தை வெள்ளி: பக்தர்களுக்காக விரதம் இருக்கும் சமயபுரம் மாரியம்மன்

  கோமதி   | Last Modified : 01 Feb, 2018 06:35 pm


ஆயிரம் கண்ணுடையாள், கண்ணபுர நாயகி, சாம்பிராணி வாசகி, அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி, கெளமாரி, சீதளா தேவி, கண்ணபுரத்தாள், மகமாயி இன்னும் எத்தனை எத்தனை பெயர்கள். ஆயி மகமாயி, ஆயிரம் கண்ணுடையாள், நீலி திரிசூலி நீங்காத பொட்டுடையாள் அன்னை சமயபுரம் மாரியம்மன் ஆலயம், இந்த கலியுகத்தில் கேட்டவருக்கு கேட்டதையும், தகுதியுடையவர்களுக்கு அவர்கள் கேட்காததையும் கொடுக்கும் கற்பக   விருக்ஷமாக விளங்குகிறது.

இன்றைய தேதியில், தமிழ்நாட்டுக் கோயில்களிலேயே பழநிக்கு அடுத்து இரண்டாவதாக அதிக வருமானம் பெறும் கோயில்களில் இதுவும் ஒன்று என்று கூறப்படுகிறது. சக்தி பீடமாகக் கருதப்படும் சமயபுரம் அன்னை மாரியம்மன் கோவில் தமிழ்நாட்டு, மாரியம்மன் கோவில்களுக்கெல்லாம் தலைமைப் பீடமாகவும் கருதப்படுகிறது. 

திருச்சிக்கு வடக்கில் சமயபுரத்தின் கண்ணனூர் அருகில் பெருவளை வாய்க்கால் கரையோரத்தில் மகாசக்தி பீடமாக விளங்குகிறது சமயபுரம் மாரியம்மன் கோவில்.

அம்மன்  வரலாறு         

ஆதியில் ‘வைஷ்ணவி’ என்ற நாமத்தில் ஸ்ரீரங்கத்தில் குடி கொண்டிருந்த சமயபுரம் மாரியம்மன், கோரைப் பற்கள் மற்றும் சிவந்த கண்களுடன் உக்கிரமாக கட்சியளித்தாளாம். அங்கு அப்போதிருந்த ஜீயர் சுவாமிகள், அந்த அம்மனை வேறோர் இடத்தில் பிரதிஷ்டை செய்ய ஏற்பாடு செய்தார். அதன்படி, சிலர் அந்தத் திருவுருவை எடுத்துக்கொண்டு வடக்கு நோக்கி கிளம்பினர். வழியில் ஓர் இடத்தில் இளைப்பாறினர். அந்த இடம்தான்  தற்போதைய இனாம் சமயபுரம் எனப்படுகிறது.

அவர்கள் கண்ணனூர் அரண்மனை மேட்டில்  இருந்த ஓலைக் கொட்டகை ஒன்றில் அம்மனை வைத்துவிட்டுச் சென்றனர். அதன் காரணமாகவே அம்மன், ‘கண்ணனூர் அம்மன்’ என்றும், ‘கண்ணனூர் மாரியம்மன்’ என்றும் அழைக்கப்பட்டாள்.


இதே சமயம், தென்னாட்டின் மீது படையெடுத்து வந்த விஜயநகர மன்னர், தன் படைகளோடு கண்ணனூர் காட்டில் முகாமிட்ட சமயம், அங்கிருந்த மாரியம்மனை கண்டு வழிபட்டார். போரில் தான் வெற்றி பெற்றால், அம்மனுக்குக் கோயில் கட்டுவதாக வேண்டிக் கொண்டார். அதன்படியே அம்மனுக்குத் திருக்கோயில் கட்டிய விஜயநகர மன்னர், குடமுழுக்கு விழா நடத்தி, நித்திய பூஜைக்கான ஏற்பாடுகளையும் செய்தார் என்கிறது வரலாறு.

இன்றும் இந்த  விபரம் அறிந்த மக்கள் இனாம் சமயபுரம் சென்று ஆதி மாரியம்மனைத் தரிசித்த பின்னரே கண்ணனூர் வந்து சமயபுரம் மாரியம்மனைத் தரிசிக்கின்றனர். 

