மகத்தான வெற்றி பெற்ற மோசமான படங்கள் - பகுதி 2

  பால கணேசன்   | Last Modified : 11 Jul, 2018 01:50 pm

இதயக்கனி, நினைத்தாலே இனிக்கும், சகலகலா வல்லவன், சின்னதம்பி, திருடா திருடி, சந்திரமுகி, சுந்தர பாண்டியன் ஆகிய படங்கள் குறித்து 'மகத்தான வெற்றி பெற்ற மோசமான படங்கள் பகுதி 1'-ல் பார்த்தோம். இதோ அந்த வரிசையில் இரண்டாவது பகுதி...

கரகாட்டக்காரன்

சில படங்கள் எதற்காக ஓடுகின்றன என்பதே நமக்குத் தெரியாது. ஆனால் வருட இறுதியில் பார்த்தால் அந்த படம்தான் அந்த வருடம் வெளிவந்த எல்லா படத்தையும் பின்னால் தள்ளிவிட்டு வசூலில் முதன்மையாக நின்றுகொண்டிருக்கும். இன்னும் சொல்லப்போனால் அந்தப் படத்தைப் போன்றே அடுத்து வரிசையாக பல படங்கள் வெளிவர முக்கிய காரணமாகவும் இருக்கும். ஆனால், படத்தின் உள்ளடக்கத்திலும் சரி, மற்ற அம்சங்களிலும் சரி எந்தவித புதுமையோ அல்லது நன்மையோ இருக்காது. அப்படிப்பட்ட தமிழ்ப் படங்களை பற்றிய ஒரு சிறு பார்வை.

சில படங்கள் ஏன் ஓடுகிறது? எதற்காக ஓடுகிறது? என்ன காரணம்? என்று எவ்வளவு யோசித்தாலும் அதற்கான விடையே கிடைக்காது. நன்கு யோசித்தால் ஒரே ஒரு காரணம் பிடிபடும். அது... "படம் நல்ல ஜாலியா... கொஞ்சம் கூட போரடிக்காம போச்சி..." என்பது மட்டுமே காரணமாக தொக்கி நிற்கும். இதற்கு மிகச் சிறந்த உதாரணம் 'கரகாட்டக்காரன்'.

1989-ல் வெளிவந்து ஒரு வருடத்திற்கும் அதிகமாக மதுரை நாட்டியா திரையரங்கில் ஓடிய இந்தப் படம் க்ளாஸிக் படமான 'தில்லானா மோகனாம்பாள்' படத்தின் தழுவல் என்றே சொல்லலாம். 'கரகாட்டக்காரன்' படப்பிடிப்பு எல்லாம் முடிந்து வெளியீட்டுக்காக விநியோகஸ்தர்களுக்கு சிறப்புக் காட்சி போட்டு காண்பிக்கப்பட்டது. யாருக்குமே படம் பிடிக்கவில்லை. யாரும் வாங்கவும் தயாராக இல்லை. அப்படி வாங்கவே ஆளில்லாமல் தவித்த ஒரு படம் அடைந்த இந்த மெகா வெற்றி இன்றளவும் ஓர் அதிசயமே.

இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்தும் தேன்சுவை. ஆனால் படத்திற்கு பாடல் ஒலிப்பதிவு செய்யும் முடிக்கும்வரை இசைஞானி இளையராஜாவிற்கு படத்தின் கதையே தெரியாது. வெறும் சிச்சுவேஷன் மட்டும் சொல்லி பாடல்கள் இசையமைக்கப்பட்டு, எழுதப்பட்டு ஒலிப்பதிவு செய்யப்பட்டன. கவுண்டமணி - செந்தில் இணைந்து நகைச்சுவை செய்த 100-வது படம் என்கிற பெருமையும் இதற்கு உண்டு. படத்தின் எல்லா நகைச்சுவை காட்சிகளும் வீரப்பன் அவர்களால் எழுதப்பட்டது. அதில் வாழைப்பழ நகைச்சுவை பெரும்புகழ் பெற்றது.

இப்படி இந்த படத்திற்கென்று தனிப்பட்ட சிறப்புகள் பலவும் இருந்தாலும் கூட உண்மையில் படத்தின் கதை மிகவும் சாதாரணமானது. திரைக்கதையோ அரதப்பழசு. நாயகன் ராமராஜன், அறிமுக நாயகி கனகா காதல் காட்சிகளில் புதுமையோ சிறப்போ எதுவுமே கிடையாது. இந்தப் படத்தை பார்த்துவிட்டு கரகாட்டக் கலைஞர் சோமசுந்தரம் ஒரு விமர்சனத்தில் "கரகாட்டக் கலைக்கே இழுக்கை சேர்க்கிறது இந்தப் படம்" என்று விமர்சித்திருந்தார். பலராலும் இன்றும் நினைவுகூரப்படும் ஒரு மொக்கை படமாகவே கரகாட்டக்காரனைச் சொல்லலாம்.

