கோபத்தைக் குறைப்பவனே ஞானி

  கோமதி   | Last Modified : 20 Feb, 2018 07:56 pmஆன்மிகம் நமக்கு இறை பக்தியுடன்,வாழ்வியல் தத்துவங்களையும் எடுத்துரைக்கிறது.நமது புகழ்பெற்ற இதிகாசமான மஹாபாரதத்தில் சொல்லப்படாத வாழ்வியல் தத்துவங்களே இல்லை.அன்றாடம் நாம் கடந்து வரும் விஷயங்களையும் அதை நாம் கையாள வேண்டிய விதத்தை பற்றியும்  ஸ்ரீ கிருஷ்ணர் பாண்டவர்களுக்கு கூறுவது போல உலக மக்களுக்கு எடுத்துரைக்கிறார். 

ஒரு சமயம் ஸ்ரீகிருஷ்ணர்,தனது சகோதரர் பலராமர் மற்றும் அர்ஜுனனுடன் அடர்ந்த வனத்தின் வழியாகச் சென்றுக் கொண்டிருந்தார்.

நடு இரவாகி விட்டது. மூவரும் ஒரிடத்தில் தங்கி விட்டு விடிந்ததும் பின்பு  செல்லலாம் என்று எண்ணினர்.

வனத்தில் துஷ்ட மிருகங்களின் நடமாட்டம் அதிகம் இருக்கும் என்பதால், மூவரும் ஒரே நேரத்தில் தூங்கக் கூடாது என்றும் , ஜாமத்திற்கு ஒருவராக காவல் இருக்க வேண்டும் என்றும் முடிவு செய்தனர்.

அதன்படி ஸ்ரீகிருஷ்ணரும் , பலராமரும் தூங்கச் செல்ல,அர்ஜுனன் காவல் இருந்தான்.

அப்போது திடீரென புகை மண்டலம் சூழ்ந்தது.அதிலிருந்து ஒரு பயங்கர உருவம் வெளிப்பட்டது. 

அகன்ற நாசியும் , தூக்கிய பற்களும் , முட்டைக் கண்களுமாக இருந்தது அந்த உருவம்.மரத்தடியில் இருவர் தூங்குவதையும்,அதற்கு ஒருவன் காவல் இருப்பதையும் கண்ட அந்த உருவம் தூங்கும் இருவரின் அருகில் சென்றது. அதைக் கண்ட அர்ஜுனன் கோபத்துடன் அதைத் தடுத்தான்.

அப்போது அவ்வுருவம் , அவ்விருவரையும் தான் கொல்லப்போவதாகவும், அதற்கு அர்ஜுனன் துணை செய்ய வேண்டும் என்றும் கேட்டது.

அதைக் கேட்டு அர்ஜூனன் கோபம் மிகக் கொண்டு அந்த உருவத்தைத் தாக்கினான்.அர்ஜுனனின் கோபம் அதிகமாக அதிகமாக,அந்த உருவத்தில் பலமும் அதன் வடிவமும் பெருகியது.

அர்ஜுனன்,ஆக்ரோஷத்தோடு அதனுடன் போரிட அது பூதாகாரமாய் விளங்கியது. அர்ஜுனனை பலமாகத் தாக்கி விட்டு மறைந்தது.

இரண்டாம் ஜாமம் தொடங்கவும் பலராமரை எழுப்பி விட்டு அர்ஜூனன் தூங்கச் சென்றான்.பலராமர் காவல் இருந்தார்.அப்போது மீண்டும் அந்த உருவம் அங்கு தோன்றி , அர்ஜுனனிடம் கூறியது போல பலராமரிடமும் கூறியது. அதைக் கேட்டு கோபம் கொண்ட பலராமர் அதனுடன் சண்டையிட்டார்.

அவ்வுருவம் அடிபணிவதாய் இல்லை.பலராமரின் கோபம் அதிகமாக அதிகமாக அவ்வுருவத்தின் பலமும் அதன் வடிவமும் பெரிதானது.பின் பலராமரையும் பலமாகத் தாக்கி விட்டு , அந்த உருவம் மறைந்து விட்டது.

மூன்றாம் ஜாமம் தொடங்கவும் பலராமர் கிருஷ்ணரை காவலுக்கு எழுப்பி விட்டு படுக்கச் சென்றார். அப்போதும் அப்பொல்லாத உருவம் தோன்றியது.

அதைப்பார்த்த கிருஷ்ணர் கடகடவெனச் சிரித்தார். ஏன் சிரிக்கிறாய்? என்றது அவ்வுருவம். உனது தூக்கிய பற்களும் , அழகான முட்டைக் கண்களையும் கண்டு தான்,என்றார் சிரிப்பை அடக்க முடியாமல்.அவர் தன்னைக் கேலி செய்வதைக் கண்டு ஆக்ரோஷத்துடன் அது சண்டை போட்டது.

கிருஷ்ணரோ புன்னகையை மாற்றாமலே,சண்டை போட்டார்.கிருஷ்ணர்,சிரிக்கச் சிரிக்க அவ்வுருவத்தின் பலமும் அதன் வடிவமும் குறைந்து கொண்டே வந்தது.

 கடைசியில் அவ்வுருவம் சின்னஞ்சிறு புழுவாக மாறி தரையில் நெளிந்தது.ஸ்ரீகிருஷ்ணர் அப்புழுவை எடுத்து ஒரு துணியில் முடிந்து வைத்தார்.பொழுது விடிந்தது. 

பலராமரும்,அர்ஜுனனும் எழுந்தனர். இருவரும் இரவில் ஒரு பயங்கர உருவம் வந்ததும் , அவர்களைத் தாக்கியதும்,அவ்வுருவம் வளர்ந்து வளர்ந்து பின்னர் பெரிதாகியது என்பது பற்றியும் பேசினர்.

அப்போது கிருஷ்ணர் துணியில் முடிந்திருந்த புழுவைக் காட்டி , நீங்கள் இருவரும் தீவிரமாக சண்டை போட்ட உருவம் இது தான் என்றார்.பலராமரும்,அர்ஜுனனும் மிகவும் ஆச்சரியத்துடன் அதை பார்த்து அது எப்படி சாத்தியமானது என்று கேட்டார்கள். அதற்கு மாயக்கண்ணன், “நீங்கள் அதனுடன் சண்டை போடும் போது கடுமையாகக் கோபப்பட்டீர்கள். உங்கள் கோபம் அதிகரிக்க அதிகரிக்க அதன் பலமும் வடிவமும் அதிகரித்தது.

 நான் சிரித்துக் கொண்டே சண்டை போட்டதால் , இதன் பலமும் வடிவமும் குறைந்து கொண்டே வந்து பின்பு ஒரு புழுவாக மாறி விட்டது.வம்பு சண்டைக்கு வருபவனை விட்டு,புன்னகையோடு வெளியேறி விலகி இருந்து விட்டால்,அவன் புழுவுக்கு சமமாகி விடுவான்."கோபத்தைக் குறைப்பவனே ஞானி " என்றார்.

ஸ்ரீ கிருஷ்ணரின்  இந்த உபதேசம் நமக்கும் பொருந்தும்.நம்மையும் நம் நேரத்தையும் வீணடிக்கும் அற்ப விஷயங்களில் இருந்து நாம் ஒதுங்கி சென்றாலே நம்முடைய பல  பிரச்சனைகளுக்கு தீர்வாக அமையும்.


சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close