தமிழில் கவனிக்கத்தக்க 'காப்பி' படங்கள் - பகுதி 2

  பால கணேசன்   | Last Modified : 11 Jul, 2018 01:49 pm

கடந்த பகுதியில் தமிழின் புகழ்பெற்ற நடிகர்கள், இயக்குனர்கள் ஆங்கிலப் படங்களில் இருந்து காப்பியடித்து எடுத்தப் படங்களை பார்த்தோம். இந்தக் காப்பி அடித்தல் விஷயத்தில் இன்றைய புதிய தமிழ் இயக்குனர்களும் விதிவிலக்கல்ல. அப்படிப்பட்ட இயக்குனர்கள் பற்றியும், அந்தப் படங்களைப் பற்றியும் ஒரு பார்வை.

இயக்குநர் ஏ.எல்.விஜய் காப்பி அடிக்கும் விஷயத்தில் மன்னர். இவரது இயக்கத்தில் 2011-ல் வெளிவந்த 'தெய்வத்திருமகள்' மிகப் பெரிய வெற்றியடைந்த படம். விக்ரம் மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்த இந்தப் படம் 2001-ல் வெளிவந்த ஆங்கிலப் படமான 'ஐ ஆம் சாம்' என்ற (I Am Sam) படத்தின் அப்பட்டமான காப்பி. கடந்த பகுதியில் சொன்னது போலவே காப்பி என்றால் வெறும் காட்சிகள் மட்டுமில்லை.

படத்தின் ஜீவனான கதைக்கருவும், முக்கியக் கதாபாத்திரத்திற்கு இருக்கும் நோயும் முதற்கொண்டு அப்படியே ஆங்கிலத்தில் இருந்து சுட்டது. அதேபோல் கதாநாயகனுக்கு, அவனுக்காக வாதாடும் வக்கீலுக்கும் இடையிலான உறவும் கூட ஆங்கிலப் படத்தில் உள்ளவாறே அமைக்கப்பட்டிருக்கும்.

இந்தக் காப்பி விவகாரம் பற்றி இயக்குனர் விஜய்யிடம் கேட்டபோட்து, தான் 'ஐ ஆம் சாம்' படத்தை பார்த்ததே இல்லை என்றும், இது காப்பியாக இருந்தால் ஒரு வெளிநாட்டு திரைவிழாவில் எப்படி எல்லாரும் பாராட்டுவார்கள் என்றும் புத்திசாலித்தனமாக கேட்டிருந்தார்.

ஆனால், உண்மை ஊருக்கே தெரியும். இப்படி முழுப் படத்தையும் சுட்டு மாட்டிக் கொண்டாலும், இதற்கு முன்பே இவர் எடுத்த 'மதராசப்பட்டணம்' படம் பல ஆங்கிலப் படங்களில் இருந்து அப்பட்டமாக உருவப்பட்ட படமாகும். குறிப்பாக சில காட்சிகள் 'அப்பகோலிப்டோ' படத்திலிருந்தும், சில காட்சிகள் இந்தியில் வந்த 'மங்கள் பாண்டே' படத்தில் இருந்தும் சுடப்பட்டது.

'வாமனன்' என்றொரு படம் ஜெய் நடித்து 2009-ல் வெளிவந்தது. இந்தப் படம் ஹாலிவுட்டின் புகழ்பெற்ற இயக்குனர் கிறிஸ்டோபர் நோலனின் இயக்கத்தில் வெளிவந்த ஃபாலோயிங் (Following) என்ற படத்தின் அப்பட்டமான காப்பி. இந்தப் படத்தின் இறுதிக்காட்சி மட்டும் 'எனிமி ஆஃப் தி ஸ்டேட்' (Enemy of the State) படத்திலிருந்து திருடப்பட்டிருந்தது.

