கை நிறைய குங்குமம் கொடுத்த பெரியவா!

  கோமதி   | Last Modified : 01 Feb, 2018 05:11 pm


வியாழன்கிழமை குருவாரம். குருமார்களைப் பற்றி படிப்பதும், அறிந்துக்கொள்வதும் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கும்.

கிட்டத்தட்ட 50 வருஷத்துக்கு முன்னால ஒரு வெள்ளிக்கிழமை அன்னிக்கு ஸ்ரீமடத்துல, சுவாசினி பூஜைக்கு ஏற்பாடு பண்ணியிருந்தா. பரமாசார்யா முன்னிலைல நடக்கற பூஜைங்கறதால எல்லா விஷயங்களையும் பார்த்துப் பார்த்து செஞ்சுண்டு இருந்தா. எல்லாரும் பரபரப்பா இயங்கிண்டு இருந்த அந்த சமயத்துல, ஒரே ஒரு பெண்மணி 30 - 35 வயசுதான் இருக்கும் அவளுக்கு. 50- 60 வயசுக்காராளே சுறுசுறுப்பா இயங்கிண்டு இருக்கறச்சே, அவ அப்படி நின்னது பலருக்கும் ஒரு மாதிரி இருந்தது. சிலர் அவளைப் பார்த்துட்டு, “அதோ அவளைப் பாரு… பூ இல்லாம பொட்டும் வச்சுக்காம.. இவளை எல்லாம் யார் இங்கே வரச் சொன்னா?” அப்படின்னு முணங்கினா. சிலர், அவளுக்குத் தர பூவும் பொட்டும் எடுத்துண்டு போனா, ஆனா, அவ அதை கவனிக்காத மாதிரி நாசூக்கா நகர்ந்துண்டா.

பூஜைக்கான ஏற்பாடுகளைவிட அவளைப் பத்தின பேச்சே கொஞ்சம் அதிகமா இருந்த சமயத்துல அங்கே வந்தார் பரமாசார்யா. கூட்டம் மொத்தமும் சட்டுனு அமைதியாச்சு. அருள் ததும்ப வந்து உட்கார்ந்த ஆசார்யா, சுத்துமுத்தும் ஒருதரம் பார்த்துட்டு, அந்தப் பெண்மணியைக் கூப்பிடச் சொன்னார்.

பவ்யமா வந்து அவர் முன்னால் நின்னா அந்தப் பெண்மணி , “சுவாசினி பூஜை நடக்கற இடத்துல நீ மட்டும் இப்படி மூளி நெத்தியோட இருக்கலாமோ? இந்தா இதை இட்டுக்கோ!” கை நிறைய குங்குமத்தை எடுத்து நீட்டினார் பரமாசார்யா.

“வேண்டாம் பெரியவா, நான் குங்குமம் இட்டுக்கக் கூடாது!” என்று அலறி சொன்னவ அதுக்கான காரணத்தையும் சொல்ல ஆரம்பிச்சா, ”என்னோட ஆத்துக்காரர் இந்திய ராணுவத்துல இருந்தார். ஆறுமாசத்துக்கு முன்னால எனக்கு மிலிட்டரிலேர்ந்து ஒரு கடுதாசி வந்தது. பார்டர்ல நடந்த ஒரு சண்டைல அவர் செத்துப் போயிட்டார்னும், எதிரிகள்கிட்டே சிக்கிண்டுட்ட அவரோட உடல்கூட கிடைக்கலைன்னும் அதுல எழுதி இருந்தா!

எனக்கு லோகமே இருண்டுடுத்து. இருந்தாலும் மனசை திடப்படுத்திண்டு அவருக்கு செய்ய வேண்டிய கர்மாவையெல்லாம் செஞ்சுண்டேன். அவரோட ஆன்மா சாந்தி அடைய, நான் இன்னும் அவருக்குச் செய்யவேண்டிய கர்மா என்னன்னு உங்ககிட்டே கேட்டுத் தெரிஞ்சுக்கதான் இங்கே வந்தேன். இங்கே வந்தப்புறம்தான் இப்படி ஒரு பூஜை நடக்கிறதே எனக்குத் தெரிஞ்சுது. இந்த சமயத்துல நான் இங்கே இருக்கிறது தப்புதான். மன்னிச்சுடுங்கோ. நான் இன்னொரு நாள் வந்து கேட்டுக்கிறேன்” கைகூப்பி நமஸ்காரம் பண்ணினா.


