மகத்தான வெற்றி பெற்ற மோசமான படங்கள் - பகுதி 1

  பால கணேசன்   | Last Modified : 11 Jul, 2018 01:53 pm

சில படங்கள் எதற்காக ஓடுகின்றன என்பதே நமக்குத் தெரியாது. ஆனால் வருட இறுதியில் பார்த்தால் அந்த படம்தான் அந்த வருடம் வெளிவந்த எல்லா படத்தையும் பின்னால் தள்ளிவிட்டு வசூலில் முதன்மையாக நின்றுகொண்டிருக்கும். இன்னும் சொல்லப்போனால் அந்தப் படத்தைப் போன்றே அடுத்து வரிசையாக பல படங்கள் வெளிவர முக்கிய காரணமாகவும் இருக்கும். ஆனால், படத்தின் உள்ளடக்கத்திலும் சரி, மற்ற அம்சங்களிலும் சரி எந்தவித புதுமையோ அல்லது நன்மையோ இருக்காது. அப்படிப்பட்ட தமிழ்ப் படங்களை பற்றிய ஒரு சிறு பார்வை.

இதயக்கனி:

எம்ஜிஆர் தனது கலைப் பயணத்தின் உச்சத்தில் இருந்த ஆண்டுகள் 1970-கள். அதேநேரத்தில் அரசியலிலும் மிக முக்கிய பங்கை அவர் வகித்துக் கொண்டிருந்தார். 'உலகம் சுற்றும் வாலிபன்', 'நேற்று இன்று நாளை', 'உரிமைக்குரல்' போன்ற பல வெற்றிப் படங்களை கொடுத்துக் கொண்டிருந்த காலகட்டம் அது. ஒரு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் கையில் இருந்த நேரத்தில் 1975-ல் வெளிவந்த படம்தான் 'இதயக்கனி'.

முழுக்க முழுக்க தனிமனித துதி பாடும் இந்தப் படம்தான் இன்றைய முன்னணி நடிகர்கள் பலரின் மசாலா படத்திற்கு ஊற்றுக்கண். எப்படி என்றால் ஆரம்பத்தில் ஒரு பாடல் காட்சி. கதாநாயகன் அறிமுகம். ஒரு ஊரே கதாநாயகனின் அருமை பெருமைகளை பாடுகிறது. அவர்களோடு சேர்ந்து கதாநாயகனும் தான் மக்களுக்காக எனது உயிரையும் கொடுப்பேன் என்று சூளுரைக்கிறார்.

பின்னர் கதாநாயகன் தனது காரில் சென்று கொண்டிருக்கும்பொழுது ஒரு பெண்ணை சிலர் வன்கொடுமை செய்ய முயற்சிப்பதை காண்கிறார். அந்தப் பெண்ணை கயவர்களிடமிருந்து சண்டையிட்டு காப்பாற்றுகிறார். உடனே அந்த பெண்ணுக்கு கதாநாயகன் மீது காதல் பிறக்கிறது. கதாநாயகியுடனான எல்லா பாடல் காட்சிகளிலும் நாயகியை புரட்டி எடுக்கிறார் நாயகன் (இதைத்தானடா நாங்களும் பண்ண ட்ரை பண்ணுனோம்? எங்களை அடிச்சி துரத்திட்டு நீ பண்ற? இது உனக்கே நியாயமா? - கயவர்கள் மைண்ட் வாய்ஸ்.). அதன்பின் ஒரு அதிரடி திருப்பம். கடைசியில் சில பல சண்டைக்காட்சிகளுக்கு பிறகு சுபம்.

இதுபோன்ற கதை கட்டமைப்பை எத்தனையோ படங்களில் நீங்கள் பார்த்திருக்கலாம். ஆனால் இந்தப் படம் அடைந்த வெற்றிக்கு முன்னால் மற்ற படங்கள் எல்லாம் தூசு. அந்த வருடத்தின் அதிக நாட்கள் ஓடிய படம், அதிகம் வசூல் செய்த படம் இதுதான். என்னதான் எம்.ஜி.ஆர் என்கிற பெரிய சக்தி திரையில் இருந்தாலும் கூட கதை, திரைக்கதை என புதிதாக எந்தவித விஷயமும் இல்லாத இந்தப் படம் இவ்வளவு பெரிய மெகா வெற்றி அடைந்தது என்பது சற்று வருத்தமளிக்கும் விஷயமே.

