சொந்த வீடு தரும் சிறுவாபுரி முருகன்!

  கோமதி   | Last Modified : 26 Dec, 2017 06:07 pm


நமது நாடு சுதந்திரம் அடையபாட்டு வேள்வி நடத்திய மகாகவி பாரதியும், காணி நிலம் வேண்டும் என்று அன்னை பராசக்தியிடம்  பாட்டாலே கோரிக்கை வைத்தார். உலகில் வாழும் மனிதர்கள் அத்தனை பேருக்கும் அழகிய ஒரு கனவு இருக்கிறது. தாங்கள் வாழ்வதற்கு ஒரு வீடு சொந்தமாக அமைய வேண்டும் என்பதே அந்த கனவு. சொந்த வீடு கனவு மெய்ப்பட அருளாசியை அள்ளித் தருகிறார் சென்னைக்கு அருகாமையில் அமைந்துள்ள சிறுவாபுரி பாலசுப்பிரமணியர்.

பக்தர்கள் அலைமோதும் சிறுவாபுரி பாலசுப்பிரமணியர் ஆலயம் சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் செங்குன்றம், சோழவரம் கடந்து சென்றால் சிறுவாபுரி என்ற கிராமத்தில் அமைந்துள்ளது. சுற்றிலும் பச்சை பசேலென விவசாய நிலங்கள் சூழ்ந்திருக்க அழகிய இயற்கை சூழலில் அமைந்திருக்கிறது (சின்னம்பேடு) சிறுவாபுரி பாலசுப்ரமணிய பெருமான் ஆலயம்.

இந்த ஆலயத்தின் புராணம் மிக சுவாரசியமானது. இராமாயண காலத்தில் வால்மீகி முனிவரின் ஆசிரமத்தில் வளர்ந்து வந்த ராமனின் குழந்தைகளான லவனும், குசனும் ராமனின் குதிரையை கட்டிப்போட்டனர். ராமனே நேரில் வந்து சிறுவர்களுடன் போரிட்டு வென்று குதிரையை மீட்டு சென்றதாக ராமாயணத்தில் இந்த தலம் பற்றி குறிப்பிடப்படுகிறது.

முருகம்மையார் கை தழைக்கச் செய்தது, தேவர் அமுதுண்டது, தேவேந்திர பட்டணம் கிடைத்தது, இந்திரனுக்கு பதவி உயர்வு கிடைத்தது, லவன், குசன் ராமனின் அசுவத்தை கட்டிய இடம், மரகதப் பச்சை கல்லில் செய்யப்பட்ட தெய்வத் திருவுருவங்கள் அமைந்த தலம் இப்படி பல சிறப்பம்சங்களை கொண்டது சிறுவாபுரி பாலசுப்ரமணிய கோயில்.

O சிறுவாபுரி முருகனிடம்  தொடர்ந்து ஆறு செவ்வாய்கிழமைகள் சென்று  மனமுருக வணங்கினால் நினைத்த காரியங்கள் நிச்சயம் ஈடேறுகிறது.

O வீடு, வாகனம், தொழில், திருமணம் என பக்தர்கள் வேண்டிய வரங்களை வரப்பிரசாதியாக வாரி வழங்குகிறார் பாலசுப்பிரமணியர்.

O மூலவர் பாலசுப்பிரமணியர் நாலரை அடி உயரத்தில் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கும் இத்தலத்தில் மயில் மரகதக்கல்லால் அமைந்துள்ளது.

O இத்திருக்கோயிலில் முருகனைத் தவிர அனைத்து தெய்வச்சிலைகளும் மரகதக்கல்லால் ஆனவை என்பது குறிப்பிடத்தக்கது.

O முருகனுக்கு வலதுபக்கம் அண்ணாமலையார், உண்ணாமுலை அம்பாள் சன்னதி இருக்கிறது. இவர்களுக்கு நடுவில் வள்ளியும் முருகப் பெருமானும்  கைகோர்த்து நின்ற நிலையில் திருமணக்கோலத்துடன் அருள்பாலிக்கின்றனர். பூச நட்சத்திரத்தில் இந்த வள்ளிமணவாளனை வழிபட்டால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம்.

சிறுவாபுரியில் வாழ்ந்த முருகம்மையார் என்ற முருகபக்தை எப்போதும் முருகனின் சிந்தனையில் இருந்தார். அவரது கற்பின் மீது சந்தேகம் கொண்ட கணவர், அவரது கையை துண்டித்தார். அப்போதும் இவர் முருகன் சிந்தனையில் இருந்ததை அறிந்த முருகன், அம்மையாருக்கு காட்சி கொடுத்துஅருள் புரிந்தார்.இதனால் இவரது கை ஒன்று சேர்ந்து பழைய நிலைக்கு திரும்பியது.  

சிறுவாபுரி ஸ்ரீபாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆடிக்கிருத்திகை சிறப்பு அபிஷேகம் மிக சிறப்பு. சொந்த வீடு வேண்டும் பக்தர்கள் இத்திருத்தலத்தில் 

அண்டர்பதி குடியேற மண்டசுரர் உருமாற

அண்டர்மன மகிழ்மீற ...... வருளாலே

அந்தரியொ டுடனாடு சங்கரனு மகிழ்கூர

ஐங்கரனு முமையாளு ...... மகிழ்வாக

மண்டலமு முநிவோரு மெண்டிசையி லுளபேரு

மஞ்சினனு மயனாரு ...... மெதிர்காண

மங்கையுட னரிதானு மின்பமுற மகிழ்கூற

மைந்துமயி லுடனாடி ...... வரவேணும்

புண்டரிக விழியாள அண்டர்மகள் மணவாளா

புந்திநிறை யறிவாள ...... வுயர்தோளா


பொங்குகட லுடனாகம் விண்டுவரை யிகல்சாடு

பொன்பரவு கதிர்வீசு ...... வடிவேலா

தண்டரள மணிமார்ப செம்பொனெழில் செறிரூப

தண்டமிழின் மிகுநேய ...... முருகேசா

சந்தமு மடியார்கள் சிந்தையது குடியான

தண்சிறுவை தனில்மேவு ...... பெருமாளே. 

என்ற திருப்புகழை பாடி முருகனிடம் வேண்டி உருகுகிறார்கள். வேண்டியவர்க்கு வேண்டியதை தரும் முருகப்பெருமான், பக்தர்களின் சொந்த வீடு கோரிக்கையை நிறைவேற்றி தருகிறார்.

சென்னையில் இருந்து 33 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள சிறுவாபுரி முருகன் திருக்கோயிலுக்கு கோயம்பேட்டில் இருந்து பேருந்து மூலமாக செல்லலாம். சொந்த வாகனங்களில் செல்பவர்கள் சென்னை – கொல்கத்தா நெடுஞ்சாலையில் செங்குன்றம் , சோழவரம் ஆகிய இடங்களை கடந்து சிறுவாபுரியை அடையலாம்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.