யோகங்களை அள்ளித் தரும் பார்த்தசாரதி பெருமாள்

  கோமதி   | Last Modified : 19 Feb, 2018 04:13 pm

திருமாலின் அவதாரங்களில் அனைவரின் மனங்களையும் கொள்ளைக் கொண்டது கிருஷ்ணாவதாரம் தான். மக்களோடு மக்களாக மிக எளிமையாக கலந்து, தன் அடியவர்கள் எப்படி நினைக்கிறார்களோ அப்படியே காட்சியளித்த அவனின் தோழமையான சுபாவம் தான் அவன் பால் அவன் அடியவர்களை பித்துக் கொள்ளச் செய்தது. கடவுளாகவே இருந்தாலும் தன் நண்பன் பார்தனுக்காக பாரதப் போரில் தேரோட்டியாக இருந்து, போரின் போக்கையே மாற்றியவன் மாயக்கண்ணன். தன் பக்தனுக்காகத் சாரதியாக ஸ்ரீமந்நாராயணன் காட்சி தந்த திவ்யதேசமே திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் திருக்கோவில். வேறெங்கும் இல்லாதபடிக்கு நின்ற திருக்கோலத்தில் ,மூலவர் 9 அடி உயரத்துடன், தேரோட்டிக்கே உரிய பெரிய மீசையுடன்,மிடுக்குடன் கம்பீரமாக குடும்ப சமேதராக அருள்புரியும் அற்புத திவ்யதேசம்.

ஒரே கோவிலில் ஐந்து பெருமாள்களின் கருவறையைக் கொண்ட திருத்தலம். ஐந்து மூலவர்கள் தனித்தனியாக சேவை சாதிக்கும் ஒப்பற்ற திருக்கோவில் அருள்மிகு வேங்கடகிருஷ்ணர் (பார்த்தசாரதி) அருள்மிகு மனநாதர் (அரங்கநாதர்) அருள்மிகு இராமபிரான் அருள்மிகு கஜேந்திரவரதர் அருள்மிகு தெள்ளிய சிங்கர் (நரசிம்மர்). பேயாழ்வார், திருமழிசை ஆழ்வார் , திருமங்கையாழ்வார் ஆகியோர் மங்களாசாசனம் பாடியருளிய திவ்யதேசம்.

சங்கு சக்ர கதாதாரியான நாராயணன் ,இந்த திருத்தலத்தில் சக்கரம் இல்லாமல் காட்சியளிக்கிறார். மகாபாரத போர் முடியும் வரையில் ஆயுதம் எடுப்பதில்லை என உறுதி கொடுத்திருந்ததால்,இங்கு தன்னுடைய பிரதான ஆயுதமான சக்கரம் இல்லாமல் காட்சிதருகிறார் இவர். மேலும் இத்தலத்தில் கிருஷ்ணர் தெய்வமாக இருந்தாலும் மானிட ரூபத்தில் இருப்பதால் எப்போதும் போல் நான்கு கரங்களாக இல்லாமல்,இரண்டு கரங்களுடனே காட்சித்தருகிறார். குடும்பத்தின் அருமையை மக்களுக்கு உணர்த்துவது போல் இங்கு பெருமாள் காட்சி தருகிறார்.மூலஸ்தானத்தில் வேங்கட கிருஷ்ணன், ருக்மணி தாயார், மார்பில் மகாலட்சுமி ,வலப்புறத்தில் அண்ணன் பலராமர், இடப்புறத்தில் தம்பி சாத்யகி, மகன் பிரத்யும்னன் மற்றும் பேரன் அநிருத்தன் ஆகியோர் இருக்கின்றனர்.

தருமத்தின் பக்கம் நின்று, போரில் பார்த்தனுக்குத் தேரோட்டியாக நின்றதால், பீஷ்மர் எய்த அம்புகளால் ஏற்பட்ட வடுக்களை தாங்கிய வண்ணம் இருக்கிறார் உற்சவர். இதனால் அழகு நிலையில்லாதது என்ற மிகப்பெரிய வாழ்வியல் யதார்த்தத்தை தன்னை காணவரும் பக்தர்களுக்கு தினம் தினம் உணர்த்திக் கொண்டிருக்கிறார் பெருமாள்.

துவாபரயுகம் முடிவுக்கு வந்தது. கிருஷ்ண பரமாத்மா வைகுண்டம் செல்கிறார். அப்போது அடுத்து கலியுகம் தோன்றுவதற்கான சகுனங்கள் தோன்றுகின்றது. கலி அதிகமானால் பூமியில் அதர்மங்கள் தலைதூக்கும் என கவலைப்பட்ட ஆத்ரேய மகரிஷி தனது குருவான வியாச மகிரிஷியிடம் நல்லவர்கள் கலியின் கொடுமையிலிருந்து விடுபட்டும் வழியை கூறுமாறு வேண்டினார். அதற்கு வியாசரும் , அதுவரை தாம் ஆராதித்து வந்த பார்த்தசாரதி பெருமாளின் திருமேனி உருவத்தைத் தந்து தென்பாரதத்தில் துளசிவனம் நிறைந்து காணப்படும் விருந்தாரண்யம்என்னும் இடத்தில்,அருள்மிகு பார்த்தசாரதி சுவாமியின் திருவுருவத்தை வைத்து வழிபாடு செய்ய சொன்னார். கலியின் கொடுமையிலிருந்து இவ்வுலகை காக்கும் பொருட்டு பார்த்தசாரதி சுவாமி இங்கு வைக்கப்பட்டதால் அன்றுமுதல் இக்கோவிலில் அருள்மிகு பார்த்தசாரதி சுவாமியே முதன்மையான கடவுளாக வணங்கப்பட்டு வருகிறார்.

