ஹனுமனுக்கே இப்படியென்றால்.... நமக்கு ?

  கோமதி   | Last Modified : 09 Mar, 2018 04:50 pm


இறைவனிடம் நமது பக்தியை செலுத்த பல வழிகள் உள்ளது. அதில் ஒன்று நாம ஸ்மரணம். இறைவனின் நாமத்தை உதட்டளவில் சொல்லாமல், மனதார சொல்லும் போது  நமக்குள் ஏற்படும் சந்தோஷமும்,பெருகும் தன்னம்பிக்கையும் அளவிட முடியாதது.

நாம ஜெபத்தில் தலை சிறந்தது ராம நாமம். நம்மைக் கரையேற்றும் மந்திரம் ‘ராம’மந்திரம். ராம மந்திரத்தை எப்படிச் சொன்னாலும், யார் சொன்னாலும் அதற்குரிய பலன் கிடைக்கும்.மனதில் எழும் ‘தான்’ என்ற எண்ணத்தை  அழிக்கும் சக்தியுடையது ராம நாமம்.

இதற்கு உதாரணமாக ஆனந்த ராமாயணத்தில் ஒரு சம்பவத்தை சொல்லலாம். இலங்கையில் சீதையை சந்தித்த செய்தியை ராமரிடம் தெரிவிப்பதற்காக  கிஷ்கிந்தை திரும்பிக்கொண்டிருந்த ஆஞ்சநேயர்,போகிறப்போக்கில்  வானில் பறந்தபடியே நடந்த நிகழ்ச்சிகளையெல்லாம் அசை போட்டார்.

தன் சக்தியை ஜாம்பவான் தனக்கு உணர்த்தியது,ராம நாமம் சொல்லி கடல் தாண்டிச் சென்றது, ராவணனின் மகனைக் கொன்றது, ராவணனையே நேரில் சந்தித்தது, இலங்கைக்கு தீ வைத்தது,சமயத்திற்கு ஏற்ப தன்னுடைய  வடிவங்களை சுருக்கியும், நீட்டியும் சீதையைக் கண்டுபிடித்தது போன்ற தான் செய்த வீர தீர செயல்களை நினைத்த மாத்திரத்தில் கர்வம் அவர் தலைக்கு ஏறியது. 'என்னை விட பலசாலி யார் உண்டு?' என்று தன்னைத்தானே பாராட்டிக்கொண்டே வானில்  பறந்தார் இல்லையில்லை மிதந்தார்.

நீண்ட நேரம் பறந்ததால்,வழியில் தாகம் எடுத்தது.அப்போது அவர் கண்ணில் பட்ட மகேந்திர கிரி என்னும் மலையில் நீர்நிலை ஏதாவது இருக்கலாம் என வட்டம் போட்டு பார்த்தார். கண்ணில் ஏதும் படவில்லை. ஓரிடத்தில் ஒரு முனிவர் கண்ணில் பட, அவரிடம் தண்ணீர் இருக்குமிடத்தைக் காட்டும்படி கேட்டார்.

முனிவர் ஏதும் பேசாமல், ஓரிடத்தை நோக்கி கையைக் காட்டினார். ஆஞ்சநேயர் அவர் முன்னால், தன்னிடமிருந்த ராமனின் முத்திரை மோதிரம், சீதையின் சூடாமணி ஆகியவற்றை வைத்துவிட்டு போனார். அப்போது ஒரு குரங்கு வந்து, அங்கிருந்த சூடாமணியையும், முத்திரை மோதிரத்தையும் அருகில் இருந்த முனிவரின் தீர்த்தச்செம்புக்குள் போட்டுவிட்டது.

ஆஞ்சநேயர் திரும்பி வந்து பார்த்த போது, பொருட்களைக் காணாமல் முனிவரிடம் கேட்டார். முனிவரும் செம்பை நோக்கி கையை நீட்டினார். அதை ஆஞ்சநேயர் பார்க்க அதனுள் ஏராளமான முத்திரை மோதிரங்கள் கிடந்தன.

'இவை எப்படி இதனுள் வந்தன? எல்லாம் ஒன்றுபோல் உள்ளதே... இதில் என்னுடையதை எப்படி கண்டுபிடிப்பேன்?' என்று குழம்பினார். அதற்கு முனிவர் பதிலளித்தார்.

'வானரனே... இதற்கு முன் பலமுறை பெருமாள், ராமாவதாரம் எடுத்துள்ளார். அப்போதெல்லாம் ஆஞ்சநேயர் வருவார், என் முன்னால் வைப்பார். என் தீர்த்தச் செம்பிற்குள் அதை ஒரு குரங்கு தூக்கிப் போட்டு விடும். இவை எல்லாமே ராமனுக்குரியவை தான்...' என்றார்.

இதைக் கேட்ட ஆஞ்சநேயர் வெட்கிப்போனார். 'அப்படியானால், பல யுகங்களில் பல ஆஞ்சநேயர்கள் இதே சாதனையைச் செய்துள்ளனரே... நான் மட்டுமே செய்ததாக கர்வம் கொண்டேனே...' என வருந்தினார்.

எவ்வளவோ முயன்றும் மோதிரத்தைக் கண்டுபிடிக்க இயலாமல், ஊர் திரும்பினார். ராமனிடம் தன் அனுபவத்தைச் சொல்லி வருத்தப்பட்டார்.

அப்போது ராமனின் அருகில் அதே தீர்த்தச் செம்பு இருந்தது. ஆர்வம் மிகுதியால்  உள்ளே பார்த்தால் அனுமன் கொண்டு சென்ற முத்திரை மோதிரம் கிடந்தது. 'இதெப்படி இங்கே வந்தது?' என்றதும், 'ஆஞ்சநேயா... என் பக்தனான உன் மனதில் கர்வம் தோன்றியவுடனேயே நான், நீ வந்த பாதையில் முனிவர் போல் அமர்ந்திருந்தேன். உன் கர்வத்தைப் போக்கவே இவ்வாறு செய்தேன். 'ராம' மந்திரத்தை தொடர்ந்து உச்சரித்ததால், உன் கர்வம் நீங்கிற்று!' என்றார்.

 

ராம நாமமே நம்மை கரை சேர்க்கும் தோணியாகும்.

ஸ்ரீராம ஜெயராம... ஜெயஜெய ராம 


நம்மை உயர்த்தி மேம்படுத்தும் எளிய தந்திரமே ராம நாம மந்திரம்.


சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close