அடியவர்களின் துயர் தீர்த்த தங்கக் கை! ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் அவதார தினம்

  கோமதி   | Last Modified : 22 Jan, 2018 12:19 pm


ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் அவதார தினம் – ஜனவரி 22

அண்ணாமலை இது நம் அனைவருக்கும்  ஞானம் தரும் தெய்வீக மலை. போகங்கள் விரட்டி ஞான இன்பத்தில் திளைத்திடச் செய்யும் அக்னி பூமி திருவண்ணாமலை. ஞானம் நிறைந்த இந்த புனித மண்ணில் நிலைத்திருக்கும் சித்தர்கள், இறை பித்தர்கள் ஏராளம். காஞ்சியில் அவதரித்த அற்புத ஜீவன் ஒன்று ஆத்ம ஞானியாக அறியப்பட்டது இதே  திருவண்ணாமலையில் தான். அந்த அற்புதர் நமது ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள்.

காஞ்சியில் வீற்றிருந்து கருணை மழை பொழிந்து வருகிறார் அன்னை காமாட்சி. அன்னை காமாட்சியை முறையாக ஆராதிக்க நர்மதா நதிக்கரையிலிருந்து முப்பது தேவி உபாசகர்களை அவர்களது குடும்பத்தோடு காஞ்சிபுரத்தில் குடியமர்த்தினார் ஸ்ரீ ஆதிசங்கரர்.  நர்மதைக் கரையில் இருந்து காஞ்சிக்கு இடம் பெயர்ந்தவர்களின் இஷ்ட தெய்வம் மட்டுமல்ல குல தெய்வமாக அருளாட்சி செய்தாள் அன்னை ஸ்ரீ காமாட்சி தேவி. அன்னையை வழிபட்டு ஸ்ரீவித்யை எனும் உபாசனா மார்கத்தைப் பரப்பி வந்தனர் .இதனால்  காமகோடி வம்சம் எனப்பெயர் பெற்றனர்.

இந்த பரம்பரையில் வந்தவர்கள் வேத,சாஸ்திரங்களில் மிகச்சிறந்த பண்டிதர்கள்.காலசக்கரத்தில் பரம்பரை சுருங்கியது. சில குடும்பங்களே மிஞ்சியது.. இவர்களில் பலர் ஜோதிட சாஸ்திரத்தில் தேர்ச்சி பெற்று விளங்கியதால் ஸ்ரீ வரதராஜர் பஞ்சாங்கம் வாசிக்கும் உரிமை தரப்பட்டது, பெருமாள் கோயிலுக்கு இடம் மாறியதால்  வெங்கடாசலபதி குல தெய்வமானார். இந்த மரபில் வந்த வரதராஜன்-மரகதம் தம்பதிக்கு, ஸ்ரீ காமாட்சியின் அருளால் 1890 ம் ஆண்டு ஜனவரி மாதம் 22 ம் நாள் சனிக்கிழமை ஹஸ்த நட்சத்திரத்தில்  ஓர் ஆண் மகவு பிறந்தது. குல தெய்வமான வேங்கடவனின் திருநாமமான  சேஷாத்திரி என்ற பெயர்  தாங்கி வளர்ந்தது அந்த குழந்தை.

தாய் மரகதம் அக்குழந்தைக்கு நான்கு வயது நிரம்பும்முன்னரே கிருஷ்ணாஷ்டகம், ராமாஷ்டகம், மூகபஞ்சசதி, குருஸ்துதி போன்ற தோத்திரங்களை கற்றுக்கொடுத்தாள். மிக அழகாய் அறிவாய் வளர்ந்த அந்தக் குழந்தை தனது பிறப்பின் அதிசயத்தை –அற்புதத்தை காட்டியது.