நினைத்தாலே இனிக்கும்:

கே.பாலச்சந்தர் ஓர் அற்புதமான படைப்பாளி. யாரும் யோசிக்கவே தயங்கும் பல விஷயங்களை திரையில் மிகவும் எளிதாக படம்பிடித்து காட்டிய மேதை. அவரது சிறப்பம்சமே பலமான கதைதான் (பலான கதைகள் இல்லை. பலமான கதைகள்). என்னதான் உறவுகளுக்கு இடையே இருக்கும் சிக்கல்களை மிக அதிகமாக கையாண்டிருந்தாலும் கூட ஏதேனும் ஒருவகையில் அந்தப் படங்கள் எல்லாம் ஒன்றுடன் ஒன்று மாறுபட்டே இருக்கும்.

மசாலா அம்சங்களை விட மற்ற தேவையான விஷயங்களை நம்பி 100 படங்கள் வரை எடுத்த சிலரில் மிக முக்கியமானவர். அப்படிப்பட்ட பாலச்சந்தர் எடுத்து மிகப்பெரிய வெற்றியை கண்ட 1979-ல் வெளிவந்த 'நினைத்தாலே இனிக்கும்' படம் எப்படி இவ்வளவு பெரிய வெற்றியை பெற்றது என்பது இதுவரை புரியவே இல்லை. காரணம், நீங்கள் நன்றாக நோக்கினால் இந்தப் படத்தில் கதை மற்றும் திரைக்கதையை நம்பியதை விட சிங்கப்பூரை மிக அதிகமாக பாலச்சந்தர் நம்பியிருப்பார். அதற்கு உதாரணமாக கமல், ரஜினி, ஜெயப்ரதா போன்ற முக்கியமான நடிகர்களை விட சிங்கப்பூரின் அழகே மிக அதிக அளவில் படத்தில் காண்பிக்கப்பட்டிருக்கும்.

அதேபோல் மற்ற எந்த பாலச்சந்தரின் படத்திலும் நான் காணாத வகையில் படத்தின் மையக்கருவிற்குள் படம் நுழையவே இடைவேளை வரைக்கும் தேவைப்படும். அதுவரை வெறும் பாடல்களால் மட்டுமே படம் நிரப்பப்பட்டிருக்கும். அதிலும் பெரும்பாலான பாடல்கள் முழுக்க சிங்கப்பூரை ஓசியில் சுற்றிக் காண்பிப்பதாக மட்டுமே இருக்கும். இதற்கு இடையில் கமல்ஹாசனின் இசைக்குழுவில் இருப்பவர்களின் காமெடி.

ரஜினிக்கு தனி காதல் கதை. அதற்கும் படத்திற்கும் யாதொரு சம்பந்தமும் இருக்காது. எம்.எஸ்.விஸ்வநாதனின் இசையில் பாடல்கள் எல்லாமே நன்றாக இருக்கும். அதுபோக இணைய பயன்பாடு இல்லாத காலகட்டம் ஆதலால் சிங்கப்பூரின் அழகில் மக்கள் மதிமயங்க, படம் நன்றாக ஓடியது. இப்போது இந்தப் படத்தை பார்த்தால் இதுவா ஓடியது என்கிற என்கிற எண்ணம்தான் மிஞ்சுகிறது. பாலச்சந்தரின் உயரத்திற்கு இந்தப் படம் ஒன்றுமே இல்லை என்பதே உண்மை.

