மீம்ஸ் கிரியேட்டர்கள் தின சிறப்பு:இங்கு சிறந்த முறையில் வைத்து செய்யப்படும்! 

  மகரந்தன்   | Last Modified : 26 Mar, 2019 05:33 pm
memes-creators-day

வாசகர்களே இன்று மீம்ஸ் கிரியேட்டர்கள் தினம். நம் அனைவருக்கும் தெரியும். இவர்கள் செய்யும் அட்டகாசங்கள். எவரையும் இவர்கள்  விட்டு வைத்ததில்லை. இணைய உலகம் சுவாரஸ்யமாக இருப்பதற்குக் காரணமே மீம்ஸ் கிரியேட்டர்கள்தான். இவர்களைக் குறித்து மகரந்தன் அவரது கண்ணோட்டத்தை நமக்காக எழுதி படைத்துள்ளார். அவசியம் வாசியுங்கள். ஆசிரியர்

பஸ்ஸிலோ, அலுவலகத்திலோ ஸ்மார்ட் போனை பார்த்தபடி, யாராவது திடீரென சிரிக்கத் துவங்கினால், அவர் உள்மண்டைக்குள் ஏதோ உண்டியல் சத்தம் கேட்க ஆரம்பித்து விட்டது என எண்ணாதீர்கள். எல்லாம் மீம்ஸ் படுத்தும் பாடு. ஸ்மார்ட் போன் உபயோகப்படுத்தும் பலர் இன்னும் பைத்தியங்களாகாமல் இருப்பதற்கு மீம்சுகளும் ஒரு காரணம்.

குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் தின்று கொண்டிருந்த பேஸ்புக்குக்கு பீட்சா துண்டுகளை ஊட்டி, ‘வாடா மச்சான் வயசுக்கு வந்துட்ட‘ என, இவ்வளவு தூரம் கொண்டு வந்த பெருமை மீம்ஸ்களுக்குத் தான் உண்டு. மீம்ஸ் இன்றி அமையாது பேஸ்புக் உலகு!

இப்போது எல்லோர் கையிலும் மொபைல் வந்து விட்டது. பேஸ்புக் அக்கவுண்ட் இல்லாத இளைஞர்களை வேற்றுக்கிரகவாசிகளாக பார்க்கும் தலைமுறையும் வந்து விட்டது. வெளி உலகத்துக்கு நிகரானது, இணைய உலகம். இதில், யார் எல்லோருடைய கவனத்தையும் ஈர்க்கிறார்கள் என்பதில் பெரும் போட்டியே இருந்து வருகிறது.

அதிலும் யார் அதிக லைக்ஸ் வாங்குகிறார்கள் என்பதற்கு பெரும் அடிதடியே நடக்கும். அந்த லைக்கை வைத்துக் கொண்டு ஒரு பைக் கூட வாங்க முடியாது என்றாலும், இணைய உலகில் காலரையோ, துப்பாட்டாவையோ தூக்கி விட்டுத் திரியலாம். 

பேஸ்புக்கில் லைக்குகளை குவிக்க நடக்கும் பெரும் போட்டிகளில், தனித்து நின்று களமாட உதவியது மீம்ஸ். ஆரம்பத்தில் அதிக கவனம் பெற, ஒரு சிலர் காலண்டர் வாசகங்களை திருடி காலை வணக்கம் போட்டு கடுப்பேற்றுவார்கள். 

அது வேலைக்காகவில்லை என்றால், பிரபல கவிஞரின் கவிதையை சுட்டு தங்கள் பெயரில் பதிவிடுவர் சிலர். அதிலும் செல்ப் எடுக்கவில்லை என்றால், ஓரமாக நின்று ஒப்பாரி வைத்து லைக்குகளை அள்ள, பலர் முடிவெடுத்த போது, நான் இருக்கேன் என ஓடி வந்த உத்தமன் இந்த மீம்ஸ். இணைய உலகில் அகாதுகா ஆட்களாக சீன் போட்டுக் கொண்டிருக்கும் நெட்சடிசன்களை பின்னுக்கு தள்ளி விட்டு, தன்னை முன்னுக்கு நிறுத்தும் மூளை தந்திரம்.

மீம்ஸ் உருவாக்குவதற்கு தொழில்நுட்பம் மட்டும் தெரிந்தால் மட்டும் போதாது. குறைந்தபட்ச அரசியல் அறிவும், சினிமா, சமூக அறிவும் முக்கியம். இதை எல்லாம் தாண்டி, கொஞ்சம் நகைச்சுவை உணர்வும் தேவை. இல்லை என்றால், ஏக் மார் தோ துக்குடா.  

