தமிழ் டப்பிங்கில் மெகா வெற்றி கண்ட தெலுங்கு படங்கள்!

  பால கணேசன்   | Last Modified : 11 Jul, 2018 01:50 pm

தென்னிந்திய திரைப்பட தொழிற்சாலைகளில் தெலுங்கு திரையுலகம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. படம் தயாரிக்கும் எண்ணிக்கை, படத்திற்கான செலவு என பல விஷயங்களில் பாலிவுட்டிற்கு அடுத்த இடத்தில டோலிவுட் எனப்படும் தெலுங்கு படங்கள் இருக்கின்றன. தமிழ் சினிமாவைப் போலவே நீண்ட நெடிய பாரம்பரியமும், தலைசிறந்த கலைஞர்களும் இருக்கும் டோலிவுட்டில் இருந்து வெற்றி பெற்ற நிறைய படங்கள் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு மிகப் பெரிய வெற்றியை பெற்றிருக்கின்றன.

'கீலு குர்ரம்' என்ற பெயரில் 1949-ல் தெலுங்கில் வெளிவந்து மிகப் பெரிய வெற்றிபெற்ற படம்தான் தமிழில் 'மாயக்குதிரை' என்கிற பெயரில் முதன்முதலில் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது. அதிலிருந்து இன்று வரை வெளியான டப்பிங் படங்களில் மிகப் பெரிய வெற்றி பெற்ற முக்கியமான படங்கள் குறித்த தொகுப்பு...

இதுதாண்டா போலீஸ்

'அங்குசம்' என்கிற பெயரில் 1989-ல் வெளிவந்த படமே தமிழில் 'இதுதாண்டா போலீஸ்' என்கிற பெயரில் டப்பிங் செய்யப்பட்டது. டாக்டர். ராஜசேகரும், அவரது மனைவி ஜீவிதாவும் நடித்த இந்தப் படம் கோடி ராமகிருஷ்ணாவால் இயக்கப்பட்டது. தமிழில் மாபெரும் வெற்றி பெற்ற இந்தப் படம் ஓடியதற்கு காரணம் என்னவென்று யோசித்தபோது முதலில் ஞாபகம் வந்தது, இந்தப் படத்தின் பெயர்தான். காரணம் இப்படி ஒரு பெயரை படத்திற்கு வைக்கலாம் என்பதே ஒரு மிகப்பெரிய ஆச்சரியம். படத்தை பார்க்க மக்களை இழுக்க இந்தப் பெயரே முதல் காரணம். இதன்பின் வந்த பல டப்பிங் படங்களுக்கு இதே ரீதியில் பெயர் வைக்கப்பட்டதற்கு இந்தப் படம்தான் முன்மாதிரி.

அடுத்து படத்தின் வில்லன் ராமிரெட்டி. அந்த வருடத்தின் மிகச் சிறந்த வில்லனுக்கான ஆந்திர அரசின் நந்தி விருது பெற்ற இவரின் தோற்றமும், வசன உச்சரிப்பும் (இவருக்கு டப்பிங் பேசியவருக்கு ஒரு ஸ்பெஷல் பாராட்டுகள்) ரசிகர்களுக்கிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. குறிப்பாக "சண்டி.. வண்டியை எடு.." என்கிற வசனம் அப்போது பள்ளியில் படித்துக்கொண்டிருந்த எங்கள் வாழ்வில் மிக முக்கிய இடத்தை வகித்தது.

அதேபோல் படத்தின் கதாநாயகன் ராஜசேகர் வாழ்வில் மிக முக்கிய திருப்புமுனையாக இந்தப் படம் அமைந்தது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர் தொடர்ந்து இதேபோன்று படங்களாக நடித்து இருந்த பெயரையும் கெடுத்துக்கொண்டார். வில்லன் ராமிரெட்டிக்கும் இதேபோன்ற கதாபாத்திரங்களே கிடைத்தது.

உதயம்

'சிவா' - 'உதயம்' என்கிற பெயரில் தமிழில் டப்பிங் செய்யப்பட்டது. மிகப் பெரிய வெற்றியடைந்த இந்தப் படம் 1989-ல் வெளிவந்தது. நாகர்ஜுனா - அமலா நடித்த இந்தப் படம் அதுவரை இருந்த பல வசூல் சாதனைகளை தகர்த்தெறிந்தது. ப்ரூஸ்லீயின் 'வே ஆப் தி டிராகன்' படத்தின் தாக்கத்தில் எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் வில்லனாக பவானி என்கிற கதாபாத்திரத்தில் ரகுவரன் நடித்தார். அதற்கு முன்பு பல படங்களில் நடித்திருந்தாலும் கூட நாகர்ஜூனாவின் ஆக்‌ஷன் படங்களில் முதல் பெரிய மாஸ் வெற்றி இந்தப் படம்தான்.

