குருபக்திக்கு இலக்கணமான கூரத்தாழ்வார்!

  கோமதி   | Last Modified : 05 Feb, 2018 02:55 pm

கூரத்தாழ்வார் திருநட்சத்திரம்: தை மாத ஹஸ்தம்

மனிதனாகப் பிறந்தவனுக்கு, மாதா பிதாவிற்கு அடுத்து குருவே பிரதானம். ஈன்றவர்கள் மூலம் இவ்வுலகத்திற்கு வந்த நமக்கு குறை  குற்றங்களை போக்கி நல்வழியைக் காட்ட  நல்ல குருவினால்  மட்டுமே முடியும். குருவை மதித்துப் போற்ற தெரிந்தவனுக்கு இறைவனின்  அருள் முழுமையாக கிடைக்கும். பகவானுக்கு தன் அடியார்கள் மீது அளவிலா பிரியம் இருந்தாலும், அவர்களையும் விட, தன் அடியவர்களுக்கு அடியவராக இருப்பவரை இன்னும் அதிகமாக பிடிக்கும். தன் அடியாருக்கு தொண்டு செய்யும் அடியாருக்கு தன் மனதில் நித்திய இடத்தைக் கொடுத்து அருள் பாலிப்பார் என்பதற்கு உதாரணம் தான்  கூரத்தாழ்வார். அதனால்தான் பூலோக வைகுண்டம் என்ற போற்றப்படும் திருவரங்க கோவிலின் முதல்  சன்னதியே கூரத்தாழ்வார் சன்னதி தான்.

‘மொழியைக் கடக்கும் பெரும்புகழோன்’ என்று கூரத்தாழ்வாரைப் பற்றி திருவரங்கத்தமுதனார் தன்னுடைய இராமானுஜ நூற்றந்தாதியில் சிறப்பித்துள்ளார். குருபக்தியில் சிறந்த கூரத்தாழ்வாரைப் பற்றி தெரிந்துக் கொள்வோம்.

காஞ்சீபுரம் அருகே கூரம் என்னும் கிராமத்தில் பெரிய செல்வந்தர் குடும்பத்தில் பிறந்த கூரத்தாழ்வாரின் இயற்பெயர் திருமறுமார்பினன். ராமானுசரின் பிரதம சீடரான இவர் காஞ்சி வரதராஜப்பெருமாள் மீது அளவிலா பற்றுக் கொண்டவர். தனது செல்வத்தை ஏழை எளியோர்க்கு வழங்குவதில் பேரின்பம் அடைந்தார். ஒவ்வொரு நாளும் காஞ்சி வரதராஜப்பெருமாள் கோயில் திருக்கதவுகள் மூடியபின் தான் இவரது மாளிகையின் கதவுகள் மூடப்படும். ஆனால் ஒரு நாள் ஊர் திருவிழாவிற்கு செல்ல வேண்டியிருந்ததால் வழக்கத்தைவிட, சற்று முன்பாகவே அவர் இல்லக்கதவை மூடிவிட்டார்.

கதவை சாத்தும்போது, கதவில் கட்டப்பட்டிருந்த விலை உயர்ந்த மணிகளின் ஒலி கோயில் வரை கேட்கும். கூரத்தாழ்வார் வீட்டு மணியொலி வரஜராஜப்பெருமாள் சன்னதி வரை கேட்கவும் பெருந் தேவித்தாயார், சுவாமியிடம் "என்ன! அதற்குள் கோயில் அடைக்கும் சத்தம். நடை சாத்த நேரமாகிவிட்டதா?" என்று வினவினாள்.

