இந்த மூன்றில் நாம் எந்த வகை? மகாவிஷ்ணுவுக்கு கருடன் சொன்ன கதை!

  கோமதி   | Last Modified : 03 Mar, 2018 03:16 pm


ஒருமுறை மகாவிஷ்ணு கருடன் மீதேறி உலக மக்களின் ஷேமங்களைப் பார்க்க கிளம்பினார். கருடனுடன் பேசிக் கொண்டே வந்த திருமால், கருடனை பார்த்து கேட்டார் “இந்த உலகில் எத்தனை வகையான மனிதர்கள் உள்ளனர் கருடா...?" என்று. அதற்கு சற்றும் யோசிக்காமல் கருடன் பணிவுடன் சொன்னார் "மூன்று வகையான மனிதர்கள் உள்ளனர் மகா பிரபு" என்று.

மகாவிஷ்ணுவும் விடாமல்  "என்ன மூன்று விதமான மனிதர்களா? இத்தனை கோடி மக்களில் மூன்று விதமான மக்கள் தானா உள்ளார்கள். நீ சொல்வது எனக்கு புரியவில்லையே” என்று கேட்டார்.

"மகா பிரபு ஒன்றும் அறியாதவர் போல நீங்கள் கேட்பது ஏன்...? என்னை வைத்து என்ன நாடகமோ தெரியவில்லை...? ஆனால் தங்கள் அருளால் நானறிந்தவரை மூன்று விதமான மனிதர்கள் தான் உள்ளனர்" என்று கூறினார் கருடன்.

"அப்படியானால் அவர்களைக் கூறு பார்க்கலாம்" என்றார் மகாவிஷ்ணு.

கருடன் விளக்க ஆரம்பித்தார்.

"முதல் வகையினர்: பறவையும் அதன் குஞ்சுகளும் போல் உள்ளனர்.

இரண்டாம் வகையினர்: பசுவும் அதன் கன்றையும் போல் உள்ளனர்.

மூன்றாம் வகையினர்: கணவனும் மனைவியும் போல் உள்ளனர் அவ்வளவு தான் மகா பிரபு" என்றார். மகாவிஷ்ணு சும்மா விடுவாரா  "சற்று புரியும்படி இன்னும் விளக்கமாக சொல்" என்றார்.

சொல்ல துவங்கினார் கருடன் "முதலில் பறவையும் அதன் குஞ்சுகளும் எப்படியென்றால் ... பறவை முட்டையிட்டு குஞ்சு பொரித்துவிட்டு அதன் குஞ்சுகளுக்காக உணவு தேடிப் போகிறது, அது சென்று வருவதற்குள் பாம்புகளும் மற்ற பறவைகளும் தனது உணவாக அந்த குஞ்சுகளையே உண்டு விடுகிறது, காணாமல் போன குஞ்சுகளுக்காக பறவை பெரிதாக கவலையெல்லாம் படுவதில்லை, இருப்பதற்கு உணவு ஊட்டும்.

அதுபோல் குஞ்சுகளுக்கும் தன் வாயில் ஊட்டப்படும் உணவு தான் தெரியும், தன் தாய் யார், தகப்பன் யார் போனது வருமா வராதா எதுவும் தெரியாது, நாளானவுடன் பறக்க முயற்சி செய்து கீழே விழுந்து மடியும், மீந்து போன பறவை வாழும் வரை வாழும், அவ்வளவு தான்... இந்த வகை மனிதர்கள் இது போலத்தான் ஏழ்மையுடன் போராட்டம், கூலி வேலை செய்வார்கள், கிடைத்ததை உண்பார்கள், இல்லையா பட்டினி கிடப்பார்கள், அவர்களுக்கு உன்னைப் பற்றியே கூட தெரியாது. வாழ்வார்கள், வாழும் வரை அவ்வளவு தான்.

இரண்டாவது பசுவும் கன்றும் எப்படியென்றால்... பசு ஓரிடத்தில் கட்டப்பட்டிருக்கும், அதன் கன்று ஓரிடத்தில் கட்டப்பட்டிருக்கும். கன்று பசுவைப் பார்த்து சப்தமிடும், பசு கன்றினைப் பார்த்து சப்தமிடும், கன்றுவுக்கு தெரியும், தாயின் மடியிலிருக்கும் பால் அருந்தினால் தான் பசி அடங்கும் என்று. ஆனாலும் அதன் கழுத்தில் கட்டப்பட்டுள்ள ஒரு முழம் கயிறு அதனை அதன் தாயிடம் செல்ல விடாமல் தடுக்கிறது, கன்று இழுத்து இழுத்துப் பார்த்து ஏங்கித் தவிக்கும்.

அது போல ஒரு சாராருக்கு உன்னைத் தெரியும், உன் வழி தெரியும், உன்னால் தான் மனித வாழ்வே நிலையான சுகம் பெறும் என்பதும் தெரியும், ஆனாலும் உன்னிடம் வர முடியாமல் பாசம் என்ற ஒரு முழ கயிற்றில் மாட்டிக்கொண்டு உன்னை பார்த்து பார்த்து ஏங்கி தவிக்கும்.

 மூன்றாவது கணவனும் மனைவியும் எப்படியென்றால்... முன் பின் அறியாத ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்ட கணவன், அவளிடம் முகம் கொடுத்து கூட பேசமாட்டான், அவளைப் பிடிக்காமல் ஒதுங்கி ஒதுங்கி போவான், ஆனால் அவளோ, அவனைப் பார்த்த நாளிலிருந்து அவன் நினைவால் இருந்து அவனுக்கு பிடித்த வகையில் உடையுடுத்தி, அவனுக்கு பிடித்த வகையில் உணவு சமைத்து, அவனுக்கு பிடித்த வகையில் தன்னை அலங்கரித்து கொண்டு தான் அவனுக்காகவே பிறந்தவள் என்பதை அவனுக்கு உணர்த்தி அவனை தன் பக்கம் ஈர்ப்பாள், முதலில் வெறுத்த அவன் ஓராண்டுக்குள் அவள் அன்பில் கரைந்து அவள் செல்லும் இடமெல்லாம் செல்கிறான், அவளை பிரிய மறுக்கிறான்.

அது போல ஒரு சாரார் உன்னை கண்டதில்லை, ஒரு நாள் யாராவது ஒருவர் மூலமாக உணர்த்தப்பட்டு உன்னை காண முற்படும் வேளையில், உனக்கு பிடித்த உடை, உணவு, அலங்காரம் என்று தங்களை மாற்றிக் கொள்கிறார்கள். முதலில் சோதிக்கும் நீ எங்களின் தூய்மையான அன்பில் கரைந்து எங்களோடு வருகிறாய், எங்களோடு உறவாடுகிறாய், முடிவில் உன்னோடு எங்களை ஐக்கியப்பட அனுமதிக்கிறாய் நாங்களும் ஆனந்தமாக உன்னோடு கலந்து விடுகிறோம் ஆக மூன்று விதமான மனிதர்கள் தான் உலகில் உள்ளனர் என்றார் கருடன்.

திருமாலும் கருடனின் விளக்கத்தில் மனம் மகிழ்ந்து அவரை வாழ்த்தி வரமருளினார்.

இப்போது சொல்லுங்கள் நாம் இந்த மூன்று வகையில் எந்த வகை மனிதர் என்று?

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.