சிவனுக்கு பிரம்மஹத்தி தோஷம் நீக்கிய மேல்மலையனூர் அங்காளம்மன்

  கோமதி   | Last Modified : 18 Feb, 2018 11:57 pmநம்முடைய வழிபாட்டு முறைகளில் பெண் தெய்வங்கள் மிக முக்கியத்துவம் பெறுபவை . தாயின் கருணையோடு தன்னை நாடி வரும் பக்தர்களின் துயரங்களை துடைத்தெறிந்து அருள் பாலிக்கிறாள் அன்னை ஆதிபராசக்தி. தாயினும் கருணை மிகுந்த பெண் தெய்வங்களை நாடி செல்ல முக்கிய காரணம் எளிமையான வழிபாடு முறைகள். பல குக்கிராமங்களில் இன்றைக்கும் கிராம தேவதைகள் பல லட்சம் மக்களுக்கு அருள் பாலித்து காத்து வருகின்றன.

சமயபுரம். கோட்டை மாரியம்மன், பெரியபாளையத்தம்மன் இப்படி பிரசித்தி பெற்ற கோயில்கள் பட்டியலில் குறிப்பிடத்தக்கது,மேல்மலையனூர் அங்காளம்மன் ஆலயம். விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் இருந்து வடக்குதிசையில் 20 கிலோ மீட்டர் தூரத்திலும், திருவண்ணாமலையில் இருந்து கிழக்கு திசையில் 20 கிலோ மீட்டர் தூரத்திலும்  அமைந்துள்ளது இந்த திருக்கோயில்.

அமாவாசை நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மேல்மலையனூர் அங்காளம்மனை  நாடி தேடி எங்கிருந்தும் ஓடி வந்து விடுகின்றனர். தீய சக்திகள் சில நேரம் பலவீனமான மனிதர்களை பிடித்து பேயாட்டம் ஆடி விடுகின்றது. அப்படி தீய சக்திகளின் ஆதிக்கத்தில் சிக்கி மன நிம்மதி இல்லாமல் போன பலரை மீட்டு கொடுத்திருக்கிறாள் அன்னை அங்காளம்மன்.

மேல்மலையனூர் அங்காளம்மன் ஆலயம் தல வரலாறு


பல திருக்கோயில்களின் வரலாறு இறைவனின் திருவிளையாடல்களின் சாட்சியாக விளங்குகிறது. தேவலோகத்தில்  காக்கும் கடவுள் ஈசனுக்கும் படைக்கும் கடவுள் பிரம்மாவுக்கும்  ஒரு ஈகோ பிரச்சனை உருவாகிவிட்டது. ஈசனுக்கு மட்டுமல்ல தனக்கும் ஐந்து தலைகள் இருக்கிறது. எனவே ஈசனும் நானும் சமம் என கருதியதுடன் நில்லாமல் யாரையும் மதிக்காமல் ஆணவத்துடன் நடந்து கொண்டார் பிரம்மா. இதனால் கோபம்  கொண்ட ஈசன் பிரம்மாவுக்கு  பாடம் கற்பிக்க , பிரம்மாவின் ஐந்தாவது தலையை  தனது சூலாயுதத்தால் கொய்துவிட்டார். அதில் இருந்து தான் பிரம்மா நான்முக கடவுள் ஆனார். பிரம்மாவின் தலையை கொய்துவிட்டதால் ஈசனுக்கு பிரம்மஹத்தி தோஷம்  ஏற்பட்டுவிட்டது,

