திருமணங்களில் அருந்ததி பார்ப்பது ஏன்?

  பா.பிரவீன் குமார்   | Last Modified : 11 Aug, 2017 05:10 pm

இந்துமத தர்மத்தில் திருமணங்கள் எவ்வளவு ஆடம்பரமாக நடத்தப்பட்டாலும், திருமணங்களில் முக்கிய சடங்காக அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பது முக்கியம்.ஆனால் திருமணம் முடிந்து பல வருட இல்லற வழக்கை நடத்தி தனது பிள்ளைகளுக்கு திருமணம் முடித்து பேரன் பேத்தி எடுத்தவர்கள் கூட, அந்த சடங்கு ஏன் நடத்தப் படுகிறது,அதன் பொருள் என்ன என்று தெரியாது? அருந்ததி யார்? நாம் ஏன் அருந்ததியை பார்க்க வேண்டும்? ஒரு காலத்தில் பூமியில் வாழ்ந்த மிகச் சிறந்த பிரம்மரிஷிகள் ஏழு பேரும் சப்த (ஏழு) நட்சத்திரங்களாக வானில் ஒளி வீசுகிறார்கள். ஏழு நட்சத்திரங்களில் ஆறாவதாக இருக்கும் நட்சத்திரம் தான் வசிஷ்டர். இவரின் மனைவிதான் அருந்ததி. மற்ற ரிஷிகளைப் போல இல்லாமல், வசிஷ்டர் அருந்ததிக்குமான தனிச்சிறப்பு ஒன்று உண்டு. மற்ற ரிஷிகள் சபலத்தால் ரம்பா, மேனகை, ஊர்வசி போன்ற இந்திரலோகத்து தேவதைகளிடம் நிலை தடுமாறியவர்கள். இவர்களின் மனைவிமார்களும் தேவேந்திரனைப் பார்த்து தன்னிலை மறந்தவர்கள். இதில் வசிஷ்டரும், அருந்ததியும் மற்றவர்களிடம் இருந்து விதிவிலக்கானவர்கள். எனவே அவர்கள் இணைந்தே இருக்கிறார்கள். அவர்களைப் பார்த்து வாழ்க்கையில் இணைபிரியாது வாழவேண்டும் என்பது ஒரு புராணக் கதை. அறிவியல் ரீதியாக பார்த்தால், இரவு நேரத்தில் வடக்கு வானில் மிக எளிதாக அடையாளம் காணக்கூடிய நட்சத்திரக் கூட்டங்களில் ஒன்று சப்தரிசி மண்டலம். இந்தநட்சத்திரத் கூட்டத்திற்கு ஒவ்வொரு நாட்டிலும் வேறு வேறு பெயர்கள் உண்டு. இந்த ஏழு நட்சத்திரங்களில் ஆறாவதாக உள்ள வசிஷ்ட நட்சத்திரத்தின் அருகில் சற்று கூர்ந்து கவனித்தால் மங்கலான வெளிச்சத்தில் தெரிவதுதான் அருந்ததி நட்சத்திரம். இவை இரண்டுக்குமான விஞ்ஞானப் பெயரும் உண்டு. வசிஷ்ட நட்சத்திரம் மிஸார் எனவும், அருந்ததி அல்கோர் எனவும் அழைக்கப்படுகிறது. வசிஷ்டரும்,அருந்ததியும் இரட்டை நட்சத்திரங்கள் இல்லை என்ற போதிலும் ஒவ்வொன்றும் தனித்தனியே இரட்டை நட்சத்திரங்கள். அதிலும் மிஸார் என அழைக்கப்படும் வசிஷ்ட நட்சத்திரம் தான் வானியல் வரலாற்றில் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட இரட்டை நட்சத்திரம். 35,000 மில்லியன் மைல்கள் இடைவெளியில் மிஸார் ஏ, மிஸார் பி என்ற இரு நட்சத்திரங்களும் ஒன்றை ஒன்று சுற்றிக் கொள்கின்றன. புதுமணத் தம்பதியருக்கு சப்த ரிஷி மண்டலத்தை அடையாளம் காட்டிப், பின் அருந்ததியை காட்டுவது வழக்கம். அவர்களைப் போல தம்பதியர்களும் எந்த காலத்திலும் பிரியாமல் உருவம் இரண்டானாலும் உள்ளம் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதே இதன் பொருள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close