ரசிகன்

விஜய்க்கு 'இளைய தளபதி' என்கிற பட்டத்தோடு டைட்டிலில் பெயரை வந்த முதல் படம் 'ரசிகன்'. 'பைரவா' வரை இந்தப் பட்டமே தொடர்ந்தது. ரசிகனில் ஆரம்பித்து 'பைரவா' வரைக்கும் ஏகப்பட்ட மொக்கை படங்களை விஜய் கொடுத்திருந்தாலும் 'ரசிகன்' படத்திற்கென்று சில சிறப்பம்சங்கள் உண்டு. அதனாலேயே அது இந்தப் பட்டியலில் இடம்பெறுகிறது.

பாலியல் உணர்வுகளைத் தூண்டக்கூடிய காட்சிகளை கொண்ட எத்தனையோ படங்கள் தமிழில் வெளிவந்திருக்கின்றன. அதில் வரம்பு மீறும் காட்சிகள் என்று ஒரு பட்டியல் தனியாக தயாரித்தால் அதில் ரசிகனின் வரும் சோப்பு போடும் காட்சி சந்தேகமேயில்லாமல் முதலிடத்தை பெறும். அப்படிப்பட்ட கேவலமான ஆபாசக் காட்சி அது. என்னதான் படத்திற்கு 'ஏ' சான்றிதழ் வழங்கப்பட்டிருந்தாலும் கூட தமிழகத்தில் திரையரங்கில் வெளியாகும் படங்களுக்கு என்ன சான்றிதழ் என்றெல்லாம் பார்த்து மக்கள் செல்வதில்லை.

திரையரங்கில் பெரிய கட்டுப்பாடுகள் எதுவும் இருப்பதில்லை என்பதாலும் இந்த மாதிரியான காமக் கொடூர படங்கள் இலைமறைக்காயாக உணர்வுகளை தூண்டி ஏற்கனவே பாலியல் வறட்சியில் இருக்கும் ஒரு சமூகத்தை இன்னும் படுகுழிக்குள் தள்ளும் வேலையைத்தான் செய்கின்றன.

'ரசிகன்' படத்தின் ஒன்றிரெண்டு கதாபாத்திரங்கள் இப்படி இருந்தால் பரவாயில்லை. எல்லா கதாபாத்திரங்களின் எண்ணங்களும் செக்ஸை நோக்கியே இருந்தால் கேவலம் இல்லையா? அதையும் ஓர் அழகியலோடு சொல்லியிருந்தால் எதற்கு காலங்கடந்த பின்னர் அதை திட்டப்போகிறோம்? ஆங்.. சொல்ல மறந்துவிட்டேனே.. நடிகர் விஜய் தனது சொந்தக் குரலில் பாடிய முதல் பாட்டு இடம்பெற்றதும் இந்தப் படத்தில்தான். ஆகா! என்னவொரு பெருமை!!

நாட்டாமை

1994-ல் வெளிவந்து அதிரிபுதிரியாய் ஓடி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்த அழகு காவியமே 'நாட்டாமை'. கே.எஸ். ரவிக்குமார் என்னும் இயக்குநர் தன் கேரியரின் உச்சத்திற்கு செல்ல வழிவகுத்த படம் இது. சரத்குமாருக்கு பட்டிதொட்டி எல்லாம் ரசிகர் மன்றங்களும், ரசிகர்களும் முளைக்க காரணமான படமும் இதுவே.

இந்தப் படத்தின் மீது ஈர்ப்பு ஏற்பட்டு, குறிப்பாக பிளாஷ்பேக் காட்சிகளின் மீது காதல் வயப்பட்டு ரஜினிகாந்த் தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் தமிழில் விஜயகுமார் நடித்த வேடத்தை செய்தார் என்றால் இந்தப் படம் எந்தவகையான வெற்றியை பெற்றிருக்கும் என்பதை நினைத்துப் பாருங்கள். அந்த வருடத்தின் சிறந்த படத்திற்கான தமிழக அரசின் விருது, ஃபிலிம்பேர் விருது என எல்லாவற்றையும் தட்டிச் சென்ற இந்தப் படம்.