ஒரே சந்நிதியில் மூன்று விநாயகர்கள்

கிழக்கு நோக்கி அமைந்துள்ள இந்தக் கோயிலில் மூன்று திருச்சுற்றுகளும், முகப்பில் நீண்ட மண்டபம் ஒன்றும் உள்ளது. வேறு எங்கும் இல்லாதபடி, இங்கு ஒரே சந்நிதியில் மூன்று விநாயகர்களைக் காணலாம். இதற்குப் பின்னணியிலும் ஒரு கதை உண்டு. 

அம்மன் மிகவும் உக்கிரத்துடனும் கோரைப் பற்களுடனும் இருந்ததால், அம்மனின் உக்கிரத்தைத் தணிக்க காஞ்சி பரமாசாரியாரின் ஆலோசனைப்படி, கோயில் நுழைவாயிலின் வலப்புறம் இச்சா சக்தி, ஞான சக்தி, கிரியா சக்தி வடிவங்களாக மூன்று விநாயகர்களைப் பிரதிஷ்டை செய்ததோடு அம்மனின் மூல விக்ரஹத்தின் கோரைப் பற்களையும் அகற்றியதாக சொல்லபடுகிறது.

மக்களின் வெம்மை நோயை தீர்க்கும் அம்மன் எப்போதும் குளிர்ச்சியாக இருப்பதற்காக அம்மனின்  கருவறையைச் சுற்றி எப்போதும் நீர் நிறைந்திருக்கும்படி ஏற்பாடு செய்துள்ளனர். மாரியாய் தங்கள் மீது கருணை பொழியும் மாரியம்மனுக்கு பக்தர்கள் வழங்கிய காணிக்கைகள் மூலம் அம்பாளின் கருவறையும், கருவறை விமானமும் தங்கத் தகடுகளால் வேயப்பட்டுள்ளது.

மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை பாலாலயம் செய்யப்பட்டு மீண்டும் பீடத்தில் அமர்த்தப்படும் அம்மனுக்கு, மற்ற மாரியம்மன் கோயில்கள்  போல் இல்லாமல் சிவாசாரியார்களே  வழிபாடுகள் செய்கின்றனர். 

அம்மனின் திருக்கோலம்

கருவறையில் அம்மன் திவ்ய அலங்காரங்களுடன் சுகாசனக் கோலத்தில் வீற்றிருக்கிறாள்.  தன் குழந்தைகளைக் காக்க, எட்டுத் திருக்கரங்களுடன் காணப்படும் அம்பாளின் தலைக்கு மேலே, ஐந்து தலை நாகம் படம் விரித்துக்கொண்டு காணப்படுகிறது.  இடக்காலை மடித்தும், தொங்க விடப்பட்ட வலக்காலின் கீழே அசுரர்களின் தலைகளும்  காணப்படுகின்றன.  கைகளில் கத்தி, கபாலம், சூலம், மணிமாலை, வில், அம்பு, உடுக்கை, பாசம் ஏந்திக்கொண்டு நெற்றியில் திருநீறு பளபளக்க, அவள் அழகுக்கு மேலும் அழகு சேர்க்கும் விதமாக, பட்டு வண்ண நெற்றியில் குங்குமமும் அணிந்து, மூக்குத்தியும் தோடுகளும் ஜொலி ஜொலிக்க சிங்காரமாக அவள் வீற்றிருக்கும் அழகை காண்போருக்கு, வேண்டுதல்கள் மறந்து போய், அவளை காணும் பாக்கியமே போதும் என்கிற ஏகாந்த நிலைக்கு வந்து விடுவர். 27 நக்ஷத்திரங்களின் ஆதிக்கங்களையும் தன்னுள்ளே அடக்கிய அம்பாள், 27 யந்திரங்களானத் திருமேனிப் பிரதிஷ்டையில் அருளாட்சி செய்கிறாள். மூலிகைகளால் ஆன மூலவருக்கு அபிஷேகம் செய்வதில்லை. உற்சவ விக்ரஹத்துக்கு மட்டுமே அபிஷேகங்கள் நடைபெறும்.

