தமிழ் சினிமாவில் 'ரியலிசம்' நிலைநாட்டிய படங்கள்!

  கார்தும்பி   | Last Modified : 11 Jul, 2018 01:27 pm

தமிழ் சினிமாவை புரிந்துகொள்வது என்பது குறிப்பிட்ட ரசிகர் கூட்டத்தால் மட்டுமே பாராட்டப்படும் கிளாசிக் தர சினிமாவைக் கற்பது மட்டுமே கிடையாது. ஒவ்வொரு காலத்தில் 'டிரெண்ட் செட்டர்' ஆக இருக்கும் மசாலா படங்களையும் சேர்த்துப் படித்தால்தான் தமிழ் சினிமாவை புரிந்துகொள்ள முடியுமென்பது நிதர்சனம். இந்தப் பட்டியலில் மசாலா படங்கள் சற்றே தவிர்க்கப்பட்டு, தமிழ் சினிமாவில் ரியலிசத்தை நிலைநாட்ட உண்டான முயற்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கின்றன. ரியலிச டிராமாக்களை ரசிப்பவர்கள் பட்டியலில் உள்ள படங்களை பார்த்துக் கொண்டாடலாம்.

மூன்றாம் பிறை - பாலு மகேந்திரா

ஓர் அசாத்தியமான கதையை மிக லாவகமாக திரைக்கதையால் வசப்படுத்தி படைக்கப்பட்ட திரைப்படம். கொஞ்சம் கூடியிருந்தாலும் திகட்டியிருக்கும் நடிப்பை கட்டுக்குள் வைத்திருக்க நடிகர்களாலும் முடிந்திருந்தது. பெரிய அளவில் படத்திற்குப் பலமாக இருந்த இசைக்கு சாட்சியாக, தமிழகத்தின் பெரும்பாலானவர்களின் வாய் 'கண்ணே கலைமானே' என்று ஒரு முறையாவது முணுமுணுத்திருக்கும்.

தொண்ணூறுகளின் பிள்ளைகளுக்கு பெரிய அளவில் அறிமுகமாகாத திரைப்படமாக 'மூன்றாம் பிறை' இருக்கலாம். ஆனால், நூறு வருடங்கள் கழித்து பார்த்தாலுமே 'மூன்றாம் பிறை' முழுமையானதாக தான் தோன்றும். பாலு மகேந்திராவின் 'ரியலிசத்திற்கு' எளிதான, தெளிவான உதாரணம் 'மூன்றாம் பிறை'யாகத் தான் இருக்கக் கூடும்.

மகாநதி - சந்தான பாரதி

யதார்த்தம் சினிமாவைவிட கொடூரமானதாக இருக்கும் எனும் எண்ணம் 'மகாநதி' படத்தை பார்த்து முடித்ததும் தோன்றலாம். கமல் ஹாசனில் எழுத்தில் உருவாக்கப்பட்ட இந்தத் திரைப்படத்தை இலகுவான மனநிலையோடு பார்த்துவிட முடியாது. கூடவே வரும் வெவ்வேறு நிலப்பரப்புகளும், ஆறுகளும் அவை தரும் உணர்வுகளும் மொத்த பட அனுபவத்தில் முக்கியமானவை. துயர், வன்முறை, துரோகம், சுரண்டல் என பல அழுத்தமான, அவலமான உணர்வுகளின் கலவையாக இருக்கும் படைப்பு. ஆனால், நிச்சயமாக பார்வையாளர் மிஸ் பண்ணக் கூடாத படமும் கூட.

காதல் - பாலாஜி சக்திவேல்

ஒரு காதல், இரு வேறு பின்புலங்கள், வர்க்க பேதம் - இப்படி ஒரு கதை. மிக யதார்த்தமான, ஆனால் அசாதாரணமான திரைக்கதை. பாலாஜி சக்திவேலின் திரைப்பயணத்தில் மிக முக்கியமான திரைப்படம். உண்மையில் 'காதல்' படத்தை பற்றி எழுத நிறைய இருந்தாலும், படத்தின் இசை மாயாத ஜீவனோடு காதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது, படத்தின் நினைவாக. நா.முத்துக்குமாரின் வரிகளால் மட்டும்தான் இது சாத்தியமாகியிருக்கிறது. படத்தில் இருக்கும் நுண்ணுணர்வுகள் அவ்வளவும் பாடல் வரிகளாயும் இருக்கும்.

