கோவிலில் மறைந்திருக்கும் தத்துவங்கள்!

  பா.பிரவீன் குமார்   | Last Modified : 11 Aug, 2017 06:06 pm

கோவிலுக்குள் நுழையும் போது நம்மில் பலரும் வாயில்படியை தொட்டு கும்பிடுவதை வழக்கமாக வைத்துள்ளோம். ஆன்மீக விஷயங்கள் அனைத்திலும் அறிவியல் பூர்வமான ஒரு செயலை நம் முன்னோர்கள் வைத்து இருக்கிறார்கள். கோவில் வாசல்படியை குனிந்து தொட முயலும் போது நமக்கு பணிவை ஏற்படுத்துகிறது. அடுத்து அது நம் உடம்பில் உள்ள சூரிய நாடியை இயங்குகிறது. படிக்கட்டை தொட்ட பிறகு வலது கை விரல்களை நம் நெற்றியில் புருவ மத்தியில் உள்ள ஆக்ஞா சக்கரம் மீது வைத்து அழுத்துவதால், நம்மிடம் உள்ள தீய சக்திகளை அது விரட்டுவதோடு ,தெய்வ சன்னதிகளில் இருந்து வரும் அருள் அதிர்வலைகளை மிக எளிதாக நமக்குள் கிரஹிக்கவும் செய்விக்கிறது. கோவிலுக்குள் அடுத்ததாக நம் கண்களுக்கு கொடி மரம் தென்படும். துவஜஸ்தம்பம் என்று அழைக்கப்படும் ஆலய கொடி மரமும் மிகப்பெரிய தத்துவங்களை தன்னுள் கொண்டுள்ளது. நம் உடம்பில் உள்ள முதுகெலும்பு போன்றது கோவிலுக்கு கொடி மரம் என்று நம் ஆகமங்கள் சொல்கின்றன. நம் முதுகுத் தண்டுவடத்தில் 32 எலும்பு வளையங்கள் உள்ளன. அது போலவே 32 வளையங்களுடன் கோவில் கொடி மரம் அமைக்கப்படுகிறது. நம் முதுகுத் தண்டில் மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணி பூரகம், அனாகதம், விசுக்தி, ஆக்ஞை எனப்படும் ஆறு ஆதாரங்களும், இடை, பிங்கலை, சுழிமுனை என்ற மூன்று நாடிகளும் அமைந்துள்ளன. பொதுவாக இடை,பிங்கலை வழியாக செல்லும் பிராண வாயுவை, சுழிமுனை எனும் நடு நாடியில் நிறுத்தி இறைவனை தியானிக்க ,மனம் ஒரு நிலைப்படும். இந்த அடிப்படையில் தான் கொடி மரம் அமைக்கப்படுகிறது. கொடி மரம் ராஜகோபுரத்தை விட அதிக உயரமாக இருக்காது. அதே சமயத்தில் கருவறை விமானத்துக்கு நிகரான உயரத்துடன் இருக்கும். அது போல கருவறையில் இருந்தும், ராஜகோபுரத்தில் இருந்தும் எவ்வளவு தூரத்தில்,எவ்வளவு உயரத்தில் கொடி மரம் அமைக்க வேண்டும் என்பதற்கு விதிகள் உள்ளன. இது கோவிலுக்கு கோவில் மாறுபட்டாலும், கொடி மரத்தில் ஐந்தில் ஒரு பாகம் பூமிக்குள் இருக்கும்படி அமைப்பார்கள். அடிப்பகுதி அகலமாகவும், சதுரமாகவும் இருக்கும் இதற்கு சமபீடத்தில், சதுர பாகம், படைப்பு தொழிலுக்கு உரியவரான பிரம்மாவையும், அதற்கு மேல் உள்ள எண்கோணப்பகுதியான விஷ்ணு பாகம் காத்தல் தொழிலுக்கு உரியவரான விஷ்ணுவையும், அதற்கு மேல் உள்ள நீண்ட ருத்ர பாகம், சம்ஹாரத் தொழிலை செய்யும் சிவபெருமானையும் குறிக்கும். இதன்மூலம் கொடி மரம், மும்மூர்த்திகளையும், அவர்கள் மேற்கொள்ளும் மூன்று