உடல் ஆரோக்கியத்தை அருளும் திங்களூர் சந்திரன்

  கோமதி   | Last Modified : 01 Jan, 2018 11:04 am


உடல் மற்றும் புத்தி ஆரோக்கியத்தை பெற திங்களூர் சந்திரனை வணங்குவோம் 

மனிதர்களின் உடல், மனம், புத்தி  போன்ற முக்கியமானவைகளுக்கு காரக கிரகமாக அமைவது சந்திரன். சந்திரனின் தோற்றத்தில் ஏற்படும் மாறுதலுக்கு ஏற்ப வளர்பிறை தேய்பிறை, அமாவாசை ஏற்படுகிறது. சந்திரனின் ஆட்சி வீடு, கடகம், உச்சவீடு- ரிஷபம். 

பிரம்மனின் புத்திரர்களின் ஒருவர் அத்திரி மகரிஷிக்கும் அவர் மனைவி அனுசுயாவிற்கும் பிறந்த  மூன்று  புத்திரர்களில் முதல் புத்திரன் சந்திரன் ஆவார். தோற்றத்தில் மிகவும்  வசீகரம் உடையவரான சந்திரன், மகாவிஷ்ணுவை நோக்கி தவமியற்றி நவக்கிரக அந்தஸ்து  பெற்றார். சந்திர திசை மற்றும் சந்திர புத்தி நடைபெறும் போது ஏற்படும் தீங்குகளில் இருந்து நிவர்த்திக்காக  செல்ல வேண்டிய சந்திர பரிகார ஸ்தலங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது திங்களூர் கைலாசநாதர் திருக்கோவில்.

திருவையாற்றில் இருந்து சுமார் 3 கி.மீ.தொலைவிலும் கும்பகோணத்தில் இருந்து சுமார் 33 கி.மீ.தொலைவிலும் இத்தலம் அமைந்துள்ளது.மூலஸ்தானத்தில் அம்பாள் பெரிய நாயகியுடன் ,திருக்கைலாசநாதர் காலை 8 மணி முதல் மதியம் 12.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை அருள் பாலிக்கிறார். 

தல  வரலாறு 

திங்களூரை சேர்ந்த  63  நாயன்மார்களில் ஒருவரான அப்பூதியடிகள் சிறந்த சிவ பக்தர். சிவன் மீது கொண்ட  பற்றால், சிவபெருமான் மீது பக்தி கொண்ட திருநாவுக்கரசரின்  பெயரை, தான் பெற்ற  மகன்களுக்கு மூத்த திருநாவுக்கரசு, இளைய திருநாவுக்கரசு என்று வைத்தார்.  மேலும் திருநாவுக்கரசர் பெயரில் சிவனடியார்களுக்கு தன்னால் இயன்ற தொண்டுகளை  செய்து வந்தார்.

ஒரு நாள் திருநாவுக்கரசர் திங்களூருக்கு வந்த போது அப்பூதியடிகள் பற்றியும், அவரின் ஒப்பற்ற சிவ பக்தியைப் பற்றியும் கேள்விப்பட்டு அவரை  காண சென்றார்.  திருநாவுக்கரசரை கண்ட அப்பூதியடிகள் அவரை வரவேற்று உணவு அளிக்க  விரும்பினார்.  தன் மகனை வாழை இலை பறித்து வருமாறு அனுப்ப அங்கே அவனை பாம்பு  தீண்டி இறந்து விடுகிறான்.

தன் மகன் இறந்து விட்டான் என்ற செய்தி கேட்டால் தனது இல்லத்தில்  திருநாவுக்கரசர் சாப்பிட மாட்டாரோ  என்று  எண்ணிய அப்பூதியடிகள்,மகன் இறந்த செய்தியை மறைத்து உணவு அளித்தார்.  அடிகளாரின் மகனை பற்றி அறிந்த திருநாவுக்கரசர், அவனின் உடலை திங்களூர் திருக்கோவிலுக்கு எடுத்துச் சென்று “ஒன்று கொலாம்  அவர் சிந்தை” என்று  பதிகம் பாடி அவனை உயிர்ப்பித்தார். அந்த நாளில் இருந்து இன்று வரை, இந்த தலத்தில் ஒருவர் கூட பாம்பு தீண்டி  இறந்தது கிடையாது என்பது அதிசயம். 

கோவில் சிறப்பு  

நவகிரக தலங்களுள் இரண்டாவது தலம். 63 நாயன்மார்களில் ஒருவராக போற்றப்படும் அப்பூதியடிகள் பிறந்த ஊர் என்ற சிறப்புக்குரிய திருத்தலம்.

தட்சன் தனது 27 மகள்களையும் சுந்தரரான சந்திரனுக்கு மனம் முடித்துக் கொடுத்தான். சந்திரனுக்கு மற்ற மனைவியர்களை விட ரோகிணியின் மேல் காதல் கசிந்துருக, கோபமானான் தட்சன்.சந்திரனின் அழகு குறையவும்,கலைகள் தேயவும் சாபமிட்டான்.தனது சாபம் நீங்க சந்திரன் இந்த திருத்தலத்தில்,நீண்ட காலம் சர்வேஸ்வரனைக் குறித்து தவம் இருந்தான்.தனது பெயரிலேயே சந்திர புஷ்கரணம் என்ற தீர்த்தத்தை உருவாக்கி இறைவனை பூஜித்தான்.

இறைவனும் அவனது தவத்திற்கு மனமிரங்கி ஒரு பங்குனி மாதப் பௌர்ணமியில் காட்சிக் கொடுத்து சந்திரனின் சாபம் போக்கியருளினார்.சந்திரனின் சாபம் நீங்கப் பெற்றதால் இத்தலம் சந்திரனுக்குரிய பரிகார தலமாகப் போற்றப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் பௌர்ணமி தினத்தில் சந்திரனின் ஒளி,திங்களூர் திருத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் கைலாசநாதரின் திருமேனியில் விழும் அற்புதத்தைக் காண முடியும். பங்குனி உத்திரம் நாளன்று காலை 6 மணிக்கு இறைவன் மீது  சூரிய ஒளியும், மறுநாள் மாலை சந்திர ஒளியும் படரும்.  

இது சந்திரனுக்குரிய கோவில் என்பதால், அன்னப் பிரசாதத்துக்கு மிகச் சிறந்த தலம். அசுவினி,மிருகசீரிடம், உத்திரம், சுவாதி, திருவோணம்,ரேவதி, சதய நட்சத்திர நாட்களில்  திங்களூர் கைலாசநாதர் கோயிலில் சந்திர ஹோரையில், சந்திரனையும் பசுவையும் காண்பித்து, வெள்ளிக்கிண்ணத்தில் சாதத்துடன் பால், தேன், நெய் கலந்து ஊட்டினால் அந்த குழந்தைக்கு எந்த வியாதி பாதிப்பும்  இருக்காது என்பது ஐதீகம்.  

இந்த திருக்கோவிலில் வந்து இறைவனை வழிபட, திருமணத்தடை நீங்கும், குழந்தை பாக்கியம் கிடைக்கும், அறிவுத்திறன் பெருகும். மன உளைச்சல், மன அழுத்தம் தீரும்.

எங்கள் குறைகள் எல்லாம் தீர்க்கும்

திங்களே போற்றி!, திருவருள் தருவாய்

சந்திரா போற்றி!, சத்குரு போற்றி!

சங்கடந் தீர்ப்பாய் சதுர போற்றி! 

என திங்களூர் சந்திரனை வணங்கி உடல் மற்றும் புத்தி ஆரோக்கியத்தை பெறலாம்.


சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close