திருவாதிரை நட்சத்திரத்திற்கும் களிக்கும் என்ன சம்பந்தம்?

  பா.பிரவீன் குமார்   | Last Modified : 11 Aug, 2017 07:12 pm

ஒவ்வொரு கோவிலுக்கும் ஒரு விசேஷம் உண்டு. கோவில் கர்ப்பகிரகத்தில் இருந்த தல விருட்சம் முதல் அங்கு படைக்கப்படும் நைவேத்யம் மற்றும் கொடுக்கப்படும் பிரசாதங்களில் இருந்து கோவிலுக்கு கோவில் மாறுபடும். சேந்தனார் என்ற சிவபக்தர், சிதம்பரத்தில் தன் மனைவியுடன் வசித்து வந்த காலத்தில் இருந்து, சிவனடியார்களை மனம் கோணாமல் தன் வீட்டிற்கு அழைத்து வந்து உணவளிப்பார். இது அவருடைய அன்றாட பணிகளில் ஒன்றாகிப் போனது. சேந்தனாரின் மனைவியும் கணவரின் மனம் கோணாமல் அவர் எண்ணத்திற்கு தக்க சேவை செய்து வந்தார். இவர்களின் சிவத்தொண்டை உலகிற்கு உணர்த்த விரும்பினார் தில்லை ஆடலரசர். ஒருமுறை, பலத்த மழை பெய்து விறகு எல்லாம் நனைந்து விட்டது. இந்த நேரத்தில், யாராவது அடியவர்கள் வந்து விட்டால் அவர்களுக்கு உணவளிப்பது எப்படி என்ற கவலையில் தம்பதியர் இருந்த போது, அவர் எதிர்பார்த்தபடியே ஒரு சிவனடியார் வந்து சேர்ந்தார். தேஜசாக, ஜடாமுடி தரித்து காணப்பட்ட அவரைப் பார்த்ததும் தம்பதிகளுக்கு கை, கால் உதறியது. அரிசி சாதம் செய்வது இந்த ஈர விறகால் ஆகாது எனக்கருதிய சேந்தனாரின் மனைவி, சமயோசிதமாக தன்னிடம் இருந்த அரிசி, உளுந்து மாவுடன், வெல்லமும், நெய்யும் கலந்து ஈர விறகை ஒருவாறாக பற்றவைத்து ஊதி, குறைந்த அளவு தீயிலேயே களி தயாரித்து விட்டார். அதை சிவனடியாருக்கு படைத்தார். அன்றைய தினம் மார்கழி பவுர்ணமி, திருவாதிரை நட்சத்திர நேரம். வந்தவர் அதைச் சாப்பிட்டு விட்டு, தினமும் தயிர்ச்சாதமும், புளியோதரையும், சர்க்கரை பொங்கலும் சாப்பிட்டு பழகிப் போன எனக்கு, தாங்கள் அளித்த இந்த இனிய களி பிரமாதமாக இருந்தது, என மனதாரப் பாராட்டினார். ஒரு எளிய உணவை தேனினும் இனிமையானது என பாராட்டியதால், மனம் மகிழ்ந்தனர் தம்பதியர். மறுநாள் காலையில் அவர்கள் வழக்கம் போல் தில்லையம்பலம் நடராஜரை தரிசிக்க சென்றனர். நடையெல்லாம் தாங்கள் தயாரித்த களி கொட்டிக் கிடந்தது. நடராஜப் பெருமானின் வாயில் களி சிறிதளவு ஒட்டியிருந்தது. தங்கள் வீட்டிற்கு எழுந்தருளியது நடராஜப் பெருமான் என்பதை உணர்ந்த தம்பதியர் உடல் புல்லரிக்க, அவரது பாதத்தில் வீழ்ந்தனர். இதனால் தான் இன்றும் திருவாதிரைக்கு ஒருவாய் களி என்ற சொல் வழக்கு ஏற்பட்டது. இன்றும் மார்கழி பவுர்ணமி, திருவாதிரை நட்சத்திரத்தன்று நடராஜருக்கு களி நிவேதனம் செய்யப்படுகிறது. தன் பிள்ளைகளை தானே சோதித்து அவர்களின் பெருமையை உலகறிய செய்வதில் ஈசனுக்கு நிகர் யாரேனும் உண்டோ... ஓம் நமச்சிவாய...

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.