இயற்கையைக் காக்கும் இரட்டை விநாயகர்!

  முத்துமாரி   | Last Modified : 11 Sep, 2018 04:11 pm

ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தியை விமரிசையாக கொண்டாடுவது நம்முடைய வழக்கம். இதற்காக, பிரத்தியேக மணக்கட்டையை எடுத்துக்கொண்டு வீதிக்கு செல்வோம். அங்கு, களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகரை வாங்குவோம்... கூடவே கொசுறாக களிமண்ணை வாங்கி விநாயகருக்குப் பின் குவித்து, ஒரு காகித குடை வாங்கி வைக்கும்போது மனம் குதூகலம் அடையும். அதன்பிறகு, எருக்கம்பூ மாலை, மாவிலை எல்லாம் வாங்கி வருவோம். விநாயகர் சதுர்த்திக்குப் பிறகு, களி மண் விநாயகரை கிணறு, ஆறு, ஏரி, குளத்தில் கரைப்போம்.

களி மண் தரையில் பதிவதால் நீர் மாசுபடாது. ஏரி, குளத்தில்... அதுவே ஒரு படிமமாக மாறி, அதிக அளவில் நீர் பூமிக்குள் இறங்கிவிடாமல் காத்தது. இன்றைக்கு ஏரி குளங்களை மறந்துவிட்டோம்... நாகரீக வளர்ச்சி காரணமாக, களிமண் பிள்ளையாருக்குப் பதில், கலர் கலர் பிளாஸ்டர் ஆஃப் பாரீஸ் விநாயகருக்கு மாறிவிட்டோம். இந்த பிளாஸ்டர் ஆஃப் பாரீஸ் விநாயகர் சிலை எளிதில் கரையாது. இதனால், அதை கடப்பாரை, சுத்தியால் உடைக்கும்போது நம்முடைய மனமும் உடைகிறது. மேலும், இதில் உள்ள ரசாயன பெயிண்ட் உள்ளிட்டவை நீர்நிலைகளை மாசுப்படுத்தி, மீன் உள்ளிட்டவற்றை அழிக்கின்றன.

இந்த மாசுபாட்டை தவிர்க்கவும், நம் நகரத்தை பசுமையாக்கும் விதமாகவும், திருவண்ணாமலையில் இரட்டை விதை விநாயகர் விற்பனை ஜோராக நடக்கிறது. திருவண்ணாமலையின் 'இளந்தளிர்' எனும் அமைப்பு சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பொருட்டு, பல்வேறு செயல்களை செய்து வருகிறது. தினமும் 2 அல்லது 3 மரக்கன்றுகளை நடுதல், ஆறு, ஏரி போன்ற நீர்நிலைகளை சுற்றியிருக்கும் குப்பைகளை அகற்றுதல் போன்ற சமூகப் பணிகளை செய்து வருகிறது. இதைத்தொடர்ந்து, சுற்றுப்புறத்தை பாதுகாக்கும் விதமாக விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட வேண்டும் என வலியுறுத்தி, இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் 'விதை' விநாயகரை வடிமைத்துள்ளனர்.

இது குறித்து அந்த அமைப்பின் நிர்வாகி விஜய்யிடம் பேசினோம். "வீட்டிற்கு காய்கறி கணபதி, நாட்டிற்கு விருட்சக கணபதி என இரண்டு வகை விநாயகர் சிலைகளை நாங்கள் அறிமுகம் செய்திருக்கிறோம். இவை, எளிதில் கரையும் வகையில் செம்மண், களிமண் மற்றும் இயற்கை உரங்கள் சேர்த்து செய்யப்பட்டது. எந்த வித ரசாயன கலவையும் இதில் இல்லை.

காய்கறி கணபதியில், தக்காளி, அவரை, கத்திரி, வெண்டைக்காய், பீன்ஸ், கொத்துமல்லி, மற்றும் கீரை வகைகள் போன்ற செடிகளுக்கான விதைகள் வைக்கப்பட்டுள்ளன. விழா முடிந்த பிறகு இந்த விநாயகரை வீட்டுக்கு வெளியே அல்லது தோட்டத்தில் வைக்கலாம். தங்களுக்கு என்ன செடி வேண்டுமோ அதற்கான விதைகள் அடங்கிய விநாயகரை வாங்கிக்கொள்ளலாம்.

விருட்சக கணபதியில், புங்கை, வேம்பு, கொன்றன், இயல்வாகை, பூவரசம், அத்தி போன்ற மரங்களின் விதைகள் வைக்கப்பட்டிருக்கும். இந்த விநாயகரை மரங்கள் இல்லாத இடத்தில் வைத்து விடலாம். பூஜை முடிந்த பிறகு இந்த விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கலக்காமல், அதை வீட்டின் தோட்டத்திலோ அல்லது ஊருக்கு வெளியே மரங்கள் இல்லாத பகுதியில் வைத்து விட்டால், மழை பெய்யும் போது தானாகவே சிலை கரைந்து, அதிலுள்ள விதைகள் மண்ணில் புதைந்து விடும். பின்பு சிறிது காலத்தில் அவை மரமாக வளர ஆரம்பிக்கும்.

கடந்த ஆண்டு விதை விநாயகர் சிலைகள் 2000க்கு மேல் விற்பனையாகியுள்ளது. சுற்றுசூழலை பாதுகாக்கும் பொருட்டு, இந்த சிலைகள் உள்ளதால் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. தமிழ்நாடு மட்டுமல்லாமல், பஞ்சாப், கர்நாடகாவின் பெங்களூரு உள்ளிட்ட நாட்டின் மற்ற பகுதிகளுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நேரடியாக வந்து வாங்க முடியாதவர்களுக்கு சிலைகளை கொரியர் மூலமாக அனுப்புகிறோம். விதை விநாயகர் சிலைகளை பெற 9944446647, 9840855717 என்ற தொலைபேசி எண்களை அணுகலாம்" என்றார்.

தற்போது 'இயற்கை விநாயகர்' என்ற பெயரில் பல இடங்களில் விநாயகர் சிலைகள் தயாரித்து விற்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close