சகலகலாவல்லவன்:

கமல்ஹாசனின் ஆரம்ப கால படங்கள் பெரும்பாலும் இயக்குநர்களின் படங்களாகத்தான் இருந்திருக்கின்றன. அப்படித்தான் ஒரு பெரிய கதாநாயகனாக கமல் உருவெடுத்தார். 'பதினாறு வயதினிலே', 'சிவப்பு ரோஜாக்கள்' போன்ற படங்களில் எல்லாம் மிக வித்தியாசமான கமலை பார்க்கலாம். அந்தப் படங்களும் மிகப்பெரிய வெற்றியை பெற்றன. ஆயினும் மாஸ் ஹீரோ என்னும் அந்தஸ்தை கமல் எட்டிப்பிடிக்க முழுமுதற் காரணமாக இருந்தது 1982-ல் வெளிவந்த 'சகலகலாவல்லவன்' தான்.

எஸ்.பி.முத்துராமனின் இயக்கத்தில் வெளிவந்த இந்தப் படம் அதுவரை இருந்த பல சாதனைகளை தகர்த்தெறிந்தது. ஆனால் உன்னிப்பாக கவனித்தால் இந்தப் படம் அதற்குப் பின் தமிழில் வந்த ஏகப்பட்ட குப்பைப் படங்களுக்கு முன்னோடியாகவும் இருக்கிறது. ஓர் அப்பாவி கிராமத்தான். அவனை ஏமாற்றும், அவன் தங்கை வாழ்வை நாசமாக்கும் ஒரு பணக்கார குடும்பம். அவர்களை பழிவாங்கும் கதாநாயகன். இதுதான் கதை. இதற்கு நடுவில் ஏகப்பட்ட கரம் மசாலா. குறிப்பாக சில்க் ஸ்மிதாவை மிக சரியாக பயன்படுத்தி மிகப்பெரிய வெற்றிகண்ட முதல் படம் இது என்று கூட சொல்லலாம்.

இந்தப் படத்திற்கு பின் சில்க் ஸ்மிதா இல்லாத தமிழ் படமே இல்ல என்கிற அளவிற்கு அவருக்கு மவுசு ஏற்பட்டது. மேலும் தமிழில் முதன்முறையாக ஒரு கோடி ரூபாய் வசூல் செய்த படம் என்றும் இதைக் கூறுகிறார்கள். படம் முழுக்க லாஜிக் மீறல்களும், அபத்தமான காட்சிகளும் நிறைந்து வழியும்.

குறிப்பாக பெண்களை கேலி செய்வதும், இரட்டை அர்த்தத்தில் பாடல்கள் பாடுவதும், கற்புதான் பெண்ணுக்கு ஆபரணம், கற்பழித்தவனையே திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று வசனம் பேசுவதுமாக முழுக்க முழுக்க பிற்போக்குத்தனங்களை பேசும் இந்தப் படம் இவ்வளவு பெரிய வெற்றியை அடைந்தது இன்று யோசித்து பார்த்தால் ஆச்சரியமே!

அதைவிட ஆச்சரியம் கமல்ஹாசன் மாதிரி ஒரு சிந்தனையாளர் (இது நாஞ்சொல்லல.. அப்படித்தான் ஊருக்குள்ள பேசிக்கிறாங்க..) இப்படி ஒரு பத்தாம்பசலி மசாலா படத்தில் நடிக்க எப்படி ஒப்புக்கொண்டார் என்பதே!

சின்னத்தம்பி:

பி.வாசு, பிரபு, குஷ்பு ஆகிய மூவரின் சினிமா பயணத்திலும் மிகப் பெரிய மைல்கல் என்று 'சின்னத்தம்பி' படத்தை சொன்னால் அது மிகையில்லை. 9 திரையரங்கில் 356 நாட்களும், 47 திரையரங்குகளில் 100 நாட்களும் ஓடி மெகா வெற்றி பெற்ற இந்தப் படம் முழுக்க அபத்தங்கள் மட்டுமே நிறைந்திருக்கும். இளையராஜாவின் இசை தூண் போல தாங்கி நிற்க, கவுண்டமணியின் நகைச்சுவை பகுதி வயிறு குலுங்க சிரிக்க வைக்க படம் அதிரி புதிரியாய் ஓடியது.

