மங்களம் தங்க சங்கராந்தியில் இலந்தை பழம் தானம்

  கோமதி   | Last Modified : 11 Jan, 2018 01:21 pm


பொங்கல் அன்று நம் இல்லம்  தேடி வரும் சுமங்கலி பெண்களுக்கு பசும் மஞ்சள் கிழங்கு, தேங்காய், கரும்புத் துண்டு, வாழைப்பழம், இலந்தை பழம்  மற்றும் தாம்பூலத்தில் தட்சணை வைத்து கொடுப்பது மங்களத்தை தரும்.

மேலும் சங்கராந்தி அன்று செய்யப்படும் தானங்கள் உண்டு. அவற்றை முடிந்தவரை நாம் செய்வதினால்  நம்முடைய பாவங்கள் நிவர்த்தியாகும், குடும்பம்  சுபிட்சம்  என்பது நம்பிக்கை. அத்தகைய பலனளிக்கக் கூடிய தானங்கள் சிலவற்றை நாம் பார்க்கலாம்.

மஞ்சள் பொடி தானம்

ஒரு பெரிய பாத்திரத்தில், மஞ்சள் பொடியை கோபுரமாக நிரப்பி அதனுடன் குங்குமப் பொட்டலமும் இரண்டையும், மஞ்சள் பொடியின் உள்ளே நம் சக்திக்கு உட்பட்ட தட்சணை வைத்து, வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காய், கரும்புத்துண்டு, இலந்தைப் பழம், தட்சணை, துளசி தளம் வைத்து தானம் கொடுக்க வேண்டும். இதனால் நீடித்த சௌபாக்கியம் உண்டாகும் என்பது ஐதீகம்.

பூசணிக்காய் தானம்

பூசனிக்காய் தானமும் சங்கராந்தி அன்று கொடுக்க வேண்டிய தானமாகும். பூஜையறையில், ஒரு இடத்தை சுத்தப்படுத்தி, செம்மண் கோலம் போட்டு, அதன் மேல் பலகை அல்லது ஒரு தாம்பாளம் வைக்க வேண்டும். அதன் மேல் நுனி வாழை இலை போட்டு, அரிசியை பரப்பி, அதன் மேல் பூசணிக்காயை வைக்க வேண்டும்.

பூசணிக்காயின் மேல் வேஷ்டி, துண்டு வைக்க வேண்டும். முடியாதவர்கள், துண்டு அல்லது மேல் வேஷ்டி என ஏதாவது ஒன்றையாவது கண்டிப்பாக வைக்க வேண்டும். பூசணிக்காயின் முன்பு இரண்டு விளக்கு ஏற்றி, பூசணிக்காய்க்கு கஜ வஸ்தரம், சந்தனம், குங்குமம் போன்றவற்றை சமர்பித்து பூஜை செய்து தேங்காய், பழம் நைவைத்யம் செய்த அக்ஷதை மற்றும் புஷ்பங்களைப் போட்டு, கற்பூர ஆரத்தி காட்ட வேண்டும்.

வெற்றிலை, பாக்கு, தேங்காய் தட்சணையுடன் துளசிதளம் வைத்து, இலை, அரிசியுடன் பூசணிக்காயை அப்படியே தானமாக கொடுக்க வேண்டும். இந்த தானம் கொடுப்பதினால் திருஷ்டி தோஷம் அகன்று, தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவங்கள் நம்மை விட்டு அகலும்.

கரும்பு தானம்

சங்கராந்தி அன்று கொடுக்கும் வேண்டிய அடுத்த தானம் கரும்பு தானம். பூஜையறையை சுத்தப்படுத்தி, செம்மண் கோலம் போட்டு, அதன் மேல் பலகை அல்லது ஒரு தாம்பாளம் வைக்க வேண்டும். அதன் மேல் நுனி வாழை இலை போட்டு, அரிசியை பரப்பி, அதில் ஒரு ஜோடி கரும்பு துண்டுகளை நிறுத்தி வைக்க வேண்டும்.

அதற்கு வேஷ்டி அல்லது துண்டு சாற்றி , கஜ வஸ்தரம், சந்தனம், குங்குமம் வைத்து தேங்காய், பழம் நைவைத்யம் செய்து கற்பூர ஆரத்தி காட்ட வேண்டும். வெற்றிலை, பாக்கு, தேங்காய், தட்சணையுடன் துளசிதளம் வைத்து, இலை, அரிசியுடன் கரும்பை அப்படியே தானமாக கொடுக்க வேண்டும். உடன் ரவிக்கையும் வைத்துக்கொடுக்கலாம்.

இலந்தைப் பழ தானம்

சங்கராந்தி அன்று செய்யக்கூடிய தானங்களில்  மிக முக்கியமானது இது. சங்கராந்தி அன்று ஒரு தட்டில் கொஞ்சம் இலந்தைப் பழம் வைத்து, ஸ்வாமிக்கு விளக்கேற்றி நைவேத்தியம் செய்துவிட்டு வெற்றிலை, பாக்கு, தேங்காய், தட்சணை, துளசி தளம் வைத்து தட்டுடன் அப்படியே தானமாக கொடுக்க வேண்டும்.

தை மாதம் தொடங்குவதற்கு முன்பே இலந்தைப் பழம் வந்தாலும், சங்கராந்தி அன்று சுவாமிக்கு இலந்தைப் பழம் நைவேத்தியம் செய்து விட்டு, பிறகு தான் நாம் சாப்பிட வேண்டும் என்பது வழக்கம்.

பூசணிக்காய், மற்றும் கரும்பு தானத்தை வருடா வருடம் கொடுக்க முடியாவிட்டாலும், முடிந்த வருடங்கள் கொடுக்கலாம். ஆனால் இலந்தைப் பழ தானம் மட்டும் வருடம் தவறாமல்  கொடுப்பது நல்லது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close