'ஃபாலோயிங்' படத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், இது நோலன் இயக்கிய முதல் படம். கையில் பணமில்லாத காலக்கட்டத்தில் பிலிம் சுருளுக்கான பணத்தை மட்டும் அவ்வப்போது ஏற்பாடு செய்து, கிடைத்த இடத்தில், கிடைத்த ஒளியில் ஒளிப்பதிவு செய்யப்பட்டு, தியேட்டர்களில் கூட வெளியாகாமல் டிவிடியாக மட்டுமே வெளிவந்து, இப்போது நோலனின் மிகச் சிறந்த படங்களில் ஒன்றாக மதிக்கப்படும் இந்தப் படத்தை இயக்குநர் ஐ.அஹமது தனது முதல் படத்திலேயே அப்பட்டமாக காப்பியடித்திருந்தார்.

ஆனால், சிக்கலான திரைக்கதையை கொண்ட இந்தப் படம் தமிழில் ஓடவில்லை.

எஸ்.ஜெ.சூர்யா இயக்கத்தில் வெளிவந்த 'நியூ' படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது. ஆனால் பலருக்கும் தெரியாத விஷயம் இது டாம் ஹேங்ஸ் நடித்து 1988-ல் வெளிவந்த 'பிக்' (Big) என்கிற படத்தின் அப்பட்டமான காப்பி.

எப்படியென்றால், ஒரு சிறுவன் பெரியவனாக ஆசைப்படுதல், பின்னர் ஒரு குழந்தைகளுக்கான பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்து அங்கே தனது குழந்தைத்தனமான செய்கைகளாலும் யோசனைகளாலும் அங்கிருப்பவர்களை கவர்ந்து இறுதியில் சுபம்.

இதையே தமிழுக்குத் தகுந்தவாறு சற்று மாற்றி, அதில் தாய்ப்பாசம் என்னும் அரதப் பழைய விஷயத்தை புகுத்தி, அதற்கு சம்பந்தமே இல்லாமல் முழுக்க முழுக்க இரட்டை அர்த்த வசனங்களை வைத்து, பகலில் சிறுவன், இரவில் இளைஞன் என்று ஜல்லியடித்து படத்தை ஓடவைத்தார்.

'பிக்' படம் பார்த்தால் இந்தக் கதையின் மூலம் அவர்கள் சொல்லவந்த இந்தச் சிறுவயது சிக்கல்கள், ஆசைகள் அதன் காரணமாக நமது மனது சிந்திக்கும் விஷயங்கள், அதேபோல் இளைஞனாக இருக்கையில் நாம் சாதாரண விஷயங்களை குழப்பி அதை மேலும் மேலும் சிக்கலாக்குவதால் வரும் பிரச்னைகள் என பலவற்றை நகைச்சுவையோடு சொல்லியிருப்பார்கள். என்னதான் தமிழில் மிகப் பெரிய வெற்றியை 'நியூ' பெற்றிருந்தாலும் கூட அதன் மூலப்படமான 'பிக்' அருகில் கூட வர இயலாது.

கஜினி - தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் மெகா ஹிட்டான ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய படம். இந்தப் படம் 'மெமன்டோ' (Memento) என்கிற ஆங்கிலப் படத்தில் இருந்து காப்பியடிக்கப்பட்டது என்பது பலருக்கும் தெரிந்ததுதான். அதற்கு முக்கிய காரணம் இரண்டு படத்தின் கதாநாயகர்களுக்கும் இருக்கும் நோயின் ஒற்றுமை. 15 நிமிடத்தில் எல்லாவற்றையும் மறந்துவிடும் நோய் அது.

மேலும் அந்தக் கதாநாயகன் தன் மனைவியை கொன்ற கெட்டவர்களை தேடி அலைகிறான். இவை இரண்டுமே கஜினியில் இருந்தது. அதேபோல் புகைப்படங்களின் மூலமாக எல்லோரையும் நினைவில் வைத்துக்கொள்வதும் இதில் ஒன்று. இதைத் தவிர வேறு ஒற்றுமைகள் இல்லை. குறிப்பாக இரண்டு படங்களின் திரைக்கதையும் வெவ்வேறு தளத்தில் இயங்குபவை.