உண்மையில் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் யாருக்கும் தெரியாமல் சாதியை தூக்கிவைத்து கொண்டாடிய படம். குறிப்பாக கவுண்டர் சமூகத்தைத் தூக்கிப் பிடித்த இந்தப் படம் பெண்களையும் இழிவுபடுத்த தவறவில்லை. "ஒரு ஆம்பளை பத்து பொம்பளையோட படுத்தாலும் அவன் ஆம்பளைதான்... இதுவே ஒரு பொம்பளை பத்து ஆம்பளையோட படுத்தா அதுக்கு பேரே வேற.." போன்ற வசனங்களுக்கு எல்லாம் தியேட்டரில் விசில் சத்தம் காதை பிளந்தது. படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு முக்கிய காரணம் வில்லனாக நடித்த பொன்னம்பலத்தின் கதாபாத்திரம்தான். வழக்கமான மசாலா படத்தில் ஒரு சக்திவாய்ந்த வில்லன் அமைந்துவிட்டால் படம் இயல்பாகவே சுவாரஸ்யமானதாக மாறிவிடும். அது இதில் நடந்தது.

அதேபோல் படத்தின் பாடல்கள் ஏ,பி,சி என மூன்று சென்டர்களிலும் பெருத்த வரவேற்பை பெற்றது. படத்தின் வெற்றிக்கு இன்னொரு மிகப்பெரிய காரணம் கவுண்டமணி - செந்தில் நகைச்சுவை காட்சிகள். இன்றளவும் பெரிதாக சமூகவலைத்தளங்களில் நினைவுகூரப்படும் மிக்ஸர் தின்னும் காட்சி உண்மையில் யாரை அசிங்கப்படுத்தியது என்பதே தெரியாமல் ரசித்து சிரித்துக் கொண்டிருக்கிறோம். கிராமத்து பின்னணியில் ஒரு பெரிய மனிதரின் கதை என்னும் போர்வையில் வரிசையாக குறிப்பிட்ட சாதியைத் தூக்கிப்பிடிக்கும் படங்கள் வர ஆதி காரணமே இந்தப்படம்தான் என்று சொன்னால் அது மிகையில்லை.

ஆதவன்

மறுபடியும் ஒரு கே.எஸ்.ரவிக்குமார் படம். ஆனால் இந்த முறை கொஞ்சம் பெரிய அளவில், நல்ல பொருட்ச்செலவில் எடுக்கப்பட்ட ஒரு குப்பை படமே ஆதவன். நடிகர் சூர்யா தொடர்ந்து ஹிட்டுகள் கொடுத்துக்கொண்டிருந்த காலகட்டம். உதயநிதி ஸ்டாலின் தனது ரெட் ஜெயன்ட் நிறுவன சார்பில் எடுத்த படமே ஆதவன். வடிவேலு என்னும் மகா கலைஞன் மட்டும் இல்லாவிட்டால் படம் ஆரம்பித்த பத்தே நிமிடத்தில் தியேட்டரை விட்டு நான் எகிறிக் குதித்து ஓடிவந்திருப்பேன். முழுப் படமும் நான் அமர்ந்து பார்க்க முழுமுதற் காரணம் வடிவேலு மட்டுமே.

ஒரு வாடகை கொலைகாரன் ஒரு பெரிய நீதிபதியை கொல்லப் போகும்போது அது அவன் தந்தை என்று தெரியவருகிறது. பின்னர் தந்தையை காப்பாற்ற அவன் செய்யும் செயல்களே படம். வடிவேலு காமெடியை மட்டும் தவிர்த்துவிட்டு பார்த்தால் படத்தில் எந்தவித சுவாரசியமும், எந்தவித புதுமையும் அறவே கிடையாது.

கதாநாயகனின் அறிமுகக் காட்சி, நாயகியுடனான காதல் காட்சி, தந்தையை கொல்ல அவனே ஒவ்வொருமுறையும் முயற்சி செய்து பின்னர் அதிலிருந்து பின்வாங்க அவன் சொல்லும் காரணம், குறிப்பாக இறுதிக்காட்சியில் நடக்கும் சண்டை என எல்லாமே ஏதோ வேற்று கிரகத்தில் நடப்பது போன்ற ஒரு தோற்றத்தை உண்டாகும் லாஜிக்கே இல்லாத மொக்கையே இந்தப் படம். ஆனால் படம் சூப்பர் ஹிட்.

