வெற்றியை ருசிக்காத சிறந்த தமிழ்ப் படங்கள்! - பகுதி 2

  பால கணேசன்   | Last Modified : 11 Jul, 2018 01:53 pm

தமிழில் வெளிவந்து பொருளாதார ரீதியாக பெரும் வெற்றி பெறாவிட்டாலும் கூட இன்றும் மக்களால் நினைவு கூரப்படும் சிறந்த படங்களைப் பற்றிய முதல் பகுதியில் 'அந்த நாள்', 'கர்ணன்', 'விக்ரம்', 'அன்பே சிவம்', 'ஆரண்ய காண்டம்' மற்றும் 'ஆயிரத்தில் ஒருவன்' ஆகிய படங்களைப் பார்த்தோம். இந்தப் பட்டியல் சற்றே நீளம். இதோ இரண்டாவது பகுதி.

ஹேராம்

கமல்ஹாசன் தமிழில் இயக்கிய முதல் படம். அவரது கனவுப் படங்களில் ஒன்று என்றும்கூட இதைச் சொல்லலாம். மஹாத்மா காந்தி மீது மக்கள் எவ்வளவு அன்பு செலுத்தினார்களோ அதேஅளவு வெறுப்பையும் ஒரு சாரார் கொண்டிருந்தனர். இந்தியா சுதந்திரம் அடைந்தபோதும் சரி, பாகிஸ்தான் பிரிவினையின்போதும் சரி, இதற்கெல்லாம் காந்தியே காரணம் என்றும், அவரை கொன்றுவிட்டால் பிரச்னைகள் தீர்ந்துவிடும் என்று நம்பிய ஒரு கூட்டத்தில், கல்கத்தா கலவரத்தில் தன் மனைவியை இழந்த சாகேத் ராம் என்கிற ஒருவன் சிக்கி கொள்கிறான். காந்தியை அவனே கொல்வதற்கும் அனுப்பப்படுகிறான். இறுதியில் என்ன ஆனது என்பதே ஹேராமின் கதைக்களம்.

தமிழில் பீரியட் படங்கள் மிகவும் குறைவு. அப்படியே வந்தாலும் கூட அதன் நம்பகத்தன்மையும், உழைப்பும் வெகு சாதாரணமாகவே இருக்கும். ஆனால் 'ஹேராம்' படம் இதில் ஒரு மைல்கல். 1940-களின் கல்கத்தா, தஞ்சாவூர், பம்பாய், டெல்லி என எல்லாமே தத்ரூபமாக படம்பிடித்திருப்பார்கள். அதேபோல் கற்பனையாக ஜல்லியடிக்காமல் உண்மையில் நடந்த உண்மையில் நிகழ்ந்த சம்பவங்களுக்கிடையே சாகேத்ராமின் கதை சொல்லப்பட்டிருக்கும். காந்தியின் ஆஸ்ரமம், அவரை கொல்ல திட்டமிடும் தருணங்களும் மிகச்சரியான முறையில் படத்தில் இடம்பெற்றிருக்கும்.

அதேபோல் படத்தின் உயிர்நாடியான கல்கத்தா மதக்கலவர காட்சிகள் அந்த இரவில், சன்னமான வெளிச்சத்தில் பதைபதைக்க வைக்கும் முறையில் எடுக்கப்பட்டிருக்கும். ஆயினும் படம் வெற்றிபெறவில்லை. அதற்கு முக்கிய காரணங்கள் இரண்டு. ஒன்று படத்தில் பேசப்படும் மொழி. ஆங்கிலம், இந்தி, பெங்காலி இவற்றுக்கு நடுவே தமிழ் ஒலிக்கும். சப்டைட்டிலும் போடப்படவில்லை. இதன் காரணமாக படம் பலருக்கும் புரியவேயில்லை.

இரண்டாவது காரணம் உண்மையில் படத்தில் காந்தியை கெட்டவர் என்று கூறுவது பதிவான தாக்கமும், அந்தச் சம்பவங்களில் புரிந்த காட்சிகளும் இறுதியில் காந்தி நல்லவர் என்று புரிந்துகொள்ளும்போது தெளிவாக சொல்லப்படவில்லை. இன்னும் பலர் ஆரம்ப காட்சியில் காட்டப்படும் வயதான கமலை மஹாத்மா காந்தி என்று தவறாக நினைக்கும் அளவிற்கு ரசிகர்கள் குழம்பிப் போயினர். இது படத்தின் தோல்விக்கான மிக முக்கிய காரணம். மிகச் சரியான முறையில் திரைக்கதை எழுதப்பட்டிருந்தாலும் கூட அதை திரையில் கொண்டு சேர்த்த விதத்தில் தோல்விதான். இதுவே வசூல் ரீதியாக படம் ஓடாமல் போனதற்கும் காரணம்.

