தேவிக்கு ஆதரவாக பேசினார்கள். உயிரோடு இருக்கும் ஒருவரின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கும்பொழுது இருக்கவேண்டிய குறைந்தபட்ச பொறுப்புணர்வே இல்லாமல் இந்தப் படம் இருப்பதாக அவர் குற்றம்சாட்டினார். இதனால் படத்தை தற்காலிகமாக நிறுத்திவைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

பின்னர் தயாரிப்பாளர் தரப்பு 40 லட்ச ரூபாய் பூலான் தேவிக்கு கொடுத்ததாகவும், அவர் வழக்கை வாபஸ் பெற்றதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இந்த பிரச்சினையே படம் இரண்டாவது மூன்றாவது முறையாக வெளியானபோதும் கூட ஓரளவு நல்ல வசூலை பெற்றுத்தந்தது. எலிசபெத் என்கிற ஹாலிவுட் படத்தை இயக்கிய சேகர் கபூர் இயக்கிய இந்தப் படம் ஆஸ்கருக்கு இந்திய சார்பில் அனுப்ப பரிந்துரை செய்யப்பட்டாலும் கூட இந்தியர்கள் பலரும் அந்நேரத்தில் இதை ஆபாசம் நிறைந்த படமாகத்தான் பார்த்தனர். - பாலகணேசன், கட்டுரையாளர், தொடர்புக்கு vinolishan@gmail.com

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close