ஆனால் படத்தின் கதையும் சரி, திரைக்கதை வடிவமைப்பும் சரி சிறுபிள்ளைத்தனமாக இருந்ததை நாம் இங்கே கவனிக்க வேண்டும். திருமணம் என்றால் என்னவென்றே தெரியாத ஒருவன் என்கிற ஒற்றை வரியும், தாலி சென்டிமென்டும், அம்மா சென்டிமென்டும், விதவை சென்டிமென்டும் ஆகக் கூடி சென்டிமென்டுகளின் லீலையே இந்த 'சின்னத்தம்பி' திரைப்படம்.

அதிலும் குறிப்பாக இறுதிக்காட்சியில் மனோரமாவின் வெள்ளைப் புடவையில் வண்ண சாயங்களை வீசுவதும், அதனால் விதவையான மனோரமாவின் மானத்திற்கு பங்கம் வருவதும், அதைக்கண்டு மகன் பிரபு பொங்கி எழுந்து கயவர்களை பந்தாடுவதும்... எம்மம்மா.. இப்படி ஒரு பிற்போக்குத்தனமான காட்சியை பார்த்து மக்கள் உச் கொட்டி ரசித்து, படத்தையும் மிகப்பெரிய ஹிட்டாக்கி... முடியல!!

இதைவிட கொடுமை அந்த வருடத்திற்கான தமிழக அரசு விருதுகள் விழாவில் 7 விருதுகளை இந்தப் படம் வென்றது. அதில் சிறந்த படத்திற்கான முதல் பரிசும் ஒன்று. இந்த மாதிரியான படங்கள் வசூல் ரீதியாக வெற்றி பெறுவதைக் கூட பொறுத்துக் கொள்ளலாம். ஆனால் வல்லுனர்கள் நிரம்பிய அல்லது வல்லுநர்கள் என்று கூறப்படும் மனிதர்கள் நிரம்பிய நடுவர்கள் கூட்டம் எந்த அடிப்படையில் இந்த படத்தை எல்லாம் சிறந்த படம் என்று தேர்ந்தெடுக்கிறார்கள் என்பதுதான் புரியவில்லை.

ஏனெனில் அதே வருடம்தான் அழகன், இதயம், குணா, தளபதி போன்ற அற்புதமான படங்கள் வெளியாகி இருந்தன. அவற்றை எல்லாம் ஒதுக்கிவிட்டு 'சின்னத்தம்பி' விருது வென்றதை எந்தக் கணக்கில் சேர்க்க?

திருடா திருடி:

'காதல் கொண்டேன்' படத்தின் எதிர்பாராத மிகப் பெரிய வெற்றி தனுஷை ஒரே நாளில் மிகப்பெரிய கதாநாயகனாக்கியது. அவரது அடுத்த படத்திற்கான எதிர்பார்ப்பு எகிறியது. 2003-ல் சுப்ரமணிய சிவா இயக்கத்தில் 'திருடா திருடி' வெளிவந்தது. காதல் கொண்டேனை விட மிகப் பெரிய வெற்றி பெற்ற இந்தப் படம் எப்படி இவ்வளவு பெரிய வெற்றியை அடைந்தது என்று சற்று யோசித்துப் பார்த்தால் நம்மை நாமே காறி துப்பும் அளவிற்குத்தான் காரணங்கள் இருக்கின்றன.

படத்தின் மிகப்பெரிய பலம் தனுஷின் உருவம். ஒல்லியான, மாநிறமான ஒரு பக்கத்துவீட்டு பையன் போன்ற அவரின் தோற்றம் ரசிகர்களை எளிதில் அவரது கதாபாத்திரத்தோடு ஒன்ற துணை செய்தது. மேலும் அவர் வீட்டில் செய்யும் சேட்டைகள், குறும்புகள் எல்லாம் தங்களையே பிரதிபலிப்பதாக ரசிகர்கள் நம்பினர். ஆனால் இதுமட்டுமே இந்த படத்தின் வெற்றிக்கு காரணமாக இருந்திருந்தால் இங்கே இதை குறிப்பிட அவசியமே இருக்காது. இதற்கும் மேலே படத்தில் எதுவுமே இல்லை.

