2018 - டாப் 10 திரைப்படங்கள்!

  shriram   | Last Modified : 28 Dec, 2018 06:37 pm
top-10-movies-of-2018

ஆக்ஷன், ரொமான்ஸ், த்ரில்லர், என பல ரகங்களில் இந்த ஆண்டு வெளியான படங்கள் சூப்பர்ஹிட்டாகி ரசிகர்களை கவர்ந்தன. குறைந்த பட்ஜெட் படமான 'மேற்கு தொடர்ச்சி மலை' முதல் 500 கோடி செலவில் எடுக்கப்பட்ட 2.0 வரை, 2018ன் சிறந்த 10 படங்களை உங்களுக்காக பட்டியலிட்டுள்ளோம், பாருங்கள்...

10. செக்க சிவந்த வானம்

இந்தியாவின் ஃபேவரைட் இயக்குனர் மணி ரத்னத்தின் இயக்கத்தில், அரவிந்த்சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய், ஜோதிகா, அதிதி ராவ் என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்த படம் தான் செக்கச் சிவந்த வானம். இவ்வளவு ஸ்டார்கள் ஒன்று சேருகிறார்கள் என்றவுடன், பயங்கர எதிர்பார்ப்பு. அதுவும மணிரத்னம் - ஏ.ஆர்.ரஹ்மான் காம்போ என்றால் கேட்கவே தேவையில்லை. எதிர்பார்த்த அளவு இல்லையென்பது பல ரசிகர்களின் கருத்தாக இருந்ததாலும், இது எல்லோருமே ரசிக்கக்கூடிய ஒரு முழு என்டர்டெயினர். பாக்ஸ் ஆபிஸில் 60 கோடி வசூலையும் இந்த படம் பெற்றது.

9. இமைக்கா நொடிகள்

நயன்தாரா, அதர்வா, பிரபல பாலிவுட் இயக்குனர் அனுரக் கஷ்யப் ஆகியோர் நடிப்பில் உருவான படம் இமைக்கா நொடிகள். சிபிஐ அதிகாரியாக நயன்தாரா, தொடர் கொலைகள் செய்யும் ஒரு சீரியல் கில்லரை துரத்துகிறார். வேகமான த்ரில்லிங்கான திரைக்கதை, சிறப்பான கதாபாத்திரங்கள், நடிப்பு இவை அனைத்தையும் விட, வில்லனாக பாலிவுட் இயக்குனர் அனுராக் கஷ்யப் அதகளம் செய்திருப்பார். படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டானது.

8. நடிகையர் திலகம் 

தென்னிந்திய சினிமாவின் மிகப்பெரிய நடிகைகளுள் ஒருவரான நடிகையர் திலகம் சாவித்ரியின் வாழ்க்கை படம். திரையில் மீண்டும் சாவித்திரியை கண் முன் நிறுத்தியிருப்பார் கீர்த்தி சுரேஷ். கமர்ஷியலாகவும் நடிகையர் திலகம் நல்ல வரவேற்பை பெற்றது.

7. 2.0

ஷங்கர் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்த படம் தான் 2.0. இந்தியாவின் ஃபேவரைட் ரோபோ 'சிட்டி'க்கு இந்த படத்தில் மீண்டும் உயிர் கொடுத்தார் ஷங்கர். 500 கோடி செலவில், மாபெரும் எதிர்பார்ப்புக்கு இடையே உருவாக்கப்பட்ட இந்த படம், தொழில்நுட்ப ரீதியாக இந்தியாவிலேயே சிறந்த படமாக பார்க்கப்படுகிறது. வசூலிலும் 800 கோடிக்கும் மேல் சம்பாதித்து சாதனை படைத்துள்ளது.

6. சர்கார்

இளையதளபதி விஜய், கீர்த்தி சுரேஷ், நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வெளியான படம் சர்கார். அரசியலுக்கு விஜய் வருகிறாரோ இல்லையோ... ஆனால், தன்னுடைய படங்கள் மூலமாக அரசியல்வாதிகள் மத்தியில் பீதியை கிளப்பி வருகிறார். சர்கார் மூலம், ஆளுங்கட்சியை மீண்டும் அதிர வைத்தனர் விஜய்யும், ஏ.ஆர்முருகதாஸும். ஒரு ஓட்டு எவ்வளவு முக்கியம் என்பதை இந்த படத்தின் மூலம் ரொம்பவே சுவாரஸ்யமாக சொல்லியிருப்பார் முருகதாஸ். வசூல் சாதனையை படைத்தது மட்டுமல்லாமல்,விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்ப்பை பெற்றது சர்கார்.

