வெற்றியை ருசிக்காத சிறந்த தமிழ்ப் படங்கள்!

  பால கணேசன்   | Last Modified : 11 Jul, 2018 01:52 pm

ஒரு படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெறுவதனால் மட்டும் அந்தப் படத்தை சிறந்த படம் என்று நாம் கூறிவிட முடியாது. அதேபோல் ஒரு படம் வசூல் ரீதியாக வெற்றி பெறாமல்போனதன் காரணமாகவே அது மோசமான படமாகவும் ஆகிவிடாது. இதன் அடிப்படையில் தமிழில் வெளிவந்து பொருளாதார ரீதியாக பெரும் வெற்றி பெறாவிட்டாலும் கூட இன்றும் மக்களால் நினைவு கூரப்படும் சிறந்த படங்களைப் பற்றிய ஒரு சிறு பார்வை.

அந்தநாள்:
பராசக்தியில் அறிமுகமான சிவாஜி கணேசன் தொடர்ந்து வித்தியசமான கதாபாத்திரங்களில் நடித்து தமிழ் சினிமாவில் நடிப்புக்கென்று தனி இலக்கணம் வகுத்தார். அதேநேரத்தில் எஸ்.பாலச்சந்தர் என்கிற ஒரு படைப்பாளி தமிழ் சினிமாவில் நடிகராகவும், இசையமைப்பாளராகவும், இயக்குநராகவும் பணியாற்றிகொண்டு இருந்தார்.

இந்த இருவரும் இணைந்த படமே 1954-ல் வெளிவந்த 'அந்த நாள்'. பாடல்களாலேயே கட்டமைக்கப்பட்ட திரைக்கதைகளை கொண்ட படங்கள் மட்டுமே வெளிவந்துகொண்டிருந்த காலகட்டத்தில் பாடல்களே இல்லாமல் வெளிவந்த முதல் தமிழ்ப்படம் என்கிற பெருமையும் இந்தப்படத்திற்கு உண்டு.

சுதந்திரம் அடைந்த பின்னர் வெளிவந்த இந்தியத் திரைப்படங்களில் காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளின் தாக்கமும், மஹாத்மா காந்தியின் புகழ்பாடும் தன்மைகளும் மிக அதிகமாக இருக்கையில், காந்தியை எதிர்த்தும், தேசப்பற்று என்னும் சொல்லை வேறுகோணத்தில் அணுகியும் இந்தப் படம் எடுக்கப்பட்டது. அதுமட்டுமில்லாமல் இந்தப் படத்தின் திரைக்கதை அகிரா குரோசாவாவின் 'ரோஷமான்' திரைக்கதையை அடிப்படையாக வைத்தும் எழுதப்பட்டது. அதுவரை தமிழ் சினிமாவில் வந்த இந்தப் படத்தின் ஒளிப்பதிவையும் விட மிக நன்றாக ஒளிப்பதிவு செய்யப்பட்ட படம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இப்படி திரைக்கதை ரீதியாகவும், தொழில்நுட்ப ரீதியாகவும் பல படிகள் முன்னணியில் இருந்த இந்தப் படம் வெளிவந்த சமயத்தில் தோல்வியையே பெற்றது. அதற்கு முதல் காரணமாக படத்தில் மகாத்மா காந்திக்கு எதிராக சொல்லப்பட்ட கருத்துக்களை கூறலாம். அடுத்ததாக என்னதான் தேசப்பற்று மிக்க மனைவி, நாட்டிற்கு துரோகம் செய்யும் கணவனை கொல்வது போல காட்சி அமைந்திருந்தாலும் அந்தக் காலகட்டத்தில் இந்த மாதிரியான புரட்சி கருத்துக்கள் பேசும் படங்கள் எடுபடவில்லை. இதுவும் தோல்விக்கு முக்கிய காரணம்.

ஆனால் இன்று பார்த்தாலும் மிகவும் சுவாரஸ்யமான திரை அனுபவத்தை வழங்கக்கூடிய ஒரு படமாக இது இருக்கிறது என்பதில் சந்தேகமே இல்லை.

கர்ணன்:

"உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன் வகுத்ததடா" என்று உள்ளம் உருக, பார்ப்பவர் கண்கள் கலங்க சீர்காழி கோவிந்தராஜன் பாடிய இந்தப் பாடல் இடம்பெற்ற 'கர்ணன்' திரைப்படம் ஒரு தோல்விப் படம் என்றால் நம்புவீர்களா? ஆனால் அதுதான் உண்மை. தமிழ் சினிமாவில் புராணக் கதைகளுக்கு எப்போதும் ஒரு மவுசு உண்டு. தமிழ் சினிமா பேச தொடங்கிய காலகட்டத்தில் இருந்தே ராமாயண, மஹாபாரத கதைகள் பல வடிவங்களில், பல கோணங்களில் தொடர்ந்து எடுக்கப்பட்டுக் கொண்டேதான் இருக்கின்றன.