சட்டுன்னு சிலவிநாடி கண்ணை மூடிண்டார் பெரியவா. அதுக்கு அர்த்தம் தெரியாம, அங்கே இருந்த பலரும் அவ மேல பரிதாபப்பட, மெதுவா நடந்து வெளில போகத் தயாரானா, அந்தப் பெண்மணி.

“ஒன்னை யாரு போகச் சொன்னா? நீ இங்கே தாராளமா இருக்கலாம். பூஜையிலும் கலந்துக்கலாம்! உன்னோட ஆம்படையான் உசுரோடுதான் இருக்கார்” பெரியவா குரல்கேட்டு சட்டுன்னு திரும்பி வந்தவகிட்டே நிறைய குங்குமத்தை எடுத்துக் குடுத்தார் பரமாசார்யா.

கை நடுங்க, உடல் சிலிர்க்க, கண்ணுல ஜலம் முட்டிண்டுவழிய, பெருமூச்சு வாங்க அதை வாங்கி நெத்தி நிறைய இட்டுண்டா அந்தப் பெண்மணி. மகா பெரியவாளே அப்படிச்சொன்னதுக்கு அப்புறம் அங்கே மறுவார்த்தை எழுமா?

எல்லாருமா அந்தப் பெண்ணிற்கு மஞ்சள், குங்குமம், புடைவை, ரவிக்கைத் துணி, திருமாங்கல்யச் சரடு, புஷ்பம்னு எல்லாம் தந்து பூஜையிலும் கலந்துக்க வைச்சா.

அடுத்த வெள்ளிக்கிழமை மகாபெரியவாளை தரிசனம்பண்ண வந்தா, அதே பெண்மணி.

“பெரியவா… ஒரேடியா போய்ட்டார்னு நாங்க எல்லாரும் நினைச்சுண்டு இருந்த என்னோட ஆத்துக்காரர் உங்க ஆசிர்வாதத்துல, இதோ உசுரோட வந்துட்டார். இந்தியாவோட பார்டர்ல காவலுக்கு இருந்த இவர், எதிரிகளோட நடந்த சண்டைல குண்டடிபட்டு விழுந்துட்டாராம். இவர் செத்துட்டதா நினைச்சு, இழுத்துண்டுபோய் எங்கேயோ மலைமேல் வீசிட்டுப்போயிட்டாளாம் எதிரிகள். நம்ம நாட்டு வீரர்கள் ஒரு வாரம்தேடி அலைஞ்சுட்டு, உடலும் கிடைக்காததால இறந்துட்டதா தகவல் சொல்லிட்டா.

ஆனா, மலைமேல கிடந்த இவரோட உடல்ல கொஞ்ச நஞ்சம்உசுரு ஒட்டிண்டு இருந்திருக்கு. யாரோ மலை ஜாதிக்கார பார்த்துட்டு ஏதோதோ வைத்தியம் பண்ணி பொழைக்க வைச்சிருக்கா.

விழிச்சு எழுந்ததும், அவாளுக்கு நன்றி சொல்லிட்டு எப்படியோ தடுமாறி தத்தளிச்சு ஆத்துக்கு வந்து சேர்ந்துட்டார். அன்னிக்கு எனக்குக் குங்குமத்தைக் குடுத்த நீங்கதான் மலைவாசி ரூபத்தில இருந்து இவரை காப்பாத்தியிருக்கேள்” தழுதழுப்பா சொன்னா. ஆத்துக்காரரோட சேர்ந்து ஆசார்யாளுக்கு நமஸ்காரம் பண்ணினா.

மென்மையா புன்னகைச்ச ஆசார்யா, ”மலைவாசின்னா யாரு?

சதா மலைவாஸம் பண்ற அந்தப் பரமேஸ்வரன்தான் மலைவாசி. அவன்தான் உன் ஆத்துக்காரரை காப்பாத்தியிருக்கான். அதனால இனிமே உங்களுக்கு எந்தக்கொறையும்வராது. க்ஷேமமா இருங்கோ!” கை நிறைய குங்குமத்தைக்குடுத்து ஆசிர்வாதம் பண்ணினார்.

சந்தோஷமா வாங்கி நெத்தி நிறைய இட்டுண்டு, ஆனந்தமா புறப்பட்டா அந்தத் தம்பதி.

ஜெய ஜெய சங்கர ...

ஹர ஹர சங்கர...

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close