லவ் மீட்டர்: எந்த ராசிக்கு எப்படி?

  பா.பிரவீன் குமார்   | Last Modified : 13 Feb, 2018 04:40 pm

ஜோதிடத்தில் காதலை குறிக்கக் கூடிய கிரகம் சுக்கிரன். ஆண்களாக இருந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும் சரி - ஒருவருடைய ஜாதகத்தில் சுக்கிரன் வலுவாக இருப்பாரானால் அவர்கள் சீக்கிரமே காதல் வயப்படுவார்கள். ஒருவருடைய ஜாதகத்தில் சுக்கிரன் வலுவாக இருந்தால் அவருடைய முகம் வசீகரம் உடையதாக இருக்கும். மேலும் எதிர்பாலினத்தினரை கவர்ந்திழுக்கக் கூடிய திறமை இருக்கும். ஒவ்வொருவருடைய ஜாதகத்திலும் ஏழாம் இடம் திருமணத்திற்கு என்று சொல்லப்பட்டாலும், லக்னாதிபதியும் - சுகாதிபதியும் நல்ல நிலையில் இருந்தால் காதல் கை கூடும். உதாரணமாக ஏழாமிடத்தில் ஒருவருக்கு சந்திரனோ சுக்கிரனோ ராகுவோ இருந்தால் கட்டாயம் திருமணம் காதல் திருமணமாக இருக்க வாய்ப்புகள் அதிகம். அதே போல் சுக ஸ்தானத்தில் சந்திரனோ சுக்கிரனோ இருந்தாலும் காதல் வாய்ப்புகள் அதிகம்.

காதல் திருமணத்தில் போய் முடியுமா? ஒருவருடைய ஜாதகத்தில் சப்தம ஸ்தானம் செவ்வாய் - சனி - ராகுவோ சம்பந்தப்பட்டால் காதல் வெற்றியில் முடியும். தனவாக்கு குடும்ப ஸ்தானம் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானம் - களத்திர ஸ்தானம் - அஷ்டம ஆயுள் ஸ்தானம் (பெண்களுக்கு: மாங்கல்ய ஸ்தானம்) - விரைய ஸ்தானம் ஆகிய வீடுகளின் சம்பந்தப்பட்ட தசாபுக்தி, அந்தரங்களில் காதல் திருமணம் அரங்கேறுகிறது. ஏழரை சனி, கண்டச்சனி, அஷ்டம சனியின் காலத்திலும் வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்யும் அமைப்பு ஏற்படுகிறது. இனி ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் இருக்கும் காதல் சம்பந்தமான தன்மைகளை பார்க்கலாம்.

மேஷ ராசிக்காரர்களின் இயல்பு: இந்த ராசிக்காரர்கள் செவ்வாயை ராசிநாதனாகக் கொண்டவர்கள். இதனால் சீக்கிரமே உணர்ச்சிகளுக்கு அடிமையாகக் கூடிய தன்மை கொண்டவர்கள். தன்மானத்திற்கு முக்கியத்துவம் அளிப்பவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு குடும்பாதிபதியும் - சப்தமாதிபதியும் சுக்கிரன். எனவே இவர்களுக்கு காதலிக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியிருக்கும். தனது பாலினத்தை விட எதிர் பாலின நண்பர்கள் இவர்களுக்கு அதிகமாக இருப்பார்கள். தனது நேர்மையான நடவடிக்கைகளால் எதிர் பாலினத்தினரை கவர்ந்து இழுப்பார்கள். இவர்களை நிறைய பேர் காதலிப்பார்கள். ஆனால் காதல் சம்பந்தமான விஷயங்களில் நெளிவு சுளிவாக இருக்க மாட்டார்கள். சுக்கிரனுடைய நக்ஷத்திரத்தில் பிறந்த பரணி நக்ஷத்ரகாரர்கள் கூட திருமணத்திற்கு முன் காதல் இருந்தாலும் அது திருமணம் வரை செல்லுமா என்பது சந்தேகம் தான். காதல் திருமணம் வெற்றியடைய அவரவர் ஜாதக கிரகநிலைகள் அனுகூலமாக இருத்தல் நல்லது. ஆனால் திருமணத்திற்குப் பிறகு வாழ்க்கைத்துணையை விழுந்து விழுந்து காதலிப்பார்கள். காதலில் வெற்றி பெற இவர்கள் அடர் நிறங்கள் உடைய ஆடைகளை பயன்படுத்தாமல் - வெளிர் நிற ஆடைகளைப் பயன்படுத்த வேண்டும். 2 - 5 - 6 - 9 ஆகிய கூட்டு பெயர் எண் வரக்கூடியவர்களைக் காதலிக்கும் போது காதல் வெற்றி பெறும். மஹாலக்ஷ்மியை வழிபட்டு வந்தால் காதலில் இருக்கும் சிக்கல்கள் அகலும்.

