தமிழ் சினிமாவின் மைல்கல் திரைப்படங்கள்!

  பால கணேசன்   | Last Modified : 11 Jul, 2018 01:31 pm

1918-ல் தமிழில் முதல் மவுனப் படம் 'கீச்சக வதம்' வெளிவந்தது. இதோ இது 2018. நூறு வருடங்கள் ஆகிவிட்டன. பின்னோக்கிப் பார்த்தால் எத்தனையோ அட்டகாசமான திரைப்படங்களை உலகிற்கு தமிழ் சினிமா கொடுத்திருக்கிறது. இந்தத் திரைப்படங்கள் மூலமாக ஒரு மிகப் பெரிய கனவுத் தொழிற்சாலையாக வளர்ந்து நிற்கிறது. எத்தனையோ பள்ளம் மேடுகள் கடந்து, எத்தனையோ ஏற்றத் தாழ்வுகளில் இருந்து மீண்டு வந்து இன்றும் இந்தியாவில் கோலோச்சி நிற்கும் நம் தமிழ் சினிமாவின் மைல்கற்களாக சில படங்கள் இன்றும் விளங்குகின்றன. அதைப் பற்றிய ஒரு சிறு பார்வை...

பராசக்தி - 1952-ல் வெளிவந்த 'பராசக்தி'க்கு முன்பே நிறைய சமூகப் படங்கள் வெளிவந்திருந்தாலும் கூட 'பராசக்தி'யின் தாக்கமும், அதன் அரசியலும் அதுவரை தமிழ் சினிமாவில் வந்த எல்லா படங்களையும் விட பல படிகள் தாண்டி நின்றது. குறிப்பாக அதற்கு முந்திய சமூகப் படங்கள் பெரும்பாலும் சுதந்திர வேட்கையை தூண்டும் படங்களாகவும், மஹாத்மா காந்தியின் பெருமைகளையும், காங்கிரஸ் இயக்கத்தின் சாதனைகளையும் சொல்லும் படமாகவே பெரும்பாலும் அமைந்திருந்தன. திராவிடக் கட்சிகளின் வரவு மக்களிடையே ஓர் எழுச்சியை மெல்ல ஏற்படுத்திக் கொண்டிருந்த காலகட்டத்தில், பெரியாரின் கருத்துக்களின் மீது அன்பும், வெறுப்பும் ஒருசேர வெளிப்பட்டுக்கொண்டிருந்த காலத்தில் வெளிவந்த 'பராசக்தி' இன்றைய திராவிட இயக்கத்தின் வெற்றிக்கு ஏதோ ஒரு மூலையில் ஒரு வேறாக இருந்தது என்று சொன்னால் அது மிகையில்லை.

கருணாநிதி வசனம், அதுவரை மணிப்பிரவாள நடையில் தள்ளாடிக்கொண்டிருந்த தமிழை சீராக மோட்டார் வண்டி ஓட்டும் அளவிற்கு உயர்த்தியது. பாலசுந்தரம் 'பராசக்தி' என்கிற கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் ஆரம்பத்தில் சிவாஜி கணேசன் நடிக்க தயாரிப்பாளர் தரப்பிலிருந்து மிகப் பெரிய எதிர்ப்பு இருந்தது. ஆனால் சூரியனை போர்வைக்குள் மறைப்பது சாத்தியமா என்ன? ஒரே படத்தின் மூலம் தமிழ் உலகறிந்த நடிகர் ஆனார் சிவாஜி கணேசன். மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற 'பராசக்தி'யின் எழுச்சி அதைத் தொடர்ந்து பல படங்களில் பிரதிபலித்தது. இன்றளவும் ஒரு மிக முக்கிய மைல்கல்லாக தமிழ் சினிமாவில் ஜொலித்துக்கொண்டு நிற்கிறது.

எங்க வீட்டுப் பிள்ளை - எம்ஜிஆர் என்னும் மந்திரவாதியின் முதல் மெகா மாஸ் திரைப்படம் என்று இந்தப் படத்தை தாராளமாக சொல்லலாம். இந்தப் படத்திற்கு முன்பும் தமிழ் சினிமாவில் இரட்டை கதாநாயகர்கள் நடிக்கும் படங்கள் வந்திருந்தாலும் 'எங்க வீட்டுப் பிள்ளை'யே அதற்கு பின்பு வந்த எல்லா இரட்டை நாயகன் கதைக்கான உத்வேகமாக இருந்தது என்பது கண்கூடு. இன்றும் கூட பல இரட்டையர் கதாநாயக படங்களில் இதன் தாக்கத்தை நீங்கள் காணலாம். இப்படி மகா வெற்றி பெற்ற இந்தப் படம் 'ராமுடு பீமுடு' என்கிற தெலுங்கு படத்தின் ரீமேக் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? அந்த வகையில் ஒரு மொழிமாற்றப் படம் இத்தனை பெரிய வெற்றியை பெற தேவையான ஒரு முக்கியமான வாஸ்து படத்தில் இருந்தது. அதுதான் எம்ஜிஆர்.

