ஷீரடி அற்புதங்கள் - "இன்னும் நீ என்னை நம்ப மறுக்கிறாயா?"

  கோமதி   | Last Modified : 12 Jul, 2018 08:34 pm

shirdi-miracles-are-you-still-denying-me

 

பகவான் ஸ்ரீ ஷீரடி சாயி இருந்த இடத்தில் இருந்தே தனது அடியவர்களை தன் பக்கம் ஈர்த்துக் கொள்கிறார். அவர் மீது நம்பிக்கை இருந்தால் மட்டும் போதும். மற்றதை அவர் பார்த்துக் கொள்வார். தனது அடியவர்கள் தன்னை தேடி வருவதற்கு சந்தர்ப்பத்தை அவர்கள் வாழ்வில் அவரே ஏற்படுத்திக் கொடுப்பார். அதற்கு சாட்சியான நிகழ்வு .
மாலேகாவனில் (நாசிக் ஜில்லா) ஒரு டாக்டர் இருந்தார்.  (படித்துப் பட்டம் பெற்றவர்)  அவரின் சகோதரியின் மகன் குணமாக்க இயலாத எலும்புருக்கி நோய்க்கட்டியால் (Tubercular bone abcess) துன்பப்பட்டான்.  டாக்டர் தாமும், அவரின் சகோதரர்களும் மற்றும் மருத்துவ நிபுணர்களும் எல்லாவிதமான சிகிச்சைகளையும், அறுவை சிகிச்சையும் கூட முயன்று பார்த்தனர்.  குணம் என்பதே இல்லை.  அச்சிறுவனின் துன்பத்துக்கும் ஒரு முடிவில்லை.  நண்பர்களும், உறவினர்களும் அந்த சிறுவனின் பெற்றோர்களிடம் தெய்வீக உதவியைக் கோரும்படியும், குணமாக்க இயலாத வியாதிகளையெல்லாம் தமது வெறும் கடைக்கண் பார்வையினால் மட்டுமே குணமாக்கிவிடும் சாயிபாவிடம் முயற்சிக்கும்படியும் அறிவுறுத்தினர்.  எனவே பெற்றோர்கள் ஷீர்டிக்கு வந்தனர்.

பாபாவின் முன்னர் வைத்துப் பணிவுடனும், மரியாதையுடனும் வேண்டினர்.  தங்கள் பையனைக் காக்கும்படி மன்றாடிப் பிரார்த்தித்தனர்.  கருணையுள்ள பாபா அவர்களுக்கு ஆறுதலளித்து, "இம்மசூதியை அடைக்கலம் புகுவோர் இந்தப் பிறப்பிலும், காலத்தின் முடிவு வரையிலும் எதைக் குறித்தும் கஷ்டமே படமாட்டார்கள்.  இப்போது கவலையற்றிருங்கள்.  உதியை நோய் கட்டியின்மீது தடவுங்கள்.  ஒரு வாரத்திற்குள் அவன் குணமடைவான்.  கடவுளை நம்பு.  இது மசூதியல்ல.  த்வாரமாகாயி, இவ்விடத்தில் காலடி வைப்பவன் துரிதமாக உடல் நலத்தையும், மகிழ்ச்சியையும் பெறுவான்.  அவனுடைய தொல்லைகள் எல்லாம் ஒரு முடிவுக்கு வந்துவிடும்" என்றார்.  பையன் பாபாவின் முன்னர் உட்காரவைக்கப்பட்டான்.  நலிவுற்ற பகுதியின் மீது பாபா தமது கையை வைத்துத் தடவி அவன் மீது தமது அன்புப் பார்வையைச் செலுத்தினார்.  பையன் மகிழ்ச்சியடைந்தான்.  உதியைத் தடவிய பின்னர் அவன் குணமடையத் தொடங்கினான்.  சில நாட்களுக்குப் பின்னர் பூரண ஆரோக்கியமானான்.  பின்னர் பாபா உதியினாலும், அருட்பார்வையினாலும் குணப்படுத்தியதற்கு பாபாவுக்கு நன்றி சொல்லிவிட்டுப் பெற்றோர் ஷீர்டியை விட்டுப் புறப்பட்டனர்.

இதையறிந்த அப்பையனின் மாமாவாகிய டாக்டர் ஆச்சரியமடைந்தார்.  தாம் ஏதோ விஷயமாக பம்பாய்க்குப் போகும் வழியில் ஷீர்டிக்குப் போக விரும்பினார்.  ஆனால் மாலேகாவனிலும், மன்மாடிலும் அவரிடம் சிலர் பாபாவுக்கு எதிராகப் பேசி அவரது செவிகளில் விஷத்தைப் பாய்ச்சினர்.  எனவே ஷீர்டிக்குத் தாம் விஜயம் செய்ய இருந்த எண்ணத்தை விட்டுவிட்டு பம்பாய்க்கு நேரடியாகச் சென்றுவிட்டார்.  தமது விடுமுறையின் மீதமுள்ள நாட்களை அவர் அலிபாகில் கழிக்க விரும்பினார்.  ஆனால் பம்பாயில் இருந்தபோது மூன்று தொடர்ந்த இரவுகளிலும் "இன்னும் நீ என்னை நம்ப மறுக்கிறாயா?" என்ற ஒரு குரல் எழுந்தது.

பின்னர் டாக்டர் தமது மனதை மாற்றிக்கொண்டு ஷீர்டிக்குச் செல்லத் தீர்மானித்தார்.  பம்பாயில் ஒட்டு ஜூரம் வந்த ஒரு நோயாளியை அவர் கவனிக்க வேண்டியிருந்தது.  அது விரைவில் குணமடையும் அறிகுறி எதையும் காணோம்.  எனவே தமது ஷீர்டி விஜயம் ஒத்தி வைக்கப்பட்டுவிட்டது என்று அவர் நினைத்தார்.  எனினும் தமது மனதில் ஒரு சிறிய பரீட்சை வைத்துக்கொண்டார்!  நோயாளி இன்று குணமடைந்தால் நான் நாளை ஷீர்டி விஜயம் செய்வேன் என்று கூறிக்கொண்டார்.  ஆச்சர்யம் என்னவெனில் அவர் அத்தீர்மானம் எடுத்த அக்கணந்தொட்டே ஜூரம் நீங்கத் தொடங்கி உடல் சாதாரண நிலைக்கு வந்துவிட்டது.

பின்னர் தமது தீர்மானத்தின்படி அவர் ஷீர்டிக்குச் சென்றார்.  பாபாவின் தரிசனத்தைப் பெற்று அவரை வீழ்ந்துபணிந்தார்.  அவர் தமக்கு அடியவராகும் வண்ணம் பாபா அவருக்கு அத்தகைய அனுபவங்களை அளித்தார்.  அவர் அங்கு நான்கு நாட்கள் தங்கியிருந்தார்.  பாபாவின் உதி ஆசீர்வாதங்களுடன் வீட்டுக்குத் திரும்பினார்.  பதினைந்தே நாட்களுள் பீஜப்பூருக்கு உத்தியோக உயர்வில் மாற்றப்பட்டார்.  அவருடைய சகோதரி மகன் விஷயம் பாபாவைப் பார்ப்பதற்கு அவருக்கு ஒரு சந்தர்ப்பமளித்தது.  இந்த விஷயம் ஞானியின் பாத கமலங்களின் மீது அசைக்க இயலாத பக்தியை அவரிடம் தோற்றுவிப்பதற்குக் காரணமாய் இருந்தது.


 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close