தொண்டை மண்டல அரசன் சுமதி திருவேங்கடமுடையான் பக்தன்.அரசனுக்கு,பார்த்தனுக்கு சாரதியாக இருந்த, கிருஷ்ணனின் திருக்கோலத்தைத் காணஆவல் எழுந்தது.அவனுக்கு மனமிறங்கிய ஏழுமலையான்,அவன் கனவில் தோன்றி விருந்தாரண்யம் சென்றால் விருப்பம் நிறைவேறும் என்றுசொல்ல அதன்படியே மன்னன் சுமதி, விருந்தாரண்யம் வந்து அருள்மிகு பார்த்தசாரதி சுவாமி திருக்கோலத்தைக் கண்டு மனம் குளிர சேவித்தான். திருமலையில் உள்ள வேங்கடநாதனை இங்கு கிருஷ்ணனாக அரசன் உணர்ந்ததால்,வேங்கட கிருஷ்ணன் என்ற திருநாமம் சூட்டி வழிபட்டு வந்தான். அன்று முதல் இத்திருக்கோவில் மூலவருக்கு வேங்கட கிருஷ்ணன் என்ற திருநாமம் நிலைத்தது.

முன்னொரு காலத்தில், திருமாலை தனது மருமகனாக அடைய வேண்டி பிருகு மகரிஷி , இத்தலத்தில் தவமிருந்த போது, அங்கிருந்த புஷ்கரணியில் மலர்ந்த அல்லி மலரில் தாயார் தோன்றினார். பிருகு அவருக்கு வேதவல்லி என பெயரிட்டு வளர்த்தார். அவளுக்கு திருமணப்பருவம் வந்த போது, திருமால் அரங்கநாதராக இத்தலம் வந்து அவளைத் திருமணம் செய்து கொண்டார் என்கிறது புராணம்.

ஒருமுறை விகட முனிவர் விருந்தாரண்யம் வந்து அத்திரி மகரிஷியுடன் சேர்ந்து தவம் செய்தார். இருவரும் திருமாலின் நரசிம்ம அவதாரத்தை மனதில் வரித்தவாறே பல காலம் தவம் செய்தனர். அவர்களது தவத்திற்கு மனமிறங்கிய நரசிம்ம மூர்த்தி அவர்களுக்கு காட்சி தந்தார். நரசிம்ம சுவாமியின் உக்கிரமான கோலத்தைக் கண்டு நடுங்கிய ரிஷிகள், சாந்த ஸ்வரூபியாக காட்சி தரும்படி வேண்டிகொண்டனர். மனமிறங்கிய நரசிம்ம சுவாமியும் யோக நிலையில் யோக நரசிம்மராகக் காட்சி தந்து அருளினார். ரிஷிகளின் வேண்டுகோளின்படி பெருமாளும் தெள்ளிய சிங்கர் என்ற திருநாமத்த்துடன், யோக நரசிம்மராக இத்தலத்தில் குடிகொண்டார் என்பது வரலாறு. நாள்தோறும் அதிகாலையில் அருள்மிகு யோக நரசிம்மர் சுவாமிக்கே இத்திருத்தலத்தில் முதல் பூஜை நடைபெறுகிறது. நரசிம்ம சுவாமி யோக நிலையில் இருப்பதால் ,இவரது சன்னிதிகளில் உள்ள மணிகளில் ஒலி எழுப்பும் நாக்குகள் இல்லை. யோக நிலையில் மேற்கு நோக்கி அருள்பாலிக்கும் தெள்ளிய சிங்கரை சேவிக்க வரும் பக்தர்கள் இவரை வலம் வரும்போது சன்னதி பின்புற மேடையில் உப்பு, மிளகாய் சேர்ப்பது வழக்கத்தில் உள்ளது. இதனால்,பக்தர்களின் துன்பங்கள் இவரின் தரிசனம் கண்டதும், உப்பு போல் கரைந்து, நோய்கள் மிளகு போல் உதிர்ந்து விடும் என்பது ஐதீகம்.

சங்கீத மேதை தியாக முத்துசுவாமி தீட்சிதர், தியாகராஜ சுவாமிகள், பாரதியார், விவேகானந்தர், கணிதமேதை இராமானுஜம் ஆகியோர் இத்தலத்தில் பார்த்தசாரதி பெருமாளை வழிபட்டுள்ளனர். நாமும் அருள் நிறை பார்த்தசாரதி சுவாமியை சென்று வணங்கி யோகங்கள் பல பெறுவோம்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close