இரண்டு ஐட்டம் சாங்ஸ் எனப்படும் கவர்ச்சி நடனங்கள், இறுதிக் காட்சிக்கு முந்தி வரும் 'மன்மத ராசா' பாடல், காலின் பெருவிரலை விட அதன் அருகில் இருக்கும் விரல் பெரியதாக இருந்தால் கில்மா மேட்டரில் கைதேர்ந்தவர்கள் என்பது போன்ற ஒரு மொக்கை காட்சி, கதாநாயகனும், கதாநாயகியும் தொடர்ந்து ஒருவருக்கொருவர் ஈகோவின் காரணமாக சண்டையிடுதல்... இவ்வளவுதான் மொத்தப் படமும்.

மிகவும் மலிதான நகைச்சுவை காட்சிகள், கதாநாயகியை ஈவ் டீசிங் செய்யும் நாயகன் என மசாலா என்கிற பெயரில் அபத்தத்தை திணித்த இந்தப் படத்தை பார்த்த 'காதல் கொண்டேன் இயக்குநர்' செல்வராகவன், இயக்குநர் சுப்ரமணிய சிவாவின் மீது கோபப்பட்டதாக கூட ஒரு செய்தி உண்டு.

சந்திரமுகி:

'பாபா' படத்தின் தோல்வி ரஜினியே எதிர்பாராதது. விநியோகஸ்தர்களுக்கு பணத்தை திருப்பி தரவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. பின்னர் ஒரு மேடையில் பேசிய ரஜினிகாந்த், "நான் யானை இல்ல... குதிரை. விழுந்தா டக்குனு எந்திரிச்சிருவேன்.." என்றார். அப்படி எழுந்த படம்தான் 'சந்திரமுகி'. 'மணிச்சித்ரதாழ்' என்கிற மோகன்லால், சுரேஷ் கோபி நடித்த மலையாளப்படத்தின் ரீமேக்கான இந்தப் படத்தை பி.வாசு இயக்கினார்.

ஏற்கெனவே கன்னடத்தில் 'ஆப்தமித்ரா' என்கிற பெயரில் விஷ்ணுவர்தனை வைத்து இயக்கி மிகப் பெரிய வெற்றிகண்ட பி.வாசு, தமிழில் ரஜினியை வைத்து இயக்கி அதைவிட மிகப் பெரிய பிரமாண்டமான வெற்றியை பெற்றார். ஆனால் இந்தப் படத்திற்க்கும் இதன் ஒரிஜினலான மணிசித்ரதாழுக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது. அதேபோல் தமிழில் அபத்தங்களுக்கும் பஞ்சமில்லை.

முதலில் படத்தில் விரவியிருக்கும் இரட்டை அர்த்த காமெடி. வடிவேலுவின் மனைவிக்கும் ரஜினிக்குமான காட்சிகள் எல்லாம் அந்த ரகமே! அடுத்து ரஜினி படம் என்றாலே ஒரு திமிர் பிடித்த பெண் இருப்பார். 'மாப்பிள்ளை' படத்தில் ஆரம்பித்த இந்த விஷயம் பின்னர் 'மன்னன்', 'படையப்பா' என பெரிய அளவில் தொடர்ந்தது. இன்னொரு முக்கியமான விஷயம் படத்தில் ஜோதிகாவுக்கு இருப்பது ஒரு நோய். அவருக்கு பேய் பிடிக்கவில்லை என்பதை தெளிவாக சொல்லியிருக்கவே மாட்டார்கள்.