மசாலா படங்கள் என்பது பொழுதுபோக்கின் ஒரு வடிவம்தான் என்றாலும் இப்படி கதையே இல்லாத, திரைக்கதையில் மயக்குகிறேன் பேர்வழி என்று வெறும் ஊறுகாய் மட்டுமே வாழையிலையில் கொட்டி வைக்கப்பட்ட விருந்தாக மட்டுமே இந்தப் படம் இருந்தது. படத்தின் பாடல்கள் எல்லாம் வெற்றிபெற, பாடல்களுக்காகவும், நகைச்சுவைக்காகவும் மீண்டும் பார்க்க வந்த ரசிகர்களும் அதிகம். ஆயினும் இந்த மாதிரியான படங்களின் வெற்றி ஒரு மோசமான முன்னுதாரணமே அன்றி வேறொன்றும் இல்லை.

ரெமோ

நடிகர் சிவகார்த்திகேயனின் வளர்ச்சி அபாரமானது. தொலைக்காட்சியில் இருந்து திரைக்கு வந்து வெற்றி பெறுதல் அவ்வளவு எளிதல்ல. அதைத் திறம்பட செய்தார் சிவகார்த்திகேயன். அவரின் 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'மான் கராத்தே', 'ரஜினி முருகன்' எல்லாம் நல்ல பொழுதுபோக்குத் திரைப்படங்கள். ஒன்றிரண்டு குறைகள் இருந்தாலும் ஏற்றுக்கொள்ளக் கூடியவை. இந்தப் படங்களின் வெற்றியில் அதீத தன்னம்பிக்கை கொண்டு அவர் நடித்த 'ரெமோ' மிகப் பெரிய வெற்றியை பெற்றது.

ஆனால், முழுக்க முழுக்க மிகத் தவறான ஒரு முன்னுதாரணத்தை இளைஞர்களுக்கு கற்பித்த இந்தப் படம் வெற்றியடைந்தது என்பது மிகவும் வேதனைக்குரிய ஒரு விஷயம். காதல் புனிதமானது என்றும், ஒரு பெண்ணை காதலிக்க, காதலிக்க வைக்க எந்த தகிடுதத்தம் வேண்டுமானாலும் செய்யலாம் என்றும் திரைக்கதை, பாடல்கள், காட்சிகள், வசனங்கள் என எல்லாவற்றிலும் ஒரு சமூக விரோத படத்தை மொத்த குழுவும் வழங்கியிருக்கும்.

குறிப்பாக ஓர் ஆணை காதலிப்பதா வேண்டாமா என்று முடிவு எடுக்கும் உரிமை ஒரு பெண்ணுக்கு இருக்கிறது. இதில் மாற்றுக்கருத்தே இல்லை. ஏற்கெனவே காதலிக்க மறுத்த பெண்ணின் மேல் ஆசிட் ஊற்றுவது, மன உளைச்சல் கொடுப்பது, சிலர் ஒருபடி மேலே போய் கொலையே செய்வது என இளைஞர்கள் ஒரு மோசமான பாதையை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கையில், ஒரு பிரபலமான நடிகர் படம் முழுக்க அதையே செய்வது மட்டுமில்லாமல் அதை நியாயப்படுத்தவும் செய்வது கண்டிப்பாக கண்டிக்கப்பட வேண்டியது.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக இந்தப் படங்களை மக்கள் வெற்றிபெற வைத்து விடுகிறார்கள். இது பெண்கள் மீதான அடக்குமுறையை இன்னும் அதிகரிக்க செய்யுமே அன்றி வேறொன்றும் செய்யாது. அதேபோல் காதல் என்கிற போர்வையில் பெண்களை பின்தொடர்தல், அவர்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்கும் வகையில் செயல்படுதல், அந்தப் பெண்ணுக்கு பிடித்தவனை அசிங்கப்படுத்தி அதில் சுகம் காணுதல் போன்ற இழிவான செயல்களும் இந்த மாதிரியான படங்களில் தொடர்ந்து ஊக்குவிக்கப்படுகின்றன. இவை யாவும் வெளியிலிருந்து பார்த்தால் மட்டுமே வேடிக்கை. அனுபவித்து பார்க்கும் மனிதர்களுக்கே தெரியும் அதன் வேதனை.