இளைஞர்கள், குறிப்பாக, 18 முதல் 28 வயத்துக்குட்டவர்கள் தான் பெரும்பாலும் மீம்ஸ்களை உருவாக்குகின்றனர். இதற்கென்று யாரும் தங்கள் பொன்னான நேரங்களை செலவிடுவதில்லை. கிடைக்கும் சைடு கேப்பில் ஆட்டோ ஓட்டுகிறார்கள். ஒரு மீம்ஸை தயாரிப்பதற்கு அதிகபட்சமாக ஐந்து நிமிடம் தான் தேவைப்படும்.

ஆண்ட்ராய்டு மொபைல்களில் இதற்கான அப்ளிகேஷன்கள் இருப்பதால், டீ குடித்துக் கொண்டோ, காலாட்டிக் கொண்டோ, கழுத்தில் கத்தி வைக்காமல் அறுத்துக் கொண்டிருக்கும் உயரதிகாரிகளின் லெக்சர்களுக்கு மத்தியிலோ செய்து விடலாம். முடிந்தால், அவர்கள் பற்றி மீம்ஸ் பண்ணி, அவர்களையே டேக் பண்ணலாம். இங்கிரிமெண்ட் கட் ஆனால், அதற்கு எங்கள் கம்பெனி பொறுப்பாகாது. 

முன்பெல்லாம் வெறும் சாதுவாக இருந்த மீம்ஸ்கள், இப்போது வெறி கொண்ட வேங்கைகளாக இணையம் முழுவதும் பவனி வருகின்றன. பேஸ்புக் உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை கூடக் கூடக், மீம்ஸ் உருவாக்குபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

மீம்ஸ் உருவாக்கும் வட்டாரங்களை விசாரித்தால், தெரியவரும் உண்மை, ‘மீம்ஸ் உருவாக்குபவர்களில் அதிகம் பேர், வேலையில்லாத இஞ்சினியரிங் பட்டதாரிகள் தான்’. முன்பு ஆணாதிக்கமாக நிலவி வந்த இந்த இரத்தபூமியில், இப்போது பெண்கள் அவ்வப்போது பூக்கத் துவங்கி இருக்கின்றனர்.   

உடனடியாக எதிர்வினையாற்றுவதில்தான், மீம்ஸ்களின் வெற்றியே அடங்கியுள்ளது. குறிப்பாக, அரசியலிலோ சமூகத்திலோ முக்கியமான சம்பவம் ஏதாவது நடந்து விட்டால், அதற்கு உடனடியாக எதிர்வினையாற்றுவது இதன் தனிச் சிறப்பு. அதிலும் பகடியோடு வருவதால், ஏற்றுக் கொள்ள முடியாத விஷயத்தில் கூட சிரிப்பை வரவழைப்பது இதன் தனிச் சிறப்பு. 

அரசியல், சமூகம், சினிமா சார்ந்து எந்த பிரேக்கிங் நியூஸ் வந்தாலும், பேஸ்புக்கில் மீம்ஸ்கள் குவியத் துவங்கி விடும். அடுத்த நாள் வரை அதுவே ட்ரெண்டாக இருக்கும். அதை பிரேக் பண்ணுகிற சம்பவங்கள் நடந்தால், இரண்டையும் சேர்த்து குழுமி குழுமி  கும்மியடிப்பார்கள் இணையவாசிகள். மீம்ஸ் போடாமல் இவர்களுக்கு வேலையே ஓடாது.

மீம்ஸ் போட்ட பின்னரே ஊற வைத்த துணியை துவைத்துப் போட்ட திருப்தி வரும். இவர்களால், தோரணம் கட்டி தொங்க விடப்பட்ட அரசியல் தலைவர்களின் பட்டியல் நீளமானது. அந்தளவுக்கு பாரம்பட்சம் பார்க்காமல் வச்சு செய்வது, இதன் பலம். பலவீனமும் அது தான். 

நிஜ வாழ்வைப் போல், மீம்ஸ்களிலும் வடிவேலு தான் தெய்வம். அவர் இல்லாமல் எந்த டெம்ப்லேட்டும் வராது. ஆயிரம் பிரச்னைகளோடு பேஸ்புக்கில் வந்தாலும், பார்த்த மறுநொடி உங்களை சிரிக்க வைப்பது மீம்ஸ்களின் தனித்துவம். சமூகம் என்பது துன்பமிகுந்த காமெடி என்றார் சாப்ளின். இணையத்தில் நடந்து வருவதும் அதுதான்.

****

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close