சண்டேச பதம் அடைந்த விசாரசர்மன்

  கோமதி   | Last Modified : 06 Feb, 2018 04:01 pm


வேதியர் வம்சத்தில் பிறந்த  எச்சதத்தன் என்பவருக்கு உலகமே வணங்கி போற்றும் விசாரசர்மன் என்ற குழந்தை பிறந்தது. வேதியர் வழக்கப்படி, ஏழு வயதில் உபநயனம் ஆனவுடன் வேதம் முறையாகப் பயின்று வரும் இறை பக்தியுடன், ஒழுக்க சீலனாக வளர்ந்தது அக்குழந்தை. ஊரிலுள்ள பசு மாடுகளை மண்ணி ஆற்றங்கரை அருகில் மேய்த்து, ஆற்று மணலால் சிவலிங்கம் செய்து அதை பசும் பாலால் அபிஷேகம் செய்து வந்தான் அச்சிறுவன்.

ஊரார் இதைப் புகார் செய்ததால் தந்தை எச்சதத்தன் உண்மையை அறிய மரத்தின் பின் நின்று பார்த்துக் கோபம் கொண்டான். கோபத்தில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல், சிவபூஜைக்காக வைத்திருந்த பால் குடத்தைக் காலால் உதைத்தான். சிவத்தியானம் நீங்கிக் கண் விழித்த பாலகன், அறிவிழந்து சிவ அபச்சாரம் செய்தது தனது தந்தையே  என்றாலும் தண்டிக்கப்படவேண்டியவர் என்று தீர்மானித்து அருகில் இருந்த மாடு மேய்க்கும் கோலை கையில் எடுத்துவீச, அது மழுவாக மாறி , தகப்பனாரின் உதைத்த காலை வெட்டி வீழ்த்தியது.

அபச்சாரம் செய்தது தனது தந்தையே ஆனாலும் தண்டித்த அக்குழந்தைக்குமுன், உமையொரு பாகனான இறைவன் உமா தேவியோடு விடை வாகனத்தில் காட்சிஅளித்தார். முனிகள் வேதமோத, பூத கணங்கள் அருகில் நிற்கவும் கருணையுடன் வெளிப் பட்ட புண்ணிய மூர்த்தியைக் கண்டு ஆனந்தத்தின் எல்லைக்கே சென்ற அப்பாலகன் சுவாமியின் பாத மலர்களை வீழ்ந்து வணங்கினான்.

“என்னிடம் வைத்த பக்தியால் தகப்பனாரின் காலை வெட்டின உனக்கு அடுத்த தந்தை இனி நானே" என்று சொல்லி அப்பாலகனைத் தழுவி கருணையோடு தடவி உச்சி மோந்து, "உனக்கு சண்டேச பதம் தந்தோம். இனி நாம் உண்பதும் உடுப்பதும் சூடுவதும் உன்னிடமே வந்து சேரும்" என்று சொல்லித் தனது சிரத்தில் இருந்த கொன்றை மாலையை எடுத்து அக்குழந்தைக்குச் சூட்டினார்.

எனவேதான் இன்றும் சிவாலயங்களில் வடக்குப் பிராகாரத்தில், இறைவன் நீராடிய நீர் வரும் கோமுகத்தின் அருகில் தெற்கு நோக்கியவாறு சண்டிகேஸ்வரர் எனும் சிவபத சேகரனின் சன்னதியை நம்மால் காண முடியும். இவரை தரிசித்தால்தான் சிவ தரிசனம் செய்த பலன் கிடைக்கும். சிவசிந்தனையிலேயே தனது காலத்தை கழிக்கும் சண்டிகேஸ்வரரின் தவத்தை கலைக்கும் விதமாக இவரின் குறுக்கில்செல்லகூடாது.

"தாதைதாள் மழுவினால் எறிந்த

அம்மையான் அடிச்சண்டிப் பெருமானுக் கடியேன்"

என்று சுந்தர் பெருமானால் போற்றப்பட்டவர் சேய்ஞலூர் விசாரசருமர் .

இவ்வாறு தனது ஒப்பற்ற சிவபக்தியால், இறைவனால் ஆட்கொள்ளப்பட்டு சண்டேசர் பதத்தை அடையும் திருவருளை பெற்றார்.

இவ்வாறு சண்டேச பதத்திற்கு வருபவர்கள், சிவத்திருமேனியுடன், சிவகணங்களுக்குத் தலைவராகவும், சிவ நிர்மால்யத்தை பெறும் உரிமையுடையவராகவும், திருகோயில் நிர்வாக உயரதிகாரியாகவும், சிவதரிசனப் பலங்களை வழங்குபவராகவும் விளங்குகின்றார்.

மனிதனாகப் பிறந்து தெய்வநிலைக்கு உயர்ந்த இவரது குருபூஜை, தை மாத உத்திரம் நட்சத்திரத்தில் நடத்தப்படுகிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close