அதேபோல் வழக்கமாக ரீமேக் படங்களை தேசிய விருதில் பரிந்துரை செய்ய முடியாது. ஆனால் ரீமேக்காக இருந்தும் தேசிய விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட முதல் படம் இதுதான். கிட்டத்தட்ட தமிழகமெங்கும் ஏழு தியேட்டர்களில் வெள்ளிவிழா கொண்டாடிய இந்தப் படம் எம்ஜிஆரின் அரசியல் வாழ்க்கையிலும் மிக முக்கிய பங்காற்றியது. "நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்.." என்கிற பாடல் ஒரு மிகப் பெரிய கனவின் வெளிப்பாடாக இருந்தது. 1965-ல் வெளிவந்த இந்த படத்தின் வசூல் 1979 வரை முறியடிக்கப்படாமலேயே இருந்தது என்று சொன்னால் நீங்கள் இந்தப் படத்தின் வெற்றியை இன்னும் நன்றாக புரிந்து கொள்ளலாம். தமிழ் சினிமாவில் பல மசாலா படங்களுக்கு பாடமாக விளங்கும் இந்தப் படம் ஒரு மைல்கல் என்று சொன்னால் அதில் பொய்யில்லையே?

பதினாறு வயதினிலே - இந்திப் படங்களை 'ஷோலே'-விற்கு முன் 'ஷோலே'-விற்கு பின் என பிரிப்பார்கள். அந்தப் படத்தின் தாக்கமும் வெற்றியும் அப்படிப்பட்டது. அதேபோல்தான் தமிழ் சினிமாவையே 'பதினாறு வயதினிலே'-வுக்கு முன் பின் என தாராளமாக பிரிக்கலாம். 1977-ல் வெளிவந்த இந்தப் படத்தை பாரதிராஜா இயக்கியிருந்தார் என்கிற விஷயம் உங்களுக்கு ஏற்கெனவே தெரிந்திருக்கும். அதுவரை ஸ்டுடியோவிற்குள்ளேயே உழன்று கொண்டிருந்த தமிழ் சினிமாவை முதன்முறையாக நிஜமான கிராமங்களுக்கு கூட்டிக்கொண்டு போனார் பாரதிராஜா. இதனால் என்ன நன்மை விளைந்தது என்று உங்களுக்குள் கேள்விகள் எழலாம். முதல் நன்மை அந்தந்த இடங்களிலேயே நேரில் சென்று படம் பிடிப்பதால் அந்தக் காட்சியின் நம்பகத்தன்மை அதிகரிக்கும். மேலும் தமிழ்நாட்டின் சிறப்பான வட்டார மொழிகளின் வளர்ச்சிக்கு இது முக்கிய வித்திட்டது. கிட்டத்தட்ட ஒரு ஆவணம் போல இதை கைக்கொள்ளலாம்.

அடுத்து மிக முக்கியமான விஷயம் இப்படி வெளிப்புற படப்பிடிப்பு கிராமங்களில் நடத்தியதன் மூலம் சினிமா என்கிற தொழிலும், அதன் தொழில்நுட்பமும் எப்படி கையாளப்படுகிறது என்பதை எல்லா தரப்பு மக்களும் நேரடியாக கண்டுகொள்ள இது உதவியாக இருந்தது. சினிமா என்கிற மாய பிம்பத்தை இது உடைத்தது. இதுவும் ஒரு தொழில்தான் என்கிற சிந்தனை மக்களிடையே பரவ இது காரணமாயிற்று. மேலும் வண்ணவண்ணமான அரங்குகளும், அதைச்சுற்றிய ஆடல் பாடல்களும் இருந்தால்தான் சினிமா ரசிக்கப்படும் என்கிற சிந்தனையைத் தாண்டி, இயல்பான மக்களின் யதார்த்தமான உணர்வுகளை எடுத்துரைப்பதும் வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை இந்தப் படம் தமிழ் சினிமாவிற்கு உணர்த்தியது.