மாரியம்மனின் பிற வரலாறுகள்

ஜமதக்னி முனிவரின் மனைவியான ரேணுகாதேவிதான் மாரியம்மன் என்றும், மன்மதனை எரித்த சிவன் வெளியிட்ட வெப்ப அனல் தாங்காமல் தவித்த மூவுலக மக்களுக்காக, உமையன்னை அந்த வெப்பத்தைத் தான் உள்வாங்கிக் கொண்டு காப்பாற்றியதாகவும் செய்திகள் உண்டு. மேலும் வசுதேவர் தேவகியின் எட்டாம் குழந்தையான  கண்ணனைக் காப்பாற்ற சிறைக்கு மாற்றப்பட்ட  நந்தகோபனின் பெண் குழந்தையான யோக மாயாவே இந்த மாரியம்மன் என்கின்றனர் சிலர்.

அம்மனின் கொலுசு  சொல்லும் அற்புதம்

தன் மக்களின் நலனை அறியவும் அவர்களை காக்கவும், அம்பாள் தினம் இரவு உலா வருவதாகவும், அப்படி அவள் நடந்து வரும் போது எழும் அம்மனின் கொலுசுச் சப்தத்தை, கோயிலின் முன் மண்டபத்தில் உறங்குபவர் பலர் கேட்டிருப்பதாகவும்  சொல்கின்றனர்.

தன் குழந்தைகளுக்காக அம்பிகை இருக்கும் விரதம்

இங்கு அம்பாள் தன் பிள்ளைகளுக்காக மாசி முதல் பங்குனி கடைசி ஞாயிறு வரை, தானே விரதம் இருக்கிறாள். விரதக் காலத்தின்போது, தினம் சாயங்காலம் ஒருவேளை மட்டும் இளநீர், மோர், பானகம், துள்ளுமாவு, வெள்ளரிப் பிஞ்சு ஆகியவை அம்மனுக்கு நிவேதனம் செய்யப்படுகிறது.  ஊர்மக்களும் அச்சமயம் அம்மனுடன் சேர்ந்து விரதம் இருப்பார்கள்.  விரத முடிவில் புகழ்ப்பெற்ற பூச்சொரிதல் திருவிழா நடைபெறும்.தங்களின் உடல் வெப்பத்தைத் தான் வாங்கிக் கொண்டு, தங்களைக் காத்து ரக்ஷிக்கும் அம்பாளுக்கு பக்தர்கள் பூமாரி பொழிந்து அவளின் மனதையும் திருமேனியையும் குளிர்விப்பதாக ஐதீகம்.


மேலும் அப்போது நடைபெறும் தேர்த்திருவிழாவின் போது, திருவானைக்கா ஜம்புகேஸ்வரரும் அம்மனுக்குச் சீர் வரிசை அனுப்பி வைப்பார். தன் அண்ணன் ஸ்ரீரங்கம் ரெங்கநாதரிடம் இருந்தும் தைப் பூச திருவிழாவின் போது சீர்வரிசை பெற்றுக் கொள்வதால், அண்ணனிடமும், ஈசனிடமும் சீர் வரிசை பெறும் அம்மன் இவள் ஒருத்திதான் என்று சிலாகிக்கின்றனர் அவள் அடியவர்கள்.

தை வெள்ளித் திருநாளில், சௌபாக்கியத்தை தந்திடும் அன்னை சமயபுர மாரியம்மனை உளமார நினைத்து வணங்குவோம்.

மாரி திருக்கதையை மகிழ்ந்துமே கேட்டோரும்

பாடிப் படித்தோரும் பாக்கியத்தைத் தான் பெறுவர்

நாடித் துதிப்போரும் நற்கதியைத் தான் அடைவார்

ஆல் போல் தழைத்து அருகு போல் வேர் ஓடி

மூங்கில் போல் சுற்றம் முசியாமல் வாழ்ந்திருப்பார்

மங்களம் மங்களம் மாரியம்மன் தன் கதைக்கு

எங்கும் நிறைந்த ஈஸ்வரிக்கு மங்களம்.

 மாரியம்மன் தாலாட்டு!

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close