ரிஷப ராசிக்காரர்களின் இயல்பு: இந்த ராசிக்காரர்கள் சுக்கிரனை ராசிநாதனாகக் கொண்டவர்கள். சுகத்திற்கும் சுத்தத்திற்கும் முக்கியத்துவம் அளிப்பவர்கள். இந்த ராசியில்தான் சந்திரன் உச்சமடைவார். எனவே காதலிப்பதற்காகவே இந்த ராசிக்காரர்கள் பிறந்தவர்கள். இவர்களுக்கு ராசிநாதனும் - ரண ருண ரோகாதிபதியும் சுக்கிரன். இவர்களும் காதலில் விழுவார்கள் - மற்றவர்களையும் விழ வைப்பார்கள். ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் தன்னை காதலிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். வாழும் போது ஸ்ரீகிருஷ்ணராகவே வாழ வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். இந்த உலகமே சுகத்தை அனுபவிக்க இருப்பதாக நினைத்துக் கொண்டிருப்பவர்கள். தாங்கள் விரும்பும் நபரை தன் பக்கம் இழுக்கம் திறமை கொண்டவர்கள். தன்னை விரும்புபவருக்கு பிடிக்கும் விஷயங்களாக செய்து தன் பக்கமே அவர்களை வைத்திருக்கும் வித்தை அறிந்தவர்கள். தன்னுடைய காதலை திருமணம் வரைக்கும் கொண்டு செல்லும் திறமையை பிறப்பிலேயே கொண்டிருப்பவர்கள். காதலில் வெற்றி பெற வெள்ளை - ரோஸ் நிற ஆடைகளை பயன்படுத்த வேண்டும். வைர மோதிரம் அணிந்து கொள்ள வேண்டும். 2 - 5 - 6 ஆகிய கூட்டு பெயர் எண் வரக்கூடியவர்களைக் காதலித்தால் காதல் வெற்றி பெறும். பெருமாளை வழிபட்டு வந்தால் இருக்கக் கூடிய பிரச்சனைகள் நீங்கும்.

மிதுன ராசிக்காரர்களின் இயல்பு: இந்த ராசிக்காரர்கள் புதனை ராசிநாதனாகக் கொண்டவர்கள். நிதானத்திற்கும் பொறுமைக்கும் பேர் பெற்றவர்கள் இந்த ராசிக்காரர்கள். இந்த ராசி என்பது பெருமாளின் அம்சம் கொண்டது. சிறிது சுயநலம் கொண்டவர்கள். தாம் நன்றாக இருந்தால்தான் மற்றவர்களையும் திருப்தியாக வைத்திருக்க முடியும் என்று நம்புபவர்கள். இவர்களுக்கு பஞ்சமாதிபதியும் - விரையாதிபதியும் சுக்கிரன். இந்த ராசிக்காரர்களை விட இவர்களை விரும்புபவர்கள் வேகமாக இருப்பார்கள். நிதானமாக அனைத்து முடிவுகளையும் எடுப்பதால் இவர்களுடைய காதல் விளக்கெண்ணை மாதிரி பிசுபிசுக்கும் வாய்ப்பு அதிகம். தன்னை காதலித்தவர்களின் நிலையை இவர்கள் உணரும் போது காலம் கடந்திருக்கும். காதலில் வெற்றி பெற கிடைக்கக்கூடிய வாய்ப்புகளை தவற விடக்கூடாது. வெள்ளை - சந்தண நிற ஆடைகளை பயன்படுத்த வேண்டும். வைர மோதிரம் அணிந்து கொள்ள வேண்டும். 2 - 5 - 6 - ஆகிய கூட்டு பெயர் எண் வரக்கூடியவர்களைக் காதலித்தால் காதல் நயமாக இருக்கும். அம்மனை வழிபட்டு வந்தால் இருக்கக் கூடிய பிரச்சனைகள் நீங்கும்.