காஞ்சனா 1&2

தமிழ் சினிமாவில் திடீரென பலருக்கும் பேய் பிடிக்க ஆரம்பித்தது. இதில் நடன இயக்குநர் ராகவா லாரன்ஸுக்கு பேயோடு சேர்ந்து கொஞ்சம் அதிர்ஷ்டமும் பிடித்துக்கொண்டது. 2007-ல் அவர் இயக்கி நடித்து வெளிவந்த 'முனி' மிகப்பெரிய வெற்றியை அடைந்தது. இந்த வெற்றியில் ருசி கண்ட அவர் 'முனி'யின் இரண்டாம் பாகம் என்கிற பெயரில் 2011-ல் 'காஞ்சனா' என்றொரு படமெடுத்து வெளியிட அதுவும் மெகா ஹிட் ஆனது.

முனிக்கும் காஞ்சனாவுக்கும் ஆறு வித்தியாசங்களை கண்டுபிடி என யாராவது போட்டி வைத்தால் கண்டிப்பாக அனைவரும் தோற்று ஓடுவது நிச்சயம். அந்தளவிற்கு அ முதல் ஃ வரை எல்லாமே முனியின் அட்டகாப்பிதான். படத்தின் ஒரே ஆறுதல் மூன்றாம் பாலின மனிதர்களின் முன்னேற்றம் பற்றி பேசியதுதான். ஆனால் இதே காஞ்சனாவின் இரண்டாம் பாகத்தில் ஊனமுற்றவர்கள் மேல் பரிதாபம் வரவைப்பதற்க்காக அவர் வைத்த காட்சிகள் மொக்கையாகி போனது. ஆனால் இந்தப் படமும் மிகப் பெரிய வெற்றி பெற்றது. இந்தப் படத்தின் கதையும் முதல் இரண்டு பாகங்களின் நகலே!

ஓர் அப்பாவி, எல்லாவற்றிற்கும் பயம் கொள்ளும் இளைஞன் மேல் சதிகாரர்களால் அநியாயமாக கொல்லப்பட்ட ஓர் ஆவி வந்து இறங்குவதும், எதிரியை பழிவாங்குவதுமே மூன்று படங்களின் கதையும். எந்தப் புதுமையும் இல்லாத இந்த பேய் படத்தை பார்த்து பயந்தவர்களை விட சிரித்தவர்களே அதிகம். காமெடி காட்சிகள் கைகொடுக்க படமும் ஹிட்டானது.

அரண்மனை 1&2

'மகத்தான வெற்றி பெற்ற மோசமான படங்கள் - பகுதி 1'-ல் நாம் பார்த்த 'சந்திரமுகி' படத்தின் காப்பியான 'அரண்மனை'யும் 'காஞ்சனா' வகையறாதான். ஒரு பெரிய அரண்மனை வீடு. ஒரு கிராமம். அதில் கயவர்களால் அநியாயமாக கொல்லப்பட்ட ஒரு பெண். அந்தப் பெண் பேயாக வந்து பழிவாங்குவது. அப்படி பழி வாங்குகையில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் நல்லவனை காப்பாற்ற வரும் நண்பன். ஸ்ஸ்ஸ்ஸ்.... அப்பப்பா...!! இந்த கதைக்குள் சில மொக்கை காமெடிகள், க்ளாமர் காட்டும் பெண் கதாபாத்திரங்கள், சில பல சண்டை காட்சிகள், முடிவில் சுபம். போங்கடா டேய்!!

இந்த இரண்டு பட சீரியஸ்கள் செய்த பெரும் உதவிகளில் ஒன்று பேயின் மீதிருந்த மரியாதையையே கெடுத்தது. அடுத்து பேய் படங்கள் என்றாலே பயந்த பலரையும் திரையரங்குக்குள் வெற்றிகரமாக வரவழைத்து அவர்களை சிரிக்க வைத்து அனுப்பியது. ஆனால் உண்மையில் பிரச்சினை என்னவென்றால் பேய் படங்கள் என்பது ஓர் அற்புதமான ஜானர். திரையரங்கிற்கு வந்து பயந்து போய் வீட்டிற்கு செல்ல ஒருவன் காசு கொடுக்கிறான் என்பது சினிமா என்கிற விஷயத்திற்கான மரியாதை. ஏனெனில் பேய் என்பது நிரூபிக்கப்படாத ஒன்று. உண்மையில் இல்லாத ஒன்றை காண்பித்து அதற்கு பயப்பட வைத்து ஜெயிப்பது என்பது மிகப்பெரிய திறமை. ஆனால் அதில் காமெடி நுழைத்து, எதற்காக இது உருவாக்கப்பட்டதோ அதற்கான நியாயமே செய்யப்படவில்லை என்றால்... சுத்தம்!

- பாலகணேசன், கட்டுரையாளர், தொடர்புக்கு vinolishan@gmail.com

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.