சந்திரகிரகணம் - யாரெல்லாம் பரிகாரம் செய்ய வேண்டும்?

  கோமதி   | Last Modified : 31 Jan, 2018 02:01 pm


நீல நிலா ஏதோ கவிதையின் ஆரம்ப வரி அல்ல இது. 150 ஆண்டுக்களுக்கு பின்னர் நிகழும் முக்கியமான சந்திரகிரகணம் தான் இந்த நீல நிலா. இந்த 2018 ஆம் ஆண்டின் முதல் சந்திரகிரகணம் இம்மாதம் 31ம் தேதியன்று நிகழ உள்ளது. சூரியன் அல்லது சந்திரன் மீது ஏற்படும் நிழலை கிரகணம் என கூறுகிறது வானவியல் சாஸ்திரம்.

ஆனால், ஜோதிட சாஸ்த்திரப்படி, நிழல் கிரகங்களான ராகு மற்றும் கேதுவும் சூரியன் மற்றும் சந்திரனோடு இணைவதை  கிரகணம் என கூறுகிறது. சூரிய கிரகணம் ஏற்படும் அமாவாசை நாளில் - சூரியன், சந்திரன், ராகு ஒரே வீட்டில் இருக்கும். சந்திர கிரகணம் ஏற்படும் பௌர்ணமி நாளில், சந்திரன் -ராகு, சந்திரன்-கேது, சூரியன்-ராகு, சூரியன் - கேது எதிர்எதிர் ராசிகளில் இருக்கும். எல்லா நேரங்களிலும் சூரியனும் சந்திரனும் ராகு அல்லது கேதுவோடு ஒரே வீட்டில் இணைந்திருக்க  வேண்டும் என்ற அவசியம் இல்லை எனவும் கூறுகிறார்கள் சில பஞ்சாங்க கணித வல்லுநர்கள்.

தை மாதம் 18 ஆம் நாள் (31.1.2018) புதன் கிழமை பெளர்ணமி தினத்தன்று பூசம் நட்சத்திரத்தில், ஆயில்யம் நட்சத்திரம் 1 ஆம் பாதம் கடகம் ராசியில் கன்னியா லக்கினத்தில் சந்திர கிரகணம் ஆரம்பம் ஆகி முடிவடைவதாக ஜோதிட வல்லுனர்கள் கணித்திருக்கிறார்கள். மாலை 5.16 க்கு ஆரம்பிக்கும் சந்திர கிரகணம், இரவு 8.40 க்கு முடிவடைகிறது.


பரிகாரம் செய்ய வேண்டிய நட்சத்திரகாரர்கள்

புதன் கிழமை பிறந்தவர்களும், புனர்பூசம், பூசம், ஆயில்யம், விசாகம், கேட்டை, பூரட்டாதி, அனுஷம், உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சாந்தி செய்து கொள்ள வேண்டும்.

சந்திர கிரகணம் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயங்கள்

சந்திரன் மனோகாரகன் என்பதால், சந்திர கிரகண வேளையில்,அவன் ஆதிக்கம் இன்னும் அதிகமாக இருக்கும்.அதனால் சந்திர கிரகணத்தின் போது, சந்திரனின் ஒளியானது நம் மீது படாமல் இருப்பதும் நாம் சந்திரனைப் பார்க்காமல் இருப்பதும் மிகவும் உத்தமம் என்கிறார்கள் சாஸ்திரம் அறிந்த பெரியவர்கள்.

சந்திர கிரகணம் ஆரம்பித்து முடியும் வரையில் உணவு சாப்பிடக்கூடாது.வேண்டுமானால் கிரகணம் ஆரம்பிக்கும் ஒரு மணி நேரத்திற்கு முன்பு சாப்பிடலாம்.

கர்ப்பமாக இருக்கும் பெண்கள் மாலை 5.00 மணி முதல் இரவு 8.50 வரையில் சந்திரனை பார்க்கக் கூடாது.

கிரகணம் தொடங்குவதற்கு முன்னதாக, வீட்டில் நம் புழக்கத்தில் உள்ள தண்ணீர்க் குடம், உணவுப் பாத்திரங்கள் ஆகியவற்றின் மீது தர்ப்பையை வைக்க வேண்டும். இதனால்,கிரகணத்தினால் ஏற்படும்  கதிர்வீச்சுக்களில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ள முடியும்.

கிரகணத்தின் போது ஆலயங்களில் நடை சாத்தப்பட்டு இருக்கும்.அந்த சமயம் ஆலய தரிசனம் செய்தல் கூடாது. கிரகணம் விட்ட பிறகு, வீட்டினை சுத்தம் செய்து குளித்து விட்டு, ஆலயம் சென்று தோஷம் உள்ள நட்சத்திரக்காரர்கள் சாந்தி செய்துக் கொள்ளலாம்.


கிரகணத்தின் போது செய்ய வேண்டியவை

கிரகணம் முடியும் போது, தர்ப்பணம் செய்வது புண்ணியங்களை நமது தலைமுறைகளுக்கு வாரி வழங்கும் என்கிறது சாஸ்திரம். மேலும் கிரக தோஷங்களையெல்லாம் நீக்கிவிடும் ஆற்றலும் அன்று நாம் செய்யும் தர்பணத்திற்கு உண்டு. 

கிரகண காலத்தின் போது நம் மனதை ஒருமுகப்படுத்தி இறைவனிடம் செலுத்தினால் இடர்களில் இருந்து இறையருள் நம்மை காக்கும். பக்தியுடன் நவக்கிரக துதியை பாராயணம் செய்தல் நன்மை பயக்கும்.

மேலும் சந்திர கிரகணத்திற்குரிய  

யோஸெள வஜ்ரதாரோ தேவ; ஆதித்யானாம் ப்ரபுர்தப;

ஸஹஸ்ரநயன: சந்த்ரக்ரஹ பீடாம் வ்யபோஹது

எனும் துதியை பாராயணம் செய்வதால் தோஷங்களில் இருந்து விடுபடலாம்.

அதோடு சந்திர பகவானுக்கு உரிய

ஓம் பத்மவத்வஜாய வித்மஹே ஹேம ரூபாய தீமஹி

தன்னஸ் சந்திரஹ் ப்ரசோதயாத்

என்ற காயத்ரி மந்திரத்தை சொல்வதன் மூலமும் சந்திரனை மகிழ்வித்து இரட்டிப்பு பலனைப் பெறலாம்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close