ஒரு கல்லூரி மாணவனுக்கும், ஒரு கேங்ஸ்டர் கூட்டத்தின் தலைவனுக்கும் இடையிலான போராட்டமே படம். படத்தின் முதல் சண்டைக் காட்சியில் நாகர்ஜுனா சைக்கிள் செயின் ஒன்றை உருவி கைகளில் சுத்தி அதை வைத்து எதிரிகளை பந்தாடும் காட்சி மிகவும் புகழ்பெற்றது. படத்தின் மிகப்பெரிய பலம் ரகுவரனின் வில்லத்தனம். குரலை கொஞ்சம் கூட உயர்த்தாமல் அடிக்குரலில் கரகரப்பாக பேசும்போது ஒருவித இருள் சூழ்ந்த பயங்கரம் அதில் கலந்திருக்கும். இது படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு மிகவும் உதவியது.

மேலும், தொழில்நுட்ப ரீதியாக படம் வேறு ஒரு தளத்தில் இருந்தது. கேமரா கோணங்கள், இசைக்கோர்வை எல்லாம் ஒரு மிகச் சிறப்பான ஆக்‌ஷன் படத்திற்கான அடித்தளத்தை கொடுத்தது. அந்த வகையில் படத்தின் இயக்குநரான ராம் கோபால் வர்மா இந்திய சினிமாவின் முக்கிய இயக்குநராக உயர 'உதயம்' உதவியது.

வைஜெயந்தி ஐ.பி.எஸ்

'கர்தவ்யம்' - 'வைஜெயந்தி ஐ.பி.எஸ்' என்கிற பெயரில் தமிழில் வெளிவந்த மாஸ்டர் பிளாஸ்டர் படம். விஜயசாந்தி என்கிற லேடி சூப்பர் ஸ்டாரை தென்னிந்திய திரையுலகிற்கு கொடுத்த படமும் இதுதான். 'கல்லுக்குள்' ஈரம் என்கிற பாரதிராஜா இயக்கிய படத்தில் 14 வயதில் அறிமுகமான விஜயசாந்தி பின்னர் தெலுங்கில் கரை ஒதுங்கினார். அங்கே சில பல கிளாமர் ரோல்கள் செய்த பிறகு அவருக்கு கிடைத்த மிகப் பெரிய வாய்ப்புதான் 'கர்தவ்யம்'.

ஒரு பெண் போலீஸ் அதிகாரி நேர்மையாக இருப்பதால் தன் வாழ்வில் அனுபவிக்கும் கஷ்டங்களும், பின்னர் அதிலிருந்து மீண்டு எதிரிகளை அழிப்பதுமே இதன் கதை. 1990-ல் வெளிவந்த இந்தப் படம் 80-களில் பிறந்த பலருக்கும் பல நாஷ்டால்ஜியாக்களை இன்றளவும் கொடுக்கும் படைப்பாக இருக்கிறது.

நேர்மையான போலீஸ் அதிகாரிக்கு வரும் பிரச்னைகள் என்கிற கதையை எத்தனையோ படங்களில் பார்த்திருந்தாலும் கூட இந்தப் படம் இவ்வளவு பெரிய வெற்றியை பெற்றதுக்கு காரணம், அதுவரை திரையில் சொல்லப்படாத ஒரு பெண் போலீஸ் அதிகாரியின் கதையை சொன்னதுதான். அதுமட்டுமின்றி அதை முழுக்க முழுக்க ஒரு ஆக்‌ஷன் படமாக கொடுத்திருந்தனர். இந்தப் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக விஜயசாந்திக்கு தேசிய விருதும் கிடைத்தது.

அம்மன்

'அம்மொரு' - 'அம்மன்' என்ற பெயரில் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி மிகப் பெரிய வெற்றியை பெற்றது. நடிகை சவுந்தர்யா பக்தையாகவும், நடிகை ரம்யா கிருஷ்ணன் அம்மனாகவும் நடித்து வெளிவந்த இந்தப் படத்தில் 'இதுதாண்டா போலீஸ்' புகழ் ராமிரெட்டி வில்லனாக வந்து கலக்கினார். கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் தயாரிப்பில் இருந்து, அன்றைய காலகட்டத்திலேயே 2 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட இந்தப் படத்தை கோடி ராமகிருஷ்ணா இயக்கினார். படத்தின் பெரும்பாலான பணம், அதன் கிராபிக்ஸ் வேலைக்காகவே செலவிடப்பட்டது. அந்த வகையில் இந்தப் படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் அந்த காலகட்டத்தில் புதுமையாகவும், சிறப்பாகவும் இருந்து மிகப்பெரிய பாராட்டுகளை பெற்றது.

இந்தப் படம் தெலுங்கில் மட்டுமில்லாது தமிழிலும் மிகப் பெரிய ட்ரெண்ட் செட்டராக விளங்கியது. இந்தப் படத்தை தொடர்ந்து அம்மன் வகையறா படங்கள் தொடர்ச்சியாக எடுக்கப்பட்டன. அதில் சில படங்களை கோடி ராமகிருஷ்ணாவே இயக்கினார். மேலும் சவுந்தர்யா, ரம்யா கிருஷ்ணன் போன்றோருக்கும் இதே மாதிரியான வேடங்கள் தொடர்ந்து கிடைத்தன. அவற்றில் சில வெற்றியும் பெற்றன. இந்தப் படத்திற்கு பெண்களின் கூட்டம் அலைமோதியது. ஒரு குறிப்பிட்ட பாடல் காட்சியில் பெண்கள் அருள் வந்து ஆட, அதைவைத்து விளம்பரங்கள் செய்யப்பட்டன.