சுவாமிக்கும் ஒன்றும் புரியாமல் போகவே, தனக்கு ஆலவட்ட கைங்கர்யம் செய்து வந்த திருக்கச்சி நம்பிகளிடம் இதைப் பற்றிக் கேட்க, அவரும் நடந்ததைச் சொன்னார். அதைக் கேட்ட பெருமாள், "ஆழ்வானின் செல்வத்திற்கு அத்தனை சிறப்பா? கோயில் கதவு மூடும் முன்னே அவன் வீட்டுக்கதவு மூடப்பட்டதே!" என்றார்

தாயாரும் நம்பியிடம் உத்தம ஆத்மாவான கூரேசனைதான் தான் காணவிரும்புவதாய் கூறினாள். “நான் நாயினும் கடையேன் எனக்குத் தாயாரை தரிசிக்கும் பாக்கியமும் இல்லை, தகுதியும் இல்லை .என் வீட்டுக் கதவுகளை அப்படிச் சத்தம் வருவது போல் சாத்தி, என் செல்வத் திமிரைக் காட்டி விட்டேனோ?” எனக்கூரேசர்  மிக வருந்தினாராம். 

மேலும் தனது எல்லாச் செல்வங்களையும் தானம் செய்ய ஆரம்பித்தார். செல்வச்செருக்கு, குலச்செருக்கு, கல்விச்செருக்கு என மூன்றையும் அறுத்தவர், என்பதால், முக்குறும்பை அறுத்தவர் எனப்பெயர்பெற்றார். கல்வியுடன் நற்பண்புகள் கொண்ட ஆண்டாள் என்ற பெயர் கொண்ட ஒரு நல்ல குணவதி தன் இல்வாழ்க்கை துணையாக்கிக் கொண்டார். தன் செல்வத்தை எல்லாம் தானம் செய்த பின்னர் தன் குருவான ஸ்ரீராமானுஜர் பொற்பாதங்களை  சரணடைந்தார். எந்த நிலையிலும், எம்பெருமானாரை பிரியாத நிலையில் தான் இருக்க வேண்டும் என்ற காரணத்தினால், அரங்கன் சேவை செய்ய எம்பெருமானார் திருவரங்கம் சென்ற பொழுது அவருடனே, இவரும் திருவரங்கம் சென்று, நம்பெருமாளுக்கு, எம்பெருமானாருடன் சேர்ந்து கைங்கர்யங்கள் செய்து கொண்டிருந்தார். அவ்வாறு  நீண்ட பயணத்திற்குப் பின் திருவரங்கம் அடைந்த அவர்கள், அங்கு ஒரு வீட்டில் தங்கினார்கள். மூன்று நாட்கள் உணவில்லாமல் இருவரும்  பட்டினி கிடந்தனர்.


தன் கணவருக்கு சேவை செய்வதையே வாழ்வின் நோக்கமாகக் கொண்ட ஆண்டாளம்மாள் தன் கணவர் இப்படிப் பட்டினியாக இருப்பதைப் பார்த்து மனம் வருந்தி, மனதில். "அப்பா, திருவரங்கனே! உனக்கு மட்டும் மூன்று வேளைகளும் இனிப்புடன் பிரசாதம் போகிறது. உன் பக்தன் இங்கு மூன்று நாட்கள் பட்டினியாக இருப்பது தெரியவில்லையா? நீ மட்டும் அங்கு வயிறாற அமுது உண்கிறாயே!" என்று ஸ்ரீரங்கநாதனைக் சேவித்தாள்.

அடுத்த சில நிமிடங்களில் அங்கு வந்த ஒருவர், ஒரு பொட்டலத்தைக் கொடுத்து, "அரங்கன் என்னை அனுப்பி, இதைக் கொடுத்து வரச் சொன்னார் என  கையில்  கொடுத்தார். அதில் அரவணைப் பிரசாதம் இருந்தது. ஆண்டாள் அதை எடுத்துத் தன் கணவரிடம் கொடுத்தாள்.

கூரத்தாழ்வார் தன் மனைவியிடம், அரங்கனை வேண்டினாயா என்று வினவ, "ஆம், மூன்று நாட்கள் என் கணவர் பட்டினி கிடக்கிறார். உனக்கு மட்டும் பிரசாதம் போகிறதே என்று ரங்கநாதனிடம் கேட்டேன் " என்றாள்.