கடக ராசிக்காரர்களின் இயல்பு: இந்த ராசிக்காரர்கள் சந்திரனை ராசிநாதனாகக் கொண்டவர்கள். காதலிப்பதற்காகவே பிறந்த ராசிகளில் இந்த ராசியும் ஒன்று. சந்திரனை ராசிநாதனாகக் கொண்டதால் வட்ட முகமும் - அழகான கூந்தலும் இவர்களுக்கு அமைந்திருக்கும். இவர்களுக்கு சுகாதிபதியும் - லாபாதிபதியும் சுக்கிரன். சில நேரங்களில் இவர்களுடைய காதல் முறிவில் போகலாம், ஆனால் இவர்கள் வாழ்வில் காதல் என்பது நிச்சயம் உண்டு. சீக்கிரமே உணர்ச்சிகளுக்கு ஆட்படுபவர்கள். குடும்பத்திற்கும் குடும்ப உறுப்பினர்களின் பாசத்திற்கும் அடிமையாய் இருப்பவர்கள். எனவே காதலுக்கு என்று தனியாக முக்கியத்துவம் அளிக்காதவராய் காட்சியளிப்பார். ஆனால் இவரை காதலிப்பவர் உண்மையாய் இருக்கும் பட்சத்தில் அந்த காதலானது வெற்றியில் முடியும். காதலில் வெற்றி பெற தன்னைக் காதலிப்பவரை இவர்கள் நம்ப வேண்டும். வெளிர் நீலம் - வெள்ளை - மஞ்சள் நிற ஆடைகளை பயன்படுத்த வேண்டும். முத்து மோதிரம் அணிந்து கொள்வது நல்லது. 2 - 6 - ஆகிய கூட்டு பெயர் எண் வரக்கூடியவர்களைக் காதலித்தால் காதல் நல்லது. மஹாலக்ஷ்மியை வழிபட்டு வந்தால் இருக்கக் கூடிய பிரச்சனைகள் நீங்கும்.

சிம்ம ராசிக்காரர்களின் இயல்பு: இந்த ராசிக்காரர்கள் சூரியனை ராசிநாதனாகக் கொண்டவர்கள். சூரியனை ராசிநாதனாகக் கொண்டதால் முகம் பிரகாசமாக இருக்கும். எவ்வளவு பதட்டமாக இருந்தாலும் வெளியில் காட்டிக் கொள்ள மாட்டார்கள். இவர்களுடைய கண் வசீகரம் உடையதாக இருக்கும். இவர்களுக்கு தைரியாதிபதியும் தொழில் ஸ்தானாதிபதியும் சுக்கிரன். காதலிப்பதையும் காதலிக்கப்படுவதையும் விரும்புபவர்கள். இவர்கள் ராஜகிரகம் என்று அழைக்கக்கூடிய கிரகமான சூரியனை அடிப்படையாகக் கொண்டதால் அனைவரையும் தன் பக்கம் இழுக்கும் வலுவை உடையவர்கள். காதலிப்பதை ஒரு வேலையாகச் செய்யாமல் அனிச்சை செயலாக செய்யக்கூடியவர்கள். இளம் சிவப்பு - நீலம் - இள மஞ்சள் நிற ஆடைகளை பயன்படுத்த வேண்டும். வைர மோதிரம் அணிந்து கொள்வது நல்லது. 1 - 3 - 6 - 9 ஆகிய கூட்டு பெயர் எண் வரக்கூடியவர்களை இவர்கள் மிக லகுவாக காதலிக்க வைப்பார்கள். சூரியனை வழிபட்டு வந்தால் இருக்கக் கூடிய பிரச்னைகள் நீங்கும்.

கன்னி ராசிக்காரர்களின் இயல்பு: இந்த ராசிக்காரர்கள் புதனை ராசிநாதனாகக் கொண்டவர்கள். காதலிப்பதற்காகவே பிறந்தவர்கள் இவர்கள். முதல் காதல் தோற்றுப் போனால் கூட மீண்டும் இவர்களுக்கு வெறு ஒரு காதல் துளிர்க்கும். கடுமையான பணிச்சுமையிலும் இவர்களுக்கு எதிர்பாலித்தனரால் சுகமும் நிறைய உண்டு. இவர்களுக்கு தனாதிபதியும் பாக்கியாதிபதியும் சுக்கிரன். இவர்கள் ராசியில் தான் சுக்கிரன் பலமிழந்து காணப்படுவார். இருப்பினும் இந்த ராசியில் சந்திரன் பலமிருப்பதால் முகம் மிகவும் வசீகரம் உடையதாக இருக்கும். காதல் விஷயத்தில் இவர்கள் எப்போதும் நம்பர் 1. தான் சந்தோஷப்படுவது மட்டுமல்லாமல் மற்றவரையும் சந்தோஷமாக இருக்க வைக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். உடலுக்கு முக்கியத்துவம் அளிக்காமல் உள்ளத்திற்கும் முக்கியத்துவம் அளிப்பவர்கள். இளம் பச்சை - வெள்ளை நிற ஆடைகளை பயன்படுத்த வேண்டும். வைர மோதிரம் அணிந்து கொள்வது நல்லது. 2 - 5 - 6 - 9 ஆகிய கூட்டு பெயர் எண் வரக்கூடியவர்களை இவர்கள் சீக்கிரமே தங்களிடம் மண்டியிட வைப்பார்கள். பிள்ளையாரை வழிபட்டு வந்தால் அனைத்து பிரச்னைகளிலும் தப்பிக்க முடியும்.