தொழில்களையும் உணர்த்துகின்ற ஒரு அடையாளமாக திகழ்கிறது. கொடி மர உச்சியில் மூன்று பட்டைகள் போன்ற ஏர் பலகை இருக்கும். இதனை திருஷ்டிப் பலகை என்றும் சொல்வார்கள். இதில் சிறு, சிறு மணிகட்டி தொங்க விட்டிருப்பார்கள். அந்த கொடி கோவில் உள்நோக்கியபடி இருக்கும். சிலகோவில்களில் மூன்று பட்டைக்கு பதில் ஒரே ஒரு பட்டையே இடம் பெற்றிருக்கும். மணி தொங்க விட்டிருக்க மாட்டார்கள்.அவ்வாறு ஒரே பட்டையுடன் இருக்கும் கொடி மர அமைப்பை கருடஸ்தம்பம் என்று சொல்வார்கள். திருவிழா நடக்கும் நாட்களில் அந்த ஊர் முழுவதையும் ஆண்டவன் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதை உணர்த்த கோவில்களில் கொடி ஏற்றம் நடத்தப்படுகிறது. இதில் விஞ்ஞான பூர்வமான கருத்தும் உள்ளது. கொடியேற்றத்தால், மக்கள் மன நிலையில் மாற்றம் ஏற்படுத்துவதோடு, விழா சமயத்தில் வெளியாட்களால் நோய் பரவாமல் தடுக்கிறது. இதை கருத்தில் கொண்டே கொடி ஏற்றுவதற்கு முன்பு இருவகை சடங்குகளை செய்யப்படுகிறது. கொடி ஏற்றுவதற்கு முன்பு தேவதைகளை ஆவாகனம் செய்வது கல்பம் எனப்படும். கொடி ஏற்றிய பிறகு தேவதைகளை ஆவாகனம் செய்வது அனுகல்பம் எனப்படும். இந்த சடங்குகள் மூலம் கோவில் கொடி மரங்கள் சக்தி மிக்கவைகளாக மாறுகின்றன. கொடிஎற்றப்படுவதின் தத்துவம் கொடி மரம் என்பது இறைவன், கொடிக் கயிறு -சக்தி, கொடித் துணி -ஆத்மா, கொடி ஏற்ற பயன்படுத்தும் தர்ப்பைக் கயிறு -பாசம் ஆகியவற்றை குறிக்கும். இது உயிர்களையும், அறத்தையும் உயர்ந்த நிலைக்கு உயர்த்துவதை உணர்த்துகிறது. தர்ப்பைக் கயிறு எனும் பாசத்தால், கொடி துணி எனும் உயிர் கட்டப்பட்டுள்ளது. அந்த உயிர் இறைவன் திருவடியை அடைதல் என்ற தத்தவத்தை கொடி ஏற்றம் நமக்கு சுட்டிக் காட்டுகிறது. இதை உணர்த்த கொடி மரம் நேராக நிமிர்ந்து நிற்பதாக சொல்கிறார்கள். இன்னொரு வகையில் சொல்வதென்றால் அசுர சக்திகளை அகற்ற, சிவகணங்களை கோவிலுக்குள் அழைக்க, ஆலயத்தையும் பக்தர்களையும் பாதுகாக்கவே கொடி ஏற்றம் நடத்தப்படுகிறது. கொடி மர உச்சியில், அந்தந்த ஆலய இறைவனின் வாகனம் ஒரு அடையாள சின்னமாக அமைக்கப்படுவது வழக்கம். கொடி மரம் அருகில் நின்று நாம் செய்யும் எல்லா பிரார்த்தனைகளும் மூலவரிடம் எதிரொலிக்கும் என்பது நம்பிக்கை. கொடி மரத்தை தொட்டு வணங்குவதிலும் ஒரு விதிமுறை உள்ளது. ஆண்கள் எப்போதும் 2 கால்கள், 2 கைகள், 2 காதுகள், நெற்றி, மார்பு ஆகிய 8 உறுப்புகளும் தரையில் படும் வகையில் அஷ்டாங்க நமஸ்காரம் செய்தல் வேண்டும். பெண்கள் தலை, 2 முழங்கால், 2 உள்ளங்கைகள் ஆகிய 5உறுப்புகள் தரையில் பட பஞ்சாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.