சித்தர்கள் அறிவோம் - இனி துயரங்கள் இல்லை – ஆனந்தம் தரும் சக்கரை அம்மா

  கோமதி   | Last Modified : 20 Feb, 2018 12:10 pm


“மறக்காமல் இருந்தால் : இறக்காமல் இருப்பாய்

இறக்காதிருந்தால் : பிறகாது இருப்பாய்

அதனால் மறக்காமல் இரு.”

இதுவே பிறவிபெருங்கடலில் மீண்டும்  மீண்டும் சிக்கித் தவிக்காமல் இருக்க இறைவன் ,அன்னை சக்கரை அம்மாளுக்கு அருளிச் செய்த மந்திரம்.

ஆன்மாவை அறிந்து கொள்ளுதலே  ஆன்மிகம். பெரும்பாலான மக்கள் , தங்கள் துயரங்களை போக்கிக் கொள்வதற்காகவும், ஆசைகளை – பிரார்த்தனைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காகவும் திருக்கோயில்களை நாடி செல்கின்றனர். மனத்துயரங்கள், பணத்தேவைகள் , வேலை வாய்ப்பு, பதவி உயர்வு, நோய் நீங்கி ஆரோக்கிய வாழ்வு இப்படி ஏராளமான பிரார்த்தனைகள் திருக்கோயில்களிலும் , வழிபாட்டு தலங்களிலும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. கர்ம வினைகளே வாழ்வின் இன்ப துன்பங்களுக்கு அடிப்படை காரணம் என்கிறது இந்து தர்மம். கர்மவினைகள் நம் தலையெழுத்தை வழிநடத்தினாலும் சித்தர்கள் தரிசனம் நம் துயரத்தை தீர்க்கும் வல்லமை கொண்டது.

துயரங்கள் இனி தூரம் போகும், மனக்கவலைகள்  ஆற்றில் இட்ட உப்பாய் இருந்த இடம் தெரியாமல் கரைந்து போகும். துயர் தீர்க்க வழி தேடும் மனிதர்கள் செல்ல வேண்டிய இடம் , சக்கரை அம்மா ஜீவ சமாதிக் கோயில்.

சென்னை திருவான்மியூரில் வீற்றிருந்து உலக மக்களின் நோய்களை தீர்த்து வரும் மருந்தீஸ்வரர் திருக்கோயிலுக்கு அருகாமையில் கலாஷேத்ரா செல்லும் சாலையில் பாம்பன் சுவாமிகள் கோயிலுக்கு எதிர்புறத்தில் அமைந்திருக்கிறது சக்கரை அம்மா ஜீவ சமாதி. அம்மாவின் ஜீவ சமாதி திருக்கோயிலின் வாசலை அடையும் போதே , மிக அற்புதமான இடத்தை அடைந்து விட்டோம் என்ற  உணர்வு நமக்குள் ஏற்படுகிறது.

அருள்மிகு சக்கரை அம்மாவை பற்றி அறிந்து கொள்ள , முதலில் தமிழ்த்தென்றல் திரு.வி.க , தனது ’உள்ளொளி ’ என்ற நூலில் எழுதியதை பார்ப்போம்.

“அம்மையார் பறவையைப் போல் வானத்தில் பறப்பார். ஒருமுறை யான் வசித்த கல்லூரியின் மேல் மாடியில் பறந்து வந்து நின்றனர்… அக்காலத்தில் சென்னையில் வசித்த விஞ்ஞானியர் பலர் சூழ்ந்து அம்மையார் நிலையை ஆராய்வர்… நான் தேசபக்தன் ஆசிரியனானபோது, டாக்டர் நஞ்சுண்டராவிடம் நெருங்கிப் பழக நேர்ந்தது. பறவையாரைப் பற்றி நான் அவரிடம் விசாரித்தேன். அவர், ‘அம்மையார் சித்தர் இனத்தில் சேர்ந்தவர்” இப்படி பதிவு செய்துள்ளார் தமிழ்த்தென்றல் திரு.வி.க .

இதோ , அனந்தாம்பாள் என்ற சக்கரை அம்மாவை அறிந்து கொள்வோம்.

வட ஆற்காடு மாவட்டம் போளூரில் உள்ள சிற்றூரான தேவிகாபுரத்தில் வசித்துவந்த சேஷ குருக்கள் என்ற சிவாச்சார்யரின் குடும்பத்தில் 1854ஆம் ஆண்டு பிறந்தார் அனந்தாம்பாள். பிறந்த சில காலத்திலேயே அன்னையை இழக்க நேர்ந்தது. அவரின் சித்தி சுப்பம்மாவே அனந்தாம்பாளை வளர்த்து வந்தார். சுப்பம்மாவின் சகோதரர் சாம்பசிவ சிவாச்சார்யர் அப்போது சென்னை கோமளீஸ்வரன்பேட்டை கோமளீஸ்வரன் மடத்தின் அதிபதியாக இருந்தார். அவருடைய மனைவி இறந்ததால், அனந்தாம்பாளை அவருக்கு இரண்டாம் தாரமாக மணமுடித்தனர். அப்போது அனந்தாம்பாளுக்கு வயது ஒன்பது. சாம்பசிவ சிவாச்சார்யருக்கு வயது 24.