குழந்தை சேஷாத்திரி ஒரு நாள் தாயின் இடுப்பில் அமர்ந்து வரதராஜபெருமாள் ஆலயத்திற்கு சென்றது. திருவிழா என்பதால் தெரு முழுக்க கடைகள் முளைத்திருந்தன. ஒரு வியாபாரி வெண்கலத்தால் ஆன தவழும் கிருஷ்ணர் பொம்மைகளை விற்றுக்கொண்டிருந்தார். அதைப் பார்த்த சேஷாத்திரி தனக்கு ஒரு கிருஷ்ணர் பொம்மை வேண்டும் என அடம் பிடித்தார். அன்னைக்கு அதில் விருப்பமில்லாததால் தொடர்ந்து நடந்தாள். குழந்தையின் அழகில் மயங்கிய அந்த வியாபாரி, “அம்மா! குழந்தை கிருஷ்ணனைப்போல் இருக்கு. நீங்க காசு தர வேண்டாம். நானே ஒரு பொம்மை தருகிறேன். எடுத்துக்கொள்ளுங்கள்” என்றான். உற்சாகமாக சேஷாத்திரி, தானே ஒரு பொம்மையை எடுத்துக்கொண்டார்.

அவர் கை பட்டதுதான் தாமதம். வியாபாரி கொண்டுவந்த அத்தனை பொம்மைகளும் விற்றுத்தீர்ந்தன! மறுநாள் கோயிலுக்கு சென்ற போது அந்த வியாபாரி, கண்களில் நீர் வழிய அந்த அன்னை காலில் விழுந்து கும்பிட்டபிர்,“ அம்மா, வழக்கமாக இங்கு நூறு பொம்மை கூட விற்காது. உங்க குழந்தை தொட்டதால் நேற்று ஆயிரம் பொம்மைகளும் விற்றுப்போச்சு என்று சொன்ன அவர், `இது தங்கக்கை, தங்கக்கை` என்று கூறியவாறு குழந்தையின் கைகளைப்பற்றி கண்களில் ஒற்றிக்கொண்டான். பொம்மை வியாபாரிக்கு காட்டிய கருணை, தங்கக்கை சேஷாத்திரியை உலகிற்கு வெளிக்காட்டியது.

ஏழு வயதில் சேஷாத்திரிக்கு உபநயனம் செய்து வைக்கப்பட்டது. வேத பாடசாலையில் சேர்ந்து வேத அத்யாயனம் செய்ததுடன் தர்க்கம், வியாகரணம் (இலக்கணம்) எல்லாம் பயின்று பின்னர், பாட்டனார் காமகோடி சாஸ்திரிகளிடம் மந்திர சாஸ்திரத்தை கற்றுணர்ந்தார். இந்த நிலையில் திடீரென சேஷாத்திரியின் தந்தை வரதராஜர் இயற்கை எய்தினார். இதானல் குடும்பம் சோகத்தில் மூழ்கியது.

கணவனை இழந்த சோகத்தில் இருந்த தாய், தனது மகன் சேஷாத்திரிக்கு திருமணம் செய்து வைக்க நினைத்தாள். கணவரின் சகோதரி வெங்கலக்ஷ்மியின் மகள் காகினி தான் மணமகள் என்றும் முடிவானது, இதுபற்றி மைத்துனரும் சிறந்த ஜோதிடருமான ராமசாமியிடம் பேசினாள். சேஷாத்திரியின் ஜாதகத்தில் சந்நியாச யோகம் இருக்கிறது. திருமண பந்தம் அவனுக்கு கிடையவே கிடையாது என்றார். இந்த தகவலால் நிலை குலைந்து போன தாய் மரகதம் மெல்ல உடல் நலமிழந்து இறுதியில் ஆதிசங்கரரின் பஜகோவிந்தத்தை உச்சரித்தவாறே, உயிர்  துறந்தாள்.

தெய்வீக காட்சி

தாய் தந்தை இருவரையும் இழந்த சேஷாத்திரி, சதா சர்வ காலம் இறைவன் சிந்தையில் நிலைத்தார் .சித்தப்பா ராமசாமியின் பராமரிப்பில் இருந்த சேஷாத்திரி வீட்டில் தங்காமல் கோயில், குளம் என சுற்றத்தொடங்கினார். சில சமயம் நாட்கணக்கில் வீட்டுக்கு வரவே மாட்டார். அழுக்குத்துணி, எண்ணை காணாத தலைமுடி, தாடி வளர்ந்த முகம், நெற்றியில் பளீரென துலங்கும் குங்குமம் என தெய்வீக காட்சி தந்தார்.

