தொட்டதை துலங்கச் செய்யும் குளிகை

  கோமதி   | Last Modified : 21 Feb, 2018 07:02 pmநேரம் காலங்களில் நமக்கு அதிக நம்பிக்கை இருக்கிறது. எந்த ஒரு வேலைய செய்தாலும் அப்போது ராகு காலமா அல்லது எம கண்டம் நடந்துக் கொண்டிருக்கிறதா என்பதை பார்க்கும் வழக்கம் நம்மில் அதிக பேருக்கு இருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.பொதுவாகவே நமக்கு தெரிந்தது, ராகு காலம் மற்றும் எமகண்டம்  தான். இன்னும் சில பேருக்கு ராகு காலம் என்பது  ராகுவையும் , எமகண்டம் என்பது கேதுவையும் குறிக்கும் என்ற அளவிற்கு தெரிந்திருக்கலாம். ஆனால் நம்மில் பலருக்கு  குளிகை என்றால் என்ன என்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. குளிகை என்றால் என்ன, அந்த நேரத்தில் என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது என்பது பற்றிய தெளிவே இந்த பதிவு.

குளிகன் என்பவர் சனியின் மைந்தன் என்று சொல்வார்கள். இன்னும் சொல்ல போனால் சனியின் ஆதிக்க நேரம்  தான் குளிகை.

குளிகை தோன்றிய நிகழ்வே எதிர்பாராமல் நடந்தது என்று சொல்லலாம். கடவுளிடம் தான் பெற்ற அளவிலா வரத்தினால் மமதை கொண்ட ராவணனுக்கு மூவுலகமும் ஏவல் செய்தது. வேண்டுவனயாவற்றையும் அடைந்து விட்ட மமதையில் இருந்த ராவணனுக்கு மேலும் ஒரு மகிழ்ச்சியான தருணமாம் வாய்க்கப்பேற்றான். அவன் தந்தையாகப் போகிறான் என்ற சுபச் செய்தியுடன் அசுரக் குல குருவான சுக்கிராச்சாரியாரிடம் சென்றான்.

"குருவே! எனக்கு பிறக்க போகும் குழந்தை, பல வித்தைகளுக்கு தலைவனாகவும், எவராலும் வெல்ல முடியாத வலிமை கொண்டவனாக திகழவும், அழகில் சிறந்தவனாகவும் விளங்க  எந்த நேரத்தில் குழந்தை பிறந்தால் நல்லதென கணித்து சொல்லுங்கள்,'' என்றான்.

அன்றைக்குப் பார்த்து சுக்கிராச்சாரியார் நாவில் சனி நர்த்தனம் ஆடினான் போல,“ராவணா! நல்ல கிரகங்கள் எல்லாம் ஒரே ராசி கட்டத்தில் வந்தால் நல்லது. ஆனால், அது எப்போது வருகிறது என யோசித்து யோசித்து தலையே வெடித்துவிடும் போல் இருக்கிறது. சுபகிரகங்களை ஒட்டுமொத்தமாக சிறையில் அடைத்தால் என்ன என்று கூட தோன்றுகிறது,'' என்றார் வேடிக்கையாக.

விளையாட்டு வினையானது. “அவ்வளவு தானே! நவக்கிரகங்களையும் ஒன்றாக சிறையில் அடைத்து விடுகிறேன். அதேநேரம், கிரகங்களில் நீங்களும் ஒருவர் என்பதால் உங்களையும் சிறைப்பிடிக்கிறேன்,'' என்ற ஒரு அதிர்ச்சியையும் தந்தான்.

சுக்கிராச்சாரியாரையும், மற்ற கிரகங்களையும் சிறையில் தள்ளினான். தங்கள் நிலைக்கு காரணம் சுக்கிராச்சாரியார் என்பதால் அவரை நவக்கிரகங்களும் திட்டித் தீர்த்தன.