அதில் கர்ணனின் கதை ஏற்கெனவே பல படங்களில் சிறு சிறு பகுதியாக வந்திருந்தாலும் கூட, சிவாஜி கணேசன் நடித்து, பி.ஆர்.பந்துலு இயக்கி, 1964-ல் வெளிவந்த இந்தப் படம் மிக பிரமாண்டமான முறையில் தயாரிக்கப்பட்டது. தெலுங்கு சினிமா சூப்பர் ஸ்டார் என்.டி.ராமராவ் வழக்கம்போல கிருஷ்ணனாக நடிக்க, நடிகையர் திலகம் சாவித்திரி, தேவிகா, அசோகன், முத்துராமன் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்த இந்தப் படம் தமிழகம் முழுதும் பெருமளவில் விளம்பரம் செய்யப்பட்டு பொங்கலன்று வெளியானது.

இந்தப் படத்தின் போர்க்காட்சிகள் அனைத்தும் குருக்‌ஷேத்ராவில் படம்பிடிக்கப்பட்டது. அதேபோல் பெங்களூர் அரண்மனையில் படம்பிடிக்கப்பட்ட முதல் படமே இதுதான். இந்தப் படம் நான்கு திரையரங்குகளில் 100 நாட்களை தாண்டி ஓடியிருந்தாலும் கூட வெளியான 38 திரையரங்குகளில் இரண்டே வாரத்தில் 12 திரையரங்குகளில் இருந்து தூக்கப்பட்டது.

பழைய படங்களை டிஜிட்டல் முறையில் புதுப்பித்து மீண்டும் வெளியிடும் வழக்கம் இந்தப் படத்தில் இருந்துதான் துவங்கியது. 2012-ல் மறுவெளியீடு செய்யப்பட்ட இந்தப் படம் ஆச்சர்யப்படும் விதமாக நல்ல வசூலை பெற்றுத் தந்தது. இந்த தலைமுறை இளைஞர்களும் இந்தப் படத்தைக் காண திரையரங்குக்கு சென்றது உண்மையில் இந்தப் படத்தின் வெற்றியே! முதலில் வெளியான பொழுது இந்திய அரசின் தேசிய விருது பிரிவில் மூன்றாம் பரிசை 'கர்ணன்' பெற்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

விக்ரம்

இயன் பிளெமிங் என்கிற பிரிட்டிஷ் எழுத்தாளரின் கற்பனையில் உருவான ஜேம்ஸ் பாண்ட் என்கிற கதாபாத்திரம் திரைவடிவம் பெற்றதும் மிகப் பெரிய வெற்றியையும் புகழையும் அடைந்தது. உலகம் முழுக்க பெரும் வரவேற்பினை பெற்ற இந்தக் கதாபாத்திரத்தை மையமாக வைத்து இதுவரை 25-க்கும் மேற்பட்ட படங்கள் வெளிவந்திருக்கின்றன. இந்தக் கதாபாத்திரமா அறிமுகமான பிறகு இதே போன்ற துப்பறியும் ஏஜெண்டுகள் கதாபாத்திரம் பல வடிவங்களில் நாவல்களாகவும், திரைப்படங்களாகவும் வெளிவந்துகொண்டுதான் இருக்கின்றன.

அப்படி தமிழில் 1986-ல் கமல்ஹாசன் எடுத்த முயற்சியே 'விக்ரம்' திரைப்படம். தமிழ் சினிமாவிற்கு ஏற்றவாறு சில பல மசாலாக்கள் நிறைந்த இந்தப் படத்தில்தான் முதன்முறையாக ஸ்டெடிகேம் எனப்படும் ஒருவித கேமரா முதன்முறையாக பயன்படுத்தப்பட்டது. இந்த கேமரா துரத்தல் காட்சிகளை சிறப்பான முறையில் படம்பிடிப்பதற்கென்றே கண்டுபிடிக்கப்பட்ட ஒன்று.