இருவர்

தமிழில் அரசியலை மையப்படுத்திய படங்கள் மிகக் குறைவு. அப்படி எடுக்கப்படும் படங்களும் மசாலா படங்களாகவே இருக்கின்றன. அரசியல்வாதி என்றால் கெட்டவன் என்கிற பிம்பத்தை ஊதிப் பெரிதாக்கும் ஒரு நிகழ்வாகத்தான் இந்தப் படங்கள் அமைகின்றன. இப்படிப்பட்ட சூழலில் தமிழக அரசியலின், குறிப்பாக திராவிட கட்சிகளின் இருபெரும் தூண்களான கருணாநிதி, எம்ஜிஆரின் வாழ்க்கைப் பயணத்தை மையமாக வைத்து மணிரத்னம் இயக்கிய படமே 'இருவர்'.

எம்ஜிஆர் கதாநாயகனாக திரைப்படங்களில் நடிக்க முயற்சி செய்யும் காலகட்டம், பின்னர் கருணாநிதியின் அறிமுகம், ஒருவர் தன் தரணி மெச்சும் தமிழ்ப்புலமையின் மூலம் வசனம் எழுத, இன்னொருவர் அதை திரையில் நடித்து பாராட்டுப் பெற, பின்னர் இருவரும் ஒரே கட்சியில் இணைந்து ஆட்சியை பிடிக்க, மூத்த தலைவர் மரணத்திற்கு பின்னர் கருணாநிதி முதல்வராக, சில பல சம்பவங்களுக்கு பின்னால் வரும் மனஸ்தாபத்தால் எம்ஜிஆர் புதிய கட்சி தொடங்க, இதற்கிடையே இருவரின் குடும்ப வாழ்க்கையும் பின்னிப் பிணைய, ஒரு அற்புதமான திரை அனுபவத்தை தரும் ஒரு அட்சயபாத்திரமாக படம் இருக்கும்.

குறிப்பாக நடிகர்களின் தேர்வு மிக நன்றாக இருக்கும். அதேபோல் தமிழகத்தின் 1950-களின் தொடக்கத்தில் இருந்து 1980களின் இறுதிவரையான காலகட்டமும், அரசியல் நிகழ்வுகளும் எந்தவித பூச்சுமின்றி எளிமையான முறையில் படத்தில் கையாளப்பட்டிருக்கும். இசை படத்தின் மிகப்பெரிய பலம். ஆயினும் படம் எதிர்பார்த்த அளவு ஓடவில்லை. காரணம் என்னவாக இருக்கும் என்று ஆராய்ந்தால் வழக்கம்போல மணிரத்னம் படத்தில் இருக்கும் ஒரு பெரிய பிரச்னையே இதிலும் இருந்தது. வசன உச்சரிப்பு. மிக முக்கியமான காட்சியிலும் கூட ஹஸ்கி வாய்ஸில் (ரகசிய குரலில்) கதாபாத்திரங்கள் பேசுவது மிகப்பெரிய பிரச்சினையாக தோன்றியது.

மேலும் படம் வெளியான காலகட்டத்தில் எம்ஜிஆர் - கருணாநிதி இடையே இருந்த நட்போ அல்லது இணக்கமோ இங்கே பலருக்கும் தெரியாது. இரண்டு எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் என்கிற புரிதல் மட்டுமே இளைய தலைமுறைக்கு இருந்தது. ஆனால் படத்தில் இருவருக்குமான சண்டை மிக மென்மையாகவே கையாளப்பட்டிருக்கும். இந்தப் படைப்பு கற்பனை சுதந்திரம் உண்மையான கதையை மழுங்கடித்ததும் ஒரு காரணமாக இருக்கலாம். என்னதான் ஓடவில்லை என்றாலும் தமிழின் மிக முக்கியமான படைப்புகளில் இருவரும் ஒன்று என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை.

கற்றது தமிழ்

இயக்குநர் ராமின் முதல்படம் 'கற்றது தமிழ்'. பாலுமகேந்திராவின் பட்டறையில் இருந்து வந்த ராம் சமூகநோக்குள்ள படங்களை இயக்குவதில் ஆர்வமுள்ளவர் என்பதை தன் முதல்படமான கற்றது தமிழிலிலேயே நிரூபித்தார். ஒரு சிறுவயது காதல். வளர்ந்தபின் எதிர்பாரா சூழ்நிலையில் மீண்டும் அவளை சந்திக்கிறான் அவன். இம்முறை காதல் மெருகேற, திடீரென்று இன்னொரு பெரிய பிரிவு. அவளை தேடிப்போகிறான். ஒரு சந்திப்பும் மீண்டும் பிரிவும். இதற்கிடையில் தமிழ் மீது பற்று கொண்ட தன் ஆசிரியரின் வழியொற்றி இவனும் தமிழ் ஆசிரியராகிறான். சமூகம் அவனை ஒரு எல்லைக்கு தள்ள எதிர்பாராமல் ஒரு கொலை செய்ய, பின்னர் கொலைகள் தொடர்கின்றன. மீண்டும் அவளை சந்திக்கிறான். இம்முறை பிரிய இல்லாமல் இணைகிறார்கள்... மரணத்தில்!