"உங்களுக்கு திறமை இருக்கிற அளவுக்கு புத்தி வேண்டாமா? அவன்தான் ஆணவக்காரன் ஆயிற்றே! தன்னை விட உயர்ந்தவன் இருக்கக் கூடாது என்று நினைப்பவன். அவனிடமா நம்பெருமைகளைச் சொல்வது? அறிவு களஞ்சியமய்யா நீர்,'' என்றார் சனீஸ்வரர்.

"நான் என்னவோ சொகுசாக இருப்பதை போலவும், நீங்கள் மட்டும் துயரப்படுவதை போலவும் அல்லவா பேசுகிறீர்கள்.? வரம் கொடுத்தவன் தலையிலேயே கை வைப்பவன் என்பதை சற்று மறந்து ஆலோசனை சொன்னேன். இப்போது அனுபவிக்கிறேன்,'' என்றார் சுக்கிரன்.

இதனிடையே, மண்டோதரி பிரசவ வலியால் துடித்தாள். சுகப்பிரசவம் ஆவது சிக்கல் என்று வைத்தியர்கள் சொன்னதாக சிறைக்காவலர்கள் பேசியது காற்று வாக்கில் கிரகங்கள் காதில் விழுந்தது.

"சுக்கிரச்சாரியாரே! எல்லா கிரகங்களும் ஒன்று சேர்ந்தால், அதை "யுத்த கிரகம்' என்பார்கள். அப்படி இருக்கும்போது எதற்காக இப்படி ஒரு யோசனை சொன்னீர்கள்? இப்போது பாருங்கள்! மண்டோதரி பிரசவிக்க முடியாமல் வலியால் வேதனைப்படுகிறாள். அவளுக்கோ அல்லது குழந்தைக்கோ ஏதாவது பாதிப்பானால் ராவணன் துளைத்து விடுவான் நம் அனைவரையும்,'' என்றார் சனீஸ்வரர்.

மற்ற கிரகங்களும் அஞ்சின."அசுரத் தலைவனிடம் இருந்து தப்பிக்க வழியிருக்கிறதா?'' என்றார் பிரகஸ்பதியான குரு.

"புதிதாக ஒரு உயிரை உண்டாக்கி, அதை ஒரு நேரத்திற்கு அதிபதியாக்கினால், ராவணனின் வாரிசு பிழைக்கும்,'' என்ற யோசனையின் பேரில்,சனீஸ்வரர் தியானத்தில் அமர்ந்து, தன் உடலில் இருந்த சக்தியை திரட்டி, ஓர் அழகான குழந்தையை உருவாக்கினார்.அந்த குழந்தைக்கு "குளிகன்' என்று பெயரிட்டார்.

இவன் பிறந்தவுடனேயே மண்டோதரிக்கு சுகப்பிரசவம் ஆகிவிட்டது.

"இந்த அதிசயம் எப்படி நிகழ்ந்தது?'' என சனீஸ்வரரிடம் மற்றவர்கள் கேட்டனர்.

"யுத்த கிரக வேளையில், குளிகனுக்குரிய குளிகை நேரமாக அது அமைந்தால் பிரச்னையில்லாமல் இருக்கும். வானில் இருக்கும் மேகத்தை காற்று கலைத்து விடுவது போல், குளிகன் பிறந்த நேரத்தில் மண்டோதரிக்கு சுகப்பிரசவம் ஆகிவிட்டது,'' என்றார் சனீஸ்வரர்.

குளிகை நேரத்தில் ஒரு செயலை தொடங்கினால் வளர்ந்து கொண்ட போகும். அதனால் தான் குளிகையில் கடன் வாங்குவது, பழைய கட்டடங்களை இடிப்பது, இறந்தவர் உடலை எடுப்பது போன்ற காரியங்களை செய்யக்கூடாது என்கிறார்கள் ஆன்றோர் பெருமக்கள். வீடு, நகை வாங்குவது, வீடு கிரகப்பிரவேசம் செய்வது போன்ற சுபநிகழ்ச்சிகளை செய்தால், தொடர்ந்து செய்வதாக அமையும். தடை இன்றி சுபமாக முடியும்.

 


சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close