வழக்கமான ஜேம்ஸ் பாண்ட் படங்களில் வில்லன்களை அழிக்க வேறு நாட்டிற்கு பயணப்படுவார். அதேபோல்தான் விக்ரமிலும் ஸலாமியா என்றொரு புதிய நாட்டை திரைப்படத்திற்காக கற்பனையாக உருவாக்கி திரைக்கதை அமைத்தனர். கடத்தப்பட்ட ஒரு ஏவுகணையை எந்த பாதிப்புமில்லாமல் மீட்டு வரும் பொறுப்பு விக்ரமிடம் ஒப்படைக்கப்படுகிறது. அதை செய்து முடித்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் கதை.

இரண்டு கதாநாயகிகள், அதில் ஒருவருடன் நெருக்கமான பாடல் காட்சி, படத்தில் டைட்டில் போடும்போது பாடல் ஒலிப்பது, வித்தியசமான வில்லன் என எல்லாமே ஜேம்ஸ் பாண்ட் படங்களின் பிரதிபலிப்பாக இருந்த இந்தப் படத்தின் திரைக்கதை மிக விறுவிறுப்பானது. ஆனாலும் படத்திலிருந்த ஒருவித அந்நியத்தன்மை காரணமாக படம் வசூல் ரீதியாக தோல்வியையே சந்தித்தது. இந்தப் படம் ஜெயித்தால் தொடர்ந்து இரண்டு மூன்று பாகங்கள் செய்யும் யோசனை கமலுக்கு இருந்தது. அது இறுதிவரை நடக்காமலேயே போனது.

மகாநதி

தமிழில் சோகப் படங்களுக்கு என்று ஒரு தனி இடம் உண்டு. துலாபாரம், தூக்குதூக்கி, பாசமலர், மூன்றாம் பிறை போன்ற படங்களில் ஒருவித சோகம் படம் முழுக்கவோ அல்லது இறுதியிலோ மிக அதிகமாக வெளிப்பட்டு நம்மையும் துயரத்தில் ஆழ்த்தும். உலகின் புகழ்பெற்ற பல க்ளாஸிக் படங்களில் ஒருவித இருள் தன்மையை நீங்கள் காணலாம்.

அப்படி ஒரு திரைப்படத்தின் காட்சிகள் அவை நம் இயல்பு வாழ்க்கை இல்லை என்றபோதும் கூட, அக்காட்சிகளை பார்த்ததும் அக்கதாபாத்திரங்களோடு இணைந்து நாமும் அவனின் சோகத்திலும், துக்கத்திலும் பங்கெடுத்துக் கொள்வது போன்ற படங்கள் மிகக்குறைவே. அப்படி ஒரு படம்தான் 1993-ல் வெளிவந்த 'மகாநதி'.

நிறைய நிலம், பணம், உள்ளூரில் நல்ல மரியாதை உள்ள, மனைவியை இழந்த, இரண்டு குழந்தைகளுக்கு தந்தையான கிருஷ்ணசாமி என்கிற ஒருவனின் வாழ்க்கையில் நிகழும் எதிர்பாரா மாற்றங்களும், அதன்பால் அவன் படும் இன்னல்களும், பிரிந்துபோன தன் மகன் மற்றும் மகளை தேடி கண்டுபிடித்து, பின்னர் இவற்றுக்கெல்லாம் காரணமான தீயவனை பழிவாங்குதலுமே இந்தப் படத்தின் கதை.

கொல்கத்தாவின் சோனாகாஜ் எனும் சிவப்பு விளக்கு பகுதியில் நடக்கும் காட்சிகளும், சிறையில் அவன் எதிர்கொள்ளும் துன்பங்களும், இந்த சோகங்களுக்கு இடையே அவன் வாழ்வில் வீசும் மெல்லிய வசந்தமும் பார்ப்பவரை கதறி அழச் செய்யும் வகையில் படமாக்கப்பட்டிருந்தது. இந்தப் படத்தை இரண்டாம் முறை பார்த்தவர்கள் மிகக் குறைவு. ஏனெனில் படம் உண்டாகும் தாக்கம் அப்படிப்பட்டது.

கமல்ஹாசனின் அற்புதமான நடிப்பில் வெளியான இந்தப் படத்தை சந்தானபாரதி இயக்கியிருந்தார். என்னதான் சுவாரஸ்யமான திரைக்கதையை படம் கொண்டிருந்தாலும் வசூல் ரீதியாக படம் தோல்வியை தழுவியது.

