தித்திக்கும் திருப்பம் தரும் திருப்பட்டூர் பிரம்மா!

  கோமதி   | Last Modified : 15 Feb, 2018 02:58 pm


பொதுவாக மனிதர்கள் தங்கள் துயரங்களை தொலைக்கவே கோயில் கோயிலாக தெய்வங்களை தேடித்தேடி அலைகின்றனர். கோயில்களில் பலவிதமான பிரார்த்தனைகள் செய்துவருகின்றனர். சிலரோ தங்கள் வாழ்க்கையில் தொடர்ந்து  துயரங்கள் தோல்விகள், மன வேதனைகளை அனுபவிக்கும்போது எல்லாம் என் தலைஎழுத்து என்று தங்களைத்தானே  நொந்து கொள்கிறார்கள். உங்கள் தலை எழுத்து எதுவாக இருந்தாலும், தனது கருணையினால் தீராத சிக்கல்களை தீர்த்து வைக்கும் அற்புதத்தலம் தான் திருப்பட்டுர். திருச்சி - பெரம்பலூர் தேசிய நெடுஞ்சாலையில் திருச்சியிலிருந்து சுமார் 30 கி.மீ தொலைவில் உள்ளது திருப்பட்டூர் என்ற இந்த அற்புத திருத்தலம்

படைக்கும் கடவுள் பிரம்மன், இந்த திருத்தலத்தில் தன்னை நாடி வரும் பக்தர்களின் தலைவிதியை சீரமைத்து, அவர்களின்  மனக்குறைகளை போக்கி வருகிறார்.  இப்படி பிரம்மாவின் அருளாசிக்கு பின்னணியில்  அற்புதமான புராண  வரலாறு ஒன்று  உள்ளது.

படைக்கும் தொழிலை கடமையாக கொண்ட   பிரம்மனுக்கு முதலில் ஐந்து தலைகள் இருந்தன. இதனால் தானும் ஐந்து தலைகள் கொண்ட ஈசனும் ஒன்று தான் என அகந்தை கொண்டார் பிரம்மன். அதுமட்டுமன்றி ஈசன் அழிக்கும் கடவுள் தான், நானோ படைக்கும் பெரும் ஆற்றல் பெற்றவன் என்ற இறுமாப்பும் பிரம்மாவுக்கு ஏற்பட்டது. இறைவனின் திருவிளையாடல்கள் மானுட சமுகத்திற்கு பல பாடங்கள் சொல்லித்தரும் கைவிளக்குகள். பிரம்மாவின் அகந்தையை அழித்திட தீர்மானித்தார் சிவபெருமான். ஐந்து தலைகள் தானே  பிரம்மாவின் அகந்தைக்கு காரணம் என்று ஐந்தாவது தலையை கொய்துவிட்டார்.

ஒரு தலையை கொய்துவிட்ட ஈசன் , பிரம்மாவின்  படைக்கும் ஆற்றலையும் பறித்தார். படைப்பாற்றலை இழந்த பிரம்மா தன் அகந்தையின் விளைவு தான் இது என்று தவறை உணர்ந்தார்.தனது தவறை மன்னித்து மீண்டும் படைக்கும் ஆற்றலை தனக்கு வழங்கிட வேண்டி பல தலங்களில் சிவபெருமானை பிரார்த்தனை செய்தார். அப்படி பிரம்மன் ஈசனை வழிபட்ட தலங்களில், சிவலிங்கங்கள் பிரம்மபுரீஸ்வரர் என்று இன்றளவும் அழைக்கப்படு கின்றன.

திருப்பட்டுர் திருத்தலத்தில் துவாதச லிங்கத்தை (12 லிங்கங்கள்) பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தினார் பிரம்மா. பிரம்மனின் பக்தியை கண்டு மெச்சிய ஈசன், படைப்பாற்றலை மீண்டும் பிரம்மாவுக்கு  வழங்கினார். மேலும் இத்திருத்தலத்தில் வந்து உன்னை வழிபடும் பக்தர்களின்  விதியை மாற்றி, அவர்களுக்கு நீ நன்மைகள் அருளச்செய் என்று அருள்பாலித்தார் எம்பெருமான் சிவன்.

திருப்பட்டூரில் உள்ள பிரம்மாவை தரிசிக்கும் விதி யாருக்கு உள்ளதோ அவர்களுடைய விதியை மாற்றவும்; அதனால் அவர்களுக்கு கூடுதல் நற்பலன்கள் கிட்டவும் அருள்புரியும் வரத்தை சிவபெருமானிடமே பிரம்மா பெற்ற திருத்தலம் இது. எனவே இங்கு அருள்பாலிக்கும் பிரம்மனை தரிசித்து பிரார்த்தனை செய்யும் பக்தர்களின் தலையெழுத்து மாறுகிறது . துயரங்கள் தொலைந்து போகின்றது. வாழ்க்கையின் வசந்தம் வீசத்தொடங்குகிறது.