புதுப்பேட்டை - செல்வராகவன்

புதுப்பேட்டை முதலில் ரியலிச சினிமா வகையில் அடங்காது என்றாலும், பல ஸ்டீரியோடைப்புகளை உடைத்த காரணத்திற்காக ஒரு பெஞ்ச் மார்க்காக இந்தப்படம் நிலைத்திருக்கிறது. ஜிகர்தண்டா அசால்ட் சேதுவிலும் கொக்கி குமார் தாக்கம் இருக்கிற அளவு புதுப்பேட்டை தமிழ் சினிமாவின் மிக முக்கியமான கேங்ஸ்டர் படம். கேங்ஸ்டருக்கும் அரசியல்வாதிகளுக்கும் இடையேயான அரசியல், ஒரு கேங்க்ஸ்டரின் கிரே ஷேடுகள், சேரி வாழ்க்கையோடு இணைந்திருக்கும் வன்முறை என பல புது களங்களை அறிமுகமாக்கியது புதுப்பேட்டை.

பாடல்கள், பின்ணணி இசை நிறைய காலத்திற்கு எதிரொலித்துக் கொண்டிருக்கும். ஸ்நேகா, சோனியா அகர்வால், தனுஷ், அழகம் பெருமாள் என குவிந்திருக்கும் நட்சத்திர பட்டாளம் ரசனைக்கு விருந்து.

காதலும் கடந்து போகும் - நலன் குமாரசாமி

நலன் குமாரசாமியின் 'காதலும் கடந்து போகும்' என்னுடைய தனிப்பட்ட ஃபேவரைட். நான் போடும் பட்டியலில் எல்லாம் தவிர்க்காமல் இந்த சினிமா இடம் பெறுவதன் எதிர்வினை குறித்து கவலையில்லை. நலன் குமாரசாமி செய்யும் மேஜிக்கா அல்லது விஜய் சேதுபதி செய்யும் வசியமா என்பது குறித்தெல்லாம் யோசிக்க முடியாமல், விஜய் சேதுபதியின் நேர்மையான பெர்ஃபாமன்ஸில் தன்னிலை இழப்போம். நீண்டதொரு பயணம் போலவும், நீண்ட பயணத்தில் ஒரு இடைவேளை போலவும் தோன்றும் 'காதலும் கடந்து போகும்' - குற்றம், பழி, முன் அனுமானங்கள் சார்ந்த சந்தேகங்கள் என பல தத்துவார்த்தங்களைத் தொட்டுப் போகும்.

காக்கா முட்டை - மணிகண்டன்

மணிகண்டனின் இயக்கத்தில் 2015-ல் வெளியான 'காக்கா முட்டை' திரைப்படம் வெகுவான வரவேற்பை பெற்று, இளம் திரை படைப்பாளிக்கு புதியதொரு வழியை காண்பித்தது. செய்தி சேனல்களின் விவாதங்களோடு, விருது விழாக்களையும், கார்ப்பரேட்களையும் பகடி செய்திருக்கும் படத்தில் எந்த இடத்திலும் எதார்த்தம் மிஞ்சியதாக தெரியாது. படத்தின் க்ளைமாக்ஸிலோ, திரைக்கதை அமைப்பிலோ பலருக்கு விமர்சனங்கள் இருந்தாலும், நிச்சயமாக 'காக்கா முட்டை' படம் தமிழ் சினிமாவின் 'ரியலிசத்திற்கு' முக்கியமான பங்குதான்.

ஜோக்கர் - ராஜு முருகன்

ராஜு முருகன் எனும் படைப்பாளி உங்களுக்கு 'வட்டியும் முதலும்' தொடர் மூலம் அறிமுகம் ஆகியிருந்தால், அவருடைய படைப்பு எல்லாமே மனதிற்கு நெருக்கமானவையாகவே இருக்கும். வேறு வழியில் அறிமுகம் ஆகியிருந்தாலுமே, அவருடைய படைப்புகள் நெருக்கமானவையாகவே இருக்கும். முன்னேறிய நாடுகளில் இருக்கும் பொருளாதார நிலை, அவர்களுடைய படங்களில் அப்பட்டமாக வெளிப்படும் என்றாலும், பெரும்பாலான மக்கள் வறுமையில் வாழும் இந்தியாவிலோ மேல்தட்டு மக்களின் கதைகளே ஒரே மெட்டில் பல முறை பாடப்படும். இந்த பாட்டர்னை உடைக்கும் சினிமாக்கள் 'ரியலிசம்' வகையை சேர்ந்தவையாக இருக்கும். அப்படி பொருளாதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் யதார்த்தத்தை பிரதிபலிக்க முயன்ற திரைப்படம் 'ஜோக்கர்'.

எந்தப் பட்டியலுமே முழுமையானவை கிடையாது, மாறாக, தனிப்பட்ட நபரின் கருத்து மட்டுமே. இந்தப் பட்டியலில் அவசியம் இடம் பெற வேண்டிய படங்கள் எவை எவை என கீழே கருத்துப் பகுதியில் பகிரலாம்.

- கார்தும்பி, கட்டுரையாளர் - தொடர்புக்கு snehabelcin@gmail.com

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close