பிரம்மஹத்தி தோஷம் பீடிக்கப்பட்டு, பித்துபிடித்த நிலையில் கையில் மண்டையோடும், மற்றொரு கையில் சூலாயுதத்துடனும் உடலெங்கும் சாம்பலை பூசி கொண்டு எம்பெருமான் ஈஸ்வரன் ஊர், ஊராக அலைந்தார். உலகம் முழுவதும் அலைந்துவிட்டு  மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலை வந்தடைந்தார் ஈசன். அப்போது  அங்காள பரமேஸ்வரி அம்மன், ஈஸ்வரன் கையில் இருந்த கபாலத்துக்கு உணவிட்டு, சாதத்தை கீழே சிதறிபோகும் படி செய்தார். அப்போது சிவன் கையில் இருந்த கபாலம் கீழே இறங்கி சாதத்தை பொறுக்கியது. உடனே அங்காள பரமேஸ்வரி அம்மன் விஸ்வரூபம் எடுத்து கபாலத்தை காலால் மிதித்து அதை அடக்கினார். அந்த நொடிப்பொழுதில் ஈசனைப் பீடித்திருந்த  பிரம்மஹத்தி தோஷம் நீங்கியது.


ஈசனின் பிரம்மஹத்தி தோஷம் நீக்க கபாலத்தை அடக்கிய அங்காளம்மனின் கோபம் தணியவில்லை. அங்காளம்மனின் கோபம் தணிக்க  , தேர்த்திருவிழா நடத்த வழிவகை செய்தார் மகாவிஷ்ணு . தேவர்களும், முனிவர்களும் அம்மனுக்கான தேரின்  ரதத்துக்கு சக்கரமாகவும், அச்சாணியாகவும், மாடங்களாகவும், மரப்பலகைகளாகவும், சிம்மாசன மேடையாகவும் மாறி நின்றனர். இதனால் சாந்தியடைந்த அங்காளம்மன் தேரில் ஏறி மேல்மலையனூரில் ஊர்வலமாக வந்து அருள்பாலித்தார். அம்மனின் தேரோட்டம் முடிந்ததும் தேவர்களும், முனிவர்களும் தேரைவிட்டு அகன்று சுயரூபம் பெற்று மறைந்து விடுகின்றனர். இந்த ஐதீகத்தின்படி இப்போதும்  ஒவ்வொரு ஆண்டும்  தேரோட்ட நிகழ்ச்சி முடிந்தபிறகு அந்த தேரை பிரித்துவிடுவார்கள். அடுத்த ஆண்டின்  தேரோட்டத்துக்கு புதிய தேர் செய்யப்படும்.

மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோயிலில் வருடந்தோறும்  மகாசிவராத்திரியையொட்டி 10 நாள் பிரம்மோற்சவ விழா நடைபெறுகிறது . அந்த திருவிழாவில்  தேரோட்டம் நடைபெறும். ஒவ்வொரு ஆண்டும் தேரோட்டத்திற்கு என புதிதாக தேர் செய்யப்படுகிறது

பேய்களை விரட்டும் அங்காளம்மன்

தீய சக்திகள் , பேய் பிடித்த பெண்கள் இந்த திருக்கோவிலில் அமைந்துள்ள அக்னி தீர்த்தத்தில் நீராடி விட்டு ஈரச்சேலையுடன் கோவிலுக்கு வருகிறார்கள். கோவில் பூசாரி அந்த பெண்ணின் தலையில் கபால தீர்த்தத்தை தெளிக்கிறார். அதன் பிறகு அந்த பெண்ணின்  உடல் முழுவதும் மயான சாம்பல் பூசப்படுகிறது. இதனால் அவளைப்பிடித்து இருந்த பேய்விலகிவிடுகிறது என்பது நம்பிக்கை.

பேய் , தீயசக்திகள் என்பது நமது மனதை பிடித்து தீராத துயரங்கள் தரும் எதிர்மறை எண்ணங்களே. அன்னை அங்காளம்மன் திருக்கோயிலில் அம்மனை தரிசனம் செய்ய, நாம் மீண்டும் புதிதாக பிறந்த புத்துணர்ச்சி ஏற்படுகிறது. நமது அக இருள் விலகி வாழ்க்கையை பெரு வெளிச்சத்துக்கு கொண்டு வருகிறாள் கருணை வடிவமான அன்னை மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி.

ஓம் சக்தி ஆதி பராசக்திராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.