மடத்தின் அதிபதியாக இருந்தாலும்  சாம்பசிவ சிவாச்சார்யரின் கர்மவினை ,அவரது வாழ்க்கையை தவறான வழியில் செலுத்தியது. தகாத செயல்களில் தடுமாறிய சாம்பசிவ சிவாச்சார்யரின் ஆட்டம் 34 வயதிலேயே  மரணத்தின் வழியே முடிவுக்கு வந்தது. கணவர் மறைந்த போது அனந்தாம்பாளுக்கு வயது 20. 11-ஆம் நாள், தலை மழித்து வெள்ளுடை தரித்து வீட்டின் மொட்டை மாடியில் உள்ள திண்டில் அமர்ந்து மோனத் தவத்தில் ஈடுபடத் தொடங்கினார் அனந்தாம்பாள்.

பத்தாண்டுகளுக்கும்  மேலாக அன்னையின்  மோனத் தவம் தொடர்ந்தது. குளியல் இல்லை, உணவு கிடையாது,நீர் அருந்தவில்லை. தவத்தின் பலனாக அன்னைக்கு  பேரொளி தரிசனம் கிடைத்தது. இதனால் அன்னை பேரானந்தத்தை உணர்ந்தார். இதனைத் தொடர்ந்து கோமளீஸ்வரன் கோயில் வாசலில் அமர்ந்து கொண்டு உரக்கச் சிரித்துக்கொண்டும் தனக்குத் தானே பேசிக்கொண்டும் இருந்தார்.

அன்னையின் இந்த கோலத்தை கண்ட அதி புத்திசாலி பொதுமக்கள் , அன்னைக்கு சித்தம் கலங்கி விட்டது என்றும் , பைத்தியம் பிடித்துவிட்டது என்றும் பேசிக் கொண்டனர்.அன்னையின் இந்த கோலத்தை பார்த்த மருத்துவர் நஞ்சுண்டராவும் முதலில் சக்கரை அம்மாவை  பைத்தியம் என்றே எண்ணினார். ஆனால் வெகுவிரைவிலேயே சக்கரத்தம்மாளுக்குப் பலவிதமான சித்திகளும், முக்கியமாய்ப் பேரானந்தநிலையும் கை கூடி இருப்பதை நஞ்சுண்ட ராவ் உணர்ந்துவிட்டார். சக்கரத்தம்மாளின் புகழ் பரப்பும் பிரதான சீடராக மாறினார் டாக்டர் நஞ்சுண்டராவ்.

சக்கரை அம்மா அடைந்த ஸித்திகளில் குறிப்பிடத்தக்கது, ‘லஹிமா’ என்ற ஸித்தி. அது, உடலை மிக லேசாக்கி, பறவையைப் போல் ஆகாய மார்க்கத்தில் பறப்பது. கர்ம ஸித்தி வகையைச் சேர்ந்த இந்த ஸித்தி கைவரப்பெற்றவர் சக்கரை அம்மா,

இந்த நஞ்சுண்டராவ் ,புகழ்பெற்ற ஆங்கிலமுறை மருத்துவர். சுவாமி விவேகானந்தரின் சீடர். ஆங்கில அரசிடம் இருந்து மகாகவி பாரதியை பாதுகாக்க ,பாண்டிச்சேரிக்கு அனுப்பிவைத்தவர். பாரதி ஆசிரியராக இருந்த ‘பாலபாரதம்’ இதழின் நிறுவனர். இத்தனை பின்னனி கொண்ட நஞ்சுண்டராவ் சக்கரை அம்மாவின் அருளாசியில் திளைத்து பிரதம சீடராக மாறிப்போனார்.

தனது பூவுடலைத் துறக்கும் நேரம் வந்துவிட்டது என்றுணர்ந்து சக்கரை அம்மா, தனது சீடர்  நஞ்சுண்ட ராவிடம் தன் உடலை நீக்கப் போவதாய்த் தெரிவித்தார். அதற்கு டாக்டர் நஞ்சுண்டராவ், அன்னைக்கு தனது சொந்த இடத்தில் சமாதிக்கோயில் எழுப்ப அம்மாளின் சம்மதம் கேட்க அம்மாளும் அனுமதி வழங்கியதோடு தற்சமயம் ஜீவசமாதி திருக்கோயில் இருக்கும் இந்த இடத்தைச் சுட்டிக் காட்டி இங்கே எழுப்புங்கள் என்றாராம்.

ஆள்நடமாட்டமே இல்லாத அந்தக் காலத்தில் இந்த இடத்தில் கோயில் கட்டினால் யார் வருவார்கள் ? என்று அன்னையிடம் கேட்டார் டாக்டர். உடனே ,அன்னை  நூறாண்டுகள் கழித்துப் பார்க்கவேண்டும் என்றாராம். ஆம்  1901-ம் வருடம் பிப்ரவரி மாதம் 28-ம் தேதி தனது 47-வது வயதில் ஜீவசமாதியில் ஆழ்ந்த சக்கரை அம்மா  சொன்னது போல் இங்கு மிகச்சரியாக 100 ஆண்டுகளுக்கு பிறகு 2002-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இன்றைக்கும் நாள் தோறும் தன்னை நாடி வரும் பக்தர்களில் துன்பங்களை தீர்த்து ஆனந்தமயமாக்கி வருகிறார் சக்கரை அம்மா.

சக்ர பூஜை செய்துவந்ததால், அனந்தாம்பாள் என்ற பெயர் மாறி, சக்கரத்தம்மா, சக்கரை அம்மா, சக்கரை அம்மன் என்றெல்லாம் மக்களால் அழைக்கப்படும் அம்மாவின் ஜீவ சமாதி செல்வோம். துயரங்கள் நீங்கி இனிப்பாக மாறும் நம் வாழ்க்கை.


 



ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.