அன்பே சிவம்

இந்தக் கட்டுரையில் நாம் காணும் கமலின் மூன்றாவது திரைப்படம் இது. கமல் திரைக்கதை எழுத, மதன் வசனத்தில், சுந்தர்.சி இயக்கிய இந்தப் படம் அன்பை மையமாக கொண்டது. கம்யூனிசம், கடவுள் மறுப்பு, பிறர் நலம் பேணும் கொள்கை முதலியவற்றை காட்சிகள் மூலமும், வசனங்கள் மூலமும் மிகவும் அழுத்தமாக பதிவு செய்த படமும் கூட.

கமல்ஹாசன், மாதவன் இருவரும் ஒரிசாவின் புவனேஷ்வர் நகர ஏர்போர்ட்டில் எதிர்பாராவிதமாக சந்திக்கிறார்கள். அவர்கள் சென்னையை வந்து அடையும் வரை அவர்கள் செய்யும் பயணம், அவர்களுக்குள் நடக்கும் உரையாடல், சண்டை, சமாதானம், உலகை புரிந்துகொள்ளுதல், இதற்கிடையில் உண்மையில் நல்லசிவம் என்பவர் யார்? என்பன போன்ற பல கேள்விகளும் பதில்களும் இடம்பெற்றிருந்த இந்தப் படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. அதற்கு காரணம் திரைக்கதை அமைப்பில் இருந்த சிறு குறைபாடு.

மாதவனும் கமலும் சந்திக்கும் காட்சியில் இருந்து ஒரே சீராக செல்லும் திரைக்கதையில், கமல்ஹாசன் உண்மையில் யார்... அவரது காதல் கதை என்ன போன்றவை பிளாஷ்பேக்காக வரும். மிக நீண்ட இந்த பிளாஷ்பேக்கை கடந்து மீண்டும் முக்கியக் கதைக்கு வந்து பின்னர் அதைத் தொடர்வது ரசிகனுக்கு மிக சிரமமாக இருக்க, படம் வசூல் ரீதியாக தோல்வியை சந்திக்க நேர்ந்தது.

ஆயினும் இப்போது தொலைக்காட்சிகளில் படம் போடும்போதும் சரி, சமூக வலைதளங்களில் பேசப்படும்போதும் சரி, மிக நல்ல விமர்சனத்தையும், படத்தின் சிறப்பம்சங்களையும் தொடர்ந்து பலரும் பாராட்டுவதில் காரணமாக இந்தப் படம் ஒரு க்ளாஸிக் அந்தஸ்தை தற்போது பெற்றுள்ளது.

ஆயிரத்தில் ஒருவன்

செல்வராகவன் தமிழின் மிக முக்கியமான சமகால இயக்குநர்களில் ஒருவர். அவரின் காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி போன்ற காதல் படங்களை தொடர்ந்து அவர் எடுத்த புதுப்பேட்டை திரைப்படம் இன்றும் பாராட்டப்படும் ஒன்று. இதைத்தொடர்ந்தது அவர் தமிழில் ஒரு அட்வென்ச்சர் திரைப்படத்தை எடுக்க நினைத்து கொடுத்த படமே 'ஆயிரத்தில் ஒருவன்'.

தமிழில் அட்வென்ச்சர் திரைப்படங்கள் மிகக் குறைவு. குறிப்பாக ஹாலிவுட்டில் இண்டியானா ஜோன்ஸ் போன்ற சரித்திர நிகழ்வுகளை அடிப்படையாக வைத்து, ஒரு குறிப்பிட்ட பொருளையோ அல்லது இடத்தையோ தேடிக்கண்டுபிடிப்பதும், அதை தேடும்போது வரும் இடையூறுகளை சமயோஜிதமாக சமாளிப்பதும் அந்தப் படங்களின் சிறப்பம்சமாகும். இதைப்போன்ற தமிழகத்தில் சோழர் ஆட்சி இருந்தபொழுது நடந்த சில சம்பவங்களின் கற்பனையில் உருவான கதையே ஆயிரத்தில் ஒருவன்.

போரில் தோல்வியுற்ற சோழர்கள் அதன் வாரிசை அழைத்துக்கொண்டு போகும் வழியெல்லாம் யாரும் பின்தொடராவண்ணம் பொறிகளை அமைத்து, நிலைமை சரியானதும் திரும்ப வருவதற்காக காத்திருக்கிறார்கள். அவர்களை தேடிப்போகும் ஒரு கூட்டமும், அதன்பின்னர் நடக்கும் அசாதாரண சம்பவங்களுமே இதன் கதை.