இதயத்தை திருடாதே

'கீதாஞ்சலி' - 'இதயத்தை திருடாதே' என்று தமிழில் வெளிவந்த மணிரத்னம் இயக்கிய படம். 'மெளன ராகம்' படத்தால் மிகவும் ஈர்க்கப்பட்ட நாகர்ஜுனா, மணிரத்னம் தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் இடத்திற்கு அருகில் தினந்தோறும் வந்தது காத்திருந்து கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு பிறகு மணிரத்னத்துடன் பேசி, தன்னை வைத்து தெலுங்கில் ஒரு படத்தை இயக்கச் சொல்லி கேட்க, அதன் பின்னர் மணிரத்னம் இயக்கிய படமே 'கீதாஞ்சலி'. மணிரத்னம் இயக்கிய ஒரே நேரடி தெலுங்குப் படம் இதுதான்.

இந்தப் படம் வந்த சில மாதங்களுக்கு பிறகுதான் ராம்கோபால் வர்மாவின் 'சிவா' வெளியானது. 'கீதாஞ்சலி' மூலம் பெண்களின் மனதை கவர்ந்த நாயகனாக மாறியிருந்த நாகர்ஜுனா, 'சிவா' படத்தின் மூலம் ஆக்‌ஷன் நாயகனாகவும் மாறினார். ஆக 'கீதாஞ்சலி'யே அவரின் முதல் மெகா வெற்றிப் படம் எனவும் கொள்ளலாம்.

கதை ஒன்றும் புதிதில்லை என்றாலும் கூட மணிரத்னத்தின் திரைக்கதை முத்திரை படம் முழுக்க விரவிக் கிடந்தது. இது படத்தின் வெற்றியை உறுதி செய்தது. அதேபோல் இளையராஜாவின் இசை படத்தின் மிகப் பெரிய பலமாக விளங்கியது. படத்தின் ஆடியோ கேசட்டுகள் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் அதிகமாக விற்பனை செய்து சாதனைப் படைத்தது. அந்த வருடத்திற்கான சிறந்த படத்திற்கான தேசிய விருதையும் கீதாஞ்சலி பெற்றது.

சலங்கை ஒலி

'சாகர சங்கமம்' - 'சலங்கை ஒலி' என்ற பெயரில் தமிழில் வெளிவந்து நல்ல வசூலையும், அதைவிட நல்ல விமர்சனங்களையும் பெற்றது. கமல்ஹாசன் நடித்து, கே.விசுவநாதன் இயக்கிய படமே 'சாகர சங்கமம்'. நடனத்தை அடிப்படையாக வைத்து திரைக்கதை எழுதப்பட்ட இந்தப் படம் கமல்ஹாசனின் சினிமா வாழ்க்கையில் மிகவும் முக்கியமான படமாகும். ஓர் உலகத்தர நடன கலைஞனின் தோல்வியும், அவனது தனிப்பட்ட வாழ்க்கையில் அவன் எதிர்கொள்ளும் பிரச்னைகளுமே படம்.

கமல் "பஞ்சபூதங்களும் முகவடிவாக" என்கிற வரிக்கு ஆடும் பல வகை நடனமும், இறுதிக் காட்சியில் கிணற்றுக்கு நடுவே அமைக்கப்பட்ட பலகையில் நின்றவாறு ஆடும் நடனமும் மிகவும் பிரசித்தி பெற்றவை. அதுமட்டுமின்றி மொழி தெரியாத ஒரு பெண்ணிடம் நடனம் மூலமே தனக்கு தேவையானதை விளக்கும் காட்சியும், அவருக்கும் ஜெயப்ரதாவுக்குமான காதல் காட்சிகளும் எப்போது பார்த்தாலும் அலுக்காதவை.

இந்தப் படத்தின் நடனக் காட்சிகளுக்காக கிட்டத்தட்ட ஆறு மாத காலம் பயிற்சி எடுத்துக்கொண்டார் கமல். பின்னணி பாடகியான எஸ்.பி.சைலஜா (எஸ்.பி.பாலசுப்ரமணியம் சகோதரி) ஜெயப்ரதாவின் மகளாக, நாட்டிய மங்கையாக நடித்திருப்பார். அவர் நடித்த ஒரே படம் இதுதான். சரத் பாபுவும் ஒரு முக்கிய வேடத்தில் தோன்றிய இந்தப் படம் இன்றளவும் ஒரு க்ளாஸிக் படமாக தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் விளங்குகிறது.

- பால கணேசன், கட்டுரையாளர், தொடர்புக்கு vinolishan@gmail.com

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.