மன்மத லீலை - தமிழின் முதல் முழுமையான செக்ஸ் ரொமான்ஸ் காமெடி படம் என்கிற அந்தஸ்தை கொண்டிருக்கும் படம் இது. இதற்கு முன்னர் 'அரங்கேற்றம்' போன்ற படங்களில் கே.பாலச்சந்தர் தமிழ் சமூகங்களில் செக்ஸ் எப்படி பார்க்கப்படுகிறது என்பதை மிகவும் சீரியசான முறையில் அணுகியிருப்பார். அதுவே மன்மத லீலையில் ஏற்கெனவே திருமணமான ஒருவனுக்கு இருக்கும் இந்த செக்ஸ் ஆசைகளையும், அதன் காரணமாக அவன் தன் வாழ்வில் சந்திக்கும் பெண்களைப் பற்றியும், இதன்மூலம் அவன் சந்திக்கும் பிரச்சினைகளை நகைச்சுவையாக அலசியிருந்த படமே இது. படத்தில் எந்தவித தயக்கமும் இல்லாமல், இரட்டை அர்த்த வசனங்கள் மூலம் ஆபாசமாக எதையும் அணுகாமல், மிகவும் நேரடியாக அணுகி, அதன் மூலம் இந்த விஷயங்களை பொதுவில் விவாதத்திற்கு வைப்பதன் மூலமும், இதை நகைச்சுவையாக எளிமையாக கடந்து செல்வதன் மூலமும் செக்ஸின் மீது ஏற்றப்படும் புனித பிம்பத்தை எந்தவித சிரமுமில்லாமல் உடைத்திருப்பார் கே.பாலச்சந்தர்.

பாலச்சந்தருக்கு பக்கபலமாக கமல்ஹாசன் மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். படம் வெளியானபோது நிறைய எதிர்ப்புகளை சந்தித்தாலும் கூட படத்தின் வெற்றியை அது எந்தவிதத்திலும் பாதிக்கவில்லை. ஆனால் இப்படியான நேரடி அணுகுமுறை படங்கள் தமிழில் தொடர்ந்து வரவில்லை என்பது மிகப் பெரிய குறை. 'துள்ளுவதோ இளமை', 'பாய்ஸ்', 'கல்யாண சமையல் சாதம்' போன்ற ஒன்றிரண்டு படங்களே உடனே நினைவுக்கு வருகின்றன. எஸ்.ஜெ.சூர்யாவின் 'நியூ' போன்ற படங்களில் இரட்டை அர்த்தமே அதிகளவில் இருக்கும். பாக்யராஜ் தனது படங்களில் சில காட்சிகளை அப்படி வைத்தாலும் முழுமையாக அப்படிப் படங்களை அவர் கொடுக்கவில்லை. 'சின்னவீடு' படம் மட்டும் இதில் விதிவிலக்கு. அதில் ஓரளவிற்கு 'மன்மதலீலை' வாசனை இருக்கும்.

காதல் கோட்டை - 1996-ல் வெளியான இந்தப் படம் அடுத்த பத்து பதினைந்து வருடங்களுக்கான தமிழ் சினிமாவின் பாதையை நிர்ணயித்தது என்று சொன்னால் அது மிகையில்லை. இதற்கு முன்பும் பல முக்கியமான காதல் படங்கள் தமிழ் சினிமாவில் வந்திருந்தாலும் கூட தமிழ் சினிமாவில் எங்கு திரும்பினாலும் காதல் கதைக்கான திரைக்கதையோடு ஓர் உதவி இயக்குனர் நின்றுகொண்டு இருக்கும் அளவிற்கு இந்தப் படம் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளாமலேயே காதலிக்கும் ஒரு வித்தியாசமான இந்தக் கதை அகத்தியானால் இயக்கப்பட்டது. சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதையும் அவருக்கு பெற்றுத்தந்தது.

இந்தப் படத்தை தயாரித்த சிவசக்தி பாண்டியனே பின்னர் இதேபோன்ற கதையம்சமுள்ள பல படங்களை தொடர்ந்து தயாரித்தார் என்றால் இந்தப் படத்தின் வெற்றி எந்தளவிற்கு பாதித்திருக்கும் என்பதை யோசித்துப் பாருங்கள். தொலைபேசியிலேயே காதல் வளர்த்த 'காலமெல்லாம் காதல் வாழ்க', காதலிக்காமலேயே காதல் வளர்த்த 'காதலே நிம்மதி' போன்றவை அதற்கான உதாரணங்கள். அதேபோல் இந்தப் படங்களின் திரைக்கதை பாணியும் ஒரேமாதிரி அமைக்கப்பட்டன. உதாரணத்திற்கு ஒரே காமெடி நடிகர்கள், ஆர்ம்பத்தில் ஒரு குத்துப்பாடல் (அதில் பெரும்பாலும் ராம்ஜி நடனமாடுவார்), படத்தின் டைட்டில் கார்ட் ஓடும்போது ஒரு பாடல் (அதில் அறிமுகமில்லாத நடிகர்கள் ஆடுவார்கள்) இப்படி நிறைய ஒற்றுமைகள். இதற்கெல்லாம் ஒரே காரணம் 'காதல் கோட்டை' படத்தின் மகத்தான வெற்றி. அதுமட்டுமில்லாமல் இளம் கதாநாயகர்களின் வரவும் இந்த படத்திற்கு பின்னர் மிகவும் அதிகரித்தது.