5. 96

விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியான ஒரு எபிக் ரொமான்ஸ் படம் தான் 96 . இந்த வருடத்திலேயே எல்லோர் மனதிலும் ஆளமாக பதிந்த கேரக்டர்கள் ஜானு  & ராம் என சொல்லலாம். அட்டகாசமான இசை, பாடல்கள், கண்ணை கவரும் ஒளிப்பதிவு, ஆழமான திரைக்கதை,  உருகவைக்கும் நடிப்பு, இவற்றின் மூலம் ஆடியன்ஸை பள்ளி பருவத்திற்கே அழைத்து சென்றார் இயக்குனர் பிரேம் குமார்.

4. ராட்சசன்

விஷ்ணு விஷால் எடுத்துக்கொண்ட மிகவும் சீரியஸான கதாபாத்திரம் இது. புதிதாக பணியில் சேர்ந்த போலீஸ் அதிகாரி, தொடர் கொலைகள் செய்யும், சீரியல் கில்லரை துரத்தும் கதை. தமிழ் சினிமாவின் மிக சிறந்த சீரியல் கில்லர் படம் என இதை சொல்லலாம். த்ரில்லிங்கான காட்சிகள், நல்ல நடிப்பு, தொய்வில்லாத திரைக்கதை என எல்லா பாக்ஸையும் டிக் செய்த இந்த படம், இந்த ஆண்டின் சிறந்த படங்களுள் ஒன்றாக உருவெடுத்தது.

3. பரியேறும் பெருமாள்

கதிர், ஆனந்தி நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கிய படம் பரியேறும் பெருமாள். சட்டக் கல்லூரியில் படிக்கும் ஒரு ஒடுக்கப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த மாணவனுக்கு நேரும் அவலங்களை இந்த படத்தில் ரொம்ப யதார்த்தமாக காட்டியிருப்பார் இயக்குனர். நேர்த்தியான திரைக்கதை, காட்சிகள், கூர்மையான வசனங்கள் இன்றைய சமுதாயத்தில் நிலவும் பல ஏற்றத்தாழ்வுகளை வெளிச்சம் போட்டு காட்டியது. படம் முடியும்போது, திரையரங்கிலிருந்த அனைவரும் எழுந்து நின்று கைதட்டிய காட்சிகளை, நீண்ட நாட்களுக்கு பிறகு பரியேறும் பெருமாள் மூலம் பார்த்தோம்.

2. மேற்கு தொடர்ச்சி மலை

கனவு போல காட்சியளிக்கும் மேற்கு தொடர்ச்சி மலையில் வாழும் பழங்குடி மக்கள் படும் கஷ்டங்களையும் போராட்டங்களையும், சினிமாத்தனம் இல்லாமல் படமாக்கினார் இயக்குனர் லெனின் பாரதி. ஆண்டனி, காயத்ரி கிருஷ்ணா என கதையின் முக்கிய கதாபாத்திரங்கள் மட்டுமல்லாமல், படத்தில் வரும் ஒவ்வொரு நடிகரும் தங்கள் பாத்திரங்களில் வாழ்ந்து காட்டியுள்ளார்கள். தமிழ் சினிமாவின் மைல் கல்லாக இன்னும் வரும் பல ஆண்டுகளுக்கு மேற்கு தொடர்ச்சி மலை பார்க்கப்படும். 

1. வடசென்னை

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த மூன்றாவது படம் இது. தனுஷ், சமுத்திரக்கனி, கிஷோர், அமீர், டேனியல் பாலாஜி ஆண்ட்ரியா என ஒவ்வொருவரும் போட்டி போட்டு கலக்கியுள்ளனர். வெற்றிமாறன் தன்னுடைய பாணியில் ரொம்பவே சுவாரஸ்யமான கதையை, யதார்த்தமான கதாபாத்திரங்கள், வலுவான திரைக்கதையுடன் படைத்திருந்தார். 3 பாகங்களாக வரும் வடசென்னைக்கு இதைவிட பெரிய இன்ட்ரோவை கொடுத்திருக்க முடியாது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close