சாதி ஏற்றத்தாழ்வுக்கு சற்றும் குறைந்ததல்ல பொருளாதார ஏற்றத்தாழ்வு. இங்கே கல்வி என்பது முழுக்க முழுக்க பணத்தை துரத்த நம்மை தயார்படுத்தும் ஒரு கருவியாக மட்டுமே மாறி நிற்கிறது. அதேபோல் தகவல் தொழில்நுட்ப துறையின் அசுர வளர்ச்சி இங்கே பல வேலைவாய்ப்புகளை உருவாக்கினாலும், அவர்களின் மாத வருவாய் அதிகமென்பதால் அது சமூகத்தில் ஏற்படுத்தி இருக்கும் இடைவெளி மிகப்பெரியது. இது ஒரு கோபமாக நாயகனிடம் இருந்து வெளிப்படும் காட்சி மிகமுக்கியமான ஒன்று.

இதைத்தொடர்ந்து இந்த சமூகம் எதை வைத்து ஒருவனை மதிக்கிறது என்பதையும் காட்சிகளின் வழி கேள்வியாக்கியிருப்பார் இயக்குநர். இதற்கிடையில் ஒரு மென்மையான காதல். தடயம் விட்டுச்செல்லாத ஒரு பறவையை தேடிக்கண்டுபிடிக்கும் காட்சிகள், அவர்களுக்கிடையிலான உரையாடல்கள் என பல கோணங்களில் படம் நகரும். சுவாரஸ்யமான திரைக்கதையும், அருமையான பாடல்களும் நிறைந்திருந்தாலும் கூட படம் வசூல்ரீதியாக ஓடவில்லை. காரணம் படத்தில் இருந்த அதீத சோகமும், திரைக்கதை அலைபாயலும்தான்.

ஆரம்பத்தில் சீராக செல்லும் திரைக்கதை நாயகன் ஒரு கொலைகாரனாக மாறியதும் வேறு வடிவம் ஆரம்பிக்கிறது. பின்னர் எதிர்பார்த்தது போலவே நாயகியை பாலியல் தொழில் விடுதியில் சந்திப்பதெல்லாம் பழைய காட்சி. சில பல குறைகள் இருந்தாலும் கூட மிக நல்ல விமர்சனங்களை படம் பெற்றது.

மயக்கம் என்ன

இயக்குநர் செல்வராகவனின் காதல் படங்கள் சற்று வித்தியாசமானவை. சமூகத்தின் பொதுப்பார்வையில் புனிதப்படுத்தப்படும் விஷயங்களில் உள்ள அழுக்குகளையும், அதேநேரத்தில் அசிங்கம் என்று ஒதுக்கிவைக்கப்படும் விஷயங்களில் உள்ள நல்ல விஷயங்களையும் காட்சிப்படுத்துவதில் கைதேர்ந்தவர். அவரின் மற்றொரு காதல் படமே 'மயக்கம் என்ன'.

ஏற்கனவே செல்வராகவன் தன்னுடைய படங்களில் பெண் கதாபாத்திரங்கள் மிகவும் தைரியசாலிகளாகவும், ஆண்கள் வாழ்க்கையில் அவர்கள் மாற்றங்கள், முன்னேற்றங்கள் ஏற்படுத்துவதையும் காட்டியிருப்பார். இதிலும் கிட்டத்தட்ட அதே முறைதான். ஆயினும் இந்தப் படத்தின் நாயகி இன்னும் உறுதியானவள். சமகால காதல்கள் உலகமயமாக்கலின் தாக்கத்தை கொண்டிருக்கின்றன. சேர்ந்து வாழ்தல், பிரச்னை ஏற்பட்டால் அல்லது புரிதலில் இடைவெளி ஏற்பட்டால் பிரிதல் போன்ற விஷயங்கள் இயல்பான ஒன்றாக இருக்கின்றன.

அதேபோல்தான் இதிலும் நண்பனின் பெண் தோழியின் பால் ஈர்ப்பு ஏற்பட்டு அவளை காதலித்து திருமணமும் செய்கிறான் நாயகன். சிறந்த புகைப்படக் கலைஞன் ஆகவேண்டும் என்கிற அவனது கனவு ஒரு கட்டத்தில் தகர்த்தெறியப்பட, விபத்துடன் சற்று மனநிலை பாதிக்கப்படுகிறான். நாயகியின் துணையோடு அதிலிருந்து எப்படி மீண்டு வருகிறான் என்பதே கதை. நாயகனும் நாயகியும் ஒரு மழை நேர இரவில், பேருந்து நிறுத்தத்தில் சந்தித்துக்கொள்ளும் காட்சியும், அதைத்தொடர்ந்து அவர்களின் உரையாடலும் இதுவரை தமிழ் சினிமாவில் வந்த மிகச்சிறந்த காட்சிகளில் ஒன்று.

