ஆலயம் தொழுவோம்! குலம் காக்கும் சிறுவாச்சூர் அன்னை மதுரகாளியம்மன்

  பா.பிரவீன் குமார்   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
எத்தனையோ அடியவர்களின் குலம் விளங்க, அவர்களின் குலதெய்வமாக அருள் பாலித்துக் கொண்டிருப்பவள் அன்னை மதுரகாளியம்மன். காளியா..? விழி கோவைப்பழமாக சிவந்திருக்க, நாக்கை தொங்கவிட்டபடி ஆக்ரோஷமாக இருப்பாளோ என்று எண்ணினால்.., நம் எண்ணத்தை தவிடு பொடியாக்குகிறது அன்னையின் சாந்தமே வடிவான அழகு திருமுகம். பெயருக்கு ஏற்றாற்போல் தேனினும் இனிமையான வடிவுடையாள் அன்னை மதுரகாளி. கேட்டவர்களுக்கு கேட்ட வரம் அளிக்கும் வரப் பிரசாதியாய் சிறுவாச்சூரில் அருள் பாலித்துக் கொண்டிருக்கிறாள் அன்னை மதுரகாளி. சிலப்பதிகார நாயகி கண்ணகி தான் இங்கு மதுர காளியம்மனாக வீற்றிருக்கிறாள் என்பது செவி வழி செய்தி. பிரம்மேந்திராள் ஸ்ரீ சக்கரத்தை இத்திருக்கோயிலில் பிரதிஷ்டை செய்துள்ளதால் அன்னையின் சக்தி அளப்பரியதாக உள்ளது. தேனை தேடி பறந்து வரும் தேனீக்களாக மதுர காளியம்மனை ஒரு முறை தரிசித்து வந்தால் மீண்டும் மீண்டும் அத்தலம் செல்லும் ஆவலை ஏற்படுத்துகிறாள் அன்னை. ஐந்து நிலை ராஜ கோபுரத்துடன் வடக்கு நோக்கிய மதுர காளியம்மன் திருக்கோயிலில் காலை 11 மணிக்கு தொடங்கும் அபிஷேகம் பகல் 1.30 மணியளவில் தங்கக் கவச அலங்காரத்துடன் மஹா தீபாரதனை செய்யப்பட்டு நிறைவடைகிறது. மற்ற சக்தி கோவில்களில் இல்லாத ஒரு வழக்கம் இந்த கோவிலில் உள்ளது. மஹா தீபாரதனைக்கு முன் உடுக்கை அடிப்போர் இருவர், உடுக்கை ஒலிக்க அன்னையை உரத்த குரலிட்டு அழைக்கின்றனர். அதை நேரில் கேட்கும் போது நம்மையறியாமல் உடலும் உள்ளமும் சிலிர்ப்பதை உணர முடியும். அப்படி அழைக்கும்போது அருகாமையில் உள்ள பெரியசாமி மலையை விட்டு அன்னை ஆலயத்தில் பிரவேசிப்பதாக ஐதீகம். ஸ்தல வரலாறு ஆதியிலே சிறுவாச்சூரில் செல்லியம்மனே வழிபடும் தெய்வமாக விளங்கினாள். அனைவருக்கும் தாயான அவளிடம் ஒரு மந்திரவாதி தவம் செய்து பல அரிய சக்திகளைப் பெற்றான். ஆனால் தீட்டிய மரத்திலேயே கூர் பார்ப்பது போல அந்த அன்னை அளித்த மந்திர சக்தியால் அன்னையையே கட்டுப்படுத்தி தீய செயல்களுக்கு உட்படுத்தினான் அவன். ஒரு வெள்ளிக்கிழமை இரவு மதுர காளியம்மன் இத்தலம் வந்து இரவு தங்க செல்லியம்மனிடம் அனுமதி கேட்கின்றாள். செல்லியம்மனும் மந்திரவாதிக்கு பயந்து இடம் கொடுக்க மறுக்க அனைத்தும் உணர்ந்த அன்னை சிரித்து நான் எல்லாவற்றையும் கவனித்துக் கொள்கிறேன் என்று அன்றிரவு அங்கேயே தங்கினாள். அடுத்த நாள் மந்திரவாதி தனது மந்திர வேலைகளை அன்னையிடம் காட்டினான். தேவர்கள் மனிதர்கள் மற்றும் சகல ஜீவவராசிகளையும் காக்க சண்டன், முண்டன், ரக்த பீஜன், மகிஷன் போன்ற வல் அசுரர்களையே வதம் செய்த அகிலாண்ட நாயகியை அற்ப மந்திரவாதியால் என்ன செய்து விட முடியும். அவனது