மெமன்டோ படத்தின் திரைக்கதை முழுக்க முழுக்க நான்-லீனியர் முறையில் சொல்லப்பட்டிருக்கும். கஜினியில் இரண்டு பெரிய ஃபிளாஷ்பேக்குகள் மட்டும் உண்டு. ஆயினும் படத்தின் ஜீவனான அந்த மறதி நோயும், கதாநாயகனின் நோக்கமும் ஒன்றே என்பதால் இந்தப் படத்தை காபி அடித்த படங்களின் பட்டியலில் தாராளமாக சேர்க்கலாம்.

சில நல்ல படங்கள் நாம் பார்த்து மனது சந்தோஷமாக இருக்கும். ஆனால் அந்தப் படம் ஏதோ ஒரு ஆங்கிலப் படத்தின் தழுவல் என்று தெரிய வருகையில் மனம் மிகுந்த வருத்தத்தில் திளைக்கும். அப்படி ஒரு சம்பவம்தான் 'அபியும் நானும்' படம் பார்த்த பின்னர் உண்டானது.

'ஃபாதர் ஆஃப் தி பிரைடு' (Father of the Bride) என்ற ஆங்கிலப் படத்தில் இருந்து கதைக்கரு, பல முக்கியமான காட்சிகள் என எல்லாவற்றையும் காப்பி அடித்து எடுத்திருந்தார் ராதாமோகன். ஆனால், தமிழில் வழக்கம்போல தந்தை - மகள் சென்டிமென்ட் காட்சியை அதிகப்படுத்தி, மகள் காதலிக்கும் பையனின் காட்சிகளை குறைத்து முழுக்க முழுக்க வேறொரு படம் போலவே தோற்றமளிக்க செய்திருப்பார்கள். ஆனால், தமிழில் படம் பெரிய வெற்றி பெறாமல் போனது.

இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி கதாநாயகனாக அறிமுகமான முதல் படம் 'நான்'. யாரும் எதிர்பாராமல் நன்றாக ஓடிய இந்தப் படம் 'தி டேலன்டட் மிஸ்டர் ரிப்ளே' (The talented Mr.Ripley) என்ற ஆங்கிலப் படத்திலிருந்து காப்பியடிக்கப்பட்டது.

தமிழில் கதாநாயகனின் பின்புலமாக அவன் சிறுவயதிலேயே குற்றங்கள் புரிந்ததுவிட்டு சீர்திருத்த பள்ளியில் படித்தவனாகவும், திடீரென ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு வாய்ப்பு எதிர்பாராமல் கிடைக்க, அதை உபயோகித்து மருத்துவக் கல்லூரியில் படிக்க போவதாகவும், இவன் உண்மையில் யார் என்ற விஷயம் அவனது நண்பனுக்கு தெரிந்ததும் அவர்களுக்குள் ஏற்படும் கைகலப்பில் எதிர்பாராமல் நண்பன் இறந்து விடுவதாகவும் திரைக்கதை அமைத்திருப்பார்கள்.

இப்படி தமிழ் சினிமா கதாநாயகனுக்கே உரிய வகையில் அவனை நல்லவனாக பதிய வைக்க இதையெல்லாம் செய்திருப்பார்கள். இதையெல்லாம் தவிர்த்துவிட்டு உள்ளது உள்ளபடி அவன் அந்த சந்தர்ப்பத்தில் இதைத்தான் செய்வான்... அதுவும் தெரிந்தே... அது கொலையாகவே இருந்தாலும் கூட. அவன் செய்யும் எல்லா செயல்களுமே அப்படியே தமிழில் விஜய் ஆண்டனியும் செய்வார். என்ன ஒன்று ஆங்கிலத்தில் கதாநாயகனும் ஒரு கதாபாத்திரம். தமிழில் அது கிடையாது.

ஆங்கிலப் படத்தின் இறுதிக்காட்சியில் இவ்வளவு குழப்பங்களுக்கும் மூல காரணமாக இருக்கும் ஒருவரை ஹீரோ கொலை செய்துவிடுவான். தமிழில் விஜய் ஆண்டனி தான் யாராக நடிக்கிறாரா அவரது குடும்பத்தை நல்லபடியாக கவனித்துக்கொள்வார். மற்றபடி படம் அப்பட்டமான காப்பிதான் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

- பால கணேசன், கட்டுரையாளர், தொடர்புக்கு vinolishan@gmail.com

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close