அதேபோல் நண்பர்களுக்கிடையிலான புரிதலும் மிக நன்றாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். என்னதான் "அடிடா அவளை.. உதைடா அவளை.. வெட்றா அவளை.." பாடல் காதலிக்க மறுக்கும் அல்லது காதலை ஏற்றுக்கொள்ள மறுக்கும் பெண்களுக்கு எதிரான மோசமான பார்வையை, வன்முறையை முன்வைக்கும் பாடலாக கொண்டாலும் கூட அதைத் தவிர்த்து மிக முக்கியானதொரு படம் இது. வசூல்ரீதியாக வெற்றிபெறாத படங்களின் வரிசையில் இதை சேர்ப்பதற்கே வருத்தமாக உள்ளது.

நான் கடவுள்

இயக்குனர் பாலாவின் பலமே அவரது படங்களில் காட்டப்படும் விளிம்புநிலை மனிதர்கள் சோகங்களில் மூழ்கி, திணிக்கப்பட்ட வருத்தத்தோடு அமர்ந்திருக்க மாட்டார்கள் என்பதே. எல்லா சோகங்களையும் ஓர் இயல்பான நகைச்சுவை தெறிக்கும் வசனத்தோடு அவர்கள் கடந்து செல்வார்கள். உடல் ஊனமுற்ற பிச்சைக்காரர்களின் வாழ்க்கை முறை ஒன்றை ஒரு மெல்லிய நையாண்டியோடு திரையில் பார்ப்பதே புதிது. அதை 'நான் கடவுள்' படத்தில் சாத்தியப்படுத்தி இருப்பார் பாலா.

அதேபோல் இதுவரை இந்திய திரையில் பதிவாகாத அகோரி கதாபாத்திரத்தை அதே பயங்கரத்தோடு, பரபரப்போடு இதில் பதிவு செய்திருப்பார். ஆனால் பாலாவின் பலவீனம் அதீத வன்முறை காட்சிகள். சண்டைக்காட்சிகள் என்றுகூட அதை சொல்ல முடியாது. பல நேரங்களில் ஓவர்டோஸாக மாறி நிற்கும் இந்த சண்டைக்காட்சிகள் சில நேரங்களில் களைப்பையே கொடுக்கும். ஆயினும் 'நான் கடவுள்' படத்தின் திரைக்கதையும், காட்சியமைப்புகளும், அதற்கு பின்னால் இருக்கும் அசாத்திய பொறுமையும் உழைப்பும் பாலா படங்களில் மட்டுமே காணக்கிடைப்பவை.

குறிப்பாக தாண்டவன் கதாபாத்திரம் உடல் ஊனமுற்றவர்களை அணுகும் முறை இதில் மிக முக்கியமானது. பிச்சை எடுக்க லாயக்கானவர்கள் மட்டுமே அவனின் தேவை. ஊனமுற்றிருந்தாலும் இரக்கம் வரும் அளவுக்கு உடலில் பாதிப்பில்லை என்றால் அது நஷ்டக்கணக்காகத்தான் தாண்டவனுக்கு தோன்றும். இப்படி கதாபாத்திர வடிவமைப்புகளில் உச்சம் தொட்ட ஒரு படமாக நான் கடவுளை சொல்லலாம்.

பூஜாவின் கதாபாத்திரம், இறுதியில் மரணம் வேண்டி நிற்கும் காட்சி என இந்தப் படம் ஒரு தனி உலகம். இவ்வளவு சிறப்பம்சங்கள் இருந்தும் படம் வசூல் ரீதியாக தோல்வியையே தழுவியது. அதற்கான காரணமாக படத்தின் இறுக்கமான காட்சிகளை சொல்லலாம். குறிப்பாக பிச்சை எடுக்கும் உடல் ஊனமுற்றவர்களை தாண்டவன் கொடுமைப்படுத்தும் காட்சிகள், இறுதியில் அகோரி பூஜாவுக்கு மறுஜென்மம் இல்லாத மரணம் கொடுக்கும் காட்சி இவை எல்லாம் பார்ப்பவர்களை கடும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியது. இந்த தாக்கம் படத்தின் தோல்வியாக எதிரொலித்தது. ஆனாலும் 'நான் கடவுள்' தமிழில் மிகமுக்கியமான படைப்பு என்பதில் சந்தேகமேயில்லை. - பாலகணேசன், கட்டுரையாளர், தொடர்புக்கு vinolishan@gmail.com

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close