துலா ராசிக்காரர்களின் இயல்பு: இந்த ராசிக்காரர்கள் சுக்கிரனை ராசிநாதனாகக் கொண்டவர்கள். ராசிநாதனே சுக்கிரனாக அமைந்திருப்பதால் இவர்களுக்கு காதல் உணர்ச்சிகள் அருமையாக இருக்கும். ஆனால் ரகசியமாக எதையும் செய்ய வேண்டும் என்று எண்ணுபவர்கள். இவர்களுக்கு ராசிநாதனும் அஷ்டமாதிபதியும் சுக்கிரன். காதல் இவர்களுக்கு கை வந்த கலை. சீக்கிரமே அனைவரையும் தன் பால் ஈர்க்கும் தன்மை கொண்டவர்கள். காதலில் வெற்றி பெற பொறுமை மிகவும் அவசியம். வெள்ளை - இளம் பழுப்பு நிற ஆடைகளை பயன்படுத்த வேண்டும். வைர மோதிரம் அணிந்து கொள்வது நல்லது. 2 - 3 - 6 - 9 ஆகிய கூட்டு பெயர் எண் வரக்கூடியவர்களை இவர்கள் தன் பக்கம் வரவைப்பார்கள். மஹாலக்ஷ்மியை வழிபட்டு வந்தால் முக வசீகரம் அதிகரிக்கும்.

விருச்சிக ராசிக்காரர்களின் இயல்பு: இந்த ராசிக்காரர்கள் செவ்வாயை ராசிநாதனாகக் கொண்டவர்கள். செவ்வாயை ராசிநாதனாகக் கொண்டதால் முன்கோபம் மிக அதிகமாக இருக்கும். எந்த விஷயத்திலும் சீக்கிரமே பதட்டமடைவார்கள். இவர்களுக்கு தான் காதலிப்பவர்களை விட தன்னைக் காதலிப்பவர்களை அதிகமாக பிடிக்கும். எப்போதுமே போர் வீரன் போல் காட்சியளிப்பதால் காதல் கை கூடுவதற்கு காலம் பிடிக்கும். இவர்களுக்கும் வயது போன பிறகு காதல் பிறக்கும். இளம் சிவப்பு - மஞ்சள் நிற ஆடைகளை பயன்படுத்த வேண்டும். பவள மோதிரம் அணிந்து கொள்வது நல்லது. 1 - 3 - 6 - 9 ஆகிய கூட்டு பெயர் எண் வரக்கூடியவர்களை இவர்கள் வசீகரிக்க முடியும். முருகனை வழிபட்டு வந்தால் முக வசீகரம் அதிகரிக்கும்.

தனுசு ராசிக்காரர்களின் இயல்பு: இந்த ராசிக்காரர்கள் குருவை ராசிநாதனாகக் கொண்டவர்கள். குருவை ராசிநாதனாகக் கொண்டதால் எந்த விஷயத்திலும் நேர்மையைக் கடைபிடிப்பார்கள். இவர்களுக்கு ரண ருண அதிபதி - லாபாதிபதி சுக்கிரன். காதலருக்கு கடிதம் எழுதினால் அதை அவரிடம் கொடுக்காமல் அவர்களுடைய பெற்றோரின் கையில் கொடுக்கும் அந்நியன் அம்பி அளவிற்கு நேர்மையானவர்கள். இவர்களை புரிந்து கொள்வது சிரமம். எனவே இவர்களுக்கு காதல் என்பது மிக கடினமாக இருக்கும். காதலிப்பதிலேயே தனது ஆயுளில் பெரும்பாலான நேரத்தை செலவழிப்பார். காதல் எண்ணம் அதிகமாக இருக்கும். துணையை வெகுவாக விரும்புவார். மஞ்சள் - வெள்ளை நிற ஆடைகளை பயன்படுத்த வேண்டும். வைர மோதிரம் அணிந்து கொள்வது நல்லது. 1 - 3 - 6 ஆகிய கூட்டு பெயர் எண் வரக்கூடியவர்களை இவர்கள் சீக்கிரமே தன் வலையில் விழ வைப்பார்கள். மஹாலக்ஷ்மியை வழிபட்டு வந்தால் முக வசீகரம் அதிகரிக்கும்.