எந்திரன் - சர்வதேச சினிமா சந்தையோடு ஒப்பிட்டுப் பார்த்தால் தமிழ் சினிமா மிக சிறிய துகள்தான். ஏனெனில் உலகம் முழுக்க வசிக்கும் தமிழ் பேசும் மக்களுக்காக மட்டும் தயாரிக்கப்படும் படங்கள் இவை. ஏழு கோடி பேர் வசிக்கும் தமிழ்நாட்டில் மட்டும் எல்லா பெரிய ஊர்களிலும் வெளியாகும் இந்த தமிழ் சினிமாவுக்கான பட்ஜெட் மிகவும் முக்கியமான ஒன்று. செலவழித்த பணத்தை திருப்பி எடுப்பதென்பது மிகப்பெரிய சூதாட்டம் போல செயல்படும் இந்த தமிழ் சினிமாவில் முதன்முறையாக ஒருபடம் 132 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டது. இந்தப் படம் வெளிவரும் முன்பு உலகம் மொத்தமும் வெளியாகி 100 கோடி ரூபாய் வசூல் செய்த படமே கிடையாது. நிலைமை இப்படியிருக்க, படத்தின் செலவே 132 கோடி ரூபாய் என்றால் என்னவாகும்? ஆனாலும் சன் பிக்சர்ஸ் புண்ணியத்தில் இந்தப் படம் வெளியானது. இதற்கு முன்பும் 'பொன்னியின் செல்வன்' கதை பல காலகட்டங்களில் பலராலும் எடுக்க ஆலோசிக்கப்பட்டு, படஜெட் பிரச்சினையால் கைவிடப்பட்டது. 'மருதநாயகம்' படமும் கூட கைவிடப்பட்டதற்கு பணமும் ஒரு காரணம். 'எந்திரன்' படத்திற்கும் ஆரம்பத்தில் இந்த பிரச்சினை இருக்க, இறுதியாக சன் பிக்சர்ஸ் தைரியமாக உள்ளேவந்து பணத்தை முதலீடு செய்தது.

இயக்குனர் ஷங்கர் பிரமாண்டத்திற்கு பேர்போனவர். 'இந்தியன்' படத்தின்போதே கமல்ஹாசனை வைத்து 'எந்திரன்' படத்திற்கான போட்டோஷூட் எல்லாம் கூட எல்லாம் நடத்தியிருந்தார். ஆனால் சில பல காரணங்களால் அது கைவிடப்பட, தனது கனவுப் படமான எந்திரனை 2008-ல் மீண்டும் ரஜினியை வைத்து தொடங்கினார். இவ்வளவு பெரிய பட்ஜெட் கொண்ட படத்திற்கான ஒரு தூணாக ரஜினி விளங்கினார் என்பதில் சந்தேகமே இல்லை. அமெரிக்காவின் புகழ்பெற்ற விஷுவல் எபக்ட்ஸ் நிறுவனத்தை வைத்து எல்லா கிராபிக்ஸ் வேலைகளையும் ஷங்கர் முடித்து, 2010-ல் படத்தை வெளியிட்டார். படம் வெளியான முதல் வாரத்தின் முடிவிலேயே இந்தப் படம் 117 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்தது. 2015-ல் வெளிவந்த ஒரு கணக்குப்படி இந்த படம் மொத்தமாக 256 கோடிகள் வசூல் செய்திருந்தது. இப்படி தமிழ் சினிமா அதுவரை காணாத வகையில் பட்ஜெட் போடப்பட்டு, அதைவிட யாருமே கனவிலும் நினைத்துப் பார்க்காத அளவு வசூலும் செய்த இந்தப் படம் தமிழ் சினிமாவிற்கு தொழில்நுட்ப ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் பல கதவுகளை திறந்து வைத்தது. இதன் இரண்டாம் பாகம் இதைவிட பிரமாண்டமாக, இதைவிட அதிக பொருட்செலவில் தயாரிக்கப்படுகிறது. - பாலகணேசன், கட்டுரையாளர், தொடர்புக்கு vinolishan@gmail.com

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.