ரஜினி பிறந்தநாள் ஸ்பெஷல் - பாக்ஸ் ஆஃபிஸில் வெற்றி மற்றும் தோல்வியைத் தழுவிய படங்கள்!

  Shalini Chandra Sekar   | Last Modified : 12 Dec, 2018 12:30 am
box-office-hit-flop-of-rajini

தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆஃபிஸ் கிங் என்றால் அது நடிகர் ரஜினிகாந்த் தான். அவர் ஒரு படத்தில் ஒப்பந்தமாகும் போதே அது வசூலில் சாதனை படைப்பது உறுதியாகிவிடும். இவரின் பெரும்பாலான படங்கள் அதிக லாபத்தை ஈட்டி பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட்டாகியிருக்கின்றன. வெகு சில படங்கள் தோல்வியைத் தழுவியிருக்கின்றன. அப்படி குறிப்பிடத் தகுந்த பாக்ஸ் ஆஃபிஸ் வெற்றி மற்றும் தோல்வி திரைப்படங்களைப் பார்ப்போம். 

பாட்ஷா 

1995-ம் ஆண்டு பொங்கலை முன்னிட்டு ஜனவரி 12-ம் தேதி வெளியான இத்திரைப்படம் 15 மாதம் திரையரங்குகளில் ஓடியது. இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கியிருந்த இப்படம் ரஜினியின் மாஸை அதிகரித்தது. மாஸான மியூஸிக்கோடு டைட்டில் கார்டில் 'சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்' என முதன் முதலில் பெயர் போடப்பட்டது இந்தப் படத்தில் தான். மாணிக் பாட்ஷாவாக ரஜினி 'கெத்து' காட்டிய இப்படம் பாக்ஸ் ஆஃபிஸில் வெற்றி பெற்றது. 

முத்து 

அதே ஆண்டு (1995) தீபாவளிக்கு வெளியான இப்படம் 175 நாட்களைக் கடந்து திரையரங்குகளில் ஓடியது. இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தில் ரஜினி பேசிய, 'நா எப்போ வருவேன் எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது. ஆனா வர வேண்டிய நேரத்துல கரெக்டா வருவேன்' எனும் வசனம் அரசியலோடு ஒப்பிடப்பட்டது. இதனால் விரைவில் அவர் அரசியலுக்கு வருவார் என எதிர்பார்க்கத் தொடங்கினார்கள் ரசிகர்கள். 

படையப்பா

1999-ம் ஆண்டு ஏப்ரல் 10-ம் நாள் வெளியான இந்தப் படத்தையும் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் தான் இயக்கியிருந்தார். நடிகர் திலகம் சிவாஜியுடன் ரஜினி இணைந்து நடித்த கடைசிப் படமான இது 100 நாட்கள் திரையரங்குகளில் ஓடி உலகம் முழுவது 440 மில்லியனை சம்பாதித்தது. 

சந்திரமுகி

மூன்று வருட இடைவெளிக்குப் பிறகு ரஜினியின் நடிப்பில் 2005-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தை இயக்குநர் பி.வாசு இயக்கியிருந்தார். தமிழ் புத்தாண்டுக்கு வெளியான இந்தப் படம் 804 நாட்களுக்கும் மேல் திரையரங்குகளில் ஓடியது. பல நூறு கோடிகளை வசூலித்து பாக்ஸ் ஆஃபிஸில் வெற்றியும் பெற்றது. 

சிவாஜி 

ஜூன் 15, 2007-ம் ஆண்டு வெளியான இப்படத்தை இயக்குநர் ஷங்கர் இயக்கியிருந்தார். வெறும் 60 கோடிகளில் தயாரிக்கப்பட்ட இப்படம் மொத்தம் 128 கோடி ரூபாயை வசூலித்து பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட்டானது. 

எந்திரன் - 2.0

ரோபோவை கதை களமாக வைத்து மிகப் பெரும் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட இவ்விரு படங்களும் எதிர்பார்த்ததை விட அதிகம் வசூலித்தன. குறிப்பாக எந்திரன் 750 மில்லியன் ரூபாயை வசூலித்திருந்தது. சமீபத்தில் வெளியான 2.0 திரைப்படம் 650 கோடிக்கும் மேல் வசூலித்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. 

சரி பாக்ஸ் ஆஃபிஸில் ரஜினி சறுக்கிய சில படங்களைப் பார்ப்போம். 

லிங்கா 

2014-ல் வெளியான இப்படம் ஆர்டிஃபிஷியலாக இருந்ததால் ரசிகர்களை பெரிதும் கவரவில்லை. படம் வெளியாகி 25வது நாள், போட்ட முதலில் வெறும் 30  சதவீத பணத்தை மட்டுமே கொடுத்திருப்பதாக விநியோகஸ்தர்கள் அறிவித்தனர். நஷ்டமடைந்தவர்கள் மூன்றில் ஒரு பங்காக 33 கோடி ரூபாயை ரஜினியிடம் கேட்டனர். 

குசேலன் 

'கத பரயும்போல்' எனும் மலையாள படத்தின் ரீமேக்கான இப்படம் 2008-ல் வெளியாகி ரஜினி ரசிகர்களை இம்ப்ரெஸ் செய்யவில்லை. சற்று விரிவான சிறப்புத் தோற்றத்தில் ரஜினி நடித்திருந்தார். முதன்மையான கதாபாத்திரமாக பசுபதி நடித்திருந்தார். பஞ்ச் டயலாக், சமண்டைக் காட்சி இல்லாத ரஜினியை ரசிகர்கள் ரசிக்கவில்லை என்பதே யதார்த்த உண்மை. 

பாபா

ரஜினியின் கதையை படமாக்கியிருந்தார் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா. தவிர படத்தின் தயாரிப்பாளரும் திரைக்கதையாசிரியரும் ரஜினி தான். 17 கோடியில் தயாரிக்கப்பட்ட இப்படம் வெறும் 13 கோடியைத் தான் ஈட்டியது. அதனால் தானாக முன்வந்து 25% சதவீத பணத்தை திருப்பியளித்தார் ரஜினி. 

கோச்சடையான் 

ரஜினியின் இளையமகள் செளந்தர்யா இதனை மோஷன் கேப்சரிங் டெக்னாலஜியில் இயக்கியிருந்தார். ஆனால் படம் எதிர்பார்த்த அளவு போகவில்லை. 

விடுதலை 

சிவாஜி, ரஜினி, மாதவி உள்ளிட்டோர் நடித்திருந்த இப்படம் மிகப் பெரிய தோல்வியைத் தழுவியது. பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இப்படம் அதில் பாதியளவு கூட வசூலிக்கவில்லை. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close