வட இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீருக்கு அருகில் புஷ்கர் என்ற இடத்திலும், தமிழகத்தில் தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகில் திருகண்டியூரிலும், திருச்சியை அடுத்த உத்தமர் கோயிலிலும், கரூர் மாவட்டம் கொடுமுடியிலும், திருநெல்வேலி அருகில் பிரம்ம தேசத்திலும், திருப்பட்டூரிலும் என இந்தியா முழுக்க ஆறு இடங்களில் மட்டுமே பிரம்மாவுக்கு கோயில் அல்லது தனிச்சன்னதிகள் உள்ளது. இந்த பட்டியலில்  இந்தியாவிலேயே மிக பிரமாண்டமான  உருவத்தில் பிரம்மா, தமிழகத்தில்  திருச்சிக்கு அருகில்  உள்ள இந்த  திருப்பட்டூர் திருத்தலத்தில் தான் அருள்பாலித்து வருகிறார்.

திருப்பட்டூரில் ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் கீழ்திசை நோக்கி அமைந்திருக்கிறது  பிரம்மபுரீஸ்வரர் ஆலயம். இங்கு அருள்பாலிக்கும் இறைவன் பிரம்மபுரீஸ்வரர், இறைவி பிரம்மநாயகி.

திருப்பட்டுர்  பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தில் உள்ளே நுழையும் போது கண்களில் தென்படுகிறது  வேத மண்டபமும் நாத மண்டபமும். இவற்றை கடந்து வரும் அர்த்த மண்டபத்தை அடுத்து உள்ள கருவறையில் இறைவன் பிரம்மபுரீஸ்வரர் லிங்கத் திருமேனியராக காட்சி தருகிறார். மண்டூகநாதர், கைலாசநாதர் என்பதும் பிரம்மபுரீஸ்வரரின் பிற திரு நாமங்கள். இத்திருத்தலத்தில் அருள் பாலிக்கும் அன்னை பிரம்ம நாயகிக்கும், பராசக்தி, பிரம்ம சம்பத் கௌரி என்ற திருநாமங்கள்  உண்டு.

பல்லவர் காலத்தில்  தொடங்கிய திருப்பட்டுர் ஆலயத்தின் திருப்பணிகள் நாயக்கர் காலம் வரை பல மன்னர்களால் தொடர்ந்து செய்யப்பட்டது. அத்தனை மன்னர்களும் பிரம்மாவின் அருளாசி பெற்ற அருளாளர்கள். இத்திருக்கோயிலில் ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதம் 15, 16, 17 தேதிகளில் காலையில் சுமார் 6.30 மணிக்கு சூரிய பகவான் தன் பொற்கதிர்களால் தழுவி பிரம்மபுரீஸ்வரருக்கு ஆராதனை செய்யும் காட்சி நம்மை மெய்சிலிர்க்க வைக்கும் அற்புதம்.

திருப்பட்டுர் பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயிலின் உட்பிராகாரத்தில் மூலவருக்கு வடபுறத்தில் தனிச் சன்னதியில் ஆறு அடி உயரம் ஆறு அடி சுற்றளவில் முன்பக்கம் மூன்று முகங்களும் பின்புறம் ஒரு முகமும் ஆக நான்கு முகங்களுடன்  தாமரை மீது பத்மாசனக் கோலத்தில் அமர்ந்த நிலையில் காட்சியளிக்கும் பிரம்மதேவன், தனது வலது கையில் ருத்ராட்ச மாலையையும், இடது கையில் கமண்டலத்தையும் ஏந்திக் அருள்பாலிக்கிறார்.

திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் பிரம்மன் சன்னதி பக்தர்களின் கூட்டத்தால் நிரம்பி வழியும். பக்தர்கள் தாங்களே அரைத்துத் தரும் மஞ்சள் காப்பில் மங்களகரமாக காட்சி தருகிறார் பிரம்மா. மஞ்சள் நிற மினுமினுப்பில்  குருவின் அதிதேவதையான பிரம்மாவை நாம் தரிசிக்க மனம் ஆனந்தம் அடைகிறது. குருவின் பார்வை நம் மீது பட்ட நொடிப்பொழுதில் நாம் புதிதாக பிறக்கின்றோம். துன்பங்கள் நீங்கிட திருப்பட்டூர் செல்வோம். தித்திக்கும் திருப்பம் நமக்கு நிச்சயம்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.