படத்தின் முதற்பகுதி கலகலப்பாகவும், விறுவிறுப்பாகவும் சென்றாலும், சோழர்களை கண்டுபிடித்த பின்னர் நடக்கும் காட்சிகளில் இருந்த நம்பகத்தன்மை குறைவும், அவர்கள் பேசுவதாக அமைக்கப்பட்ட சோழர்கால தமிழும் படத்தின் வேகத்தையும், விறுவிறுப்பையும் பெருமளவில் குறைத்ததாக ரசிகர்கள் கருதியதால் படம் வசூல் ரீதியாக தோல்வியை தழுவியது. ஆனால் திரைக்கதை அடிப்படையில் பார்த்தால், இதைப்போன்ற படம் தமிழில் இதுவரை வந்ததே இல்லை என்பதே உண்மை.

இரண்டாம் பாகம் எடுக்கப்படக் கூடிய எல்லா கூறுகளும் கொண்ட இந்தப் படத்தின் கலை இயக்கம், ஒளிப்பதிவு, இசை, நடிகர்களின் பங்களிப்பு என எல்லாமே உயர்தரத்தில் இருந்தன. இன்றளவும் சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பாராட்டப்படும் படங்களில் இதுவும் ஒன்று.

ஆரண்ய காண்டம்

உலகம் முழுக்க க்ளாஸிக் என கொண்டாடப்படும் படங்களில் பலவும் கேங்ஸ்டர் கதைகளாக இருப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம். இயல்பு வாழ்க்கையிலிருந்து மிகவும் விலகிய ஓர் உலகம் இந்த அண்டர்வேர்ல்டு கதைகள். ஆனால் வழக்கமாக தமிழில் இந்தக் கதைகளில் ஒரு கதாநாயகன் இருப்பார். என்னதான் கெட்டவராக இருந்தாலும், கொலை, கொள்ளைகள் செய்தாலும் அவரது பக்கம் ஒரு நியாயம் இருக்கும். இறுதியில் கதாநாயகன் வெல்வார் என்பது போன்ற இங்கே திரைக்கதைகள் அமைக்கப்படும்.

ஆனால் இப்படி எந்தவித பூச்சும் இல்லாமல், இதுவரை வந்த எந்தவொரு உலகப் படத்திற்கும் சளைக்காமல் திரைக்கதை எழுதப்பட்டு, அதை மிக நல்லமுறையில் படமாகவும் ஆக்கப்பட்ட இந்தத் திரைப்படம் தியாகராஜன் குமாரராஜா என்பவரின் முதல் படமாகும்.

ஹாலிவுட்டின் புகழ்பெற்ற திரைக்கதை வடிவத்தில் கச்சிதமாக பொருந்தும் இந்தப் படம் முழுக்க டார்க் ஹியூமரின் ஆதிக்கம் நிலவும். படத்தில் பாடல்களே கிடையாது. ஆனால் படம் முழுக்க காட்சிகளுக்கு பொருத்தமாக பாடல்கள் ஒலித்துக்கொண்டே இருக்கும். அதேபோல் இந்தப் படத்தின் ஒளிப்பதிவு தமிழின் மிகச் சிறந்த ஒளிப்பதிவுகளில் ஒன்று என்று அறுதியிட்டு கூறலாம்.

வழக்கமாக திரைப்படங்களில் கூறப்படும் நியாய தர்மங்கள், நல்லவன் கெட்டவன் போன்ற விவாதங்கள் எல்லாம் வைத்து பிரச்சாரமாகவோ அல்லது மசாலாவாகவோ இல்லாமல் எந்தவொரு கதாபாத்திரத்தின் இயல்புத்தன்மையும் மாறாமல், "எது தேவையோ அதுவே தர்மம்" என்கிற தத்துவத்தின் அடிப்படையில் இயங்கும் திரைக்கதையைக் கொண்டது இந்தப் படம். இவ்வளவு சிறப்பம்சங்கள் இருந்தாலும் கூட படம் மிகப் பெரிய தோல்வியையே சந்தித்தது.

அதிகம் பரிச்சியமான நடிகர்கள் இல்லாமல் போனது, பெரும்பாலும் திரைமொழியில் இயக்குனர்கள் வைக்க தயங்கும் காட்சிகளை இயல்பாக உள்ளே நுழைத்தது போன்ற சில பல காரணங்களால் சராசரி ரசிகனுக்கு அந்நியமாக தோன்றியதும் படத்தின் தோல்விக்கு காரணமாக கொள்ளலாம். ஆயினும் தமிழில் இப்படி ஒரு படம் வந்ததற்காக நாம் பெருமைப்பட்டே ஆகவேண்டும்.

- பாலகணேசன், கட்டுரையாளர், தொடர்புக்கு vinolishan@gmail.com

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.