இந்நிலையில் சேஷாத்திரி ஸ்ரீ பாலாஜி சுவாமிகளிடம் சந்நியாச தீட்சை பெற்றுக்கொண்டார். தன்னிச்சையாக கால் போன போக்கில் திரிந்து கொண்டிருந்தார் சேஷாத்திரி. இதற்கிடையில் சேஷாத்திரியின் தந்தையாருக்கு திதி. இதற்காக, எங்கோ திரிந்துகொண்டிருந்த சேஷாத்திரியை கண்டுபிடித்து, நான்கைந்து பேர் உதவியுடன் அவரை வலுக்கட்டாயமாக வீட்டுக்கு தூக்கி வந்தார் அவரது சித்தப்பா. `நான் சந்நியாசி, கர்மம் எல்லாம் தொலைத்தவன் எனக்கு திதி கொடுக்கும் கடமை கிடையாது` என சேஷாத்திரி கூறியது யார் காதிலும் விழவில்லை.

அவர் ஓடி விடாமல் தடுக்க ஒரு அறைக்குள் அடைத்து வெளியே பூட்டிவிட்டனர். மதியம் இரண்டு மணியளவில் சிரார்த்தம் முடிந்து, வலம் வந்து மூதாதையர் ஆசியை பெற வேண்டும். அதற்காக சேஷாத்திரியை அழைத்துவர சித்தப்பா, அறைக்கதவை திறந்தார். வைதீகர்களும் ஆவலோடு பார்த்துக்கொண்டிருந்தனர். அறைக்குள் சேஷாத்திரியை காணவில்லை! பூட்டிய அறையிலிருந்து யோகசித்தர் சேஷாத்திரி மாயமாக மறைந்து விட்டார். இந்த செய்தி காஞ்சிபுரம் முழுவதும் காட்டுத்தீயாக பரவியது. இந்த சம்பவத்துக்கு பிறகு காஞ்சியில் இருந்து புறப்பட்டவர் முக்தி தரும் திருவண்ணாமலையை நடைபயணம் மூலம் அடைந்தார்.

திருவண்ணாமலையில் பெரும்பாலும் ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் ஆலயத்தில் உள்ள கம்பத்து இளையனார் கோயிலில், தான் அமர்ந்து இருக்கும் சேஷாத்திரி அன்ன சத்திரம், சடைச்சி ஆச்சியம்மாள் வீடு, சாதுமடம், சின்ன குருக்கள் வீடு, ஓயாமடம் ஆகிய இடங்களிலும் தென்படுவார் 

1889 ம் ஆண்டு தனது 19 வயதில்  திருவண்ணாமலைக்கு வந்த சேஷாத்திரி  சுவாமிகள் 40 ஆண்டு காலம் திருவண்ணாமலையில் பல அற்புதங்களை நிகழ்த்தி இன்றைக்கும் ஜீவ சமாதியில் பல அற்புதங்களை செய்தபடி உள்ளார்.

1929 ம் ஆண்டு ஜனவரி மாதம் 28 ம் நாள் சேஷாத்திரி சுவாமிகள் தனது பூத உடலை நீத்தார். அவரது இறுதி சடங்கில் ரமண மகரிஷி கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. சேஷாத்திரி சுவாமிகளின் அதிஷ்டானம் ரமணாஷ்ரமத்தை ஒட்டியே அமைந்துள்ளது. 

நோய்கள் தீர, ஆரோக்கியம் பெருக, வாழ்வின் வசந்தம் நிலைக்க தங்கக்கை சேஷாத்திரி சுவாமிகளின் அதிஷ்டானம் செல்வோம். அருளாசி நிச்சயம் உண்டு நமக்கு.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close