அதேபோல் சம்பந்தமே இல்லாமல் ஒரு பெரிய பாம்பு படத்தில் தோன்றும். வெறும் அதிர்ச்சி மதிப்பீட்டுக்காக மட்டுமே அந்த பாம்பு இருக்குமே அன்றி வேறு எந்த நன்மையும் அதனால் இல்லை. ஏகப்பட்ட லாஜிக் மீறல்களும் கொண்ட இந்தப் படம் இவ்வளவு பெரிய வெற்றியை பெறும் என்று நான் நினைத்தும் பார்க்கவில்லை. குறிப்பாக இந்தப் படத்தின் காமெடிக் காட்சிகள் மிகவும் புகழ்பெற்றன. மக்களை முட்டாளாக்கி அடைந்த ஒரு வெற்றிப் படம் என்று தாராளமாக இதைச் சொல்லலாம்.

சுந்தரபாண்டியன்:

இயக்குநர் சசிக்குமார் நடிகராக மாறிய பின்னர் தொடர்ந்து நட்பின் பெருமைகளை பேசும் படங்களில் நடித்தார். அப்படி நட்பின் பெருமையை பேசுகிறேன் பேர்வழி என்று ஆதிக்க சாதிப்பெருமை பேசிய ஒரு படமே 'சுந்தரபாண்டியன்'. படத்தின் ஆரம்ப காட்சியிலேயே தென் தமிழக ஆதிக்க சமூகம் ஒன்றின் பெருமையை பேசும் வசனங்கள் இடம்பெற்றுவிடும். அதன்பின் நாயகனும், நாயகனும் சந்திப்பது, இருவரும் ஒரே சாதியாக இருப்பது, பின்னர் சில பல சாதிப்பெருமை வசனத்திற்கு பிறகு திருமணம் நிச்சயமாதல், பின்னர் நண்பர்களுக்குள் ஏற்படும் பகையும், அதன் பின் அதனால் நிகழும் சண்டையும் இறுதியில் சுபமும்.

சாதாரணமாக பார்த்தால் இந்தப் படம் ஒரு சுவாராசியமான கதைக்களத்தையும், திரைக்கதையையும் கொண்ட வெற்றிப் படம் என்கிற தோற்றத்தைதான் கொடுக்கும். ஆழ்ந்து நோக்கினால் படம் முழுக்க கதாநாயகன் மூலம் தொடர்ந்து வெளிப்படுத்தப்படும் சாதிப் பெருமையும், ஒரு தாழ்த்தப்பட்ட சாதி இளைஞன் நாயகியை காதலிக்க, அதனால் ஏற்படும் பிரச்னைகளும், அந்த பிரச்னையில் ஆதிக்கசாதி பெருமை பேசும் நாயகனே வெல்வதும் இப்படி சமூகத்தில் மக்கள் மனதில் ஏற்கெனவே புரையோடிப்போயுள்ள ஒரு அழுக்கை கொம்புசீவி விட்டே இந்தப் படம் ஜெயித்திருப்பது தெளிவாக புரியவரும்.

பெரும்பான்மையான மக்களின் மனதில் பதிந்திருக்கும் சில சமூக ஏற்றத் தாழ்வுகள், பிரிவுகள் இவையனைத்தும் மனதின் ஓரத்தில் எங்கேனும் பதுங்கியிருக்க, 'சுந்தரபாண்டியன்' போன்ற படங்கள் அதை சுரண்டி விட்டு சுகம் காண வைக்கும் படைப்புகளாகத்தான் இங்கே காணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.

இப்படியான படங்கள் வெற்றிபெறுவதன் மூலம், அதை வெற்றிபெற வைப்பதன் மூலம் நமக்கே தெரியாமல் ஓர் ஆதிக்க சாதியின் அடிமையாக நாமே மாறிநிற்கும் அவலமும் கூட உண்டு இதில். இந்த மெல்லிய புரிதல் நமக்கு இருந்தாலே இங்கே சாதி புகழ் பாடும் படங்கள் காணாமல் போய்விடும்.

- பாலகணேசன், கட்டுரையாளர், தொடர்புக்கு vinolishan@gmail.com

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.