செருக்கையழித்து வதம் செய்து பக்தர்களைக் காப்பதோடு துஷ்டர்களையும் தான் அழிப்பவள் என்று காட்டினாள் அன்னை மதுர காளியம்மன். தன் மக்களின் துயர் துடைத்த மதுரகாளியம்மனையே அக்கோவிலில் தங்கும்படி செல்லியம்மன் வேண்ட, அவளின் வேண்டுகோளுக்கிணங்கி இத்தலத்திலேயே கோவில் கொள்கிறாள் அன்னை மதுரகாளி. செல்லியம்மன் அருகிலுள்ள பெரியசாமி மலை சென்று கோவில் கொள்கிறாள். ஆதியிலே இங்கே அமர்ந்தவள் என்பதால் செல்லியம்மனுக்கே இப்போதும் முதல் மரியாதை செய்யப்படுகின்றது. பூசையின் போது தீபாரதனை முதலில் மலை நோக்கி காட்டப்பட்டு ,பின்னரே மதுர காளியம்மனுக்குத் தீபாராதனை காட்டப்படுகின்றது. மதுரை காளியம்மன் என்ற திருநாமமே மருவி மதுரகாளியம்மனாக மாறியது என்றும் சினங்கொண்டு வந்த மதுரை காளியம்மன் இங்கு வந்து சாந்தமடைந்து பக்தர்களுக்கு அருளுவதால் மதுர காளியம்மன் (மதுரம் - இனிமை) என்ற திருநாமம் கொண்டாள் என்பதும் வழக்கு. கோவில் திறக்கும் நேரம் சிறுவாச்சூருக்கு வெள்ளியன்று வந்த அம்மன் திங்களன்று பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தாள் என்பதனால் வெள்ளி மற்றும் திங்கள் மட்டுமே அன்னையின் சன்னதி திறக்கப்பட்டு பூசை செய்யப்படுகின்றது. மற்ற நாட்களில் செல்லியம்மனுடன், மதுர காளியம்மனும் பெரிய சாமி மலையிலே தங்குவதாக ஐதீகம். காலை 6 மணிக்கு சன்னதி திறக்கப்படுகிறது . இரவு 8 மணி வரை அன்னையை தரிசிக்கலாம். மாலையில் சில நாட்களில் சந்தனக் காப்பு அலங்காரமும் அன்னைக்கு செய்யப்படுகின்றது. திங்கள், வெள்ளிக் கிழமைகள் தவிர பவுர்ணமி மற்றும் அமாவாசை தினங்களிலும்,நவராத்திரி நாட்களிலும் மதுரகாளியம்மனை தரிசிக்கலாம். பலனளிக்கும் பிராத்தனைகள் குழந்தைப் பேறு இல்லாதவர்கள் செல்லியம்மனிடம் வேண்டிக்கொண்டு அக்குறை தீர்ந்து குழந்தைக்கு முடி காணிக்கை செலுத்துவதை இத்தலத்தில் பார்க்க முடிகிறது. அங்க பிரதக்ஷணம் செய்தும், அம்மனுக்கு வெளியில் எங்கும் மாவு தயாரிக்காமல் ஆலய வளாகத்திற்குள்ளாவே அரிசி கொணர்ந்து ஊற வைத்து மாவு தயாரித்து நெய் விளக்கிடுகின்றனர் பக்தர்கள். பில்லி,சூனியம் போன்றவைகளால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தலம் வந்து அன்னையை வழிபட, அவை விலகி ஓடுகின்றன . ஊமை, செவிடு போன்ற குறைகளுக்காக தன்னை நாடி வரும் அடியாருக்கு தன் கருணை கண் திறந்து தீர்வு சொல்கிறாள் காளியம்மன் . அன்னையை தரிசிக்க எப்படி செல்வது? சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூருக்கு அடுத்து சுமார் 6 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது சிறுவாச்சூர். தன் குழந்தைகளின் தேவைகளை உணர்ந்து, அவர்கள் கேட்ட வரத்தை கேட்டபடி கொடுத்து அருளும் அன்னை மதுரகாளியம்மனை நாமும் தரிசித்து இன்புறுவோம்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close