மகர ராசிக்காரர்களின் இயல்பு: இந்த ராசிக்காரர்கள் சனியை ராசிநாதனாகக் கொண்டவர்கள். சுக்கிரனுக்கு இந்த ராசி யோகமான வீடாகும். இவர்களுக்கு பஞ்சமாதிபதி - தொழில் ஸ்தானாதிபதி சுக்கிரன். காதல் என்பது இவர்களுக்கு மிக முக்கியமான விஷயமாகும். காதல் என்பது இல்லாமல் இருக்க மாட்டார்கள். இவர்களுடைய காதல் தவறாக இருக்காது. காதல் என்பது ஆத்மார்த்தமாக இருக்கும். செய்யும் கடமைகள் - உறக்கம் ஆகியவற்றை விட காதலுக்கு முக்கியத்துவம் அளிப்பவர்களாக இருப்பார்கள். நீலம் - வெள்ளை நிற ஆடைகளை பயன்படுத்த வேண்டும். வைர மோதிரம் அணிந்து கொள்வது நல்லது. 2 - 5 - 6 ஆகிய கூட்டு பெயர் எண் வரக்கூடியவர்களை தன் பால் ஈர்ப்பார்கள். வினாயகரை வழிபட்டு வந்தால் கவர்ந்திழுக்கும் திறமை அதிகரிக்கும்.

கும்ப ராசிக்காரர்களின் இயல்பு: இந்த ராசிக்காரர்கள் சனியை ராசிநாதனாகக் கொண்டவர்கள். கடுமையான உழைப்பிற்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள். இவர்களுக்கு சுகாதிபதி - பாக்கியாதிபதி சுக்கிரன். காதல் உண்மையாக இருக்கும். காதலைப் பற்றி இவர்களுக்கு கடுமையான கற்பனை இருக்கும். காதல்தான் வாழ்க்கை என்ற அளவிற்கு அவர்களிடம் முக்கியத்துவம் இருக்காது. காதல் என்பதை மன ரீதியான உணர்வாக மதித்து, காதலரை விரும்பினால் வெற்றி நிச்சயம் கிட்டும். இள மஞ்சள் - நீலம் - வெள்ளை நிற ஆடைகளை பயன்படுத்த வேண்டும். நீல மோதிரம் அணிந்து கொள்வது நல்லது. 1 - 3 - 5 - 6 ஆகிய கூட்டு பெயர் எண் வரக்கூடியவர்களை சீக்கிரமே காதலிக்க முடியும். முருகனை வழிபட்டு வந்தால் கவர்ந்திழுக்கும் திறமை அதிகரிக்கும்.

மீன ராசிக்காரர்களின் இயல்பு: இந்த ராசிக்காரர்கள் குருவை ராசிநாதனாகக் கொண்டவர்கள். காதலிப்பதற்காகவே பிறந்தவர்கள். இவர்களுக்கு தைரியாதிபதி - அஷ்டமாதிபதி சுக்கிரன். இந்த ராசியில்தான் சுக்கிரன் உச்சமாக இருப்பார். இவர்களிடம் அன்பும், பொறுமையும், அழகும், வசீகரமும் நிலைத்திருக்கும். இவர்களை யார் நேசிக்கின்றார்களோ அவர்களை இவர்கள் நேசிப்பார்கள். உணர்ச்சியை தரக் கூடிய செயல்களை செய்பவர்கள். தங்களுடைய ஆசையை நிறைவேற்றிக் கொள்ள எதையும் செய்ய நினைப்பவர்கள். இள மஞ்சள் - வெள்ளை நிற ஆடைகளை பயன்படுத்த வேண்டும். வைர மோதிரம் அணிந்து கொள்வது நல்லது. 2 - 3 - 5 - 6 ஆகிய கூட்டு பெயர் எண் வரக்கூடியவர்களை சீக்கிரமே வசீகரிக்க முடியும். மஹாலக்ஷ்மியை வழிபட்டு வந்தால் காதல் வெற்றி பெறும்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.