வாழ்வியல் தேவைகள் அனைத்தின் மீதும் கொண்ட பற்றினை விட்டு வந்தபின்னும் அரங்கனிடம் நீ இப்படிவேண்டிக் கொள்ளலாமா சரி இனி இம்மாதிரி செய்யாதே எனச்சொல்லி அவர் அரங்க பிரசாதத்தில் தானும் சிறிது எடுத்துக்கொண்டு மனைவிக்கும் சிறிதுகொடுத்துவிட்டு இரவு முழுதும் திருவாய்மொழியை ஓதிய வண்ணமே கழித்தார்.

பரமனின் அருட் பிரசாதம் உண்ட பலனாய் பத்துமாததில் அவர்களுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. அவர்களுக்கு பராசரபட்டர் வியாசபட்டர் என்று திருநாமம்.

தீவிர சைவ பக்தனான குலோத்துங்க சோழன் வைணவத்தை அறவே வெறுத்தான். வைணவ மதத்திற்கு தலைவராக இருக்கும், ராமானுஜரை அழைத்து, அவரிடம் சிவமே சிறந்தது என்று கையெழுத்து வாங்கினால், வைணவத்தை வேரோடு அழித்து விடலாம் என்று கூரத்தாழ்வானின், சிஷ்யனாக இருந்த நாலூரான் என்பவன் அரசனிடம் கூறினான். அரசனும்  சேவகர்களை அனுப்பி, ராமானுஜரை அழைத்துவரப் பணித்தார். இதனைக் கேள்வியுற்ற கூரத்தாழ்வான், எம்பெருமானார் அரசனிடம் சென்றால், அவருக்கு தீங்கு ஏற்படும் என்று அஞ்சி குருவை காப்பாற்ற வேண்டியது, சிஷ்யனின் கடமை என்று அவரே, ராமானுஜர் வேடத்தில் அரசனை சந்திக்க சென்றார். அரசன் கூரத்தாழ்வானின் கண்களை பிடுங்க உத்தரவு இட, ஆழ்வானோ அதற்கு சற்றும் இடம் கொடுக்காமல் தன் கண்களை தானே பிடுங்கிக் கொண்டார்.

சுமார் 12 வருட காலம் கழித்து ராமானுஜரும், கூரத்தாழ்வாரும் காஞ்சியில் சந்தித்தனர். அப்போது ராமானுஜர் காஞ்சிப் பேரருளாளனிடம் வேண்டிக் கொண்டதால், கூரத்தாழ்வார் இழந்த பார்வையை மீண்டும் பெற்றார். இதிலிருந்து குருவின் மேல் ஆழ்வானுக்கு இருந்த ஒப்பற்ற குருபக்தி உலகிற்கு தெளிவாயிற்று.

ஒருநாள் திருவரங்கனின் திரு முன்பு ஆழ்வார் சென்று, ”பொன்னி சூழ் அரங்கமேய பூவை வண்ண மாய, கேள்!’ என்னும் திருமழிசைபிரானின் பாசுரத்தை உருக்கத்துடன் பாடி, "அடியேனுக்கு உன் திருவடி ஏகும் பேற்றினைக்கொடு” என்ற வேண்டுகோளை வைத்தார். எம்பெருமானும் அகம் மகிழ்ந்து, “பரமபதம்  தந்தோம்” என்று அருளினார்.

இதனால் ராமானுஜர்  பதற்றம் அடைந்தவராக  தன் சீடனிடம், “கூரேசா நீ ஏன் முந்திக்கொண்டாய்?’ என்று கேட்க அதற்கு கூரேசர், “எம் குருவான உம்மை எதிர்கொண்டழைக்க நான் முன்னே செல்லவேண்டாமா?’ என்று சொல்லவும், ராமானுஜர் மனம் நெகிழ்ந்தார். 

கூரத்தாழ்வார்  ராமானுஜரிடம் கொண்டிருந்த குருபக்தி, நாம் அனைவரும் பின்பற்றக்தக்கது. இன்று தை ஹஸ்தம், கூரத்தாழ்வார் பெருமானின் திருநட்சத்திரம். அவரை தொழுது அதன் மூலம் திருமால் திருவடி தொழும் பாக்கியம் பெறுவோம்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.